பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகை ஒன்றரை லட்சம் கோடியாக அதிகரித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
இதில் ஓசையின்றி ரூ.15 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது புதிய செய்தியாகும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வங்கிகளின் செயல்பாடும் பணப் பரிவர்த்தனையும் அதிகரிக்கத் தொடங்கின. தனியார் வங்கிகள் ஏராளமாகப் பெருகின. தொழில் வளர்ச்சிக்கு வங்கிக் கடனுதவி அதிக அளவில் தேவைப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் தனியார் வங்கிகள் தங்களது கடனுதவித் திட்டங்களை விரிவுபடுத்தின.
ஆனால் ஏழை மக்களும் சிறு தொழில்துறையினரும் வங்கிக் கடனுதவி பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. வீட்டுக் கடனுதவி என்பது மிகவும் அரிதாக இருந்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனியார் வங்கிகள் அனைத்தையும் அவசரச் சட்டம் மூலம் நாட்டுடைமையாக்கினார். காலப்போக்கில் நாட்டுடைமையின் நோக்கத்திற்கு மாறாக வங்கிகள் செயல்படத் தொடங்கின.
சில வங்கிகள், தங்களது இயக்குநர்கள் குழு உருவாக்கிய விதிமுறைகளின்படி கடன் வழங்கத் தொடங்கின. எனவே இயக்குநர்கள் குழுவினர் பரிந்துரைக்கும் தகுதியற்ற நபர்களுக்குக் கடன் வழங்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டது. இத்தகைய தகுதியற்ற நபர்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். எனவே வாராக்கடன் தொகை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகியது.
இது ஒருபுறம் இருக்க, வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்பெற்ற பல தொழிலதிபர்களும் மோசடிப் பேர்வழிகளும் அந்தப் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டனர். வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களிடம் சிறிதும் இல்லை. இத்தகைய மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் திறமை வங்கி நிர்வாகிகளிடம் இல்லை. அரசியல் பிரமுகர்களின் ஆதரவும் பக்கபலமும் இருந்ததால் வாராக்கடனை வசூலிக்க அவர்களால் இயலவில்லை. அத்துடன் நமது ஆங்கிலேயர் ஆட்சிகால வழிமுறையில் வந்த நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை ஆணைகள் நந்தி போல குறுக்கே வந்து நின்றுகொண்டன.
எனவேதான் இதற்குத் தீர்வுகாணவும் வாராக்கடனை வசூலிக்கவும் கடன் உத்தரவாதம் மற்றும் அமலாக்கச் சட்டம் இயற்றப்பட்டது. கடனைச் செலுத்தாதவர்கள் ஈடாக வைத்திருந்த சொத்துகளை விற்று ஓரளவுக்குப் பணத்தைத் திரட்ட இதன்மூலம் வழியேற்பட்டது. ஆனால் இதற்கும் வேறு உருவில் கேடு வந்து சேர்ந்தது. வங்கி நிர்வாகிகளின் உதவியுடன் ஒன்றுக்கும் உதவாத சொத்துகளை ஈடாகக் காட்டி பல மோசடிப் பேர்வழிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்றிருந்தனர். எனவே அந்தச் சொத்துகளால் எவ்விதப் பயனும் இல்லாமல் போய்விட்டது. மேலும் சிலர் அத்தகைய சொத்துகளை, போலி பத்திரம் தயாரித்து பல்வேறு வங்களிடமும் கடன் பெற்றிருந்தது வாராக்கடனை வசூலிக்க சென்றபோதுதான் வங்கி அதிகாரிகளுக்கே தெரியவந்தது.
அமெரிக்காவில் ஒரு பிரபல தனியார் வங்கி அண்மையில் திவாலானது அனைவருக்கும் தெரியும். கேட்டவர்களுக்கு எல்லாம் வீட்டுக் கடன் முதல் நுகர்வோர் கடன் வரை சகட்டுமேனிக்கு கடன் அளித்த அந்த வங்கி, இறுதியில் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏராளமானோர் வேலையிழந்தனர். இதனால் அன்றாட வாழ்க்கைப் பிரச்னையால் அல்லல்பட்ட அவர்கள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே அந்தத் தனியார் வங்கி திவாலாகி மூடப்பட்டது.
இதை இந்தியாவில் உள்ள அரசுடைமை வங்கிகள் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். மோசடிப் பேர்வழிகளுக்கு கடனுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்.
ஈடு வைக்கப்படும் அசையா சொத்துகள் அனைத்தும் வங்கிகள் அளிக்கும் கடனுக்கு இணையாகுமா என்பதை நன்கு ஆய்வுசெய்ய வேண்டும். அதன் பிறகே கடன் வழங்க முற்பட வேண்டும்.
கடன் மீட்புத் தீர்ப்பாயத்தை அதிகாரம் மிக்க அமைப்பாகத் தரம் உயர்த்த வேண்டும். அதிகரித்துவரும் வாராக்கடன்களை வசூலிக்க நாடு முழுவதும் பரவலாகப் பல்வேறு நகரங்களிலும் சமரசத் தீர்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.
வாராக்கடன் விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவ ஆலோசனை மையத்தை அமைக்க வேண்டும் என்று வங்கிகள் அனைத்துக்கும் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதன்படி சில குறிப்பிட்ட வங்கிகள் மட்டும் ஆலோசனை மையத்தை அமைத்தன. இவ்வாறு தனி ஆலோசனை மையத்தை ஏற்படுத்துவதை விட கூட்டாக ஒரே மையத்தை தொடங்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டாக ஒரே ஆலோசனை மையத்தைத் தொடங்க இந்திய வங்கிகள் தரக்குழு நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
இந்த மையத்தில் 79 வங்கிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் பல வங்கிகளும் இதில் சேர உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் இத்தகைய மையங்கள் திறக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக மும்பையில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி சமரசத் தீர்வு மையம் செயல்படத் தொடங்கியது. கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவர்கள் இந்த மையத்தை அணுகினால் வங்கிகளும் கடன்தாரர்களும் ஏற்கக்கூடிய சமரசத் திட்ட யோசனை வகுத்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் விட கடனை திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற எண்ணம், கடன் பெற்றவர்கள் மனதில் உருவானால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வாராக்கடனை வங்கிகள் திரும்பப் பெற வழி ஏற்படும்.
கட்டுரையாளர் :டி . புருஷோத்தமன்
நன்றி : தினமணி
Showing posts with label வங்கிகடன். Show all posts
Showing posts with label வங்கிகடன். Show all posts
Wednesday, November 4, 2009
Friday, August 14, 2009
கார்ப்பரேட் லோன்களில் கவனம் செலுத்துகிறது எச்.எஸ்.பி.சி., வங்கி
கார்ப்பரேட் லோன்களில் கவனம் செலுத்துகிறது எச்.எஸ்.பி.சி., வங்கி. எச்.எஸ்.பி.சி., நிறுவனம் தனது பிசினசை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் லோன்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் 8 சதவீதம் குறைந்ததன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எச்.எஸ்.பி.சி., பொது மேலாளர் நைநா லால் கிட்வாய் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியடம் இருந்து கவுகாத்தி, சூரத், நாசிக் ஆகிய பகுதிகளில் வங்கிகள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது. எனவே பரவலாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான லோன் வழங்கும் திட்டம் நல்ல ஆதரவை பெறும் என எச்.எஸ்.பி.சி., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நன்றி : தினமலர்
Sunday, July 5, 2009
சூடு பிடிக்குது வீட்டுக்கடன் : வட்டிவீத போர் வங்கிகள் போட்டா போட்டி
ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமாக இருந்தாலும், வீட்டுக்கடன் தருவதில், வங்கிகள் இடையே மீண்டும் போட்டா போட்டி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம், இரண்டாண்டுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை; 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு, வேலை பறிப்பு போன்ற காரணங்களால், பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை படுத்துவிட்டது. சாப்ட்வேர் ஊழியர்களை நம்பி, பல லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் தருவதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வட்டியையும் குறைத்தன. சாப்ட்வேர் ஊழியர்கள் வேலை போய் விட்டதால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் தவித்தது ஒரு பக்கம் இருக்க, அவர்களை நம்பி கட்டிய பல கோடி ரூபாய் பலமாடிக் குடியிருப்பு வீடுகளும் விற்பனை ஆகாமல் முடங்கின. இப்போது தான் ஓரளவு ரியல் எஸ்டேட் வியாபாரம் சற்று தலைதூக்கி உள்ளது. விலையைக் குறைத்து வீடுகளை விற்பனை செய்வதில் பில்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதனால், வீடு வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் வீட்டுக்கடனைப் பெறத் துடிக்கின்றனர். வீட்டுக்கடன் பாக்கி சரிவர வராமல் இருந்தால், கிடுக்கிப்பிடி போட்டு வந்த வங்கிகள் இப்போது ஓரளவு கெடுபிடிகளையும், வட்டி வீதத்தையும் குறைத்துக் கொண்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை மீண்டும் தலைதூக்க வைக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வரு கிறது. ரிசர்வ் வங்கியும் வட்டி வீதத்தைக் குறைக்க அவ்வப்போது வங்கிகளுக்கு உதவி வருகிறது. இந்நிலையில், வட்டி வீதம் 8 சதவீதம் வரை வந்து விட்டது. ஆறரை சதவீதத்துக்கு கொண்டு வருவது தான் மத்திய அரசின் எண்ணம். வீட்டுக்கடன் தரும் வங்கிகள் இடையே இப்போது வட்டி வீதப் போர் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. வட்டி வீதத்தைக் குறைத்து, போட்டா போட்டியை உருவாக்குவதில் முன்னர் எச்.டி.எப்.சி., வங்கி இருந்தது. இப்போது, அந்த பணியை ஸ்டேட் பாங்க் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. வட்டி வீதத்தை ஏற்றுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும், முதலில் இருக்கும் எச்.டி.எப்.சி., இப்போது திடமான முடிவுகளை எடுத்து வருகிறது. மற்ற வங்கிகள் வட்டியைக் குறைத்தாலும், அதற்கு போட்டியாக இன்னும் வட்டியைக் குறைக்கும் முடிவை எடுப்பதே இல்லை. வீட்டுக்கடன் பட்டுவாடாவில் முதலில் இருப்பது ஸ்டேட் பாங்க் தான். அடுத்து, எல்.ஐ.சி., உள்ளது. சமீபத்தில் ஸ்டேட் பாங்க், வீட்டுக் கடன் வட்டி வீதத்தைக் குறைத்தது மட்டுமின்றி, வீட்டுக்கடன் வாங்குவோருக்கு புதிய சலுகைத் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, 'ஈசி ஹோம் லோன்' மற்றும் 'அட்வான்டேஜ் ஹோம் லோன்' என்ற இரு திட்டங்களை ஸ்டேட் பாங்க் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு திட்டங்களிலும் கடன் பெறுவோர், முதலாண்டு 8 சதவீதம் வட்டியில் தவணையைக் கட்டலாம்; அடுத்த இரு ஆண்டுகளில் படிப்படியாக வட்டி வீதம் 9.5 சதவீதம் வரை அதிகரிக்கும். அதன் பின், புளோட்டிங், பிக்சட் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து தவணையை கட்டலாம். ஸ்டேட் பாங்க் அவ்வப்போது நிர்ணயிக்கும், 'ஸ்டேட் பாங்க் அட்வான்ஸ் ரேட்' படி இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இந்த விகிதத்தின் படி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பலன் கிடைக்கும். ஸ்டேட் பாங்க் இப்படி சலுகை திட்டங்களை அறிவித்தாலும், எச்.டி.எப்.சி., வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. 'உண்மையில் எங்களின் வட்டி வீதம் தான் குறைவானது. ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் வட்டி வீதத்தைக் கணக்கிட்டால் இந்த உண்மை தெரியும்' என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த வங்கிகள் இடையே எல்.ஐ.சி., வீட்டு வசதி கழகமும் வட்டி வீதத்தை குறைத்து வர்த்தக போட்டியை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுக்கடன் வட்டி வீதம் தொடர்பாக வங்கிகள் நடத்திய போர், மீண்டும் பெரிய அளவில் தலை தூக்கும் என்று தெரிகிறது.நன்றி ; தினமலர்
Labels:
எல்.ஐ.சி,
ரிசர்வ் வங்கி,
ரியல் எஸ்டேட்,
வங்கிகடன்,
வீடுகடன்
Saturday, April 18, 2009
விவசாய கடன்களுக்கான வட்டி குறைப்பு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்தது எஸ்.பி.ஐ.
வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ் களில் சேமிக்கப்படும் விவசாயப்பொருட்கள் மீது கொடுக்கப் படும் கடன்களுக்கான குறைந்த சதவீத வட்டி திட்டத்தை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்திருக்கிறது. வீட்டு கடனுக்கு 8 சதவீத வட்டி, கார் கடனுக்கு 10 சதவீத வட்டி என்று அதிரடி வட்டி குறைப்பு திட்டத்தை அறிவித்த இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ்களில் சேமித்து வைக்கும் விவசாய பொருட்கள் மீது கொடுக்கப்படும் கடனுக்கும் 8 சதவீதம் தான் வட்டி என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்திருந்தது. இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை மட்டும்தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு கிடைத்திருக்கும் அதிகப்படியான வரவேற்பை அடுத்து, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று அறிவித்திருக்கிறது. ஒரு வருட காலத்திற்கு மட்டும் கொடுக்கப்படும் இவ்வகை கடனுக்கு ஸ்டேட் பேங்க், 8 சதவீதம் மட்டும் வட்டியை வசூலித்துக்கொள்கிறது.நன்றி : தினமலர்
வோடஃபோன் நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்க் கொடுக்கிறது ரூ.10,000 கோடி கடன்
இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனமும் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனமும் இணைந்து நடத்தும் வோடஃபோன் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.10,000 கோடி கடன் கொடுக்க சம்மதித்திருக்கிறது. மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) சேவையில் நுழையும் வோடஃபோன் நிறுவனம், அதற்கு தேவையான நிதிக்காகவும், பிராட்பேன்ட் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான நிதிக்காகவும் இந்த கடன் வழங்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் தெரிவித்திருக்கிறது. ஐந்து வருட கடனாக வழங்கப்படும் இந்த தொகைக்கு, முதல் இரண்டு வருடங்களுக்கு 13.25 சதவீத வட்டியும், அதற்கு பிறகு, அப்போதுள்ள நிலைமையை பொறுத்து, வட்டியும் வசூலிக்கப்படும். ரூ.10,000 கோடியை ஸ்டேட் பேங்க் கடன் கொடுத்தபின், அதில் ரூ.7,000 கோடி கடனை மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றி விடும் என்றும், மீதி ரூ.3,000 கோடி கடனை மட்டும் அது வைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 13.25 சதவீத வட்டி என்பதும் ஸ்டேட் பேங்க் கின் முக்கிய வட்டி விகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்டேட் பேங்க்கிடமிருந்து ரூ.10,000 கோடி கடன் வாங்கும் வோடஃபோன் நிறுவனம், அதில் ரூ.6,000 கோடியை, இப்போதிருக்கும் சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் பழைய கடனை அடைக்கவும் பயன்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.நன்றி : தினமலர்
Thursday, April 9, 2009
டெபாசிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் அபாயம்!
பொதுமக்களின் டெபாஸிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்க தலைவர் டிஎஸ் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்புச் சலுகைகளைப் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கித் தலைவர் டி சுப்பாராவவுடன் பேசினார் நாராயணசாமி. பின்னர் அவர் கூறியதாவது: "ரிசர்வ் வங்கி மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இனி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இடமில்லை. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். ஆனால் வங்கி நடைமுறைகள் இதற்கு இடமளிக்கவில்லை. இப்போது குறைக்கப்பட்டுள்ள கடன் வழங்கல் வட்டியைச் சரிகட்ட, பொதுமக்களின் வைப்புகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அனைத்து வங்கிகளும் வைப்புத் தொகை வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளன", என்றார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி இன்னும் 2 சதவிகிதம் அளவுக்கு முதன்மைக் கடன் வழங்கலுக்கான (PLR) கடன்களுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வணிக வங்கிகளும் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை எந்த வங்கியும். மாறாக மக்களின் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியில் கை வைக்க முடிவு செய்துவிட்டன.இது கடன் வழங்கலை மட்டுமல்ல, மக்களின் சேமிப்பையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணம் தேக்கம்!இன்னொரு பக்கம், கடன்களுக்கான வட்டிகள் குறையாமலே உள்ளதாலும், கடன் வழங்கும் நடைமுறைகளை வங்கிகள் மிகவும் கடினமாக்கி வைத்திருப்பதாலும் அனைத்து வணிக வங்கிகளிலும் ரூ.1,22,000 கோடிக்கும் அதிகமாக பணம் தேங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் ரிசர்வ் வங்கியில் 3.5 சதவிகித வட்டியில் டெபாஸிட்டாக வைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெற ஆர்வம் காட்டததாலும், பொதுமக்கள் கடன் பெறும் அளவு 34 சதவிகிதம் குறைந்துவிட்டதாலும் இந்த நிலை என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓபி பட் தெரிவித்துள்ளார்.நன்றி : தட்ஸ்தமிழ்
Labels:
ரிசர்வ் வங்கி,
வங்கி,
வங்கிகடன்,
வட்டி
Sunday, March 29, 2009
வட்டி வீதம் மேலும் குறையும் : மன்மோகன் சிங் தகவல்
நாட்டின் நடப்பு பொருளாதார நிலை குறித்து முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வட்டி வீதம் மேலும் குறையும் என்றும், நிறுவனங்களின் கடன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி-20 நாடுகளின் மாநாடு லண்டனில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டில் இந்தியா சார்பில் என்ன விஷயங்களை எடுத்து வைக்கலாம் என்பது குறித்தும், தற்போதைய பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, குமார் பிர்லா, கே.பி. காமத், சசிருயா, சாஜன் ஜிண்டால், ஆர்.பி. கோயங்கா உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், 'சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதை தடுக்கும் வகையில், மேலும் சில பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியம்' என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஹர்ஷ் பட்டி சிங்கானியா கூறுகையில், 'கடன்களுக் கான வட்டி வீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ரிசர்வ் வங்கியிடம்வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்' என்றார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதால், வட்டி வீதம் மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்களின் கடன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உற்பத்தி தேவைகளுக்காக உள்நாட்டுக் கடன் வசதி அதிகரிக்கப்படும்.'ஸ்டீல் மற்றும் சிமென்ட் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. விவசாயத்துறையின் செயல்பாடும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. 2007-08ம் ஆண்டை விட நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன' என்றார்.
நன்றி : தினமலர்
Saturday, March 28, 2009
எஸ்.பி.ஐ.,யில் ரூ.3,000 கோடி கிரிடிட் லிமிட் கேட்கிறது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.1,500 கோடியில் இருந்து ரூ.3,000 கோடி வரை கிரிடிட் லிமிட் ( அதிகபட்டமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படும் கடன் ) கொடுக்கும் படி கேட்டிருக்கிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கடன் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் சேர்மன் விஜய் மல்லையா, கடந்த செவ்வாய் அன்று மும்பையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்காக , கம்பெனியின் வளர்ச்சி திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் கடன் தேவைக்கான காரணம் போன்றவற்றை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடன் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் அதிகாரிகளும் சாதகமான பதிலையே அளித்திருப்பதாகவும், எவ்வளவு காலத்திற்கு கடன் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இப்போது கடும் நிதி சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நிறுவனங்களுக்கு அது பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனவரி மாதத்தில் அது, ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியாவுக்கு, பேங்க் கியாõரன்டி மற்றும் போஸ்ட் டேட்டட் செக் கைதான் கொடுத்ததாகவும் செல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மற்ற நிறுவனங்களைப்போலவே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூம் கடுமையாக நஷ்டமடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிதி ஆண்டில் அது அடைந்திருக்கும் நஷ்டத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், சர்வதேச விமான சேவைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும், விமானங்களுக்கான குத்ததை பணம் அதிகமாக இருப்பதாலும், வட்டி உயர்ந்திருப்பதாலும் நஷ்டம் அதிகரிக்கிறது என்கிறது கிங்ஃபிஷர் நிறுவனம்.நன்றி : தினமலர்
பாகிஸ்தானுக்கு உலக வங்கி 500 மில்லியன் டாலர் வட்டியில்லா கடன்
சீரழிந்து போயிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கி, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.2,500 கோடி ) வட்டியில்லாத கடன் வழங்க ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்த கடன் மூலம் அந்நாடு மீண்டும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக உயரும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த சில காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னை காரணமாக பாகிஸ்தானின் நுண்பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் நிலவும் மோசமான அரசியல் நிகழ்வுகள் காரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்நாடு இழந்து விட்டது என்றும், அதனால் உள்நாட்டு நுண்பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பதாக அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் விலை ஏற்றத்தால் பாகிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்து என்றும், அதன் காரணமாக அங்கு பணவீக்கமும் அதிகரித்து விட்டது என்கிறார்கள். மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பாகிஸ்தானில் தயாராகும் பொருட்களுக்கான தேவை குறைந்து அதனால் அந்நாட்டு ஏற்றுமதியும் குறைந்து விட்டது என்கிறார்கள். இது போன்ற காரணங்களால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் அசோசியேஷன் ( ஐடிஏ ) என்ற கடனளிக்கும் நிறுவனம், பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் 2,500 கோடி ரூபாய் ) வட்டியில்லா கடன் கொடுக்கிறது. வட்டி கிடையாது என்றாலும் இதற்காக சர்வீஸ் சார்ஜ் ஆக 0.75 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படும். 35 வருடங்களில் இந்த கடனை திருப்பி கொடுத்தால் போதுமானது.நன்றி : தினமலர்
Labels:
வங்கிகடன்
Tuesday, March 24, 2009
வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு கொடுக்கிறது ஒரு லட்சம் கோடி டாலர்
கடும் கடன் சுமையால் வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை, அதிலிருந்து மீட்டு கொண்டு வர, அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி டாலர் ( ஒரு டிரில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய முன்வந்திருக்கிறது. அமெரிக்க வங்கிகளில் கடன் பெறுபவர்கள், அதற்கு அடமானமாக எழுதி கொடுத்திருக்கும் சொத்துக்கள் இப்போது ஒன்றுக்கும் உதவாததாக இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கிய கடன் தொகையையும் செலுத்தப்படாமல் இருந்து, அந்த சொத்தையாவது விற்று கடனை கழித்து விடலாம் என்று பார்த்தால் அதுவும் விலை போகாமல் இருந்தால் வங்கிகள் என்னதான் செய்யும்?. சொத்தையும் விற்க முடியாமல் கடனையும் திரும்ப வாங்க முடியாமல், கணக்கில் மட்டும் கடனை எழுதி வைத்திருந்தால் போதுமா?. இப்படி ஏராளமான சொத்துக்கள் அமெரிக்க வங்கிகளிடம் சும்மாவே இருக்கின்றன. கடனும் திருப்பி வராமல், சொத்தையும் விற்க முடியாமல் நிறைய வங்கிகள் திணறுகின்றன. அதனால்தான் பல வங்கிகள், வங்கியை நடத்த முடியாமல் திவால் ஆகி வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்போது இதனை சரி செய்ய அமெரிக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி, இந்த உதவாத சொத்துக்களை அமெரிக்க அரசே பெற்றுக்கொண்டு, அதை வைத்து வாங்கிய கடனை வங்கிக்கு கொடுத்து விடும். பின்னர் வேறு ஒரு நாளில் இந்த சொத்துக்களை அமெரிக்க அரசே விற்று அதில் கிடைக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தால் நஷ்டம் ஏற்பட்டாலும் அல்லது லாபம் கிடைத்தாலும் அதனை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்திற்காக அமெரிக்க அரசு 75 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலர் வரை ( அதாவது ஒரு லட்சம் கோடி டாலர் ) செலவு செய்ய முன் வந்திருக்கிறது. மேலும் இந்த திட்டத்தை ' பப்ளிக் - பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் ' படி செயல்படுத்தலாம் என்றும், அதற்காக தனியாரும் இதில் பங்கு பெறலாம் என்றும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த திட்டத்தால் அங்குள்ள பங்கு சந்தைகளான டவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் 500 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ), எஸ் அண்ட் பி குறியீட்டு எண் 54 புள்ளிகள் ( 7.1 சதவீதம் ), நாஸ்டாக் குறியீட்டு எண் 99 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ) உயர்ந்திருக்கின்றன.நன்றி : தினமலர்
Labels:
பங்கு சந்தை,
வங்கி,
வங்கிகடன்
Friday, March 20, 2009
காரை பறிமுதல் செய்த வங்கி ரூ.35,000 நஷ்டஈடு கொடுக்க வேண்டும்
கார் லோன் வாங்கி, இரண்டு தவணைகள் பணம் கட்ட தவறிய ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து காரை பறிமுதல் செய்த ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.35,000 கொடுக்க வேண்டும் என்று டில்லி கன்சூமர் கமிஷன் தீர்ப்பளித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும், பணம் கட்ட தவறிய வாடிக்கையாள ரிடமிருந்து காரை பறிமுதல் செய்திருந்தால் அது வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய செயலாகத்தான் கருதப்படும் என்றும், அதற்கு வங்கி நஷ்டஈடு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி ஜே.டி.கபூர் தலைமையிலான கன்சூமர் கமிஷன் தெரிவித்திருக்கிறது. கட்டாத தவணைக்கு அபராதம் வேண்டுமானால் வங்கி விதித்துக்கொள்ளலாம் என்றும் அதற்காகவெல்லாம் காரை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் அது தெரிவித்திருக்கிறது. டில்லியில் இருக்கும் ரிலையபிள் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போஷிசன்ஸ் என்ற நிறுவனம், 2006 ஜனவரி மாதத்தில் மாருதி எஸ்டீம் கார் வாங்குவதற்காக ஹெச்.டி.எஃப்.சி., வங்கியில் ரூ.4.56 லட்சம் கடன் வாங்கியிருந்தது. அதற்கான கடன் தொகையில் இரண்டு தவணைகளை அந்த நிறுவனம் செலுத்தவில்லை. இதனால் 2006 ஜூலை மாதத்தில் அந்த காரை ஹெச்.டி.எஃப்.சி.,வங்கி பறிமுதல் செய்து விட்டது. மேலும் இது குறித்து நடந்து வந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு சொல்வதற்கு முந்தின நாள் அந்த காரையும் வங்கி வேறு நபருக்கு விற்று விட்டது.நன்றி : தினமலர்
Wednesday, March 18, 2009
வீட்டு கடனுக்கான வட்டி குறைப்பால் மற்ற வங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எஸ்.பி.ஐ
ஸ்பெஷல் ஹோம் லோன் திட்டத்தில் கடன் வாங்குபவர்களுக்கு 8 சதவீதம்தான் வட்டி என்று சமீபத்தில் ஸ்டேட் பேங்க் அறிவித்ததை அடுத்து, மற்ற தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் ஸ்டேட் பேங்க்கிற்கு வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எத்தனை வாடிக்கையாளர்கள் அப்படி ஸ்டேட் பேங்க்கிற்கு மாறி இருக்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க நபர்கள் வந்திருக்கிறார்கள் என்கிறார்கள். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் டிமாண்ட் இருக்கிறது என்றார் மும்பை ஸ்டேட் பேங்க்கின் மூத்த அதிகாரி ஒருவர். இருந்தாலும் சில சிறிய நகரங்களில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. காரணம் என்னவென்றால், ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் ' டல் ' ஆகும் என்றும் அதனால் வீடுகளின் விலை இன்னும் குறையும் என்றும் எதிர்பார்ப்பதால்தான் என்றார் அவர். மேலும் வீட்டு கடனுக்கான வட்டியும் இன்னும் குறையும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர். தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பேங்கிற்கு மாறுகிறார்களா என்று சில தனியார் வங்கிகளில் விசாரித்தபோது, அதை ஒரளவு ஒத்துக்கொண்ட அவர்கள், எங்களிடம் கடன் வாங்கியவர்களில் பலர் முன் கூட்டியே வீட்டு கடனை முடிக்கிறார்கள் என்கின்றனர்.நன்றி : தினமலர்
Monday, March 16, 2009
பண்ணை சாரா கடன்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் வசூலாகாமல் உள்ள பண்ணை சாராக் கடன்களுக்கான அபராத வட்டியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் காலங்கடந்து நிலுவையில் இருந்த பண்ணை சாராக் கடன்களை வசூலித்து, வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த, வட்டிக் குறைப்புத் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இத்திட்டம், கடந்த 2008 ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களை சரிவர திருப்பி செலுத்தாவிட்டால், அவை தவணை தவறிய கடன்களாகி, வசூல் ஏதுமின்றி வங்கிகளின் லாபம் குறைந்தது. இந்நிலையில், பண்ண சாரா கடன்கள், நில அடமான கடன், தொழில் மற்றும் வணிகம் செய்ய பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டுமென சட்டசபை பட்ஜெட் தொடரில் வலியுறுத்தப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு கடந்த மாதம் 25ம் தேதி பதிலளித்த நிதியமைச்சர் அன்பழகன், 'இந்த கடன் தொகை 739 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளதால், அவற்றை ரத்து செய்ய முடியாது. எனினும் கடன் தொகையை மட்டும் செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார். இதன்படி, பண்ணை சாராக் கடன்களுக்கான வட்டிக் குறைப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதன்படி, அபராத வட்டியை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 28ம் தேதி, கூட்டுறவுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பண்ணை சாராக் கடன்கள், சிறு போக்குவரத்துக் கடன்கள், வீட்டு வசதி கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், நுகர்பொருள் கடன்கள், சம்பளக் கடன்கள், தொழில் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், சிறு வியாபாரக் கடன், தொழில், சேவை வியாபாரம் போன்றவற்றின் கீழ் வரும் இதரக் கடன்கள், தனி நபர்கள் பெற்ற காசுக் கடன்கள் ஆகியவற்றுக்கு இத்திட்டம் பொருந்தும்.இத்திட்டப்படி, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பண்ணை சாராக் கடன்கள் பெற்று, தவணை தவறி நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும், 2001 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வட்டி விகிதம் 12 சதவீதமாக கணக்கிடப்பட்டு, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள கடன்களுக்கான இச்சலுகை, கடன்காரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தவறிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே நேர் செய்யப்படும். இதனால், கூட்டுறவு வங்கிகளில் இருந்து நிதி வெளியேற்றம் ஏதும் இருக்கக் கூடாது. இதில், தீர்ப்பாணை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப் பட்ட இனங்களுக்கும், மற்ற சாதாரணக் கடன்கள் போலவே வட்டி குறைப்பு அளிக்கப்படும். திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி வசூலிக்க வேண்டிய தொகையில் 25 சதவீதத்தை இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்தி கடனை முடிக்க, கடன்தாரர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட தேதிக்குள், இச்சலுகையை பயன்படுத்தி தவணை தவறிய கடன்கள் முழுவதையும் செலுத்துவோருக்கு மட்டுமே சலுகைகள் முறைப்படுத்தப்படும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் நேர் செய்யாதவர்களிடம், வர வேண்டிய தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்படுவதாலும், அபராத வட்டி தள்ளுபடி செய்வதாலும் ஏற்படும் நிதியிழப்பை அந்தந்த கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட பிப்ரவரி 28ம் தேதி நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஏற்கனவே, 2008 ஜூன் 30ம் தேதி வரை வட்டி குறைப்புத் திட்டப்படி, 25 சதவீத தொகையை மட்டும் செலுத்தி, எஞ்சிய 75 சதவீத தொகையை அந்த தேதிக்குள் செலுத்த முடியாமல் போன கடன்தாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு கூட்டுறவுத் துறை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
நன்றி : தினமலர்
வங்கிகள் வராக்கடன் ரிசர்வ் வங்கி புது திட்டம்
பொதுத்துறை வங்கிகளில் உள்ள பெரிய அளவில் உள்ள வராக்கடன் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவரப் போகிறது. வராக்கடனைக் கட்டுவதற்கு உடன்பாடு ஏற்பட்டால், இனி சி.பி.ஐ., அதற்கு ஒப்புதல் தரவேண்டும். பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் அளவு குறைந்து வந்தாலும், சில விஷயத்தில் கோடிக்கணக்கில் அதிகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலை உள்ளது. தற்போது எந்தெந்த நிறுவனம் அல்லது தனியார் மீது கிரிமினல் நடவடிக்கை உள்ளதோ அந்த விஷயத்தில் சி.பி.ஐ.,யின் அனுமதி பெற்ற பின்பே வராக்கடன் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. ஏனெனில், ஒரு வர்த்தகர் வங்கி ஒன்றில் தன் மீதிருந்த கடன் பாக்கி வசூல் கிரிமினல் வழக்கில், வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 525 கோடி ரூபாய் கட்ட வேண்டியதற்கு, பேசி முடிவு செய்து 400 கோடி ரூபாய் கட்டி, வராக்கடன் புகாரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். அத்துடன், பணம் கட்டியதால், கிரிமினல் வழக்கு இல்லை என்று எழுதியும் வாங்கிக் கொண்டார். ஆகவே, பணபாக்கி உள்ள வராக்கடன் வைத்திருப்பவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, கிரிமினல் வழக்கு இல்லை என்று அத்தாட்சி பெறுமுன் சி.பி.ஐ ., அனுமதியையும் பெற வேண்டும். இதற்கான நடைமுறையை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது.நன்றி : தினமலர்
Labels:
ரிசர்வ் வங்கி,
வங்கி,
வங்கிகடன்
Sunday, March 8, 2009
தேர்தல் வருவதால் அதிகரிக்கப்போகிறது பணப்புழக்கம்
ரிசர்வ் வங்கியின் ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும் என்று தான் எல்லாரும் 'பெட்' கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாழனன்று நடந்ததோ வேறு. ஏன் ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டுக்கு அப்புறமும் சந்தை கீழே விழுந்தது? சென்ற வாரம் வரை ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்தால் சந்தை உயிர் பிழைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அப்படியே 50 புள்ளிகள் சதவீதம் குறைத்து புதனன்று சந்தை நேரத்திற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், வியாழனன்று துவக்கத்திலிருந்து சந்தைகள் விழுந்து கொண்டே தான் இருந்தன. சந்தை இன்னும் அதிகமான ரேட் கட்டை எதிர்பார்த்திருந்தது போலும்.பணவீக்கம் ஒரேயடியாக விழுந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 50 புள்ளிகள் என்பது சந்தைக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆதலால், சந்தைகள் மேலே ஏறுவதற்குப் பதிலாக கீழே இறங்கியது. ஆச்சரியம், ஆனால் உண்மை. அன்றைய தினம் மட்டும் 248 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
கடந்த 40 மாதங்களில் எவ்வளவு கீழ் நிலையை எட்டியிருந்ததோ அந்த நிலைக்கு அருகே சென்று விட்டது. பரமபதம் தான். பரமபதத்தை விளையாட்டில் தான் பார்த்திருக்கிறோம். விளையாட்டுக் குக் கூட சந்தையில் நினைத்ததில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளியன்று சந்தை உலக சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது.
அன்றைய தினம் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை இழந்து சந்தை கலையிழந்து காணப்பட்ட நிலையில், இது தான் வாங்குவதற்கு நல்ல சமயம் என்று பலரும் வந்ததால் இழந்த புள்ளிகளையும் திரும்பப் பெற்று 127 புள்ளிகள் கூடுதலாகவும் பெற்று முடிவடைந்தது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 127 புள்ளிகள் மேலே சென்று 8,325 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை 8,400க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான்.
நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால் இன்னும் விலை குறைகிறது. ஆதலால், முதலீட்டாளர்கள் பயப்படும் நிலை உள்ளது. ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கினால் ஆவரேஜ் செய்யலாம்.
இந்த வார பணவீக்கம் 3.03 சதவீதம் அளவிற்கு வந்துள் ளது. ஒரே இறக்கமாகத் தான் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் எல்லாம் செலவழிக்கப் பயப்படுவதால் தான் இது போன்ற ஒரு நிலைமையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆடம்பரச் செலவுகள் இல்லை, அத்தியாவசியச் செலவுகள் மட்டும் தான் என்ற நிலை தான். குறைந்து கொண்டு வரும் வேகத்தைப் பார்த்தால் ஜெட் வேகம் தான்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியும், ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைய முடிவு செய்த பின் பார்த்தால் ஒன்றிணைக்கப் பட்ட கம்பெனியான ரிலையன்ஸ தான் தற்போது உலகத்திலேயெ பெரிய ரிபைனரியாக இருக்கிறது. இதையடுத்து, வெனிசுவேலாவில் உள்ள பாராகவுனா, தென்கொரியாவில் உள்ள எஸ்.கே.கார்ப்., தென் கொரியாவில் உள்ள எல்.ஜி., - கால் டெக்ஸ், சிங்கப்பூரின் எக்சான் மொபில், பேடவுன் எக்சான் மொபில் என வரிசையில் வருகிறது. இந்த இணைப்பு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தூரம் பயனிளக்கப் போகிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். நானோ காருக்கு விண்ணப் பம் விற்பதில் இருந்து, காருக்கு லோன் கொடுப்பது வரை ஸடேட் பாங்க் மட்டும் தான் என்று இருந்தது. தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் டாடா கம்பெனியின் அனுமதியைப் பெற்றுள்ளது.
தேர்தல் வந்துவிட்டது, பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகரிக்கும் பணப்புழக்கம் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும். அப்படி பொருட் கள் விற்பனை கூடி வியாபாரங்கள் கூடி சந்தையும் கூடினால் நாமும் கூடிக்கூடிப் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
வீடு வாங்கப் போகிறீர் களா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித்தது. வங்கிகளிடையே போட்டி உண்டாகியுள்ளது. கனரா வங்கி மற்ற வங்கிகளை விட ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கி இன்னும் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல வங்கிகளுக்கு இடையே போட்டி என்றால் மக்களுக்குத் தானே கொண்டாட்டம். ஆனால், இந்த வட்டி புதிதாக வாங்குபவர்களுக்குத் தான், முன் வாங்கியவர்களுக்கு இல்லை என்று எல்லோரும் கூறுவதால் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் (அதாவது வங்கி விட்டு வங்கி மாறும் காட்சிகள்) தேர்தல் சமயத்தில் அதிகமாகவே இருக்கும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு 8,400 லெவலுக்கு கீழே வந்துள்ளது. இது தான் சமயம் என்று முதலீட்டாளர்கள் (உள்நாடு, வெளிநாட்டு) வரவேண்டும். அது மட்டும் தான் சந்தையைப் பலப்படுத்தும்.
நன்றி : தினமலர்
Labels:
பணப்புழக்கம்,
வங்கிகடன்,
வீடுகடன்
Thursday, March 5, 2009
வீடு, கார் கடன் மீதான வட்டி குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை
வங்கிகளுக்கான ரெபோ வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வீடு மற்றும் கார் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி குறையும். சர்வதேசப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை மொத்தம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், பல்வேறு சலுகை அறிவிப்புகள் காரணமாக ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகளில் பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை தற்போது அதலபாதாளத்தில் இருக்கிறது. பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் வந்துவிட்டதால் ரிசர்வ் வங்கி மேலும் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கு (ரெபோ) 5.5 சதவீதம் வட்டி விதிக்கப்படடது. இதில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான (ரிசர்வ் ரெபோ) வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது. வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டிகள் வெகுவாகக் குறையும். சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் ஐந்தாவது சலுகை இது. வர்த்தகத்துறையில் நம்பிக்கையிழப்பு, மூலதன முதலீட்டில் தொய்வு ஆகிய நிலையைச் சமாளிக்க இந்த அறிவிப்பு உதவும் என்று கருதப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் மூலம் 3.88 லட்சம் கோடி பணப்புழக்கம் கிடைக்கும். உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அமையும் என வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன. பொதுத்துறை வங்கியான கனரா வங்கி நேற்று வீடு, வாகனக்கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
ரிசர்வ் வங்கி,
வங்கி,
வங்கிகடன்,
வீடுகடன்
Tuesday, March 3, 2009
பழங்கதையாகிப்போன தனிநபர், வாகன கடன்கள்: 'ஹிட் லிஸ்ட்' பார்த்து தருவது புதுக்கதை
வராக் கடன்களால் ஆட்டம் கண்டுள்ள தனியார் வங்கிகளும், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் விழித்துக்கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. பர்சனல் லோன் எனப்படும் தனி நபர் கடன்களை, யார் யாருக்கு வழங்கக் கூடாது, வாகனங்கள் வாங்குவதற்கு யார், யாருக்கு பைனான்ஸ் தரக் கூடாது என்ற, 'ஹிட் லிஸ்டை' தயாரித்து தங்களது கிளைகளை உஷார்படுத்தி உள்ளன. கடந்த காலங்களில் தனியார் வங்கிகள் போட்டி போட்டு தனி நபர் கடன்களை வாரி இறைத்தன. ஒவ்வொரு ஆண்டும் ஓர் இலக்கை நிர்ணயித்து, தனிநபர் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளுக்கு மத்தியில், 'குடுமிப்பிடி' சண்டையே நடந்தது. கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணில் பட்டவர்களை எல்லாம் அழைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வாரி இறைத்தன. வாங்கிய கடனை திரும்ப கட்டுவார்களா, அதற்கான தகுதியும், வருமானமும் உள்ளதா, அளிக்கப்படும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனி நபர் கடன்கள் வழங்கப்பட்டது தான் கொடுமை. வாடிக்கையாளரை நேரில் கூட பார்க்காமல் ஏஜென்டுகள் மூலமாக கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. இதே நடைமுறை தான் கார் போன்ற வாகனங்களுக்கான கடன் வழங்குவதிலும் பின்பற்றப்பட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் கடன்களை அள்ளிவிட்டன.வழங்கப்பட்ட கடன்கள் திரும்பி வராததால் ஆடிப்போன தனியார் வங்கிகளும், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் கடனை வசூலிப்பதில் இறங்கின. அந்தோ பரிதாபம்... கடன் வாங்கிச் சென்ற பலரது சாயம் வெளுத்தது தான் மிச்சம்... கடன் பெற்ற பலரது ஆவணங்கள் போலி எனத் தெரிந்தது. இதற்கிடையில், உலக நாடுகளை ஆட்டிப்படைத்த பொருளாதார நெருக்கடி, நமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார மந்த நிலையால் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தானாகவே தள்ளாட்டம் கண்டுள்ளன. இதன் எதிரொலியாக, தனிநபர் கடன், வாகனக் கடன் வழங்குவதை பெரிதும் குறைத்துக்கொண்டுள்ளன. மேலும், கடன் கேட்டு அணுகுபவர்களின் ஜாதகத்தை, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்க் காத குறையாக அலசி ஆராய்கின்றன. கடன் வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களையும் தங்களது கிளைகளுக்கு அடிக்கடி அனுப்பிக்கொண்டுள்ளன. யார் யாருக்கு கடன் தரக் கூடாது என்ற பட்டியல் தான் லேட்டஸ்ட் வழிகாட்டுதல். தனியார் வங்கிகள், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களின் புதிய 'ஹிட்' லிஸ்ட் இதோ...
வீடு கட்டித் தரும் கான்ட்ராக் டர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள், சினிமா, 'டிவி' நடிகர், நடிகைகள், கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள், கான்ட்ராக்டர்கள், கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்பவர்கள். கலெக்ஷன் ஏஜென்ட், செக்யூரிட்டி நிறுவனம் நடத்துபவர்கள், பார்கள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட அறைகளின் உரிமையாளர்கள், எஸ்.டி.டி - பி.சிஓ., மற்றும் ஜெராக்ஸ் பூத் மட்டும் வைத்து நடத்துபவர்கள். போலீஸ், மரம் நடும் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், ஆர்.டி.ஓ., ஏஜென்டுகள், ஆக்ராய் ஏஜென்டுகள், தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டி, சரிகை வியாபாரம் செய்பவர்கள், மனிதவள ஆலோசகர்கள், சிறிய கூரியர் நிறுவனங்கள், மோட்டார் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள், பங்கு மார்க்கெட் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மற்றும் புரோக்கர்கள், பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு கடன் தரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் தொழிலில் உள்ளவர்கள், பி.பி.ஓ., நடத்துபவர்கள், சைபர் கபே உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் கடன் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் சாப்ட்வேர் தொழில் ஆட்டம் கண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடனில் கார் வாங்கி விட்டு பணத்தை செலுத்தாவிட்டால், காரை பறிமுதல் செய்து கம்பெனியிடம் ஒப்படைக்க ஏஜென்டுகள் உள்ளனர். இவர்களுக்கும் கடன் கிடையாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பைனான்ஸ் செய்பவர்கள், கார் வாடகைக்கு விடுபவர்கள், ஒன்றிரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்துபவர்கள், லாரி, வேன் போன்ற போக்குவரத்து வாகனங்கள் வைத்துள்ளவர்கள், பகுதி நேர டிராவல் ஏஜென்டுகள் ஆகியோருக்கும் கடன் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்கள், மேற்கண்டவர்களுக்கு கார் வாங்குவதற்கு கடன் வழங்கக் கூடாது என்ற எச்சரிக்கையை தந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், வீட்டிலேயே அலுவலகம் நடத்துபவர்களுக்கும் லோன் தர வேண்டாம் என்றும் பொதுவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்புறம் யாருக்குத் தான் கடன் தரப்போகின்றனர் என கேட்கிறீர் களா? அரசு ஊழியர்கள், மாதச்சம் பளம் வாங்குபவர்களுக்கு அவர் களது நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டால், அவர்களுக்கு மட்டும் தரலாம் என இப்போதைக்கு தனியார் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
நன்றி : தினமலர்
Monday, February 23, 2009
பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை ஆர்.பி.ஐ.எடுக்கும் : சுப்பாராவ்
இந்திய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்படும் போது வேண்டிய நடவடிக்கையை எடுக்க தயங்காது என்று ஆர்.பி.ஐ.,யின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளின் மத்திய வங்கி தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த சுப்பா ராவ், நிதி அமைச்சரை சந்தித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். ஞாயிறு அன்று அவர் நிதி அமைச்சரை சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் குறித்தும் இந்திய பொருளாதார நிலை குறித்தும் பேசினார். அப்போது நம்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றார். வெளிநாடுகளின் பொருளாதார நிலை குறித்தும் அதனை சமாளிக்க அங்குள்ள மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழே சென்றிருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கலாம் என்று இங்கே உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் டோக்கியோ சென்றிருந்த சுப்பா ராவ் அங்கு பேசியபோதுற, நாங்கள் இன்னும் வட்டியை குறைக்க முடியும். ஆனால் எவ்வளவு குறைப்பது, எப்போது குறைப்பது என்றுதான் தெரியாமல் இருக்கிறது என்றார். இப்போது ரிசர்வ் வங்கியில் ரிபோ ரேட் 5.5 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரிபோ ரேட் 4.0 சதவீதமாகவும் இருக்கிறது.நன்றி : தினமலர்
Labels:
ரிசர்வ் வங்கி,
வங்கிகடன்
Saturday, February 21, 2009
ஸ்டேட் பேங்க் கின் அதிரடி திட்டம் : கார் கடனுக்கு ஒரு வருடத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான வட்டியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்குள் புதிதாக கார் கடன் வாங்குபவர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருக்கிறது. இப்போது, கார் கடனுக்கு ஸ்டேட் பேங்க் 11.5 சதவீத வட்டியும், மற்ற பொதுத்துறை வங்கிகள் 10.25 முதல் 12.25 சதவீத வட்டியும் வசூலிக்கின்றன. மேலும் கார் கடனை அதிகபட்சமாக 84 இ.எம்.ஐ.,களாக செலுத்தலாம் என்றும் ஸ்டேட் பேங்க் சொல்லியிருக்கிறது. டிசம்பர் 2008 உடன் முடிந்த காலத்தில் கணக்கிட்டு பார்த்தபோது, ஸ்டேட் பேங்க்கில் கார் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கார் கடனை அதிகரிக்கும் விதமாக இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதா மாதம் 20,000 பேருக்கு கார் கடன் கொடுக்க வேண்டும் என்று அது இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, அதிக வட்டி காரணமாக இந்தியாவில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருப்பதை அறிந்த ரிசர்வ் பேங்க், வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. கார் விற்பனையும் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் டிசம்பர் மாதத்தில் 7 சதவீதமும் ஜனவரி மாதத்தில் 3 சதவீதமும் குறைந்திருந்தது. கார் கடனுக்கு இப்போது வட்டியை குறைத்திருக்கும் ஸ்டேட் பேங்க், கடந்த ஜனவரி 31ம் தேதி, வீட்டு கடனுக்கு ஒரு வருடத்திற்கு 8 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருந்தது.நன்றி : தினமலர்
Sunday, February 15, 2009
வீடுகள் விலை 30 சதவீதம் சரிவு: வாங்குவோர் தயக்கம்
கடந்த நான்கு மாதங்களில், வீடுகளின் விலை 30 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜோனஸ் லாங் லாசல்லே மேக்ராஜ் என்ற ஆலோசனை அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இருப்பினும், வீடு வாங்குவதை பெரும்பாலானோர் தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகின்றனர். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும்நிலையில், புதிய வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள், வீடு வாங்குவோருக்கு ஏற்ப அதிக சுமையில்லாத விலையில் தயாராகி வருகின்றன. ஏற்கனவே, வாங்கப் பட்ட நிலங்கள் அதிக விலை கொடுக்கப்பட் டவை. இருப்பினும், அதிக லாபம் இல்லாமல், அந்த நிலங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், வீடுகளின் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. வீடுகளின் விலை சரிந்துள்ள நிலையில், வங்கிக் கடன் வட்டி விகிதமும் சரிந்துள்ளது. இதனால், புதிய வீடுகள் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் பணிகளை துவக்கி உள்ளன. குறிப்பாக, நடுத்தரப் பிரிவினர் வாங்கும் திறன் கொண்ட வகையில், குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் ஆட் குறைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பதால், வேலை நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வீடுகளின் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வீடு வாங்குவோர் மத்தியில் தொடர்ந்துதயக்க நிலையே காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல், வீடு வாங்கும் திறன் அதிகரிக்கும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வீடுகளின் விலைகள் குறைக்கப் பட்டுள்ளன. வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, குறைந்த விலை வீடுகளின் விற்பனை ஸ்திரமடையும் என்ற எதிர்பார்ப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர் மத்தியில் நிலவுகிறது. ஆனால், ஏற்கனவே, அதிக விலை கொடுத்து நிலம் வாங்கியிருப்பதால், இதற்கும் குறைவாக விலை நிர்ணயிக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தயாராக இல்லை. இதனால், பல்வேறு நிறுவனங்கள் புதிதாக நிலம் வாங்கி, அதில் வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
ரியல் எஸ்டேட்,
வங்கிகடன்
Subscribe to:
Posts (Atom)
