Sunday, September 7, 2008

ஏறி இறங்கும் சந்தையிலும் தொடர்கிறது ஆடுபுலி ஆட்டம்

பங்குச் சந்தை போகும் போக்கு அபாயகரமாக உள்ளது. 'தொழில் நுட்ப பகுப்பாய்வு, அடிப்படை வலுவாக உள்ளது' என்ற பேச்சுகள் எல்லாம் எடுபடாமல் போய்விட்டது. 15 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சந்தை நிலை பெற்றால் ஏறுமுகம் தான் என்ற நிலையும் மாறியுள்ளது. சமீபகாலமாக, 500 புள்ளிகள் கூடினால், அடுத்த நாளே 500 புள்ளிகளும் காணாமல் போய்விடுகின்றன. கடந்த வியாழன் அன்று இந்தியச் சந்தைகளில் லாப நோக்கில் விற்பவர்கள் அதிகம் இருந்தனர். சந்தை 15,000 புள்ளிகளுக்கு மேல் செல்லும் போதெல்லாம் விற்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
இது தவிர, சந்தை தற்சமயம் கீழே இறங்கியிருந்த போது டிரேடிங் நோக்கத்தோடு வாங்கியவர்கள் எல்லாம், கிடைத்த லாபம் போதும் என்று விற்கமுற்படுகின் றனர். இதனால், சந்தை கீழே இறங்குகிறது. வியாழன் அன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 150 புள்ளிகளை இழந்திருந் தது.
அன்று, அமெரிக்காவில் பங் குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு உலகளவில் பல பாகங்களிலும் எதிரொலித்தது. அதாவது, அங்கு வேலையில்லாதவர்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்காக ஒரு உதவித் தொகைக்காக விண்ணப் பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருவதாக வந்த புள்ளி விவரத்தை வைத்து, அங்கு பங்குச் சந்தைகள் 3 சதவீதம் வரை கீழே விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட பெரிய சரிவு இது தான். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமோ என்ற கவலை வேறு சேர்ந்து கொண்டது. இதுவும் போதாது என பணவீக்கம் கடந்த வாரத்தை விட மிகச்சிறிய அளவே குறைந் திருந்தது. கடந்த வாரம் 12.40 சதவீதமாக இருந்தது, இந்த வாரம் 12.34 சதவீதமாக குறைந்துள்ளது. சிறிது அதிகமான குறைவை எதிர்பார்த்திருந் தனர். இவையெல்லாம் சேர்ந்து பங்குச் சந்தையை ஒரு புரட்டு புரட்டி விட்டது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 415 புள்ளிகள் குறைந்து 14,483 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 95 புள்ளிகள் குறைந்து 4,352 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
புதிய வெளியீடுகள்: யூகோ வங்கி தனது புதிய வெளியீட்டை வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொண்டு வரும் எனவும், அது, ரூ. 50 முதல் 60 விலைக்குள் இருக்கும் எனவும், வெளியீடு 500 கோடி ரூபாய் அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வங்கியின் பங்குகள் மேலே சென்றன. இது போல பெரும்பாலும் எல்லா வங்கிகளும் தங்களுடைய மூலதனத்தை அதிகப்படுத்துவதற்காக புதிய வெளியீடுகளை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வரப்போகும் ஐந்தாண்டுகளில் எல்லா வங்கிகளும் பெருமளவில் மூலதனத்தை அதிகரிக்க வேண் டிய கட்டாயத்தில் உள்ளன. டாலர் கூடுகிறது; ரூபாய் குறைகிறது: இந்தியாவின் முக்கியமான இறக்குமதிப் பொருட்களில் ஒன்று கச்சா எண்ணெய். இறக்குமதி செய்த கச்சா எண் ணெய்க்கு கொடுக்க வேண்டி, பொதுத்துறை நிறுவனங்கள் டாலரை வாங்கும் போது அதன் மதிப்பு கூடுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி கூடிக்கொண்டே தான் போகிறது. அதாவது உபயோகம் கூடிக்கொண்டே போகிறது. ஆதலால் அதிகம் டாலர் தேவையாக உள்ளது. விலையை எவ்வளவு கூட்டினாலும் உபயோகம் கூடிக் கொண்டே தான் போகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 795 டாலர் அளவிற்கு இறங்கி வந்துள்ளது. ஆனால், அதே சமயம் ஒரு டாலரின் மதிப்பு 44.67 வரை கூடியுள்ளது. ஆதலால், தங்கம் விலையில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. 20 நாட்கள் முன்பு ஒரு டாலர் 42.30 அளவில் இருந்தது; இது ஆச்சரியமான ஏற்றம் தான். இறக்குமதியாளர்களுக்கு திண்டாட்டம் தான். ரிலையன்ஸ் முதலிடம்: ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும், சிஸ்டமேட்டிக் இன்வஸ்மென்ட் பிளானில் 10 லட்சம் அக்கவுன்ட்களை பெற்று முதலிடம் வகிக்கிறது. அதாவது, மியூச்சுவல் பண்டில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடுவது என்ற திட்டத்தில். மேலும், பொதுவாகவே மியூச்சுவல் பண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2.77 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வரும் வாரம் எப்படி இருக்கும்? இந்திய அளவில் செயல்பாடுகளில் பெரிய மாறுதல்கள் இல்லாவிடினும், இந்திய பங்குச் சந்தைகளில் மாற்றங்கள் உலகளவில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும் இருப்பதால் அதில் ஏதும் பெரிய மாறுதல்கள் இல்லாத பட்சத்தில் அடுத்த வாரம் 14,500 முதல் 15,000க் குள்ளேயே இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குறைந்த முகமதிப்பில் பங்குகளை வாங்கிப்போட்டவர்கள் எல்லாம், ஏறி இறங்கும் சந்தையில் ஆடு புலி ஆட்டம் ஆடிவருகின்றனர். இது அவர்கள் நீண்ட நாட்களாக சந்தையில் தாக்குபிடித்து பாடம் கற்று கொண்டதால் வந்த பயன். இந்த ஆட்டத்தை குறிப்பிட்ட சில பங்குகளின் திடீர் ஏற்றத்தையும், இறக்கத்தையும் வைத்தே கணித்துவிடலாம். நிறுவனங்களின் அரையாண்டு முடிவுகள், அட்வான்ஸ் டேக்ஸ் என சாதகமான அம்சங்கள் இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தமும் முக்கிய காரணியாக இருக்கும்.
இருப்பினும் தொடர்ந்து உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேர்தல் அணிவகுப்பு காத்து இருக்கிறது. அதுவரை சந்தை நித்திய கண்டம் பூர்ண ஆயுசாக சென்று கொண்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே, ஜாக்கிரதையாக கையாள்பவர்களுக்கு கவலையிருக்காது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


400 நாள் பிக்சட் டிபாசிட் இப்போதைக்கு நல்லது

பணவீக்கம் படு மோசமான ஏற்றம், பங்குச் சந்தையோ கையை கடித்து விட்டது. கையில் இருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?
இந்த கேள்வி, பலரிடம் உள்ளது. வீடு வாங்கலாம் என்றால், வீட்டுக் கடன் மீதான வட்டிவீதம் கூரையை பீய்த்துக்கொண்டு எங்கோ எகிறி விட்டது. அது போலத்தான் வாகன கடன் வட்டிவீதமும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம் என்று கடந்த காலத்தில் பணத்தை போட்ட நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலரும், இப்போது கடும் பீதியில் உள்ளனர். கையில் இருக்கும் பணத்தை காப்பாற்றிக் கொள்வதே இவர்களுக்கு சிரமமாக உள்ளது. நிதி ஆலோசகர்கள் பலரும் கூறுவது என்னவென்றால், இப்போதுள்ள சூழ்நிலையில், பிக்சட் டிபாசிட் தான் லாபம் தரும் முதலீடு என்று 'அடித்துச்' சொல்கின்றனர். அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பிக்சட் டிபாசிட் திட்டம் உள்ளது; அதுபோல, வேறு சில நிதி நிறுவனங்களும் பிக்சட் டிபாசிட் திரட்டும் திட்டங்களை வைத்துள்ளன. இவற்றில் இதுவரை போதுமான அளவுக்கு வட்டி கிடைக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பணவீக்கம் 14 சதவீதத்தை தொட்டுள்ள நிலையில், பல கடன்கள் மீதான வட்டிவீதம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதுபோல, டிபாசிட்கள் மீதான வட்டிவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏ.பி.என்., ஆம்ரோ, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இண்டியா, டெவலப்மென்ட் கிரெடிட் பாங்க் உட்பட பல வங்கிகளில் பிக்சட் டிபாசிட்டில், 400 நாள் திட்டத்தை வைத்துள்ளன. இந்த திட்டத்தில் வட்டிவீதம் 9.5 முதல் 10 சதவீதம் வரை. சில வங்கிகள் அதற்கு மேலும் வட்டி தருகின்றன. பணவீக்கத்துடன் கணக்கிடும் போது, பிக்சட் டிபாசிட்டில் போட்ட பணத்துக்கு கிடைக்கும் வட்டித்தொகை லாபகரமானது தான். 'பணவீக்கம் குறையும் என்று நிதி அமைச்சரில் இருந்து பலரும் நம்பிக்கை தெரிவித்து விட்டனர். அப்படி பார்க்கும் போது, பிக்சட் டிபாசிட்டில் போட்ட பணத்துக்கு இதே வட்டிவீதம் தான் கடைபிடிக்கப்படும். ஆனால், பணவீக்கம் குறைந்து விடும். அப்போது, லாபம் அதிகம் தானே' என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
நன்றி : தினமலர்