Monday, August 18, 2008

சிமென்ட் விலை மேலும் உயர்கிறது

நிலக்கரி விலை, சம்பளம் மற்றும் கூலி உயர்வால், அடுத்த ஓரிரு மாதங்களில் சிமென்ட் விலை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததை விட தற்போது, சம்பளம் மற்றும் கூலி, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பணவீக்கமே காரணமாக அமைந்துள்ளது. அதே போல, நிலக்கரி விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே சிமென்ட் மூட்டை விலை, 205-235 ரூபாய் என்பதில் இருந்து, தற்போது 215-260 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையால் தேவை குறைவு ஏற்படுவது குறித்தும், பணவீக்கத்தால் கூலி மற்றும் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும், சிமென்ட் உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இது மட்டுமின்றி, நிலக்கரி விலையும் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு, 64 சதவீத நிலக்கரி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ளவை எலக்ட்ரானிக் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 100 சதவீத பிரிமியத் தொகையை சிமென்ட் நிறுவனங்கள் செலுத்துகின்றன. அதே போல, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும், ஒரு டன்னுக்கு 5,750 ரூபாயில் இருந்து 7,175 ரூபாய் முதல் 7,790 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். எனவே, விலை அதிகரிப்பு தவிர வேறு வழியில்லை என்று சிமென்ட் நிறுவனங்கள் கூறியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், நிலக்கரி விலை உயர்வு குறைவாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
நன்றி : தினமலர்


சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு

உலகச் சந்தையில் தங்கம் விலை குறைவதால், இனி, கிராம் ஆயிரம் ரூபாயைத் தாண்டாமல் குறைந்தே விற்கும் என்று மும்பையில் உள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்திருக்கிறது. தங்கம் விலை குறைந்திருப்பதால், வாங்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சென்னையில் தங்கம் வாங்குவோர் அதிகரித்ததால், சில குறிப்பிட்ட ஆபரணங்கள் ஸ்டாக் குறைந்தது. சென்னையில் கிராம் விலை 1,047க்கு நேற்று விற்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் 10 கிராம் ரூ. 13 ஆயிரத்து 567 என்று விற்ற தங்கம், இம்மாத ஆரம்பத்தில் 12 ஆயிரத்து 557 என்று குறைந்தது. அதற்குப்பின் படிப்படியாக வீழ்ச்சி ஏற்பட்டு, தற்போது மும்பை தங்க மார்க்கெட்டில் 10 கிராம் விலை ரூ.11 ஆயிரத்து 300 என்று குறைந்திருக்கிறது. இது, அடுத்த மாதம் ரூ.10 ஆயிரத்து 50க்கு இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி இங்கும் எதிரொலிக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் வலுப்பட்டிருப்பது, டாலருக்கு மவுசு அதிகரித்தது ஆகியவை, தங்கம் விலை இறங்கக் காரணமாகும். கச்சா எண்ணெய் விலைக் குறைவும் ஒரு காரணமாகும். வர்த்தகர்கள், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பணவீக்க பாதிப்பை ஈடுகட்ட, தங்கத்தை வாங்கி பெருமளவில் சேமிப்பர். கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம் வாங்கி தங்கள் மூலதனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. தங்கம் விலை இறக்கம் குறித்து அகில இந்திய தங்க வர்த்தகச் சந்தை தலைவர், ஷீல் சந்த் ஜெயின் கூறுகையில், 'டாலர் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க தங்கம் விலை குறையும். சமுதாய அளவிலும் தங்கம் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது' என்றார். ஆண்டுக்கு 800 டன் இறக்குமதி செய்யப்படும் தங்கம் இந்த ஆண்டில் அந்த அளவுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் 101 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு 193 டன் தங்கம் ஆகும். மேலும், தங்கம் ஸ்டாக் வைத்திருக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததாலும், அதிகளவில் முன்கூட்டியே ஆபரணத் தங்கம் தயாரித்தால் விலை வித்தியாச பாதிப்பு ஏற்படும் என்பதாலும், தங்கத்தின் தேவை குறையும் என்பதாலும், இனி இறங்குமுகமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்
தற்போது தங்கம் வாங்க, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ஆர்வம் காட்டிய போதும், இது தீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவதை குறைத்துவிடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

டெபிட் கார்டை தந்து ஷாப்பிங் செய்வது பாதுகாப்பானதா?: கிரெடிட் கார்டுக்கு உள்ள உத்தரவாதம் இதில் இல்லை

அடுத்தவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பணத்தை 'லபக்' செய்வதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; அடுத்தவர் டெபிட் கார்டு விவரங்களை அறிந்து கொண்டு, அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. டில்லியில் ஒரு தம்பதி சமீபத்தில் பிடிபட்டனர். ஷாப்பிங் செய்யும் இடங்கள் மற்றும் வேறு இடங்களில் எப்படியோ அடுத்தவர்களின் டெபிட் கார்டு விவரங்களை அறிந்து கொண்டு, போலி டெபிட் கார்டை தயாரித்து, அதைப் பயன்படுத்தி அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை பறித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு லட்சம் ரூபாய் வரை இவர்கள் பணம் எடுத்துள்ளனர். மற்ற நாடுகளை போல, இந்தியாவில் உள்ள வங்கிகள் தரும் டெபிட் கார்டுகளுக்கு வங்கி உத்தரவாதம் அளிப்பதில்லை; போதிய பாதுகாப்பும் தருவதில்லை. பணத்தை வாடிக்கையாளர் இழந்தால், அதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். கிரெடிட் கார்டுகளில் இருந்து யாராவது பணம் எடுத்தால் அதை கண்டுபிடித்து தர வங்கிகள் உத்தரவாதம் அளிக்கின்றன. கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கும் போதும், பொருட்கள் வாங்கும் போதும் உடனே, மொபைல் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் எச்சரிக்கை அளிக்கின்றன. ஆனால், டெபிட் கார்டு வாடிக்கையாளர் களுக்கு இது போன்ற எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வங்கிகள் அளிப்பதில்லை. அரசு வங்கிகளும் தனியார் வங்கிகள் போல, டெபிட் கார்டு பிரச்னைகளை சரிவர கையாள முன்வருவதில்லை. இந்தியாவில், கிரெடிட் கார்டுகளை விட, டெபிட் கார்டுகள் தான் அதிகம். பெரும் பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை, ஏதாவது ஒரு வங்கி டெபிட் கார்டு மூலம் தான் வழங்குகின்றன. இதனால், கிரெடிட் கார்டுகளை விட, டெபிட் கார்டுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக வங்கியியல் நிதி ஆலோசகர்கள் கூறியதாவது: அடுத்தவர் கிரெடிட் கார்டை போலியாக தயாரித்து, அதைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலோ, ஷாப்பிங் செய் தாலோ எளிதில் கண்டுபிடித்து அடுத்த முறை நடக்காமல் தவிர்க்க முடியும். ஆனால்,டெபிட் கார்டுகளை போலியாக தயாரித்து பணத்தை பறிக்கும் போது கண்டுபிடிப்பது சிரமம் தான். ஷாப்பிங் செய்யும் போது, டெபிட் கார்டை தந்து பணத்தை செலுத்துவது பாதுகாப்பானதல்ல. டெபிட் கார்டை தரும் போது வாடிக்கையாளரிடம் டெபிட் கார்டை தேய்க்கும் மிஷினை தந்து, 'பின்' நம்பரை பதிவு செய்யச் சொல்ல வேண்டும். ஆனால், அப்படி பல கடைகளில் செய்வதில்லை. இதுவே தவறான முன்மாதிரியாகும். 'பின்' நம்பரை தெரிந்துகொண்டு கடை ஊழியர்களோ, அவர்களின் உதவியுடன் மற்றவர்களோ தவறு செய்ய வழி ஏற்படுகிறது. டெபிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக வங்கிகள் பொறுப்பேற்பதில்லை. அது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதும் இல்லை. வாடிக்கையாளர்கள் தான் இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. வங்கி ஏ.டி.எம்.,களில் டெபிட் கார்டை செருகும் போது, அந்த சிறிய இடத்தில், ஏதாவது மின்காந்த பேப்பர் போன்ற ஏதாவது செருகி வைக்கப்பட்டிருக்கிறதா என்றும் உஷாராக கண்காணித்து, அதன் பின் கார்டை செருகி பணம் எடுக்க வேண்டும். பணம் எடுத்த பின், கார்டை பெற்றுக்கொண்ட பின், பழைய நிலைக்கு கம்ப்யூட்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு நிதி ஆலோசகர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்