Monday, August 18, 2008

சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு

உலகச் சந்தையில் தங்கம் விலை குறைவதால், இனி, கிராம் ஆயிரம் ரூபாயைத் தாண்டாமல் குறைந்தே விற்கும் என்று மும்பையில் உள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்திருக்கிறது. தங்கம் விலை குறைந்திருப்பதால், வாங்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சென்னையில் தங்கம் வாங்குவோர் அதிகரித்ததால், சில குறிப்பிட்ட ஆபரணங்கள் ஸ்டாக் குறைந்தது. சென்னையில் கிராம் விலை 1,047க்கு நேற்று விற்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் 10 கிராம் ரூ. 13 ஆயிரத்து 567 என்று விற்ற தங்கம், இம்மாத ஆரம்பத்தில் 12 ஆயிரத்து 557 என்று குறைந்தது. அதற்குப்பின் படிப்படியாக வீழ்ச்சி ஏற்பட்டு, தற்போது மும்பை தங்க மார்க்கெட்டில் 10 கிராம் விலை ரூ.11 ஆயிரத்து 300 என்று குறைந்திருக்கிறது. இது, அடுத்த மாதம் ரூ.10 ஆயிரத்து 50க்கு இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி இங்கும் எதிரொலிக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் வலுப்பட்டிருப்பது, டாலருக்கு மவுசு அதிகரித்தது ஆகியவை, தங்கம் விலை இறங்கக் காரணமாகும். கச்சா எண்ணெய் விலைக் குறைவும் ஒரு காரணமாகும். வர்த்தகர்கள், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பணவீக்க பாதிப்பை ஈடுகட்ட, தங்கத்தை வாங்கி பெருமளவில் சேமிப்பர். கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம் வாங்கி தங்கள் மூலதனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. தங்கம் விலை இறக்கம் குறித்து அகில இந்திய தங்க வர்த்தகச் சந்தை தலைவர், ஷீல் சந்த் ஜெயின் கூறுகையில், 'டாலர் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க தங்கம் விலை குறையும். சமுதாய அளவிலும் தங்கம் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது' என்றார். ஆண்டுக்கு 800 டன் இறக்குமதி செய்யப்படும் தங்கம் இந்த ஆண்டில் அந்த அளவுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் 101 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு 193 டன் தங்கம் ஆகும். மேலும், தங்கம் ஸ்டாக் வைத்திருக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததாலும், அதிகளவில் முன்கூட்டியே ஆபரணத் தங்கம் தயாரித்தால் விலை வித்தியாச பாதிப்பு ஏற்படும் என்பதாலும், தங்கத்தின் தேவை குறையும் என்பதாலும், இனி இறங்குமுகமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்
தற்போது தங்கம் வாங்க, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ஆர்வம் காட்டிய போதும், இது தீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவதை குறைத்துவிடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

No comments: