Tuesday, March 3, 2009

பழங்கதையாகிப்போன தனிநபர், வாகன கடன்கள்: 'ஹிட் லிஸ்ட்' பார்த்து தருவது புதுக்கதை

வராக் கடன்களால் ஆட்டம் கண்டுள்ள தனியார் வங்கிகளும், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் விழித்துக்கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. பர்சனல் லோன் எனப்படும் தனி நபர் கடன்களை, யார் யாருக்கு வழங்கக் கூடாது, வாகனங்கள் வாங்குவதற்கு யார், யாருக்கு பைனான்ஸ் தரக் கூடாது என்ற, 'ஹிட் லிஸ்டை' தயாரித்து தங்களது கிளைகளை உஷார்படுத்தி உள்ளன. கடந்த காலங்களில் தனியார் வங்கிகள் போட்டி போட்டு தனி நபர் கடன்களை வாரி இறைத்தன. ஒவ்வொரு ஆண்டும் ஓர் இலக்கை நிர்ணயித்து, தனிநபர் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளுக்கு மத்தியில், 'குடுமிப்பிடி' சண்டையே நடந்தது. கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணில் பட்டவர்களை எல்லாம் அழைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வாரி இறைத்தன. வாங்கிய கடனை திரும்ப கட்டுவார்களா, அதற்கான தகுதியும், வருமானமும் உள்ளதா, அளிக்கப்படும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனி நபர் கடன்கள் வழங்கப்பட்டது தான் கொடுமை. வாடிக்கையாளரை நேரில் கூட பார்க்காமல் ஏஜென்டுகள் மூலமாக கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. இதே நடைமுறை தான் கார் போன்ற வாகனங்களுக்கான கடன் வழங்குவதிலும் பின்பற்றப்பட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் கடன்களை அள்ளிவிட்டன.
வழங்கப்பட்ட கடன்கள் திரும்பி வராததால் ஆடிப்போன தனியார் வங்கிகளும், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் கடனை வசூலிப்பதில் இறங்கின. அந்தோ பரிதாபம்... கடன் வாங்கிச் சென்ற பலரது சாயம் வெளுத்தது தான் மிச்சம்... கடன் பெற்ற பலரது ஆவணங்கள் போலி எனத் தெரிந்தது. இதற்கிடையில், உலக நாடுகளை ஆட்டிப்படைத்த பொருளாதார நெருக்கடி, நமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார மந்த நிலையால் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தானாகவே தள்ளாட்டம் கண்டுள்ளன. இதன் எதிரொலியாக, தனிநபர் கடன், வாகனக் கடன் வழங்குவதை பெரிதும் குறைத்துக்கொண்டுள்ளன. மேலும், கடன் கேட்டு அணுகுபவர்களின் ஜாதகத்தை, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்க் காத குறையாக அலசி ஆராய்கின்றன. கடன் வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களையும் தங்களது கிளைகளுக்கு அடிக்கடி அனுப்பிக்கொண்டுள்ளன. யார் யாருக்கு கடன் தரக் கூடாது என்ற பட்டியல் தான் லேட்டஸ்ட் வழிகாட்டுதல். தனியார் வங்கிகள், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களின் புதிய 'ஹிட்' லிஸ்ட் இதோ...
வீடு கட்டித் தரும் கான்ட்ராக் டர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள், சினிமா, 'டிவி' நடிகர், நடிகைகள், கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள், கான்ட்ராக்டர்கள், கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்பவர்கள். கலெக்ஷன் ஏஜென்ட், செக்யூரிட்டி நிறுவனம் நடத்துபவர்கள், பார்கள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட அறைகளின் உரிமையாளர்கள், எஸ்.டி.டி - பி.சிஓ., மற்றும் ஜெராக்ஸ் பூத் மட்டும் வைத்து நடத்துபவர்கள். போலீஸ், மரம் நடும் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், ஆர்.டி.ஓ., ஏஜென்டுகள், ஆக்ராய் ஏஜென்டுகள், தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டி, சரிகை வியாபாரம் செய்பவர்கள், மனிதவள ஆலோசகர்கள், சிறிய கூரியர் நிறுவனங்கள், மோட்டார் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள், பங்கு மார்க்கெட் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மற்றும் புரோக்கர்கள், பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு கடன் தரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் தொழிலில் உள்ளவர்கள், பி.பி.ஓ., நடத்துபவர்கள், சைபர் கபே உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் கடன் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் சாப்ட்வேர் தொழில் ஆட்டம் கண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடனில் கார் வாங்கி விட்டு பணத்தை செலுத்தாவிட்டால், காரை பறிமுதல் செய்து கம்பெனியிடம் ஒப்படைக்க ஏஜென்டுகள் உள்ளனர். இவர்களுக்கும் கடன் கிடையாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பைனான்ஸ் செய்பவர்கள், கார் வாடகைக்கு விடுபவர்கள், ஒன்றிரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்துபவர்கள், லாரி, வேன் போன்ற போக்குவரத்து வாகனங்கள் வைத்துள்ளவர்கள், பகுதி நேர டிராவல் ஏஜென்டுகள் ஆகியோருக்கும் கடன் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்கள், மேற்கண்டவர்களுக்கு கார் வாங்குவதற்கு கடன் வழங்கக் கூடாது என்ற எச்சரிக்கையை தந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், வீட்டிலேயே அலுவலகம் நடத்துபவர்களுக்கும் லோன் தர வேண்டாம் என்றும் பொதுவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்புறம் யாருக்குத் தான் கடன் தரப்போகின்றனர் என கேட்கிறீர் களா? அரசு ஊழியர்கள், மாதச்சம் பளம் வாங்குபவர்களுக்கு அவர் களது நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டால், அவர்களுக்கு மட்டும் தரலாம் என இப்போதைக்கு தனியார் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
நன்றி : தினமலர்


No comments: