Sunday, November 30, 2008

வாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு

பல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப்.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நன்றி ; தினமலர்


வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு

சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, அவற்றில் வேலை செய்ய ஆட்களை அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு அதிரடி நடந்து வருகிறது.சாப்ட்வேர் நிறுவனங்களின் தென்னக தலைநகராக இருந்து வரும் பெங்களூரு நகரில், டி.சி.எஸ்., இன்போசிஸ், சி.டி.எஸ்., சத்யம் போன்ற முன்னணி நிறுவனங்கள், அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற்று சாப்ட்வேர் பணிகளை செய்து வந்தன.நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பல நிறுவனங்களும் சாப்ட்வேர் பணிகளை செய்து கொள்ள விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றுக்கு சாப்ட்வேர் பணிகளை கவனித்து வந்தது நின்று போனது.வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளை செய்து வந்த பல இந்திய பி.பி.ஓ., அலுவலகங்களில் பணிகள் இல்லாததால், வருமானம் அடிபட்டது. இதனால், ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சாப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை; நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்கள் புற்றீசல் போல பரவி இருந்தன. ஆனால், நெருக்கடி ஆரம்பித்த நிலையில், இவற்றின் தேவை குறைய ஆரம்பித்தது.நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், இப்போது ஆட்களைக் குறைக்கும் அதிரடி சிக்கனத்தில் இறங்கி விட்டன. இதனால், கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது; அவற்றின் வருமானமும் குறைந்து விட்டதால், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெங்களூரு நகரில் சிறிய அளவில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஓரளவு சமாளிக்கக் கூடிய கன்சல்டன்சிகள் மட்டும், 10ல் இருந்து 30 சதவீதம் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.கன்சல்டன்சி நடத்தி வரும் பிரவீன் சாஸ்திரி கூறுகையில், 'இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு 500க்கு மேல் ஆட்களை அனுப்பி வந்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை மோசமாகி விட்டது. எங்கள் அலுவலக கிளைகளிலேயே ஆட்களை குறைத்து விட்டோம். இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மும்பை 'அட்டாக்'- சேதுராமன் சாத்தப்பன்-

சோகங்கள் எல்லாம் மறக்கப்பட வேண்டியது தான். ஆனால், சோகங்களே வாழ்க்கையானால், வன்முறைக்கு மும்பை எப்போதுமே ஒரு டார்கெட்டாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது, சில நாட்களில் ஏற்பட்ட வன்முறைகள் யாருக் கும், எந்த நாட்டுக்கும் வரக்கூடாத ஒரு நிகழ்வு. பங்குச் சந்தை வர்த்தகத்தையே வியாழனன்று நிறுத்தி வைக்க வேண்டிய சூழ் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக் கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த பல வருடங்களில் பல முறை மும்பையில் இது போல வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் வன்முறைக்கு பிறகு, பங்குச் சந்தை வீறு கொண்டு எழுவது தான் வாடிக்கை. அது போலவே இந்தத் தடவையும் நடக்கும் என்று பலரும் கூறினர். மேலும், இது போன்ற நிகழ்வுகளை தொடர் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஸ்டாண்டர்டு அண்ட் பவர் நிறுவனம் கூறியதும் சந்தைக்கு வலு சேர்த்தது. அது போலவே வெள்ளியன்றும் மும்பை பங்குச் சந்தை வீறு கொண்டு எழுந்தது. வன்முறைக்கு பயப்படவில்லை. ஆனால், டிரைவெட்டிவ் டிரேடிங் முடிவுக்கு வருவதால், சந்தை மேலும் கீழுமாக இருந்தது.சந்தை 278 புள்ளிகள் மேலும் கீழுமாக இருந்தது. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 66 புள்ளிகள் கூடி 9,092 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 3 புள்ளிகள் கூடி 2,755 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.பணவீக்கம் குறைந்து வருகிறது. அதாவது, சென்ற வாரம் 8.9 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 8.84 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது, சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 வருடத்தின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதங்கள் குறைவு என்பது ஒரு நிறைவு.பங்குச் சந்தை 56 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. ஆயில் 49 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. தங்கம் 5.5 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இது தவிர, வங்கி டெபாசிட்கள் நிலையான வருமானத்தைக் கொடுத்துள்ளன.அமெரிக்காவில் பல கோடி டாலர்கள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்யலாம் என்று பலரும் எதிர்பார்க் கின்றனர். இரண்டாவது காலாண்டு முடிவில் இந்தியாவின் ஜி.டி.பி., 7.6 சதவீதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சந்தை குறைய வாய்ப்பில்லை. ஆனால், தற்போதைய சந்தையில் எது வேண்டுமானாலும் நடக்கிறது. ஏதாவது ஒரு பங்கை இந்த விலைக்கு வாங்காமல் விட்டு விட்டோமே; மறுபடி அந்த விலை வராதே என்று பலரும் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த விலைக்கும் வந்து, அதை விடக் குறைந்த விலைக்கும் வருகிறது. அதுதான் பங்குச் சந்தை.
நன்றி ; தினமலர்