Wednesday, April 1, 2009

இன்றும் உயர்ந்திருந்த பங்கு சந்தை

பங்கு சந்தையில் இன்று, பெரும்பாலான நேரங்களில் குறியீட்டு எண்கள் அவ்வளவாக உயராமலும் குறையாமலும் இருந்த நிலை மாறி, கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக காணப்பட்டதால், சந்தை வேகமாக முன்னேறியது. சென்செக்ஸ் 9,900 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,050 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 193.49 புள்ளிகள் உயர்ந்து 9,901.99 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 39.40 புள்ளிகள் உயர்ந்து 3,060.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆயில் அண்ட் கேஸ் உற்பத்தி, டெக்னாலஜி, பேங்கிங், ரியல் எஸ்டேட், தனியார் மின் உற்பத்தி நிறுவன பங்குகள் இன்று அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் பார்தி ஏர்டெல், பெல், பவர் கிரிட், என்.டி.பி.சி.,சன் பார்மா, ஹெச்.யு.எல், ஐடிசி, ஹீரோ ஹோண்டா, ஸ்டெர்லைட் பங்குகள் குறைந்திருந்தன. ஆசிய சந்தைகளில் இன்று முன்னேற்றம் இருந்தபோதிலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிவில்தான் இருந்தன.
நன்றி : தினமலர்


ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள லண்டனில் குவிந்தனர் தலைவர்கள்

1930 ம் வருடத்திற்குப்பின் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கும் உலக பொருளாதாரத்தை சரிசெய்வது குறித்து ஆராய நடக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் லண்டனில் குவிந்து வருகிறார்கள். ஒவ்வொரு தலைருடனும் ஒரு குழுவினரும் சேர்ந்தே வந்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவுடன் 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் மனைவி மிச்சலுலுடன் 8 பேர் கொண்ட குழு தனியாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதவி ஏற்றபின் முதல் முறையாக லண்டன் வந்துள்ள பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனை, நம்பர் 10 டவுனிங் தெருவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். கார்டன் பிரவுன் தவிர ரஷ்ய அதிபர் திமிட்ரி மெட்வதேவ் மற்றும் சீன அதிபர் ஹூ ஷின்டோ ஆகியோரையும் ஒபாமா சந்தித்து பேசினார். தனது பொருளாதார திட்டங்களை வெளியிட, பாரக் ஓபாமாவுக்கு, இந்த மாநாடு ஓரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இரண்டு நாட்கள் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பல தலைவர்கள் நேருக்கு சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்து பேசிக்கொள்ள இருக்கிறார்கள். மாநாட்டிற்கு வந்திருக்கும் தலைவர்களுக்கு இன்று மாலை பிரிட்டிஷ் ராணி எலிசபெத் பக்கிங்ஹாம் அரண்மணையில் விருந்து கொடுக்கிறார். கார்டன் பிரவுனை ஒபாமா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தவேளையில், ஒபாமாவின் மனைவி மிச்சலும், பிரவுனின் மனைவி சாராவும் ஷேரிங் கிராஸ் ஆஸ்பத்திரி சென்று அங்குள்ள கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்தனர். இந்த மாநாட்டை எதிர்த்து, எதிர்பாராத விதமாக போராட்டங்கள் வெடிக்கும் என்று கருதப்படுவதால், லண்டன் நகர் முழுவதிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக் கின்றன.
நன்றி : தினமலர்


சிங்கூரில் நானோ கார் தயாரிக்கப்படும் : மேற்கு வங்க அரசு அதிகாரி

டாடாவின் நானோ கார் விரைவில் சிங்கூரில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசின் முக்கிய தொழில்களுக்கான செயலாளர் சபாசாச்சி சென் கோலாலம்பூரில் தெரிவித்தார். கடந்த வருடத்தில்தான் டாடா மோட்டார்ஸ், சிங்கூரில் இருந்து தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது. சிங்கூரில் தொழிற்சாலை அமைத்த டாடா மோட்டார்ஸ், அங்குள்ள திரினாமூல் காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பால் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிற்சாலையை குஜராத்தில் உள்ள சனாட் என்ற இடத்திற்கு மாற்றியது. இருந்தாலும் அவர்கள் அமைத்த தொழிற்சாலை சிங்கூரில் அப்படியே தான் இருக்கிறது. அங்கு கார் தயாரிப்பு வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அவ்வளவுதான். இந்நிலையில் மலேஷிய தலைநகர் சென்றிருக்கும் மேற்கு வங்க அரசின் முக்கிய தொழில்களுக்கான துறை செயலர் சென், நாங்கள் டாடாவின் முதல் தரமான நானோ தொழிற்சாலையை இழந்து விட்டோம். விரைவில் சிங்கூர் தொழிற்சாலையில் இருந்து அந்த கார் தயாரிக்கப்படும். ஏனென்றால் உலகின் மிக மலிவு விலை காருக்கு நான்கு முதல் ஐந்து தொழிற்சாலைகள் வரை தேவைப்படும் என்றார். இருந்தாலும் எப்போது இது நடக்கும் என்று சொல்லவில்லை. அவர் மேலும் தெரிவித்தபோது, மற்ற கம்பெனியினர் குறைந்த விலையில் சிறிய காரை அறிமுகப்படுத்தும் முன் நாம் அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் விரும்பியது. தாமதம் ஆகக்கூடாது என்று நினைத்தனர். இருந்தாலும் சிங்கூரில் நடந்த பிரச்னையை அவர்கள் மென்மையாகத்தான் கையாண்டார்கள். டாடாவுக்கு உலக அளவில் நல்ல மதிப்பு இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


பயணிகள் ரெயில் கட்டணம் குறைப்பு : இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பயணிகள் ரெயில் டிக்கெட் கட்டண மாற்றம் இன்று (புதன் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறப்பட்டிருப்பதாவது:- கட்டண மாற்றம் 2009-2010 ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் கட்டணத்தில் ஏற்பட்ட மாற்றம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இரண்டாம் வகுப்பு:- புறநகர், மெயில்/ எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில்களில் அடிப்படைக் கட்டணம் ரூ.50 ஆக இருந்தது. அது ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. சாதாரண ரெயில்களில் 10 கிலோ மீட்டர் வரை பயணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
புறநகர் ரெயில்கள்:- புறநகர் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. படுக்கும் வசதி கொண்ட மெயில்/எக்ஸ்பரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில் கட்டணத்தில் 2 சதவீதம் குறைப்பு செய்யப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி, இரண்டடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி, சேர் கார் வகுப்புகளுக்கு 2 சதவீத கட்டண குறைப்பு செய்யப்படும். மெயில்/ எக்ஸ்பிரஸ் மற்றும் சாதாரண ரெயில்களில் முதல் வகுப்பல் எந்த கட்டண மாற்றமும் இல்லை.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரையிலும், செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதி வரையிலும் நெரிசல் மிகுந்த காலமாக கருதப்படும். அதே போல் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரையிலும், ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் நெரிசல் குறைந்த காலமாகவும் கருதப்படும். இந்த மாற்றங்கள் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
கட்டண விகிதங்கள் மாற்றப்பட்டிருப்பதால், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களிலேயே அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். பயணத்திற்கு முன்பாக இந்த தொகையை பெற விரும்புபவர்கள் ஒரிஜினல் டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு கட்டண வீதம் மாற்றி அமைக்கப்பட்ட புதிய டிக்கெட்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பல் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


பொதுத்துறை வங்கிகளில் ரூ.17,000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற பெரிய வங்கிகள் உள்பட 18 பொதுத்துறை வங்கிகளில் 2009 - 10 நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.17,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை பெருக்கும் நடவடிக்கையாக சுமார் ரூ.16,000 கோடியில் இருந்து ரூ.17,000 கோடி வரை முதலீடு செய்து அந்த வங்கிகளின் பங்குகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.600 கோடியில் இருந்து ரூ.700 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்றும், தேர்தலுக்குப்பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப்பின்,மத்திய அரசு இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமலர்


கடும் விலை உயர்வால் வாங்க ஆள் இல்லை : மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி அறவே இல்லை

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் அதற்கான டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தொடர்ந்து இரண்டாவது மாதமாக, மார்ச் மாதத்திலும் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யவே இல்லை. தங்கத்தின் விலை தொடர்ந்து 10 கிராமுக்கு ரூ.15,000 என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் வழக்கமான கூட்டத்தை பார்க்க முடியவில்லை. தங்கத்திற்கு டிமாண்ட் இல்லாததால் மார்ச் மாதத்திலும் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யவே இல்லை. இரண்டாவது மாதமாக தங்கம் இறக்குமதி ஜீரோ வாக இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை இதே போல் இருந்தால் நாம் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும் என்கிறார் பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹூண்டியா. கடந்த 2008 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாம் 21 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம். ஜனவரி - மார்ச் மாதத்தில் மொத்தம் 61 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம்.ஆனால் இந்த வருடம் ஜனவரி - மார்ச் மாதத்தில் நாம் இறக்குமதி செய்திருக்கும் தங்கம் வெறும் 1.8 டன் மட்டுமே. தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்பட்டும் ' அக்ஷய திருதி ' வர இருப்பதால், அப்போது தங்கத்திற்கு டிமாண்ட் இருக்காதா என்று ஹூண்டியாவிடம் கேட்டபோது, எந்த முக்கிய நாள் வந்தாலும் விலை அதிகமாக இருந்தால் யாரும் வாங்கப்போவதில்லை. எல்லாம் விலையை அடிப்படையாகத்தான் இருக்கிறது என்றார்.

நன்றி :தினமலர்


அமெரிக்காவின் மோசமான பொருளாதார நிலை : அதிபர் ஒபாமா செயல் காரணமா

'அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களே காரணம்' என, 80 சதவீதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர். ஒபாமா நிர்வாகம் மீது 26 சதவீதம் மட்டுமே குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு யார் காரணம் என்பது தொடர்பாக, 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை சார்பில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தெரியவந்துள்ள விவரங்கள்:
அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களே காரணம் என, கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 80 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நுகர்வோர் அதிக அளவில் கடன் வாங்கியதும், முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகத்தின் மெத்தனமான செயல்பாடுமே காரணம் என, 70 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், நிலைமையை கட்டுப்படுத்த ஒபாமா நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என, 26 சதவீதம் பேர் புகார் கூறியுள்ளனர். அதிபர் பொறுப்பில் ஒபாமா செயல்படும் விதம் நன்றாக இருப்பதாக, கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், பொருளாதாரத்தை அவர் கையாளும் விதம் சிறப்பாக இருப்பதாக, 60 சதவீதம் பேரும், அவரின் கொள்கைகளால் பொருளாதார நிலைமை மேம்படும் என, 64 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மேலும், நாடு தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் போது, நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக, அதிபர் புஷ் நிர்வாகம் மீது 10ல் ஒன்பது பேர் குற்றம் சாட்டினர். இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்