Friday, April 24, 2009

மைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிறது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலாண்டில், உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விற்பனை, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 6 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த 23 வருடங்களில் இதுவரை வேறு எந்த காலாண்டிலும், விற்பனை இந்தளவுக்கு குறைந்ததில்லை என்கிறது அது. மைக்ரோசாப்ட்டின் லாபமும் 32 சதவீதம் குறைந்து 2.98 பில்லியன் டாலராகி இருக்கிறது. விற்பனை 13.65 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விற்பனை மூலமாகத்தான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெருமளவு லாபம் வருகிறது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் விற்பனையும் குறைந்து விட்டது என்கிறார்கள். இந்த நிலை அடுத்த காலாண்டிலும் தொடரத்தான் செய்யும் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல். 1986 ம் ஆண்டு பப்ளிக் கம்பெனி யாக மாறிய மைக்ரோசாப்ட், செலவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,400 பேரை உடனடியாகவும், 3,600 பேரை இன்னும் 18 மாதங்களிலும் குறைக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
நன்றி : தினமலர்


அணு உலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது எல் அண்ட் டி

இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டரக்ஸன் கம்பெனியான எல் அண்ட் டி, அணுஉலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது. இதற்காக, இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் அணுஉலை தொழிலில் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஹிட்டாச்சி என்ற நிறுவனத்துடனுன், பிரான்சின் அரேவா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள இருக்கிறது. ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த ஆட்டம்ஸ்டிராய்எக்ஸ்போர்ட் நிறுவனத்து டனும், அமெரிக்காவை சேர்ந்த டோஷிபா வெஸ்டிங்ஹவுஸ் என்ற நிறுவனத்துடனும், கனடாவை சேர்ந்த ஆட்டோமிக் எனர்ஜி ஆஃப் கனடா என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எல் அண்ட் டி யின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலமாக, சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் தொழிலில் வேகமாக வளர முடியும் என்று எல் அண்ட் டி கருதுகிறது. நியூக்கிளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இந்தியா சேர்ந்ததில் இருந்து, சிவில் வேலைக்காக, அணு உலை அமைக்க, தேவையான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீங்கி யிருக்கிறது. வரும் 2032ம் வருடத்திற்குள் இந்தியா, அணுசக்தி மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே இதன் மூலம் சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்கள் வர இருக்கின்றன.

நன்றி : தினமலர்