வியாழக்கிழமை அடியை பார்த்து பல முதலீட்டாளர்கள் கதி கலங்கி போய் இருந்தனர். மேலும், கிலி ஊட்டும் விதமாகத்தான் வெள்ளிக்கிழமை ஆரம்பம் முதல் மதியம் வரை இருந்தது. வங்கிகள் இணைப்பு பற்றிய செய்தி, ஷார்ட் கவரிங் போன்றவற்றால் தரையில் மோதிய பந்து மேலே எம்பியது போல் சந்தை வேகம் எடுத்தது.ஒண்ணுமே புரியலே உலகத்திலே...என்று பாடாத குறை தான்.தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை யொட்டி பயணிப்பது போல் இருந்தாலும், அப்படியே உல்டாவாகி, புள்ளிகளைக் கடந்துள்ளது.
வங்கிகளின் கல்யாணம் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது;செயல்பாட்டிற்கு வரவே யில்லை. ஆனால், தற் போது அந்த பேச்சு வார்த்தைகள் மறுபடி துவங்கியுள்ளன. எந்த வங்கி எந்த வங்கியின் மீது கண் வைத்திருக்கிறது என்ற செய்திகள் வர ஆரம்பித்தவுடன் பொதுத் துறை வங்கிகளில் சிறிய வங்கிகள் மேலே சென்றன. தேனா வங்கி குறிப்பாக 11 சதவீதத்திற்கும் அதிகமாக வெள்ளியன்று மேலே சென்றது. பொதுத்துறை வங்கி பங்குகள் உங்கள் போர்ட்போலியோவிற்கு ஏற்றது என்று பலமுறை இந்தப் பகுதியில் எழுதியுள்ளோம்.
மிகவும் குறைந்த விலையில் கிடைத்தன. அப்படி வாங்கியிருந்தால் நல்ல லாபங்கள் பெற்றிருக்கலாம்.இப்போதும் பழுதில்லை; நன்கு கவனித்து வாருங்கள். விலை குறைவது போல இருந்தால் வாங்குவது உசிதம். இது, சந்தை வெள்ளியன்று மேலே செல்லக் காரணமாக இருந்தது. அன்றைய தினம் முடிவாக 236 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது.வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 236 புள்ளிகள் கூடி 17,021 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 63 புள்ளிகள் கூடி 5,052 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
வியாழனன்று ஏற்பட்ட நஷ்டத்தை வெள்ளி சரிக்கட்டியது என்றே கூற வேண்டும். மியூச்சுவல் பண்ட் ஆன்-லைன் டிரேடிங்இதுவரை மியூச்சுவல் பண்டுகளை ஆன்-லைனில் வாங்க இயலாமல் இருந்தது. சில கம்பெனிகள் மதியம் 2 மணிக்குள் வாங்குவதற்கு அப்ளை செய்தால், அன்றைய மதிப்பில் யூனிட்களை அலாட் செய்து வந்தனர். தற்போது கொண்டு வரவுள்ள மாற்றத்தில், மியூச்சுவல் பண்ட் யூனிட்களை ஆன்-லைனில் வாங்கு வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், ஏஜன்டுகளுக்கு வாய்ப்புகள் போகும். பல ஊர்களில் இருப்பவர்களும் யூனிட் களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.
பணவீக்கம்வெங்காயமும், உருளைக்கிழங்கும் தான் மறுபடி உணவுப் பொருட்களின் பணவீக்கத்தை, இந்த வாரம் 14.55 சதவீதத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தங்கம்:தங்கம் பற்றி செய்திகள் இல்லாவிடில் எப்படி? விலைகள் கூடிக்கொண்டே இருப்பதால் தங்க விற்பனை மூன்றாவது காலாண்டில் உலகளவில் 49 சதவீதமும், இந்திய அளவில் 55 சதவீதமும் விற்பனையில் குறைந்துள்ளது என்று வேர்ல்ட் கோல்டு கவுன்சில் அறிவித்துள்ளது. இப்படி விற்பனை குறையும் போது விலைகள் கூடிக்கொண்டே செல்வது தான் ஆச்சரியமாக உள்ளது.
காக்ஸ் அண்ட் கிங்ஸ் புதிய வெளியீடுகாக்ஸ் அண்ட் கிங்சின் புதிய வெளியீட்டை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியன்று இறுதியாக 6.90 தடவை செலுத் தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பங்கு கிட்டத் தட்ட ஒரு மடங்கு செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதியில் பெரும்பாலும் போட்டவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.புதிய வெளியீடுகளை அந்த வெளியீடு முடிந்தவுடன், ஏழு நாட்களில் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கொண்டு வரலாமா என்று செபி யோசித்துக் கொண்டு இருக்கிறது. தற்போது 20 நாட்கள் வரை ஆகிறது. இதை குறைக்கும் விதமாக ஏழு நாட்களாகும் பட்சத்தில் பல முதலீட்டாளர்கள் இன்னும் சந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?அடுத்த வாரம் சந்தை உலக நடப்புகளை வைத்து செயல்படும். சந்தை 17,000 புள்ளிகள் மறுபடி தாண்டியிருப்பது, ஒரு நல்ல செய்தி. இருப்பினும் டிசம்பர் மாதம் வந்துவிட்டது. பொதுத்துறை பங்குகள் விற்பனையெல்லாம் துவங்கப்போவதெல்லாம் பொங்கலுக்கு பிறகு தான். டிசம்பர் மாதம் என்றாலே ஒரு வித கிலி சந்தைக்கு பிடித்துக் கொள்ளும். இப்போதைய நிலையில், நிப்டி 5,050 என்ற அளவில் நிலை பெறுவது போல் தெரிகிறது. இருப்பினும் இந்த சமயத்தில் பங்குகளை வாங்குவதை தவிர்த்து விட்டு சற்று வேடிக்கை பார்க்கலாம்.பங்குச் சந்தை வேக வேகமாக முன்னாடி போகுதுன்னு பதட்டமோ, பின்னாடி போகுதேன்னு பயமோ கொள்ளாதீங்க. கோவில் தேரோட்டத்தின் போது, வழியில் தேரை நிறுத்துவதற்கு அவ்வப்போது கட்டையை போடுவாங்க. அதுபோல், முதலீடாக இருந்தாலும், வர்த்தகமாக இருந்தாலும், சந்தைக்குள் போகிறவர்கள், 'ஸ்டாப் லாஸ்' போட்டு விட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும். உங்களுடைய முதலீடு என்ற தேருக்கு, கட்டையைப் போட மறக்காதீங்க; அதுதான், ஆரோக்கியமானதாக இருக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்