Friday, October 24, 2008

பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1052 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

மும்பை பங்கு சந்தையில் இன்று மதிய நேரத்தில் சென்செக்ஸ் 1,052 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது.ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட இடைக்கால மறு ஆய்வு அறிக்கையில், முக்கிய வட்டி விகிதம் எதையும் மாற்றாமல் இருந்ததால் வெறுப்படைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்க வந்ததால் இவ்வளவு புள்ளிகளை சந்தை இழக்க நேர்ந்தது என்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் 912 புள்ளிகளை ஏற்கனவே இழந்திருந்த சென்செக்ஸ், இன்று மதிய வேளையில் 1,052.18 புள்ளிகள் குறைந்து 8,719.52 புள்ளிகளாகி விட்டது. இந்த நிலை இதற்கு முன் கடந்த 2006 ம் ஆண்டு ஜூன் மாத்தில் தான் காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 343.05 புள்ளிகள் குறைந்து 2,600.20 புள்ளிகளாகி விட்டது. இது குறித்து பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆர்.பி.ஐ.வெளியிட்ட அறிக்கையில் சந்தைக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இல்லாததால், சந்தையில் விற்பனை விகிதம் கடுமையாக உயர்ந்து விட்டது. நிறைய பேர் பேங்க் பங்குகளை அதிக அளவில் விற்க ஆரம்பித்து விட்டார்கள் என்றனர்.
nandri : dinamalar


பங்கு முதலீட்டாளர் பீதி அடைய வேண்டாம் : சிதம்பரம் வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் நிலவி வரும் கடும் வீழ்ச்சியை கண்டுவரும் முதலீட்டாளர்கள், சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளதால் பீதி அடைந்துள்ளனர். பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் பங்குகள் அதன் மதிப்பை இழந்துள்ளன. இதனால் தங்களிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு மேலும் குறைந்து போவதற்குள் விற்று, ஏதோ கொஞ்சம் பணத்தையாவது காப்பாற்றிக்கொள்வோமே என்று, கிடைத்த பணத்திற்கு பங்குகளை விற்று வருகின்றனர். பங்கு சந்தையில் அதிக அளவில் விற்பனை நடந்து வருவதாலேயே சந்தை சரிந்து வருகிறது. இதனையடுத்து நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் சந்தை சரிந்து வருவதை கண்டு பீதி அடைய வேண்டாம் என்றும் அவசரம் அவசரமாக பங்குகளை விற்க வேண்டியதில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கு ஆசிய பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மட்டுமே இந்திய சந்தையும் வீழ்ந்து விடும் என்று அர்த்தமில்லை. எனவே முதலீட்டாளர்கள் பீதி அடைந்து பங்குகளை விற்க வேண்டாம். அவசரப்படாமல் நிதானமாக திர்மானித்து விற்பதை பற்றி முடிவு செய்யலாம் என்று அவர் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார். அன்னிய முதலீட்டாளர்கள் பலர் பெருமளவு பணத்தை இந்திய சந்தையில் இருந்து எடுத்துக்கொண்டதால், ரூபாயின் மதிப்பு குறைந்து, இங்கு கேப்பிட்டலில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து, எடுத்துக்கொண்ட பணத்தை திரும்ப பெற வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகி விட்டதும் மீண்டும் இந்தியாவுக்குள் பெருமளவு பணம் வந்து விடும். அவைகள் இ.சி.பி., எஃப்.சி.என்.ஆர்., என்.ஆர்.இ.,வழியாக இங்கு வந்து சேரும். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ( எஃப்.ஐ.ஐ.) பிரச்னை தீர்ந்து விட்டால், அவர்கள் இந்திய கார்பரேட் மற்றும் அரசாங்க கடன் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எனவே அதுவரை பொறுமை காக்குமாறு முதலீட்டாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக குறைந்தது

இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக குறைந்திருக்கிறது. டாலர் ஒன்றுக்கு ரூ.50 க்கும் கீழே மதிப்பு குறைந்து விட்டது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் ஏற்பட்டு வரும் கடும் வீழ்ச்சியை அடுத்து, இந்திய பங்கு சந்தையில் செய்யப்பட்டிருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இன்றைய காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50.15 ஆக குறைந்து துவங்கியது. இது நேற்றைய வர்த்தக முடிவில் ரூ.49.81 ல் முடிந்திருந்தது.
நன்றி : தினமலர்


வங்கிகள் இனி தாராளமாக கடன் தரும் : சிதம்பரம் தகவல்

'பணப்புழக்கம் சகஜமாகி வருவதால், கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் உபரி நிதியை ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சமீபத்தில் சந்தித் தேன். கடன் கொடுப்பதை தீவிரமாக்க ஆலோசனை வழங்கினேன். தற்போது பணப்புழக்கம் திருப்திகரமாக உள்ளதால், கடன் கொடுப்பது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என வங்கித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த மாத கடன் நடவடிக்கை களில் தற்காலிகமாக தொய்வு ஏற்பட்டது. தற்போது முன்பு போல் கடன் வழங்குவதை வங்கிகள் மும்முரப்படுத்தியுள்ளன. வங்கிகள் தங்களிடம் உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை முழுமையாக கடன் கொடுக்க பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர் கள், இந்தியாவில் முதலீடு செய்து இருக்கும் பங்குகளை, மற்ற அன்னிய நிறுவன முதலீட்டு நிறு வனங்களுக்கு மாற்றி கொடுப்பது, ஷார்ட் செல்லிங் நடைமுறைக்கு இணையானது. இதை நிறுத்தும்படி 'செபி' கேட்டுக் கொண்டுள்ளது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோல் மாற்றி கொடுத்து இருந்ததை திரும்பப் பெறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார். இதற்கிடையில், பணவீக்கம் பற்றிய புள்ளி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.40 சதவீதமாக இருந்தது. குறையும்: பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்திற்குள் 10 சதவீதத்திற்குள்ளாக வந்துவிடும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலர் அசோக் சாவ்லா நேற்று நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுப் படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது 9.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறையும்' என்றார். அதேசமயம் இந்தியப் பொருளாதார சூழ்நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் கடும் நெருக்கடி நிலவிய போதிலும், மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியா வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ளதாலும், வளர்ச்சிக்கு உறுதியான நிதி நிர்வாகத்தை கொண்டு இருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை எளிதாக முறியடிக்கும் என்று உலக வங்கி நற்சான்றிதழ் கொடுத்துள்ளது.
நன்றி ; தினமலர்


பிக்சட் டிபாசிட்களை குவிக்க அள்ளி விடுது வங்கிகள் : கெடுபிடி கட்டணம் கிடையாது

பொது மக்களின் டிபாசிட் பணம், தங்களிடம் இருந்து மற்ற வங்கிக்கு போகாமல் தடுக்க, சலுகைகளை அளிக்க பல வங்கிகளும் முன்வந்துள்ளன. வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடுமாற்றங்களால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. வங்கிகளின் மீதான நம்பிக்கையில் லேசான சறுக்கல் கூட வராமல் தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் பிக்சட் டிபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டு கழிந்த நிலையில், எந்த கட்டணமும் இல்லாமல் பணத்தை திரும்பப் பெறும் சலுகையை சில வங்கிகள் அளிக்கின்றன. முன்பு கறாராக இருந்த வங்கிகள் இப்போது விதியை தளர்த்தியுள்ளன. வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்கள் 4.06 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பிக்சட் டிபாசிட் உட்பட டிபாசிட்களை தக்க வைக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் பலவும் எடுக்க ஆரம்பித்து விட்டன. எச்.டி.எப்.சி., போன்ற வீட்டுக்கடன் அளிக்கும் வங்கிகள் கூட சலுகைகளை அளித்து பிக்சட் டிபாசிட்களை பெருக்க புதிய திட்டங்களை தீட்டியுள்ளன. இது போல, பிக்சட் டிபாசிட்களுக்கு வட்டி வீதத்தையும் அதிகரிக்க வங்கிகள் ஆரம்பித்துள்ளன. போட்டா போட்டி போட்டு, பொதுமக்களிடம் இருந்து டிபாசிட்களை குவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க், 1,000 நாள் அடிப்படையில் போடப்படும் பிக்சட் டிபாசிட்களுக்கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி, இப்போது 10.50 சதவீதமாக அறிவித்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கி, குறிப்பிட்ட கால அளவில் பெறப்படும் டிபாசிட்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்