Friday, September 12, 2008

விலையை குறைக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக பேரலுக்கு 100 டாலரை ஒட்டியே இருந்து வரும் கச்சா எண்ணெய் விலை, கடந்த வியாழன் அன்று 98 டாலருக்கு கூட வந்தது. விலை குறைந்து வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்காக உடனடியாக இங்கு பெட்ரோலுக்கான விலையை குறைப்பதாக இல்லை என்றார் முரளி தியோரா. கச்சா எண்ணெய் விலை இதை விடவும் குறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பெட்ரோலிய துறை செயலர் பாண்டே தெரிவித்தார். சர்வதேச சந்தையில் பேரலுக்கு 147 டாலர் வரை இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒன்றரை மாதங்களாக குறைந்துகொண்டே வந்து இப்போது 100 டாலரை ஒட்டி இருக்கிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை சராசரியாக 95.47 டாலராக இருக்கிறது. இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்றார் பாண்டே. கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு முன் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அது இப்போது ரூ.400 கோடியாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பிரன்ட் குரூட் ஆயில் விலை 100 டாலருக்கும் கீழே போனது

அமெரிக்காவில் அதிகம் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியான மெக்ஸிகோ வளைகுடாவை, ஐக் என்ற சூறாவளி தாக்கும் அபாயம் இருந்த போதிலும் லண்டணின் ஐ.சி.இ., பியூச்சர் யூரோப் எக்ஸ்சேஞ்சில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே சென்றிருக்கிறது. நேற்று வியாழக்கிழமை பிரன்ட் குரூட் ஆயில் விலை 1.17 டாலர் ( அல்லது 1.2 சதவீதம் ) குறைந்து 97.80 டாலராக இருந்தது. கடந்த மார்ச் 5 ம் தேதிக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு விலை குறைந்திருக்கிறது. இதே பிரன்ட் குரூட் ஆயில் விலை நியுயார்க் மெர்க்கன்டைல் சந்தையில் 1.73 டாலர் குறைந்து 100.85 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்தது

ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 12.34 சதவீதமாக இருந்தது. 0.24 சதவீதம் குறைந்திருக்கிறது.மூன்றாவது வாரமாக பணவீக்கம் குறைந்திருந்தாலும் முக்கிய 30 பொருட்களின் விலை கூடித்தான் இருக்கிறது என்று நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் உள்பட சில உணவுப் பொருட்கள், மக்காசோளம், வாசனை திரவியங்கள், பழங்கள் போன்றவற்றின் விலை குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்



இந்தியாவில் ஆண்டு தோறும் ரூ.80 ஆயிரம் கோடி நகைகள் விற்பனை

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக டைட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ஆபரணப் பிரிவு) துணை தலைவர் எல்.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: உலகில், ஆண்டு தோறும் மூன்றாயிரம் டன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 800 டன் கொள்முதல் ஆகிறது. உலகளவில் தங்கத்தின் தரம் பார்க்கும் கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 95 சதவீத வாடிக்கையாளர்களுக்கு, 12 முதல் 36 சதவீதம் வரை தரம் குறைவான தங்க நகை கிடைக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எட்டாயிரம் கோடி ரூபாய் வரை இழக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவில் 10 லட்சம் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளோம். இந்திய அளவில் காரைக்குடியில் துவக்கப்பட்டது 28வது கிளை. தமிழகத்தில் இது 16வது கிளை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள 834 நகரங்களில் கிளைகள் துவக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் மூன்றாயிரம் டிசைன்கள் உள்ளன. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்