Tuesday, March 3, 2009

அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 12 வருடங்களில் இல்லாத சரிவு

அமெரிக்க பங்கு சநதை இன்று கடும் சரிவை சந்தித்திருக்கின்றன. அங்குள்ள டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 7,000 புள்ளிகளுக்கும் கீழே சென்று முடிந்திருக்கிறது. டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 299.64 புள்ளிகள் ( 4.24 சதவீதம் ) குறைந்து 6,763.29 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இது கடந்த 1997 ஏப்ரலுக்குப்பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. நாஸ்டாக் இன்டக்ஸ் 54.99 புள்ளிகள் ( 3.99 சதவீதம் ) குறைந்து 1,322.85 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸூம் 4.7 சதவீதம் குறைந்து 700 புள்ளிகளுக்கும் கீழே சென்று முடிந்திருக்கிறது. இதுவும் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத சரிவு. அமெரிக்காவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ.ஐ.ஜி.,62 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்திருந்ததை அடுத்து, அதனை காப்பாற்ற அமெரிக்க அரசு 30 பில்லியன் டாலர் கடனுதவி செய்தும் அங்குள்ள பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2008 ன் கடைசி காலாண்டில், ஏ.ஐ.ஜி., நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நஷ்டமடைந்திருக்கிறது. இதனால் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 150 பில்லியன் டாலர் கடன் பெற்றிருந்த ஏ.ஐ.ஜி., இப்போது கூடுதலாக 30 பில்லியன் டாலரை கடனாக பெறுகிறது. வேறு எந்த அமெரிக்க கம்பெனியும் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை அமெரிக்க அரசிடம் இருந்து கடனாக பெற்றது இல்லை. அமெரிக்க பங்கு சந்தையைப்போலவே லண்டனின் எஃப்.டி.எஸ்.இ.100 இன்டக்ஸூம் 204.26 புள்ளிகள் ( 5.33 சதவீதம் ) குறைந்து 3,625.83 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இதுவும் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத சரிவு. பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் உற்பத்தி துறையில் ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பு காரணமாக ற அங்குள்ள பங்கு சந்தைகள் சரிந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


No comments: