Thursday, October 30, 2008

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: சில வாரங்களுக்கு காத்திருங்கள்...

'கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தபோதிலும், இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பின்பே, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை விலை குறைப்பு என்பதற்கே இடமில்லை' என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இப்போதே அதிகமாக ஏறிய விலையில் பாதி விலைக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள், இது குறித்து பிரச்னை எழுப்பிய போது, ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா அறிவித்து இருந்தார். தற்போது, கச்சா எண்ணெயின் விலை நினைத்து பார்க்காத வகையில் பழைய நிலைக்கு நெருங்கிவிட்டது. இருப்பினும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கரமாக சரிந்து விட்டது. இதனால், கச்சா எண்ணெய்க்கு டாலரில் மாற்றி கொடுக்கும்போது தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு கணக்கு காட்டி வருகிறது. இதையேதான் நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சக துணை செயலர் எஸ்.சுந்தரேசன் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, குறைந்துவந்தாலும், பெட்ரோல் ,டீசல், காஸ் விலையை குறைப்பது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை. 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துவந்த போதிலும், இதே நிலைக்கு ஸ்திரமாகுமா என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்பட்டு வரும் இழப்புகளை மீண்டும் தொடராத அளவுக்கு நிலைமை யை சமாளிக்க முடியுமான என கவனித்து வருகிறோம். எனவே இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பிறகு முடிவு செய்யப்படும். ஒன்று இரண்டு நாட்களில் ஏற்படும் விலை குறைவை வைத்து முடிவு செய்ய முடியாது. நேற்று முன் தினம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 56 டாலராக இருந்தது. இன்று இரண்டு டாலர் கூடியுள்ளது. சீரானநிலையில் ஸ்திரமாகும் பட்சத்தில் விலை குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும். இதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: