Friday, April 24, 2009

மைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிறது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலாண்டில், உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விற்பனை, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 6 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த 23 வருடங்களில் இதுவரை வேறு எந்த காலாண்டிலும், விற்பனை இந்தளவுக்கு குறைந்ததில்லை என்கிறது அது. மைக்ரோசாப்ட்டின் லாபமும் 32 சதவீதம் குறைந்து 2.98 பில்லியன் டாலராகி இருக்கிறது. விற்பனை 13.65 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விற்பனை மூலமாகத்தான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெருமளவு லாபம் வருகிறது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் விற்பனையும் குறைந்து விட்டது என்கிறார்கள். இந்த நிலை அடுத்த காலாண்டிலும் தொடரத்தான் செய்யும் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல். 1986 ம் ஆண்டு பப்ளிக் கம்பெனி யாக மாறிய மைக்ரோசாப்ட், செலவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,400 பேரை உடனடியாகவும், 3,600 பேரை இன்னும் 18 மாதங்களிலும் குறைக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
நன்றி : தினமலர்


No comments: