யூனிடெக் வயர்லெஸ் என்ற இந்திய நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, நார்வே நிறுவனமான டெலினோர் ரூ.6,120 கோடிக்கு வாங்குகிறது.அதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கிறது. உலகின் ஏழாவது பெரிய டெலிகாம் ஆப்பரேட்டரான நார்வேயின் டெலினோருக்கு உலகமெங்கும் 15 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம், 22 சர்க்கில்களுக்கான டெலிகாம் லைசன்சை ரூ.1,650 கோடிக்கு வாங்கி வைத்திருந்தது. இதன் காரணமாக யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தில் மதிப்பு ரூ.11,620 கோடியாக உயர்ந்து விட்டது. டில்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கிற்கு சொந்தமானதுதான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம். பணப்பட்டுவாடா விஷயத்தில் அதற்கு ஏற்பட்ட கெட்ட பெயரால் கடந்த வாரத்தில் அதன் பெயர் பத்திரிக்கைகளில் பெரிதாக பேசப்பட்டது. பங்கு மதிப்பும் சரிந்து போயிருந்தது. இப்போது இதன் பங்கு ஒன்றிற்கு ரூ.50 என்ற விலையில் இதனை நார்வே நிறுவனமான டெலினோர் வாங்கிக்கொள்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் அது இங்கு ரூ.15,000 கோடி முதலீடு செய்து, 22 நகரங்களில் சேவையை துவங்க இருக்கிறது. முதலில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் இருக்கும் 13 நகரங்களில் அது சேவையை துவங்க இருக்கிறது. அனேகமாக அடுத்த வருட மத்தியில் அந்த சேவை துவங்கப்படும் என்று தெரிகிறது. டெலினோர் நிறுவனத்திற்கு பங்குகள் விற்கப்படுவது பற்றி கருத்து தெரிவித்த யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சேர்மன் சஞ்சை சந்த்ரா, மெஜாரிட்டி ஷேரோ, மைனாரிட்டி ஷேரோ, எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர் தேவைப்பட்டார். அதனால்தான் அவர்களுக்கு பங்குகள் விற்கப்படுகின்றன... எங்களுக்கும் நிறைய முதலீடு தேவைப்படுகிறது என்றார். நாங்கள் பெற்றிருக்கும் லைசன்ஸ் மதிப்பிற்கு ஈடாக ஒரு நல்ல விலை கிடைத்ததால்தான் நாங்கள் விற்க முன்வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதத்தில்தான் இன்னொரு வெளிநாட்டு நிறுவனமான யு.ஏ.இ.,யை சேர்ந்த எடிசலாட், 13 சர்க்கிள்களுக்கு டெலிகாம் லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை ரூ.4,050 கோடிக்கு வாங்கியது. இது தவிர கடந்த ஜூன் மாதத்தில், வெறும் இரண்டு சர்க்கிள்களுக்கு லைசன்ஸ் வாங்கி வைத்திருந்த பிகே மோடியின் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 40.8 சதவீத பங்குகளை ஏவி பிர்லாவுக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.2,700 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
நன்றி :தினமலர்
Thursday, October 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment