கடந்த மாதம் காவல்துறை சென்னையில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒரு மரகத லிங்கத்தைக் கைப்பற்றிய பிறகுதான், இதுபோல நமது ஆலயங்களிலிருந்து வேறு என்னவெல்லாம் களவு போயிருக்கிறதோ என்கிற கேள்வி அதிர்ச்சி அலையாகக் கிளம்பி இருக்கிறது. திருக்காரவாசல் கோயிலிலிருந்து களவாடப்பட்ட மரகத லிங்கம் என்னவாயிற்று என்று இன்றுவரை தகவல் இல்லை.
மரகத லிங்கங்கள் மட்டுமல்ல, பல அரசர்களும், தன வணிகர்களும் இந்தக் கோயில்களுக்கு அளித்திருக்கும் நகைகள் கணக்கிலடங்காதது. தங்களது நம்பிக்கையாலும், பக்தியாலும் இந்தக் கோயில்களின் பராமரிப்புக்காக காணிக்கையாக வழங்கப்பட்ட நிலபுலங்களின் அளவு கொஞ்சநஞ்சமல்ல.
நாளைய தலைமுறையினர், பக்தி அடிப்படையிலான நம்பிக்கையை மதிக்காமல், இந்த ஆலயங்களையும் பராமரிப்பின்றி பாழ்படுத்துவதுடன், பக்தர்கள் காணிக்கையாகத் தந்த நகைகளையும், நிலபுலங்களையும் அபகரித்துவிடக் கூடாது என்பதால்தானோ என்னவோ "சிவன் சொத்து குல நாசம்' என்று எச்சரிக்கை செய்தனர் நமது முன்னோர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இல்லாத அளவுக்கு, நம்மவர்கள் ஆட்சியில் கோயில் சொத்துகள் கபளீகரம் செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.
ஒரு நாகரிகத்தின் அடிச்சுவடாக, அடிப்படை ஆதாரமாகத் திகழ்பவை இலக்கியமும், கட்டடக் கலையும்தான். காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்பது, நிற்கப் போவது இறை உணர்வு மட்டுமே என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இலக்கியமும், கட்டடக் கலையும் தமிழகத்தில் சமயம் சார்ந்ததாகவே இருக்கிறது. சமய இலக்கியங்கள் தோன்றாமல் போயிருந்தால், தமிழ் என்கிற மொழியே களப்பிரர்கள் காலத்துடன் அழிந்திருக்கக் கூடும்.
அதேபோல, தமிழனின் பொறியியல் வல்லமை, சிற்பக் கலை மேன்மை மற்றும் கட்டட அமைப்புத் திறமை போன்றவை நிலைத்து நின்றதற்குக் காரணம் அவை சமயம் சார்ந்ததாக, ஆலயங்களாக எழுப்பப்பட்டதால்தான். சேர, சோழ, பாண்டியர் காலத்து மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அரண்மனைகளும் மண்ணோடு மண்ணாகிவிட்ட நிலையில், பண்டைத் தமிழனின் நிலைமையைப் பறைசாற்றி நிற்பது வானுயர்ந்த கோபுரங்களுடனான நமது ஆலயங்கள் மட்டும்தான்.
இறை மறுப்பு என்கிற பெயரில் சமய இலக்கியங்களையும், ஆலயங்களையும் புறக்கணிக்க முற்பட்டதன் விளைவுதான் இப்போது தமிழ் பேசக்கூடத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் நமது கல்விச்சாலைகள் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே பொறுக்கி எடுக்கும் விதத்தில் தமிழ் சொற்களைப் பயன்படுத்த சில இறைமறுப்புக் கொள்கையாளர்களின் தொலைக்காட்சி ஊடகங்கள் தலைப்பட்டிருக்கின்றன.
கோயில் நிலங்களை அபகரித்து வைத்திருப்பவர்களுக்கும், கோயிலிலிருந்து மரகத லிங்கத்தைக் களவாடிச் செல்பவருக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகக் கருத முடியாது. இறை நம்பிக்கையின் அடிப்படையில், ஓர் ஆலயத்தை நல்ல முறையில் பாதுகாக்க ஏதோ ஒரு பக்தரோ, அரசரோ, தனவணிகரோ காணிக்கையாகத் தந்த நிலத்தை, சம்பந்தமே இல்லாதவர்கள் அனுபவப் பாத்தியதை கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? திருட்டுப்போன நகைகளையும், சிலைகளையும் மீட்டுத் தரும் கடமை அரசுக்கு உள்ளது போலவே, கோயில் சொத்துகளையும் மீட்டெடுத்து, அந்தந்தக் கோயிலின் பராமரிப்பை மேம்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதுதானே நியாயம்?
இந்து அறநிலையத் துறையின் நேரடி மேற்பார்வையில் மட்டும் 38,465 கோயில்கள் உள்ளன. தனியார் மடங்களின் மேற்பார்வையில் மேலும் சில ஆயிரம் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களைப் பற்றிய முறையான முழுமையான தகவல்கள் அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்றால் சந்தேகமே.
மேலைநாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சரித்திரமுடைய மாதா கோயில்களுக்குக்கூட அவைகளின் கட்டடக் கலை பற்றியும், சிறப்புகள் பற்றியும் பளபளப்பான தகவல் குறிப்புகளும், புகைப்படங்களுடன்கூடிய புத்தகங்களும் வெளியிடுகிறார்கள். ஆனால், பல நூற்றாண்டுச் சரித்திரமுடைய நமது ஆலயங்களைப் பற்றிக் கேட்டால் தல புராணம் தவிர, கோயிலின் சிற்பக்கலை, கட்டடக்கலை, சிறப்பம்சங்கள், எந்த ஆண்டு எந்தெந்த அரசர்களால் என்னென்ன கட்டப்பட்டது என்கிற சரித்திரம் எதுவுமே கிடையாது, தரப்படுவதில்லை.
தெருவுக்குத் தெரு புதுக் கோயில்கள் கட்டுவது முதலில் தடை செய்யப்பட வேண்டும். கோயில் சொத்துகள் அனைத்தும் சட்டம் போடப்பட்டு அந்தந்தக் கோயிலின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கோயிலின் நகைகள், சிலைகள் என்று ஒன்றுவிடாமல் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதில், எவையெல்லாம் இப்போது போலிகள் என்பது கண்டறியப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.
கோயில்கள் மதச் சின்னங்கள் மட்டுமல்ல, தமிழரின் பண்பாட்டுப் பெட்டகங்கள். தமிழ் நாகரிகத்தின் சரித்திரச் சான்றுகள். கலாசாரக் கருவூலங்கள். நமது கோயில்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டும்தான் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ச் சாதியையும் நாம் கட்டிக் காக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது!
நன்றி : தினமணி
|