கார் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த எஸ்சைஸ் டூட்டியில் 4 சதவீதத்தை குறைப்பதாக மத்திய அரசு ஞாயிறு அன்று அறிவித்ததையடுத்து, கார்களின் விலையை ரூ.6,000 இலிருந்து ரூ.76,000 வரை குறைக்கப்படுவதாக கார் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாருதி சுசுகி 800 இன் விலையை ரூ.6,000 குறைக்கப்படுவதாக அந்த கம்பெனி அறிவித்திருக்கிறது. அதன் எஸ்.எக்ஸ்.4 மற்றும் டிசையர் மாடலின் விலை ரூ.20,000 குறைகிறது. ஆல்டோ, வேகன் ஆர், மற்றும் ஜென் ஆகிய மாடல்கள் ரூ.9,000 முதல் ரூ.17,000 வரை குறைகிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் மாடலின் விலையும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு சென்வாட்டை 4 சதவீதம் குறைத்திருப்பதால் கமர்சியல் வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் விலை குறையும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் பர்கவா தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் கார்களின் விலையை ரூ.8,000 முதல் ரூ.22,000 வரை குறைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் ரூ.8,800 முதல் ரூ.44,700 வரை விலையை குறைக்கிறது. மாடல்களை பொருத்து விலை குறைக்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த சேக்ஸ்சேனா தெரிவித்தார். டொயோட்டா கார்களின் விலை ரூ.33,000 முதல் ரூ.76,000 வரை குறைக்கப்படுகிறது. மிட்சுபிஷியின் விலை ரூ.25,000 குறைகிறது.கமர்சியல் வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட், அதன் டிரக் விலையை ரூ.32,000 இலிருந்து ரூ.35,000 வரை குறைக்கிறது. இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் விரைவில் விலை குறைப்பை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்