Monday, August 18, 2008

சிமென்ட் விலை மேலும் உயர்கிறது

நிலக்கரி விலை, சம்பளம் மற்றும் கூலி உயர்வால், அடுத்த ஓரிரு மாதங்களில் சிமென்ட் விலை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததை விட தற்போது, சம்பளம் மற்றும் கூலி, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பணவீக்கமே காரணமாக அமைந்துள்ளது. அதே போல, நிலக்கரி விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே சிமென்ட் மூட்டை விலை, 205-235 ரூபாய் என்பதில் இருந்து, தற்போது 215-260 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையால் தேவை குறைவு ஏற்படுவது குறித்தும், பணவீக்கத்தால் கூலி மற்றும் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும், சிமென்ட் உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இது மட்டுமின்றி, நிலக்கரி விலையும் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு, 64 சதவீத நிலக்கரி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ளவை எலக்ட்ரானிக் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 100 சதவீத பிரிமியத் தொகையை சிமென்ட் நிறுவனங்கள் செலுத்துகின்றன. அதே போல, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும், ஒரு டன்னுக்கு 5,750 ரூபாயில் இருந்து 7,175 ரூபாய் முதல் 7,790 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். எனவே, விலை அதிகரிப்பு தவிர வேறு வழியில்லை என்று சிமென்ட் நிறுவனங்கள் கூறியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், நிலக்கரி விலை உயர்வு குறைவாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: