Wednesday, July 22, 2009

பத்திரங்கள் வெளியிட்டு 33.5 கோடி டாலர் திரட்ட டாடா பவர் திட்டம்

சர்வதேச சந்தையில் பத்திரங்களை வெளியிட்டு 33.5 கோடி டாலரை ( சுமார் 1,619 கோடி ரூபாய் ) திரட்ட டாடா பவர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதன் எதிர்கால திட்டங்களுக்காக இந்த பணம் திரட்டப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொன்றும் 22.58 டாலர் என்ற விலையில் 1,48,38,110 குளோபல் டெபாசிடரி ரிசிப்ட்களை ( ஜிடிஆர் ) அது வெளியிடுகிறது. இதன் மொத்த தொகை 33.5 கோடி டாலர் என்று பாம்பே ஸ்டாக் எக்சேஞ்க்கு அது அளித்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் திரட்டப்படும் பணம், ஏற்கனவே இருக்கும் அதன் மின் உற்பத்தி நிலையங்களின் முதலீட்டு செலவினங்களுக்காகவும், கட்டிக்கொண்டிருக் கும் மின் உற்பத்தி நிலையங்களுக்காகவும் செலவு செய்யப்பட இருக்கிறது. நேற்று தான் டாடா ஸ்டீல் நிறுவனம் ஜிடிஆர் மூலம் 25 கோடி டாலரை திரட்டிக்கொள்ள அதன் போர்டு அனுமதி அளித்திருந்தது. இப்போது டாடா பவர் ஜிடிஆர் மூலம் 33.5 கோடியை திரட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஜிடிஆர் மூலம் பணம் திரட்டப்படுவதால், அதன் மூலம் நல்ல திறமையான முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள் என்று சொன்ன டாடா பவர் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( நிதி ) எஸ்.ராமகிருஷ்ணன். ஜிடிஆர் வெளியீட்டிற்காக டாடா பவர் நிறுவனம், லக்ஸம்பர்க் பங்கு சந்தை யில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


எதிர்க்கட்சிக்கு அழகல்ல!

அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. தேர்தல் புறக்கணிப்புக்கு, ஆளும் கட்சியின் அராஜகம், வாக்குப் பதிவில் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்கள் பணத்தால் விலைபேசப்படுவது என்று பல காரணங்கள் அதிமுக செயற்குழுவால் கூறப்பட்டுள்ளது.

மக்களாட்சியில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் கடமையே, இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களைத் தட்டிக் கேட்பதும் தடுப்பதும்தானே? ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள்மன்றத்தில் எடுத்துக்கூறி, அவர்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டி, தேர்தல் தில்லுமுல்லுகள் நடைபெறுவதைத் தனது தொண்டர் பலத்தால் தடுத்து, ஜனநாயகத்தைப் பேணிக் காக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. தவறு நடக்கிறது, நடக்கப் போகிறது என்று காரணம் காட்டி தேர்தலைப் புறக்கணிப்பது என்பது புறமுதுகு காட்டி ஓடுவதற்கு ஒப்பான விஷயமல்லவா?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக கூட்டணி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. மொத்த வாக்குகளை எடுத்துக்கொண்டால் ஆளும் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசம் 2009 மக்களவைத் தேர்தலில் 16 லட்சம் மட்டுமே. அதிமுக கூட்டணியில் தொண்டர்கள் பல இடங்களில் விலைபோகாமல் இருந்திருந்தால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருந்திருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளரே பொதுக்குழுவில் கூறியிருப்பதையும் இங்கே நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மதிமுகவையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தனது தோழமைக் கட்சிகளாகக் கொண்டிருந்த அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள். இளையான்குடி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் இப்போது அதிமுகவில் இணைந்துவிட்டிருக்கிறார். காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த ஸ்ரீவைகுண்டம் தவிர, ஏனைய நான்கு தொகுதிகளிலும் அதிமுக அணி வெற்றி பெற எல்லா சாத்தியங்களும் இருந்தும் தேர்தலைப் புறக்கணிப்பது என்று அதிமுக முடிவெடுத்திருப்பதும், அதை அந்த அணியிலுள்ள ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொண்டிருப்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் மக்களின் அதிருப்தி உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது. அரிசி விலை மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரம்பை மீறி கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கும் நிலைமை.

இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கி, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து மக்கள் மன்றத்தில் ஆதரவு கோர வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, தேர்தல் தில்லுமுல்லுகள், வாக்குகள் விலை பேசப்படுதல் போன்றவற்றை மக்கள் ஆதரவுடனும், தொண்டர்களின் ஆதரவுடனும் தடுத்து நிறுத்தும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, போட்டிக்கு முன்பே பந்தயத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, அந்தக் கட்சி செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறதா இல்லை கட்சித் தலைமையின் அசிரத்தையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.

வன்முறை, அராஜகம் போன்றவற்றைக் காரணம் காட்டி சென்னை மாநகராட்சித் தேர்தலை அதிமுக புறக்கணித்ததால் யாருக்கு என்ன லாபம் ஏற்பட்டது? தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் இதுபோன்ற அமைப்புகளில் என்ன நடக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வளர்ச்சிக்கு சென்னை மாநகராட்சித் தேர்தல் உதவியது என்றால், அந்தக் கட்சியை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்த இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு உதவும் என்பதில் என்ன சந்தேகம்? தேமுதிகவை அரவணைத்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமைப்பது அல்லவா அதிமுகவின் ராஜதந்திரமாக இருந்திருக்க வேண்டும்?

தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாவிட்டால், மதிமுகவுக்கு அவர்கள் வென்ற தொண்டமுத்தூர் மற்றும் கம்பம் தொகுதிகளில் போட்டியிட்டுத் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பையாவது அதிமுக தந்திருக்க வேண்டும். பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று தனது மக்களவைத் தேர்தல் தோல்வியை ஈடுகட்ட பாமக தயாராக இருந்திருக்கும். இளையான்குடியில் கண்ணப்பன் மீண்டும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் சிந்திக்காமல் புறக்கணிக்கிறோம் என்று பின்வாங்கினால், மக்கள் அதிமுகவைப் புறக்கணித்துவிட மாட்டார்களா?

தேர்தலில் போட்டியிடாமல் போனால் தொண்டர்களும் சோர்வடைந்து விடுவார்கள், மக்களும் மறந்து விடுவார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு பொறுப்பான எதிர்க்கட்சிக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல! அதிமுக தலைமை தனது முடிவை மறுபரிசீலனை செய்வது அந்தக் கட்சிக்கும் நல்லது, ஜனநாயகத்துக்கும் நல்லது.

நன்றி : தினமணி

சரிவில் முடிந்த பங்கு சந்தை

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் இருந்த ஏற்ற நிலையால் சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4,500 புள்ளிகளை ஒட்டியும் சென்றிருந்தது. பெரும்பாலான நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க நினைத்த முதலீட்டாளர்கள் இன்று பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் இறங்கி விட்டன. கேப்பிடல் குட்ஸ், ஐ.டி.,ஆட்டோ நிறுவன பங்கு மதிப்பு சரிந்திருந்தது. ஆனால் ரியாலிட்டி பங்கு மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 15,369.42 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 14,786.58 புள்ளிகள் வரையிலும் சென்றிருந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 219.37 புள்ளிகள் ( 1.47 சதவீதம் ) குறைந்து 14,840.63 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தையில் வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 4,557.95 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 4,380.45 புள்ளிகள் வரையிலும் சென்றிருந்த நிப்டி வர்த்தக முடிவில் 66.75 புள்ளிகள் ( 1.49 சதவீதம் ) குறைந்து 4,402.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று மும்பை பங்கு சந்தையில் கேப்பிடல் குட்ஸ் இன்டக்ஸ் 1.98 சதவீதமும், ஐடி இன்டக்ஸ் 1.78 சதவீதமும், ஆட்டோ இன்டக்ஸ் 1.78 சதவீதமும் இறங்கியிருந்தன. ஹெச்டிஎஃப்சி ( 5.51 % ), கிராசிம் இன்டஸ்டிரீஸ் ( 3.41 %), பெல் ( 3.38 % ), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ( 2.86 % ) மற்றும் டாடா ஸ்டீல் ( 2.86 % ) ஆகிய நிறுவன பங்கு மதிப்பு குறைந்திருந்தன. ஓஎன்ஜிசி ( 4.36 % ), டிஎல்எஃப் ( 1.51 % ), ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் ( 0.93 % ), என்டிபிசி ( 0.72 % ), மற்றும் டாடா மோட்டார்ஸ் ( 0.29 % ) நிறுவன பங்குகள் உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


அப்துல் கலாமிடம் மன்னிப்பு கேட்டது கான்டினென்டல் ஏர்லைன்ஸ்

சோதனையில் இருந்து விலக்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை புதுடில்லி விமான நிலையத்தில், மரபை மீறி சோதனையிட்ட கான்டினென்டல் ஏர்லைன்ஸ் இன்று அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்று அது அளித்த அறிக்கையில், எங்களது சட்டதிட்டப்படி வி.ஐ.பி., என்றோ வி.வி.ஐ.பி., என்றோ பிரித்து பார்த்து சோதனையிட அனுமதி இல்லை. எனவே இது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், மத்திய அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்திருந்ததாலும் இன்று அது கலாமிடம் மன்னிப்பு கோரி இருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில், அப்துல் கலாமை சோதனையிட்டு, அவமானப் படுத்தி, அதன் மூலம் இந்திய மக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமில்லை. எனவே நாங்கள் அப்துல் கலாமிடம் மன்னிப்பு கோருகிறோம். அவர் தொடர்ந்து எங்கள் விமானத்தில் பயணம் செய்வார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


விப்ரோவின் நிகர லாபம் 12 சதவீதம் அதிகம்

இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ ரூ.1,015.5 கோடியை நிகர லாபமாக பெற்றிருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் அந்த நிறுவனம் பெற்ற நிகர லாபத்தை விட இது 12.8 சதவீதம் அதிகம். எதிர்பார்த்ததை விட அதிகம் லாபத்தை அது பெற்றிருக்கிறது. புதிய சந்தையை பிடித்தது மற்றும் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களால் எதிர்பாராத்த அளவை விட கூடுதலாக அதனால் லாபம் பெற முடிந்தது என்கிறார்கள் நிபுணர்கள். சிஸ்டம் இன்டகரேஷன், சாப்ட்வேர் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், மற்றும் பேக் ஆபீஸ் வேலைகளை செய்து கொடுக்கும் விப்ரோ, சர்வதேச அக்கவுன்டிங் விதிப்படி, இந்த காலாண்டில் 10.10 பில்லியன் ரூபாயை நிகர லாபமாக பெற்றிருக் கிறது. இது கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 8.95 பில்லியன் ரூபாயாகத்தான் இருந்தது. இந்திய அக்கவுன்டிங் விதிப்படி பார்த்தால், இந்த காலாண்டின் மொத்த நிகர லாபம் 10.16 பில்லியன் ரூபாயாக இருக்கிறது. நியுயார்க் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் விப்ரோவுக்கு சிட்டி பேங்க், சிஸ்கோ, ஜெனரல் மோட்டார்ஸ், நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் கிரிடிட் சுசி போன்ற பிரபல நிறுவனங்கள் வாடிக்கையாளர் களாக இருக்கிறார்கள். சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஒரு வருட காலமாக ஐ.டி. நிறுவனங்கள் கடும் சிக்கலில் இருந்து வந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட, விப்ரோ எதிர்பாத்ததை விட அதிக நிகர லாபத்தை பெற்று இருக்கிறது.

நன்றி : தினமலர்குடித்து விட்டு விமானம் ஓட்ட வந்து பிட்பட்ட 29 பைலட்கள்

குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி, போலீசாரிடம் சிக்கி சீரழிபவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குடித்து விட்டு விமானங்களை ஓட்டும் பைலட்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?. அங்கேயும் குடித்து விட்டு விமானத்தை ஓட்டுபவர்கள் இருக்கிறார்களாம். அப்படி குடித்து விட்டு வந்த பைலட்கள் சோதனையின் போது பிடிபட்டும் இருக்கிறார்கள். பொதுவாக தனியார் விமானங்களில் தான் இது அதிகம் நடக்கிறதாம். கடந்த ஒரு வருட காலத்தில் தனியார் விமானங்களில் பைலட்களாக இருக்கும் 29 பேர், விமானம் புறப்படும் முன் நடத்தப்படும் சோதனையின் போது, குடித்து விட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டிருப்ப தாக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ராஜ்ய சபாவில் தெரிவித்திருக்கிறார். பொதுவாக விமானங்களை ஓட்ட வரும் விமானிகள் குடித்து விட்டு வரக்கூடாது என்பது விதி. அவர்கள் குடித்திருக்கிறார்களா என்று விமானம் புறப்படும் முன் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அப்படி குடித்து விட்டு வந்திருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அதிகபட்சமாக ஆறு வாரங்கள் வரை விமானம் ஓட்ட அனுமதிக்கப்படுவது இல்லை. அதையும் மீறி 29 பைலட்கள் விமானத்தை ஓட்ட வந்து பிடிபட்டிருப்பதாக பிரபுல் படேல் தெரிவித்திருக்கிறார். டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் தான் இதனை கண்காணிக்கிறது. குடித்து விட்டு விமானம் ஓட்ட வந்து பிடிபட்டவர்களில் அதிகமானவர்கள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை சார்ந்த பைலட்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட 29 பைலட்களில் 8 பேர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள். அதற்கு அடுத்ததாக, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானிகள் தலா ஆறு பேர் பிடிபட்டிருக்கிறார்கள். ஜெட்லைட், பாரமவுன்ட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களை சேர்ந்த விமானிகள் தலா மூன்று பேர் பிடிபட்டிருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


இந்தியாவில் அபூர்வ சூரிய கிரகணம்

பூரண சூரிய கிரகணம் அப்படி ஒன்றும் அபூர்வமானது அல்ல என்றாலும் வருகிற 22-ம் தேதி நிகழ இருக்கும் சூரிய கிரகணம் ஒருவகையில் அபூர்வமானதே. சாதாரணமாக பூரண சூரிய கிரகணத்தின்போது சூரியன் இரண்டு அல்லது மூன்று நிமிஷங்கள் மறைக்கப்படும். அபூர்வமாக இது ஐந்து அல்லது ஆறு நிமிஷங்கள் நீடிப்பது உண்டு. எப்போதாவது ஏழு நிமிஷ நேரம் நீடிக்கலாம். வருகிற பூரண சூரிய கிரகணத்தின்போது சூரியன் 6 நிமிஷம் 39 வினாடி மறைக்கப்பட இருக்கிறது. இந்த நூற்றாண்டில் இதுவே மிக அதிகபட்ச நேரமாகும். அந்தவகையில் இது அபூர்வ சூரிய கிரகணம்.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும். ஆனால் சென்னை உள்பட தமிழகத்தில் இது அரைகுறை (பார்சுவ) சூரிய கிரகணமாகத்தான் தெரியும்.
அதாவது சூரியன் முற்றிலும் மறைக்கப்படாமல் 60 சதவிகித அளவுக்கே மறைக்கப்படும். ஆனால் குஜராத், மத்தியப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் முதலான மாநிலங்களில் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகின்ற காட்சியைக் காணலாம். சீனா, ஜப்பான் முதலான நாடுகளிலும் பூரண சூரிய கிரகணம் தெரியும்.
பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே சந்திரன் அமைந்து சூரியனை மறைப்பதால்தான் பூரண சூரிய கிரகணம் நிகழ்கிறது என்பதை நாம் அறிவோம்.
இவ்விதம் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகின்ற காட்சி உண்மையில் கண்கொள்ளாக் காட்சியாகும். அப்போது அசாதாரணமான இருட்டு நிலவும். வானில் நட்சத்திரங்களும் கிரகங்களும் தெரியும்.
வருகிற சூரிய கிரகணத்தின்போது வானில் தலைக்கு மேலே வெள்ளி கிரகம் தெரியும். அடிவானத்துக்கு மேலே புதன் கிரகம் தெரியும். தவிர, மகம், புனர்பூசம், ரோகிணி முதலான நட்சத்திரங்களும் தெரியும்.
சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகின்ற கட்டத்திலும் பிறகு சூரியன் மறுபடி தலை காட்டும்போதும் நிலத்திலும் கட்டடங்கள் மீதும் கருப்பு வெள்ளை நிறப் பட்டைகள் தென்படலாம். வரிக்குதிரை மீதுள்ள பட்டைகள் போன்ற இப் பட்டைகள் காணும் இடங்களில் எல்லாம் தெரியும்.
சூரியன் முழுதாக மறைக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட சில கணங்கள் இருக்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் சந்திரனின் மேடு பள்ளங்கள் வழியே கசியும். அப்போது சூரியன் ஒரு அற்புத வைர மோதிரம் போலத் தென்படும்.
முழு சூரிய கிரகணத்தைக் காண்பது என்பது ஓர் அற்புத அனுபவமாகும். இந்த சூரிய கிரகணத்தைக் காண்பதற்கென்றே வெளிநாடுகளிலிருந்து பலர் இந்தியாவுக்கு வருகின்றனர். விமானத்தில் ஏறிக்கொண்டு பூரண கிரகணம் தெரிகின்ற பகுதிகளுக்கு மேலாகப் பறந்து சென்றால் தொடர்ந்து 74 நிமிஷ நேரம் பூரண சூரிய கிரகணத்தைக் காண இயலும். ஒரு நிறுவனம் இதற்கென ஒரு விசேஷ விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஏறிச் செல்ல பலரும் இடம் முன்பதிவு செய்துள்ளனர்.
விஞ்ஞானிகள் பூரண சூரிய கிரகணத்தின்போது விசேஷக் கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்வர். சூரியனைச் சுற்றியுள்ள ஜோதியையும் மற்றும் சூரியனிலிருந்து எழும் சீற்றங்களையும் பூரண சூரிய கிரகணத்தின்போது மட்டுமே காண இயலும் என்பதே இதற்குக் காரணம்.
சூரிய ஒளித்தட்டை சந்திரன் முற்றிலுமாக மறைப்பதால்தான் பூரண சூரிய கிரகணம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டோம். அமாவாசையன்றுதான் சந்திரன் இவ்விதம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்து சூரியனை மறைக்கிறது. ஆனால் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணம் நிகழ்வது கிடையாது. இதற்கு சந்திரனின் சுற்றுப்பாதை காரணம்.
நீங்கள் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது ஒரு வண்டு உங்களைச் சுற்றிச் சுற்றி வருவதாக வைத்துக் கொள்வோம்.
வண்டு டி.வி. திரைக்கு மேலாகப் பறந்து சென்றால் அது டி.வி.யை மறைக்காது. அல்லது மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றால் அப்போதும் அது டிவியை மறைக்காது. உங்களுக்கும் டிவி திரைக்கும் இடையே நேர் குறுக்கே வரும்போதுதான் அது டிவி திரையை மறைக்கும்.
சந்திரன் இப்படியாகத்தான் பூமியைச் சுற்றுகிறது. அதாவது சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக இருப்பதால் ஒவ்வோர் அமாவாசையின்போதும் அது சூரியனை மறைப்பது இல்லை. சிலசமயங்களில் சந்திரன் நேர் குறுக்காக வரும்போது தான் சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன.
சூரியனோ மிகப் பிரம்மாண்டமானது. சந்திரனோ பூமியையும்விடச் சிறியது. அப்படியிருக்க, சுண்டைக்காய் சந்திரன் எப்படி சூரியனை முற்றிலுமாக மறைக்கிறது என்று சந்தேகம் ஏற்படலாம்.
சந்திரனின் குறுக்களவை விட சூரியனின் குறுக்களவு 400 மடங்கு பெரியது. அதேநேரத்தில் பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரத்தைப்போல 400 மடங்கு தொலைவில் சூரியன் உள்ளது. இது தற்செயலான பொருத்தமே. இதனால்தான் சூரியனின் ஒளித் தட்டை சந்திரனால் கச்சிதமாக மறைக்க முடிகிறது.
இதில் இன்னோர் அம்சமும் அடங்கியுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. சூரியனை பூமி நீள் வட்டப்பாதையில் சுற்றுவதே இதற்குக் காரணம்.
இதைப்போலவே பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே சூரியன் தொலைவாக இருக்கின்ற நேரத்தில் சந்திரன் பூமிக்கு அருகாமையில் அமைந்து அந்தச் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் அப்போது சூரிய ஒளித்தட்டின் நடுவே சந்திரன் அமையும். இது கங்கண சூரிய கிரகணமாகும்.
கங்கண சூரிய கிரகணத்தின்போது சூரியன் ஒளிரும் வளையல் போன்று காணப்படும்.
இந்தியாவின் வட மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும்போது சென்னையில் அவ்விதம் தெரியாதது ஏன் என்று கேட்கலாம்.
முழு சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் வட்ட வடிவ கரு நிழல் எங்கு படிகிறதோ அங்கு மட்டுமே முழு சூரிய கிரகணம் தெரியும். பிற இடங்களில் சந்திரனின் புற நிழல் விழும். அவ்வித இடங்களில் சூரியன் ஓரளவுதான் மறைக்கப்படும்.
பூரண கிரகணத்தின்போது சூரியன் சிலசமயம் இரண்டு அல்லது மூன்று நிமிஷங்கள் நீடிப்பதற்கும் வேறு சமயங்களில் 6 நிமிஷம் வரை நீடிப்பதற்கும் காரணம் உண்டு.
இது சூரியன் - பூமி இடையிலான தூரம், பூமி - சந்திரன் இடையிலான தூரம் போன்ற அம்சங்களைப் பொருத்தது. தவிர, சந்திரனின் கரு நிழல் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் விழுகின்ற வகையில் பூரண சூரிய கிரகணம் நிகழுமானால் அது அதிக நேரம் நீடிப்பதாக இருக்கும்.
இந்தியாவைப் பொருத்தவரையில் மேற்கு வங்கத்தில் உள்ள கூச்பெஹார் என்னுமிடத்தில்தான் சூரியன் மிக அதிகபட்சமாக சுமார் 4 நிமிஷ நேரம் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. எனினும் ஜப்பானுக்குத் தெற்கே உள்ள தீவுகளில்தான் இது 6 நிமிஷம் 39 வினாடியாக உள்ளது. அத் தீவுவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.
கட்டுரையாளர் : என். ராமதுரை

நன்றி : தினமணி