Thursday, July 23, 2009

ஏர்-இந்தியா சலுகை கட்டண திட்டங்கள் அறிமுகம்

விமானப் பயணத்தை ஊக்கப்படுத்தும் வகையில், 'என்.ஏ.பி., - 3' மற்றும் 'ஏ.பி., - 3' என்ற இரண்டு சிறப்பு கட்டணங்களை ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிக்கை: விமானப் பயணத்தை ஊக்கப்படுத்த, 'என்.ஏ.பி., - 3' மற்றும் 'ஏ.பி., - 3' என்ற இரண்டு சிறப்பு கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'என்.ஏ.பி., - 3' என்ற சிறப்பு கட்டண டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உள்நாட்டு விமான நிலையங்களில் கிடைக்கும். இந்த கட்டணத்தில், அடிப்படை கட்டணம், பயணிகள் சேவை வரி ஆகியவை அடங்கும். எரிபொருள் சர்ச்சார்ஜ் கட்டணம் இதில் சேராது. இதன்படி, ஒருவழி கட்டணமாக மும்பை - ஐதராபாத் 2,079 ரூபாய்; மும்பை - பெங்களூரு 2,779 ரூபாய்; மும்பையில் இருந்து கொச்சி, சென்னை, டில்லி ஆகிய இடங்களுக்கு 3,279 ரூபாய்; டில்லி - சென்னை 3,779 ரூபாய் ஆகும். 'ஏ.பி., - 3' என்ற சிறப்பு கட்டண டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 உள்நாட்டு விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டணத்தில், அடிப்படை கட்டணம், பயணிகள் சேவை வரி மற்றும் எரிபொருள் சர்ச்சார்ஜ் கட்டணம் ஆகியவை அடங்கும். இதன்படி, மும்பையில் இருந்து உதய்பூர், கோவா ஆகிய இடங்களுக்கு 3,094 ரூபாய்; மும்பை - கோழிக்கோடு மற்றும் சென்னை - கோவா 4,499 ரூபாய்; மும்பை - திருவனந்தபுரம், சென்னை - கோல்கட்டா, டில்லி - ஐதராபாத் கட்டணம் 5,399 ரூபாய்; மும்பை - கோல்கட்டா, டில்லி - பெங்களூரு 5,919 ரூபாய் ஆகும். இந்த கட்டணங்கள் கொண்ட டிக்கெட்களை பயணிகள் மூன்று நாட்களுக்கு முன் வாங்க வேண்டும். இந்த சலுகையை வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


நவீன நீர்க் கொள்ளையர்கள்

இந்தியாவின் விவசாயப் பாரம்பரியம் சிந்து நதி நாகரிகத்துடன் தொடர்புள்ளது. அண்மைக்காலக் கல்வெட்டு எழுத்தியல் ஆய்வுப்படி அது திராவிட பாரம்பரியம் என்றும் சொல்லப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துநதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி உணவை உற்பத்தி செய்து, நூலில் நெய்யப்பட்ட உடை தரித்து வாழ்ந்த இந்தியத் திராவிடர்கள் நாகரிக மிதப்பில் வாழ்ந்தபோது, ஐரோப்பிய மனித இனம் காட்டுமிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்போராகவும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. ""வெள்ளாளர்'' என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.

உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் - பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.

1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு - சுவாமிமலை - குடந்தை - மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.

மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.

நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் - நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'. ஆங்கிலத்தில் ‘ரஹற்ங்ழ் நட்ங்க்’ தமிழில் "நீர் வடிமுனை மேம்பாடு'.

இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?

1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.

அமெரிக்காவில் உள்ள புவியியல் - பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.

காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், "வாட்டர் ஷெட்' ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத் தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?
இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற "வாட்டர் ஷெட்டுகள்' யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.

அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் "வாட்டர் ஷெட்டுகளை' ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை - வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது. அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? "வாட்டர் கேட்டை' நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் "வாட்டர் ஷெட்டு மாதிரிகளை' இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள். அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் "ஸ்வராஜ்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. "சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்' என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, ""செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு'' என்று பேச்சைத் தொடங்கினார்.

"தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்'. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.

இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.

பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.
பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி - விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் ""வாட்டர் ஷெட்'' என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், "1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்' என்கிறது உலக வங்கி. ""நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, "எல்லாம் உலகமயமடா' என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, "அடிமைவாழ்வே ஆனந்தமடா' என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம். வாழ்க பாரதம்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

ஏறியது பங்கு சந்தை : நிப்டி 4,500 புள்ளிகளுக்கு மேல் சென்றது

தொடர்ந்து இரண்டு வர்த்தக நாட்களாக குறைந்திருந்த பங்கு சந்தை குறியீட்டு எண்கள் இன்று உயர்ந்திருக்கிறது. ரியாலிட்டி, மெட்டல், எஃப் எம் சி ஜி, ஆட்டோ, இன்ஃப்ராஸ்டிரக்சர், உள்பட எல்லா துறை பங்குகளும் இன்று அதிக அளவில் வாங்கப்பட்டதால் சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 4,500 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. எல்லா துறை இன்டக்ஸ்களும் பச்சையில் முடிந்திருக்கிறது. மாருதி சுசுகி, ஐடிசி, மற்றும் ஏசிசி பங்குகள் 5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. இன்று அதிகம் லாபம் அடைந்தது மகிந்திரா சத்யம் நிறுவனம் தான். சந்தை முதலீடு அடிப்படையில் பார்க்கும்போது, அது இந்தியாவின் ஐந்து பெரிய ஐடி கம்பெனிகளில் ஒன்றாக வந்து விட்டது. அதன் பங்கு மதிப்பு 14.2 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. கடந்த ஜனவரி 7ம் தேதிக்கு பிறகு இன்று தான் அதன் பங்குகள் ரூ.100 க்கு மேல் விலைக்கு போனது. ஆனால் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்கிய டெக் மகேந்திராவின் பங்குகள் 1.87 சதவீத வளர்ச்சி தான் அடைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 387.92 புள்ளிகள் ( 2.61 சதவீதம் ) உயர்ந்து 15,231.04 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 124.85 புள்ளிகள் ( 2.84 சதவீதம் ) உயர்ந்து 4,523.75 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு இன்று வர்த்தகம் நடந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


யெஸ் பேங்க்கின் நிகர லாபம் 84 சதவீதம் அதிகம் : 900 பேருக்கு வேலை

தனியார் வங்கியான யெஸ் பேங்க், இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.100.07 கோடியை நிகர லாபமாக பெற்றிருக்கிறது. இது, கடந்த வருடம் இதே காலாண்டில் அந்த வங்கி பெற்றிருந்த ரூ.54.33 கோடி நிகர லாபத்தை விட 84 சதவீதம் அதிகம். மும்பை பங்கு சந்தைக்கு அந்த வங்கி அனுப்பிய அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருட முதல் காலாண்டில் ரூ.486.19 கோடியாக இருந்த அந்த வங்கியின் மொத்த வருமானமும் இந்த வருட முதல் காலாண்டில் ரூ.687.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணம் நிதியை திறம்பட கையாண்டதுதான் என்கிறார் யெஸ் வங்கியின் எம்.டி.மற்றும் சி.இ.ஓ. ராணா கபூர். முதல் காலாண்டில் 84 சதவீதம் அதிக லாபம் சம்பாதித்திருக்கும் யெஸ் பேங்க், வங்கி விரிவாக்கத்திற்காக இந்த நிதி ஆண்டில் 900 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நமக்கு நாமே...

உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான். நமது அரசியல்வாதிகள், எந்த அளவுக்கு மக்கள் தரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்குத் தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2005-ல் ரூ. 12 ஆயிரமாக இருந்த அவர்களது ஊதியம் ரூ. 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே மேலும் ரூ. 4,000 அதிகரிக்கப்பட்டு ஊதியம் ரூ. 20 ஆயிரமாக உயர்ந்தது.

அடுத்த நிதியாண்டில் ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதியம் 2008 மே மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டு ரூ. 30 ஆயிரமாகியது. 2009 பிப்ரவரியில்தான் ரூ. 15 ஆயிரம் உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார். இதோ இப்போது மீண்டும் ஓர் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு மொத்த ஊதியம் ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, நமது சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இப்படி இத்தனை முறை ஊதிய உயர்வும், இந்த அளவுக்கு ஊதிய அதிகரிப்பும் தமிழகத்தில் வேறு எந்தத் தொழிலிலாவது, நிறுவனத்திலாவது யாருக்காவது அளிக்கப்பட்டிருக்குமா?

ஓர் அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமானால் சம்பளக் கமிஷன் அமைத்து அதன் பரிந்துரையின்மீது நிதி அமைச்சகம் பல விளைவுகளையும் அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகு நான்கோ, ஐந்தோ, ஆறோ வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஷயத்தில் அப்படி எதுவுமே தேவையில்லை. எப்போதெல்லாம் முதல்வராக இருப்பவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஓர் அறிவிப்பை வெளியிடுவார். அத்தனை உறுப்பினர்களும் கட்சி மனமாச்சரியங்களை மறந்து உற்சாகமாக மேஜையைத் தட்டி வரவேற்பார்கள். இடதுசாரிகள் இந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவர்கள். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டே ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்வார்கள்.

இதற்கு முன்பே ஒருமுறை நாம் குறிப்பிட்டிருந்தபடி, தாங்களே தங்களது ஊதியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் கேலிக்கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி விழ வேண்டும். எந்த ஊதிய உயர்வும் அடுத்து வரும் சட்டப்பேரவைக்குத்தான் பொருந்தும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டும்தான் இப்படிப்பட்ட விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி விழும்.

ஊதிய உயர்வைவிட அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை இப்போதைய சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனி காலனி அமைக்கப் போவதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டரை கிரவுண்டில் வீட்டு மனை வழங்கப்படும் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு.

முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கட்சி மனமாச்சரியங்களை மறந்து நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவசர அவசரமாக ஒரு கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்டு முதல்வரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்கள். கிடைப்பதை வாங்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அத்தனை அவசரம். என்ன கொடுமை இது?

சோழிங்கநல்லூர் பகுதியில் சந்தை மதிப்புப்படி ஒரு கிரவுண்ட் வீட்டு மனை குறைந்தது அரை கோடி ரூபாய் என்கிற நிலைமை இருக்கும்போது உறுப்பினர்களுக்குத் தலா இரண்டரை கிரவுண்ட் அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான விஷயம். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்து அங்குள்ள மக்களால் தங்களது தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீட்டு மனை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன?

மக்கள் சேவையில் (?) ஈடுபடும் உறுப்பினர்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரவர் தொகுதியில் வீட்டுமனை அளிக்கிறோம் என்று சொன்னால்கூட அர்த்தம் உண்டு. சென்னையில், அதுவும் மிக அதிகமான சந்தை விலையுள்ள இடத்தில் இவர்களுக்கு எதற்காக வீட்டுமனைகளை அரசு ஒதுக்கித் தர வேண்டும்?

இப்போதெல்லாம் இன்னொரு விபரீதமும் அரங்கேறுகிறது. ஒவ்வொரு கூட்டத் தொடரின் முடிவிலும் முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளிப்பது எங்கே தெரியுமா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்! ஆண்டுதோறும் இதற்காகும் செலவு எத்தனை லட்சங்கள் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இது என்ன அவலம் என்று குரல் எழுப்பினால், சாமானியர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்ணக் கூடாதா என்று குதர்க்கம் பேசுவார்கள்.

ஒன்று மட்டும் தெரிகிறது - வாக்களித்துவிட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் "சாமானியன்' முட்டாள். வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அவரது வயிற்றில் அடிக்கும் "சாமானியன்' புத்தி சாலி!
நன்றி : தினமணி

பணவீக்கம் சிறிது உயர்ந்தது

ஜூலை 11 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்க விகிதம் மைனஸ் 1.17 ஆக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் மைனஸ் 1.21 சதவீதமாக இருந்தது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த சில வாரங்களாகவே மைனஸ் நிலையில்தான் இருந்து வருகிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்க விகிதம் 12.13 சதவீதமாக இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஸ்டேட் பேங்க் கில் இருக்கும் பங்குகளை குறைத்துக்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மத்திய அரசு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளை குறைத்துக்கொள்ள மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக மத்திய அரசு காத்திருப்பதாக நிதி செயலர் அசோக் சவுலா தெரிவித்தார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற பின்னரே இது குறித்த மசோதா பார்லிமென்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர். இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மத்திய அரசுக்கு 59.41 சதவீத பங்குகள் இருக்கின்றன. அதை 55 சதவீதமாக குறைத்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இதுகுறித்து ஜனவரி மாதத்தில் பேசிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் ஓ.பி.பாத், ஸ்டேட் பேங்க் கின் பங்குகளை விற்பதன் மூலம் 200 கோடி முதல் 400 கோடி டாலர் வரை திரட்ட முடிவு செய்திருப்பதாக சொன்னார்.
நன்றி : தினமலர்


'ஜெட்' வேகத்தில் தங்கம் விலை : சவரன் 11,100 ரூபாயை தாண்டியது

ஆபரணத் தங்கம் நேற்று சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து, 11,104 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம், சவரன் 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 18ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,376 ரூபாய்க்கும், சவரன் 11,008க்கும் விற்றது. கடந்த 20ம் தேதி சவரனுக்கு 64 ரூபாய் வரை உயர்ந்து, சவரன் 11,080 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,386 ரூபாய்க்கும், சவரன் 11,088 ரூபாய்க்கும் விற்றது. நேற்று காலை தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. மாலையில் சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து, 11,104 ரூபாய்க்கும், கிராம் 1,388க்கும் விற்பனையானது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்