Friday, July 17, 2009

மீண்டும் 11 ஆயிரத்தை எட்டியது தங்கம்

நாற்பது நாட்களுக்குப் பின் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் 11 ஆயிரம் ரூபாயை தொட்டது.ஆபரணத் தங்கம் விலை கடந்த மே மாதம் சவரன் 11 ஆயிரம் ரூபாயை கடந்தது. ஜூன் 5ம் தேதி வரை 11 ஆயிரத்துக்கு மேல் தான் விற்கப்பட்டது. ஒரு சவரன் 11 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்றது. மறுநாள், ஜூன் 6ம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. அதன்பின் சவரன் 11 ஆயிரம் ரூபாயை தொடவில்லை.தொடர்ந்து, ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்தது. சென்னையில் நேற்று முன்தினம் காலையில் சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, 10 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் மாலை ஒரு சவரன் 10 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்றது.நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்தது. நேற்று தங்கம் விலை திடீரென 11 ஆயிரம் ரூபாயை தாண்டியது. காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் 11 ஆயிரத்து எட்டு ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,376 ரூபாய்க்கும் விற்றது.நேற்று மாலை கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து, 1,374 ரூபாய்க்கும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, சவரன் 10 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்றது. தற்போது இரண்டாவது முறையாக 11 ஆயிரம் ரூபாயை தொட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு தொடரும் என வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நன்றி : தினமலர்


விமான எரிபொருள் விலை 6% குறைக்கப்பட்டது

இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள், புதன்கிழமை அன்று விமான எரிபொருள் விலையை 5.7 சதவீதம் குறைத்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, அண்மைக் காலமாக விமான எரிபொருளின் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, சராசரியாக 63.42 டாலராக குறைந்துள்ளதையடுத்து விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லியில், ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.2,221 குறைக்கப்பட்டு ரூ.36,338-க்கு விற்பனை செய்யப்படுகிறது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.39,789 என்ற அளவிலிருந்து ரு.37,475-ஆக குறைக்கப் பட்டுள்ளது. இந்தியா வாங்கும் ஒரு பீப்பாய் பேஸ்கட் குரூட் ஆயில் விலை அண்மையில் சராசரியாக 69.57 டாலராக அதிகரித்ததையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருளின் விலையை உயர்த்தின
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்

கடந்த மே மாதத்திற்கு பிறகு இப்போதுதான் இந்திய பங்கு சந்தை மிகப்பெரிய வாராந்திர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தாக்கல் செய்த பட்ஜெட்டால் ஏற்பட்ட அதிருப்தியால் பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. அந்த சரிவு இந்த வாரத்தில் சரி செய்யப்பட்டு விட்டது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்கின் அளவை அது குறைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டை செய்து வருவதையடுத்தும் பங்கு சந்தை வளர்கிறது என்கிறார்கள். என்எம்டிசி யில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளை அது விற்று, ரூ.10,000 கோடியை திரட்ட முடிவு செய்திருப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. என்எம்டிசி, எம்எம்டிசி, ஹிந்துஸ்தான் காப்பர், இஞ்சினியர்ஸ் இந்தியா மற்றும் என்டிபிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சகம் நேற்று அறிவித்திருக்கிறது. சர்வதேச பங்கு சந்தைகளின் வளர்ச்சியும் இந்திய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வாரத்தில் எஸ் அண்டி பி 500 இன்டக்ஸ் 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆசிய பங்கு சந்தைகளும் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கின்றன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 494.67 புள்ளிகள் ( 3.47 சதவீதம் ) உயர்ந்து 14,744.92 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 143.55 புள்ளிகள் ( 3.39 சதவீதம் ) உயர்ந்து 4,374.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நேற்று வியாழன் அன்று ரூ.95,168.90 கோடிக்கு நடந்திருந்த வர்த்தகம், இன்று ரூ.98,973.84 கோடியாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


மேலும் 1,000 பேரை வேலை நீக்கம் செய்கிறது ஹார்லி - டேவிட்சன்

உலக அளவில் புகழ்பெற்ற பைக் தயாரிப்பாளரான அமெரிக்காவின் ஹார்லி - டேவிட்சன், விற்பனை மற்றும் லாபத்தில் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. பெரும் செல்வந்தர்களால் மட்டுமே வாங்க கூடிய ஹார்லி - டேவிட்சன் பைக்கின் விற்பனை சமீப காலமாக குறைந்து விட்டது. அமெரிக்க மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போனதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் 222.8 மில்லியன் டாலரில் இருந்த அதன் நிகர லாபம், இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 19.8 மில்லியன் டாலராக குறைந்து விட்டது. கடந்த வருடத்தில் 1.57 பில்லியன் டாலருக்கு நடந்திருந்த அதன் அதன் மொத்த விற்பனையும், இந்த வருடத்தில் 1.15 பில்லியன் டாலராக குறைந்து விட்டது. இதன் காரணமாக அந்த நிறுவனம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் மேலும் 1,000 பேரை குறைக்கிறது.

நன்றி : தினமலர்



முதல் வாடிக்கையாளருக்கு இன்று நானோ கார் சப்ளை செய்யப்படுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், அது தயாரித்த உலகின் மிக மலிவு விலை காரான நானோவை, அதன் முதல் வாடிக்கையாளருக்கு இன்று சப்ளை செய்கிறது. கடந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே புதுடில்லியில் நடந்த விழாவில் நானோ காரை டாடாவின் சேர்மன் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தி விட்டாலும், அதற்கான புக்கிங் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைப்பதற்காக டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியிருந்த விவசாய நிலத்தை, விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி, அதன் மூலம் தொழிற்சாலையை இயங்க விடாமல் தடுத்ததால் கார் தயாரிப்பு நின்றது. பின்னர் அங்குள்ள தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் அங்கு தயாரிப்பை துவக்கி, காரை வெளியே கொண்டு வர காலதாமதம் ஆகும் என்பதால், டாடா மோட்டார்ஸூக்கு உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள பான்ட்நகரில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து நானோ காரை தயாரித்து இப்போது சப்ளை செய்கிறது. நானோ காரை புக் செய்த முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நானோ கார் ரூ.ஒரு லட்சம் விலையில் ( வரிகள் தனி ) கொடுக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


எல் அண்ட் டி,யின் முதல் காலாண்டு நிகர லாபம் மூன்று மடங்கு உயர்வு

இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் கம்பெனியான லார்சன் அண்ட் டியூப்ரோ பெற்ற நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்ற நிகர லாபத்தை விட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதித்யா குரூப்பை சேர்ந்த யூனிடெக் சிமென்ட் நிறுவனத்தில் லார்சன் அண்ட் டியூப்ரோவுக்கு இருந்த 11.5 சதவீத பங்குகள் முழுவதையும் அது விற்று விட்டதால் தான் இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. கடந்த வருடம் முதல் காலாண்டில் எல் அண்ட் டி பெற்ற நிகர லாபம் ரூ.502 கோடி தான். அது இந்த ஆண்டில் ரூ.1,598 கோடியாக உயர்ந்ததற்கு முக்கிய காரணம், யூனிடெக்கின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1,020 கோடி தான் என்கிறார்கள். இந்த அதிகப்படியான வருமானம் இல்லாமல்,ற அதன் நிகர லாபம் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் சர்வதேச அளவில் இருக்கும் பொருளாதார மந்த நிலையால் எல் அண்ட் டி க்கு வரவேண்டிய ஆர்டர்களில் 22 சதவீதம் குறைந்து போனதுதான்.
நன்றி : தினமலர்