
சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, அவற்றில் வேலை செய்ய ஆட்களை அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு அதிரடி நடந்து வருகிறது.சாப்ட்வேர் நிறுவனங்களின் தென்னக தலைநகராக இருந்து வரும் பெங்களூரு நகரில், டி.சி.எஸ்., இன்போசிஸ், சி.டி.எஸ்., சத்யம் போன்ற முன்னணி நிறுவனங்கள், அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற்று சாப்ட்வேர் பணிகளை செய்து வந்தன.நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பல நிறுவனங்களும் சாப்ட்வேர் பணிகளை செய்து கொள்ள விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றுக்கு சாப்ட்வேர் பணிகளை கவனித்து வந்தது நின்று போனது.வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளை செய்து வந்த பல இந்திய பி.பி.ஓ., அலுவலகங்களில் பணிகள் இல்லாததால், வருமானம் அடிபட்டது. இதனால், ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சாப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை; நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்கள் புற்றீசல் போல பரவி இருந்தன. ஆனால், நெருக்கடி ஆரம்பித்த நிலையில், இவற்றின் தேவை குறைய ஆரம்பித்தது.நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், இப்போது ஆட்களைக் குறைக்கும் அதிரடி சிக்கனத்தில் இறங்கி விட்டன. இதனால், கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது; அவற்றின் வருமானமும் குறைந்து விட்டதால், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெங்களூரு நகரில் சிறிய அளவில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஓரளவு சமாளிக்கக் கூடிய கன்சல்டன்சிகள் மட்டும், 10ல் இருந்து 30 சதவீதம் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.கன்சல்டன்சி நடத்தி வரும் பிரவீன் சாஸ்திரி கூறுகையில், 'இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு 500க்கு மேல் ஆட்களை அனுப்பி வந்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை மோசமாகி விட்டது. எங்கள் அலுவலக கிளைகளிலேயே ஆட்களை குறைத்து விட்டோம். இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment