Thursday, October 30, 2008

அடுத்த மாதம் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கிறது எல்.ஐ.சி.

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த மாதம் சிங்கப்பூரில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறக்கிறது. முதலில் அங்குள்ள இந்தியர்கள் எங்களது பாலிசியை வாங்கிக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம் என்று எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குநர் டி.கே.மெஹ்ரோட்டா தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள இந்தியர்களிடம் எங்களது பாலிசியை விற்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். எல்.ஐ.சி.,யின் பாலிசிகளுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்து வருவதால், இந்த பொருளாதார சரிவு நிலையிலும் எங்களால் பாலிசியை இந்தியர்களிடையே சுலபமாக விற்க முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரை அடுத்து அது ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்திலும் வர்த்தகத்தை விரிவு படுத்தவும் எல்.ஐ.சி.,திட்டமிட்டிருக்கிறது. இருந்தாலும் எல்.ஐ.சி.,யின் இங்கிலாந்து கிளையில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனினும் அது, அங்குள்ள மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு போட்டி நிறுவனமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களுக்கு அங்கு சில தடைகள் இருப்பதால் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறோம். விரைவில் வளர்ச்சியை காண்போம் என்றார் மெஹ்ரோட்டா. தற்போது எல்.ஐ.சி.,க்கு இங்கிலாந்து, மொரீசியஸ், ஃபிஜி, நேபாளம், அரபு நாடுகள், சவுதி அரேபியா, மற்றும் பஹ்ரெய்னில் அலுவலகங்கள் இருக்கின்றன. மேலும் எல்.ஐ.சி.,யின் ஏஜென்ட் எண்ணிக்கையையும் அதிகரிக்க அது திட்டமிட்டிருக்கிறது. இப்போது அதற்கு 12 லட்சம் ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் அதில் 30 சதவீதத்தை அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குழைவால், எல்.ஐ.சி.,யின் யூனிட் லிங்க் பாலிசி திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான திட்டங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றம் குறித்து மக்களிடையே சரியாக புரிதல் தன்மை இல்லாததால், நாங்கள் இந்த திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். முன்பு 85 சதவீதமாக இருந்த யூலிப் திட்டங்கள் இப்போது 75 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டன என்றார் மெஹ்ரோட்டா. இந்திய இன்சூரன்ஸ் தொழிலில் இப்போதும் 55 சதவீத மார்க்கெட் ஷேர் எல்.ஐ.சி.,க்கு இருக்கிறது என்று சொன்ன மெஹ்ரோட்டா, ஹெல்த் பிளஸ் என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நாங்கள் 60,000 பேருக்கு விற்றிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்

இந்திய டெலிகாம் நிறுவனத்தை ரூ.6,120 கோடிக்கு வாங்கும் நார்வே நிறுவனம்

யூனிடெக் வயர்லெஸ் என்ற இந்திய நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, நார்வே நிறுவனமான டெலினோர் ரூ.6,120 கோடிக்கு வாங்குகிறது.அதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கிறது. உலகின் ஏழாவது பெரிய டெலிகாம் ஆப்பரேட்டரான நார்வேயின் டெலினோருக்கு உலகமெங்கும் 15 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம், 22 சர்க்கில்களுக்கான டெலிகாம் லைசன்சை ரூ.1,650 கோடிக்கு வாங்கி வைத்திருந்தது. இதன் காரணமாக யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தில் மதிப்பு ரூ.11,620 கோடியாக உயர்ந்து விட்டது. டில்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கிற்கு சொந்தமானதுதான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம். பணப்பட்டுவாடா விஷயத்தில் அதற்கு ஏற்பட்ட கெட்ட பெயரால் கடந்த வாரத்தில் அதன் பெயர் பத்திரிக்கைகளில் பெரிதாக பேசப்பட்டது. பங்கு மதிப்பும் சரிந்து போயிருந்தது. இப்போது இதன் பங்கு ஒன்றிற்கு ரூ.50 என்ற விலையில் இதனை நார்வே நிறுவனமான டெலினோர் வாங்கிக்கொள்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் அது இங்கு ரூ.15,000 கோடி முதலீடு செய்து, 22 நகரங்களில் சேவையை துவங்க இருக்கிறது. முதலில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் இருக்கும் 13 நகரங்களில் அது சேவையை துவங்க இருக்கிறது. அனேகமாக அடுத்த வருட மத்தியில் அந்த சேவை துவங்கப்படும் என்று தெரிகிறது. டெலினோர் நிறுவனத்திற்கு பங்குகள் விற்கப்படுவது பற்றி கருத்து தெரிவித்த யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சேர்மன் சஞ்சை சந்த்ரா, மெஜாரிட்டி ஷேரோ, மைனாரிட்டி ஷேரோ, எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர் தேவைப்பட்டார். அதனால்தான் அவர்களுக்கு பங்குகள் விற்கப்படுகின்றன... எங்களுக்கும் நிறைய முதலீடு தேவைப்படுகிறது என்றார். நாங்கள் பெற்றிருக்கும் லைசன்ஸ் மதிப்பிற்கு ஈடாக ஒரு நல்ல விலை கிடைத்ததால்தான் நாங்கள் விற்க முன்வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதத்தில்தான் இன்னொரு வெளிநாட்டு நிறுவனமான யு.ஏ.இ.,யை சேர்ந்த எடிசலாட், 13 சர்க்கிள்களுக்கு டெலிகாம் லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை ரூ.4,050 கோடிக்கு வாங்கியது. இது தவிர கடந்த ஜூன் மாதத்தில், வெறும் இரண்டு சர்க்கிள்களுக்கு லைசன்ஸ் வாங்கி வைத்திருந்த பிகே மோடியின் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 40.8 சதவீத பங்குகளை ஏவி பிர்லாவுக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.2,700 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
நன்றி :தினமலர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: சில வாரங்களுக்கு காத்திருங்கள்...

'கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தபோதிலும், இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பின்பே, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை விலை குறைப்பு என்பதற்கே இடமில்லை' என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இப்போதே அதிகமாக ஏறிய விலையில் பாதி விலைக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள், இது குறித்து பிரச்னை எழுப்பிய போது, ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா அறிவித்து இருந்தார். தற்போது, கச்சா எண்ணெயின் விலை நினைத்து பார்க்காத வகையில் பழைய நிலைக்கு நெருங்கிவிட்டது. இருப்பினும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கரமாக சரிந்து விட்டது. இதனால், கச்சா எண்ணெய்க்கு டாலரில் மாற்றி கொடுக்கும்போது தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு கணக்கு காட்டி வருகிறது. இதையேதான் நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சக துணை செயலர் எஸ்.சுந்தரேசன் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, குறைந்துவந்தாலும், பெட்ரோல் ,டீசல், காஸ் விலையை குறைப்பது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை. 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துவந்த போதிலும், இதே நிலைக்கு ஸ்திரமாகுமா என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்பட்டு வரும் இழப்புகளை மீண்டும் தொடராத அளவுக்கு நிலைமை யை சமாளிக்க முடியுமான என கவனித்து வருகிறோம். எனவே இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பிறகு முடிவு செய்யப்படும். ஒன்று இரண்டு நாட்களில் ஏற்படும் விலை குறைவை வைத்து முடிவு செய்ய முடியாது. நேற்று முன் தினம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 56 டாலராக இருந்தது. இன்று இரண்டு டாலர் கூடியுள்ளது. சீரானநிலையில் ஸ்திரமாகும் பட்சத்தில் விலை குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும். இதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
நன்றி : தினமலர்


வட்டியை ஒரு சதவீதமாக குறைத்தது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களாகவே மோசமான நிதி நிலையில் இருந்து வரும் அமெரிக்கா, பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், அதிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றும் விதமாக அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை குறைத்திருக்கிறது. இப்போது அது விதிக்கும் வட்டி வெறும் ஒரு சதவீதம்தான். இந்த மாத துவக்கத்தில் தான், 2 சதவீதமாக இருந்த வட்டியை 1.5 சதவீதமாக அவசரமாக குறைத்தது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, உலகின் மற்ற ஐந்து மத்திய ரிசர்வ் வங்கிகளும் அப்போது வட்டியை குறைத்தன. ஆனாலும் இந்த நடவடிக்கை, அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் எந்தவித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 500 சரிவைத்தான் சந்தித்திருக்கிறது.செப்டம்பர் 2007ல் 5.25 சதவீதமாக இருந்த வட்டி இப்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு சதவீத வட்டி, கடந்த ஜூன் 2003 க்கும் ஜூன் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்ததுதான். இந்த வட்டி குறைப்பை ஏற்கனவே எல்லா பங்கு வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுதான் இருந்தார்கள் என்பதால், இதனால் ஒன்றும் பங்கு வர்த்தகத்தில் மாற்றம் நிகழவில்லை. நேற்றைய வர்த்தக முடிவில் டவ் ஜோன்ஸ் 0.82 சதவீதம், அல்லது 74.16 புள்ளிகள் குறைந்து, 8990.96 புள்ளிகளில் முடிந்திருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ், 1.11 சதவீதம், அல்லது 10.42 புள்ளிகள் குறைந்து 930.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆனால் நாஸ்டாக் 0.47 சதவீதம், அல்லது 7.74 புள்ளிகள் உயர்ந்து 1657.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 10.68 சதவீதமாக குறைந்தது

அக்டோபர் 18 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 10.68 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம், இதற்கு முந்தைய வாரத்தில் 11.07 சதவீதமாக இருந்தது. எரிபொருள் விலை குறைவு, உற்பத்தி பொருட்களில் விலை குறைவு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைவு போன்ற காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக 11 சதவீதத்திற்கும் மேல் இருந்த பணவீக்கம் இப்போது 0.39 சதவீதம் குறைந்து, 11 சதவீதத்திற்கும் கீழே வந்திருக்கிறது.கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.11 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 8.75 சதவீதமாக இருந்த பணவீக்கம், பெட்ரோலிய பொருட்களில் விலை உயர்வால் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. இப்போது ரிசர்வ் வங்கியின் சி.ஆர்.ஆர்/ ரிபோ ரேட் குறைப்பால் விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகியிருக்கிறது. பருப்பு, பழங்கள், கோதுமை விலை குறைந்திருக்கிறது.அயர்ன் அண்ட் ஸ்டீல் விலை 0.5 சதவீதம் குறைந்திருக்கிறது. துத்தநாகம் விலை 6 சதவீதம் குறைந்திருக்கிறது. வாசனை திரவியங்கள் விலை 0.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. காய்கறிகள் விலை 2.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நிதி நெருக்கடி விவகாரம்: சிதம்பரம் ஆலோசனை

சர்வதேச அளவில் நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை சமாளிப்பது குறித்து அமெரிக்கா ஜி-20 நாடுகளின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்து முடிவு செய்வதற்காக நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், விரிவான ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி, சர்வதேச நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக பல நாடுகளில் பங்குச்சந்தைகள் படுத்துவிட்டன. இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல நாடுகள் மண்டையை போட்டு குழப்பி வருகின்றன. நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் வகுப்பது குறித்து முடிவு செய்வதற்காக 'ஜி-20' நாடுகளின் மாநாட்டிற்கு அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ளார். அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவின் நிலையை எடுத்துரைப்பது தொடர்பாக, நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று உயர்மட்ட கமிட்டி கூட்டத்தை கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில், இந்திய பொருளாதார சங்கிலி தொடரில் முக்கிய அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, நிதி செயலர் அருண் ராமநாதன், ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், செபி சேர்மன் சி.பி.பாவே, நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர், பொருளாதார விவகார செயலர் அசோக் சாவ்லா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாடு குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். விரைவில் கூடி விவாதிக்க உள்ளோம். இதன் அடிப்படையில் அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் தயாரிக்க உள்ளது ' என்றார். 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு நேற்றுதான் வந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி :தினமலர்