Tuesday, November 4, 2008

இந்தியாவுக்கு பாதிப்பு தான்: மன்மோகன் வெளிப்படை

'சர்வதேச நிதி நெருக்கடியால், இந்தியாவிற்கு ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளன. பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்க, அரசு மேலும் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து இந்தியாவை மீட்கவும், தொழில் துறையின் நம்பிக்கையை பலப்படுத்தவும், முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் பங்கேற்றனர்.அசோசெம் சார்பில் சாஜன் ஜிண்டாலும், சி.ஐ.ஐ., சார்பில் கே.வி.காமத், எப்.ஐ.சி.சி.ஐ., சார்பில் ராஜிவ் சந்திரசேகரும் பங்கேற்றனர். டி.எல்.எப்., நிறுவனத்தின் தலைவர் கே.பி.சிங், ரத்தன் டாடா, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி(ரிலையன்ஸ்), சுனில் மிட்டல்(பாரதி) ஆனந்த் ஜி மகேந்திரா (மகேந்திரா அண்ட் மகேந்திரா), எச்.டி.எப்.சி., சேர்மன் தீபக் பரேக், ஐ.டி.சி., சேர்மன் தேவேஷ்வர் உட்பட பல தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியாவை ஓரளவு பாதித்துள் ளது. இருப்பினும், இதன் தாக்கம் இனி வரும் காலங்களில் கடுமையாக இருக்கலாம் அல்லது நீடித்து இருக்கலாம். இதன் மூலம் நமது வங்கிகள், கம்பெனிகள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் தற்போதுள்ள நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் குறைத்துள் ளன.நமது வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வங்கிகளில் போட்டுள்ள பொதுமக்களின் டிபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க, வங்கிகளுக்கு ஆதரவு அளிக்க அரசு தயாராக உள்ளது. பணப்புழக்கத்திற்காக சமீபத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், குறுகிய கால கடன்களுக்கான ரெபோ ரேட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வங்கிகள் நியாயமான விகிதங்களில் மேலும் கடன்களை வழங்க வேண்டும்.பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாக்க, மேலும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தேவைப்பட்டால், கட்டாய மற்றும் நிதிக் கொள்கைகளை கொண்டு வரவும் அரசு தயாராக உள்ளது. அன்றாடம் நிலைமைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைப் பட்டால், மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயங்காது. சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும் படி, சர்வதேச நிதி அமைப்புகளை இந்தியா கோரும். மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து, சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு பெறுவதில் முழு மூச்சாக செயல்படுவோம்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்க, தொழிற்துறையினர் மனந்தளராமல் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இது, எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். இக்கட்டான சூழ்நிலையை இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நமது சேமிப்பும், மூலதன வீதமும் கடந்த காலங்களில் மிக வலுவாக இருந்துள்ளன. அதனால் தான் இந்தளவிற்கு நாம் தாக்குப் பிடித்து நிற்க முடிகிறது. அரசும், தொழிற்துறையும் முழுமையான மனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில், நமது அனைத்து முயற்சிகளும் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குவதாக இருக்க வேண் டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.இக்கூட்டத்தில் தொழிற்துறையினரிடம், பணப் பற்றாக்குறை வராது என்று பிரதமர் உறுதியளித்ததாக தொழிலதிபர் சாஜன் ஜிண்டால் கூறினார். தொழிற்துறையை அரவணைக்க உயர்மட்ட அதிகார கமிட்டி: பணப்புழக்கம் உட்பட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் தொழிற்துறையினருக்கு உதவுவதற்காக அரசு, உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.பிரதமர் நேற்று கூட்டிய தொழிற்துறையினர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நிருபர்களிடம் வர்த்தகத் துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:சர்வதேச நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கவும், வேலை இழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் உயர்மட்ட கமிட்டி ஒன்றை அரசு அமைத்துள்ளது.தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு இக்கமிட்டி வழி காணும். குறிப்பாக அரசுக்கும், தொழிற்துறைக்கும் இக்கமிட்டி முக்கிய பாலமாகச் செயல்படும்.இக்கமிட்டிக்கு பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ தலைமை ஏற்கக் கூடும். வீடு மற்றும் கட்டுமானத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அரசு சாதகமாக நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு பிள்ளை கூறினார்.அதே சமயம், சிகாகோ பல்கலைப் பேராசிரியர் ரகுராம் ராஜன், பிரதமரின் கவுரவ பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நன்றி : தினமலர்


வட்டிவிகித மாற்றம் குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு : ஐசிஐசிஐ பேங்க்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், இன்னும் சில தினங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் என்று தெரிகிறது. வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்தது. இதன் காரணமாக வங்கிகளும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐசிஐசிஐ பேங்க் இன்னும் சில தினங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். எதிர்பாராதவிதமாக ரிசர்வ் வங்கி, கடந்த சனிக்கிழமை அன்று, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் ( சி.ஆர்.ஆர். ) ஒரு சதவீதத்தை குறைத்து 5.5 சதவீதமாக்கியது. அதே போல் ரிபோ ரேட் என்ற வங்கிகளுக்கான குறைந்த கால வட்டியையும் ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்து 7.5 சதவீதமாக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ஐசிஐசிஐ பேங்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.காமத், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். அதனையடுத்து இன்னும் சில தினங்களில் நாங்களும் வட்டியை குறைப்பது பற்றி முடிவு செய்வோம் என்றார்.
நன்றி : தினமலர்