Sunday, August 30, 2009

உலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'!

போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகில் லாபகரமாக (?!) நடக்கும் 3-வது மிகப் பெரிய சட்டவிரோதத் தொழில் "குழந்தைகள் கடத்தல்' என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் பேர் வரை கடத்தப்படுகின்றனர் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.

அதிலும், குழந்தைகள் கடத்தலுக்கான பிரதான இலக்கு இந்தியாவும், பாகிஸ்தானும். எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளும்; எல்லையைக் கடக்கும் குழந்தைகளும் இங்கு அதிகம்.

நம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு.

பிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம்,
சமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.

இதன் அடுத்த முகத்தை அண்மையில் காட்டியது "தத்து மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை' எனும் செய்தி. பேசும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தத்து மையங்களைக் கண்காணிப்பதில் அரசு கோட்டைவிட்டதை வெளிக்கொண்டு வந்தது.

ஒரு மாவட்டத்தில் எத்தனை தத்து மையங்கள் செயல்படுகின்றன? அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள்? என்பதைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவை அரசு நன்கு உணர்ந்து கொண்டது. தற்போது தத்து மையங்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"பணத்துக்காக பள்ளிச் சிறுவன் கடத்திக் கொலை' எனும் சம்பவங்களும் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணத்துக்காக கடத்தப்படும், விற்பனை செய்யப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் என எவ்விதப் பாகுபாடுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்று, பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர்.

"தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை' எனக் குறிப்பிடுகிறது தமிழக அரசின் "மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.

பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. அதேபோல, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களும் செயல்படுகின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூடுவதும், ஆலோசனை நடத்துவதுமாகக் கலைகின்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யத் தவறியதன் விளைவு, குழந்தைகள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒருங்கிணைப்புக் குழுவினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, இத்திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குழந்தைக் கடத்தல் தொடர்பாகத் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்.1098 அதுபற்றிய விவரம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? குறிப்பாக குழந்தைகளுக்கு.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு தவறு, பெற்றோர் மற்றும் பள்ளிகளின் தரப்பில் ஏற்படுகிறது. சரியானபடி நடக்கவில்லை என்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து ஓடிப்போன குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகம். குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச் செல்லாத சூழலை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் உருவாக்கத் தவறியதன் விளைவு, காணாமல்போன குழந்தையைத் தேடி அலைய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.

இதுதொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்ட அளவில் குழு இருந்தாலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலான குழுவாக அதை மாற்றி, குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை பட்டிதொட்டிகளுக்கும் பரவச் செய்யலாம்.

அதேபோல, காணாமல்போன, கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஊடகங்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

குழந்தைகள் நாடாளுமன்றம் அமைக்கும் பல தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.

தமிழகத்தில் சிலை கடத்தல், விபசாரத் தடுப்பு, திருட்டு விசிடி தடுப்பு போன்றவற்றுக்குத் தனிப்பிரிவு கொண்டிருக்கும் தமிழக காவல்துறை "குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு' எனத் தனிப் பிரிவு தொடங்கவும் முன் வர வேண்டும்.

இதுதவிர, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவோம் எனும் குறிக்கோளுடன் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கிடும் மத்திய, மாநில அரசுகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், தொலையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.

எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் கடத்தல் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது அவசியம். சட்டத்தைக் கடுமையாக்கினாலும் தவறில்லை.

தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம்.

கட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்
நன்றி : தினமணி

"அரசு' மரத்தில் தேள் கொட்டினால்...!

உடல்நலன் குறித்து எந்த அளவுக்கு நமது முன்னோர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழி மூலம் அறியலாம்.

உடல்நலன் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவத்தில் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க நாமும், நம்மை ஆள்பவர்களும் இப்போது அதில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

அறிவியல் வளர்ச்சியால் எண்ணற்ற மருந்து மாத்திரைகள் கிடைத்தாலும், ஆரோக்கிய வாழ்வு கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை என்பதே உண்மை.

வளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளும் வர்த்தக மயமாகிவிட்டன. இதனால் நோயின் தன்மைக்கு ஏற்ற சிகிச்சை பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை.

செல்வத்தை அழித்துப் பெறுகிற சிகிச்சையால்கூட தனிமனித ஆயுள் கூடியிருக்கிறதா? என்றால், அதிலும் ஏமாற்றம்தான்.

நமது முந்தைய சந்ததியினரில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்து வாழ்ந்தனர். ஆனால் இப்போதைய இந்தியனின் சராசரி வயது 62 என்கிறது ஓர் ஆய்வு.

நமது நாட்டில் 5 வயதுக்கு உள்பட்ட 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் (யுனிசெப்) அறிவித்துள்ளது.

பிறந்து 28 நாள்களுக்குள்ளேயே ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் இறப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் 35,000 குழந்தைகள் இறப்பதாக ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது.

சத்துக்குறைபாடு காரணமாக பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மலேரியா, மஞ்சள் காமாலை எனப் பல்வேறு நோய்கள் அவ்வப்போது பரவிவரும் நிலையில் பத்தில் 4 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தைராய்டு, ரத்தசோகை என பெண்களைப் பாதிக்கும் நோய்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனால், இந்தியா வல்லரசாகிறது என பீற்றிக்கொள்ளும் நமது அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் நோய்களைத் தீர்க்க உரிய கவனம் செலுத்துகிறார்களா? என்றால் இல்லை என்பதே பதில். சத்துக்குறைபாடு காரணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் பாதிப்பைத் தடுக்கும் மருந்துகூட அரசு மருத்துவமனைகளில் அறவே இல்லை.

இதற்கு ஏதாவது தனியார் நிறுவனம் "ஸ்பான்சர்' செய்தால் "புண்ணியம்' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கையேந்தும் பரிதாப நிலையே உள்ளது.

ஆனால், கர்ப்பிணிகளுக்கு "நிதி உதவி' என மக்கள் வரிப்பணம் குறிப்பிட்ட கட்சியினருக்கு கமிஷனாகக் கிடைக்கும் வகையிலேயே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல தனியார் நிறுவனத்துக்குப் பயனளிக்கும் வகையிலேயே மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

எய்ட்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என மேல்நாட்டு இறக்குமதி நோய்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், நமது நாட்டின் வறுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்குத் தரப்படுவதில்லை.

நாட்டில் பெரும்பாலானோர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சர்க்கரை நோய்க்கு இலவசப் பரிசோதனை வசதியும், உரிய மருத்துவ வசதியும் பரவலாக ஏற்படுத்தவில்லை.

அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளுக்கு ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அங்கு கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதி தருவதில்லை.

அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஆனால், "கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக' தனியார் நிறுவனத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்து சேவைக்கு நிதியும் அளிக்கிறது அரசு.

ஆசிரியர்கள் பற்றாக்குறை; அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வகுப்பறைகள், விடுதிகள் இல்லாமல் வீடுகளை வாடகைக்குப் பிடிக்கும் அவலம் என கல்வி பயிலும் கட்டாயத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
இதுபோன்ற சமூகநலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசை யாரும் நிர்பந்திப்பதில்லை. அப்படியே வலியுறுத்தினாலும், அதை அரசும் கண்டுகொள்வதில்லை.

ஆனால், பயிற்சி மருத்துவர், பட்டமேற்படிப்பு மாணவர்கள், டாக்டர்கள் என மருத்துவம் சார்ந்தோர் கேட்கும் ஊதிய உயர்வும், ஊக்கத்தொகை உயர்வு மட்டும் உடனே கிடைக்கிறது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்கிறதோ இல்லையோ, அரசு இயந்திரமாக இருப்போர் கேட்டால், பிச்சைப் பாத்திரம் கூட அட்சய பாத்திரமாகிவிடும் அதிசயம் நடக்கிறது.

காரணம், அவர்கள் கையில் போராட்டம் என்ற "தேள்' இருப்பதுதான்.
இதைப் பார்க்கும்போது கிராமத்துப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. "தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டுமாம்'!

போராட்டம் என்பது "அரசு' என்ற தென்னை மரத்தில் கொட்டும் தேள்! இதனால், "தேர்தல்' என்ற "பனை'மரத்தில் நெரிகட்டிவிடக் கூடாது என்ற அச்சம் ஆளும்கட்சிக்கு ஏற்படுகிறது.

எனவே "அரசு' மரத்தில் தேள்கொட்டினால் ஆதாயம் நிச்சயம் என்பதே இப்போதைய புதுமொழியாகிவிட்டது.

கட்டுரையாளர் : வ. ஜெயபாண்டி
நன்றி : தினமணி

பயணப்படி, ஊக்கத்தொகை: ஏர் இந்தியா நிறுத்துகிறது

ஏர் -இந்தியா நிறுவனம், ஊழியர்களுக்கான பயணப்படி மற்றும் ஊக்கத் தொகையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவிலான பொருளாதார சரிவு, எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. விமான நிறுவனங்கள், கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் -இந்தியா, ஏழாயிரத்து 200 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனால், மாதா மாதம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட கஷ்டப்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க, ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் பயணப்படியை நிறுத்த, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கான மொத்த செலவில், ஊக்கத்தொகைக்கு மட்டும், 30 முதல் 70 சதவிகிதம் வரை செலவு ஆகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விமான நிறுவன அதிகாரிகள், ' ஊழியர்களின் பணியாற்றுதல் திறமைக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை யை மாற்று வழியில் ஈட்ட முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தனர். ஊக்கத் தொகை மற்றும் பயணப்படிக்காக மட்டும், மாதம் 350 கோடி ரூபாய் விமான நிறுவனத்தால் செலவிடப்படுகிறது. நிறுவனத்தின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விமான நிறுவன ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி : தினமலர்


நீதி வாழ்வது யாரால்?

எங்கும் நீதித்துறையைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளைப் பற்றிய விமர்சனங்கள் நன்மைக்காக இருக்குமானால் வரவேற்க வேண்டியதுதான். ஏனென்றால் மக்களும், நீதியும் பிரிக்க முடியாதவர்கள்.

""மக்களில் 91 விழுக்காட்டினர் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நீதித்துறையை நாடாமல் புறக்கணிக்கின்றனர்...'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா கூறியுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி மட்டுமல்ல, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்தலைவரும் ஆவார்.

அனைவருக்கும் நீதி கிடைக்கும் வழியைச் சொல்லித்தர மறந்து விட்டோம். நீதியைப் பெறுவது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமை. நாட்டில் 9 விழுக்காட்டினர்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை நாடுகின்றனர். பெரும்பாலானோர் பிரச்னைகளை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்காமல் அவர்களாகவே சமாளித்துக் கொள்கின்றனர்.

பிரச்னைகளைத் தீர்க்க பெரும்பாலான மக்கள் காவல்துறை அல்லது அரசியல்வாதிகளின் உதவியை நாடுகின்றனர். ரவுடிகளைத் தேடுகின்றனர். அதாவது 91 விழுக்காடு மக்களை நாம் நீதித்துறையைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறோம் என்பது வேதனையாகும். சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வரவும், சட்டங்கள் சரியாக அமலாவதற்கும் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றிய சிந்தனையைக் கொண்டு வருவது மிக அவசியம் என்பது அவர் கருத்தாகும்.

இவ்வாறு பொதுமக்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. வழக்கறிஞர்களைத் தேடி அலைந்து, அவர்களின் உதவியோடு நீதிமன்றங்களை அணுக வேண்டும். இப்படி ஒரு நாளா? இரண்டு நாளா? ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும்.

ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தாலும் அந்த நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது. வெளியே வந்ததும், "வழக்கறிஞர் வாய் திறப்பாரா?' என்று எதிர்பார்த்திருக்க வேண்டும்.

தம் சொந்த வேலையையும் விட்டு, பணத்தையும் செலவழித்துவிட்டு, "நியாயமான தீர்ப்பு கிடைக்குமா?', என்று ஏங்கிக் கிடக்க வேண்டும். இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வால் துவண்டு போன ஒரு குடிமகன் என்ன நினைப்பான்?

"சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்' என்ற மரபுப் பழமொழி இதனால் ஏற்றபட்டதுதான். காலம் கடந்து கிடைக்கும் தீர்ப்பு கூட மறுக்கப்பட்ட நியாயம்தானே! இந்தக் காலதாமதத்திலிருந்து மீள வழி கண்டறியப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நடக்கிற காரியமா?

"ஆண்டுக்கணக்கில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன' என்று மூத்த வழக்கறிஞர்களும், அவர்களோடு சேர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அங்கலாய்க்கின்றனர். இதற்கு முடிவுகட்டாமல் மக்களைக் குறை கூறிப் பயன் என்ன?

""நீதிமன்றங்களில் அதிக அளவு வழக்குகள் தேங்கியுள்ளதே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதுதவிர பல வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதிலும் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நீதிமன்றங்களை நாடும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்'' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இதற்கு நீதித்துறை தொடர்பான சட்டங்களைத் திருத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதித்துறையில் பயன்படுத்த வேண்டும்.

நீதிமன்றத்தில் உள்ள பழமையான மற்றும் சிக்கலான பல நடைமுறைகளைக் கைவிட வேண்டும். இதன் மூலம் விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

நீதிமன்றக் கட்டணங்கள், வழக்கறிஞர்களை அமர்த்தும் செலவு போன்றவை ஏழை மக்கள் எளிதில் செலுத்தும் வகையில் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம்; சட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறை இதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. சாதாரண குடிமகன் ஆண்டுக்கணக்காகக் காத்துக் கிடக்க நேருகிறதே தவிர, அரசு வழக்குகள் இரவு பகல் பாராமல் விசாரிக்கப்பட்டு ஆணைகள் இடப்படுகின்றன.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக அன்றைய அரசாங்கம் நீதிமன்ற ஆணைகளைப் பெற்று இரவோடு இரவாக அரசுக் குடியிருப்பிலிருந்தே வெளியேற்றியது; பெண்களும், பிள்ளைகளும் நிராதரவாகத் தெருவில் நின்ற காட்சிகளை மறக்க முடியுமா?

பல்லாண்டுகளாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யவும், புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு நீதிமன்றமும் துணை போனது. மனிதநேயம் பற்றிய சிந்தனை வேண்டாமா? இவ்வாறு ஆளுவோருக்குத் துணைபோகாதபோது நீதிபதிகளே மிரட்டப்படுவதான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

2009 ஜூன் 29 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ஒரு முன்ஜாமீன் விசாரணையின்போது, ""ஏற்கெனவே நான் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளேன்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கூறுகிறார். இதுபற்றி உங்களுக்கும் (மனுதாரரின் வழக்கறிஞர்) தெரியும்...'' என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் கூறினார்.

இதுபற்றி நாடெங்கும் கண்டனக் கணைகள் கிளம்பின. நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் யார் என்பதை விசாரித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தினர்; கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.

தொடர்புடைய நீதிபதியே அமைச்சர் பெயரைக் கூறாத நிலையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்னையே எழவில்லை என்று இப்பிரச்னை ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று கூறியதுதான்.

இதுபோல் நீதிபதிகளை மிரட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதை அறியாதார் யார்? ஆனால் இதற்கு இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்? பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகளை யாரால் என்ன செய்துவிட முடியும்?

தருமத்திற்கும், நீதி நேர்மைக்கும் இவ்வாறு எத்தனையோ தடைகள் வரலாம்; வரும்.

இவ்வளவையும் கடந்துதான் இலக்கைச் சென்றடைய வேண்டும். வேண்டியவர், வேண்டாதார் எனப் பாராமல், பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போகாமல் உண்மையைத் தேடும் நீதி தேவதை வணக்கத்துக்குரியவள்தான்.

நீதி என்னும் நதி மேட்டுக்குடி பக்கமே பாய்ந்திடாமல் எல்லா இடங்களிலும் பாயும்படி செய்திட வேண்டும். ஏழை எளிய மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் தேடிச் சென்று சேர வேண்டும்.

இதுபற்றி நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித்துறையை ஆக்கபூர்வமாக விமர்சித்ததற்காக நீதிமன்ற அவமதிப்புச் செய்ததாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

""இந்த நாட்டில் ஏசுநாதர்கள் சிலுவையில் அறையப்படுகிறார்கள். பாரபாஸ்கள் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள். இதற்கான நன்றியை நீதித்துறைக்குத்தான் கூற வேண்டும்...'' என்பதும் அவரது விமர்சனம்தான்.

சமூக சீர்திருத்தவாதிகள் எல்லாம் இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் கேரள முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு முதல் பெரியார் ஈ.வெ.ரா. வரை இவ்வாறு கண்டனத்துக்கு உள்ளானவர்களே!

""நூற்றுக்கு நூறு சரியானதோர் சமூகம் என்பது ஒருபோதும் இருக்கவே முடியாது. சமூக அநீதிகளை எவ்வாறு களைவது என்பதே நம்முடைய தலையாய குறிக்கோளாக விளங்கிட வேண்டும். சமுதாயத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்; பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள்; இம்சிக்கப்படுகிறார்கள். உழைப்பாளி மக்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறார்கள். நாம் இத்தகைய சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடியாக வேண்டும்...'' என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் "நீதிக் கோட்பாடு' பற்றிய அண்மை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்படுகிறது; அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழி மூலமாகவே நடத்தப்பட வேண்டும்; நீதிமன்றங்களின் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்பட வேண்டும்; நீதிபதிகளின் சொத்துரிமை பற்றிய மசோதாவில் அவர்களின் சொத்து விவரங்கள் மக்களுக்குத் தெரியும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நீதியின் பெருமையைப் பற்றிப் பேசாத இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். நீதி தவறும் நாட்டில் இயற்கையே பொய்த்துப் போகும்; பருவமழை தவறுவதுடன், பலவித உற்பாதங்களும் உள்ளாகும் என்றே அறநூல்கள் கூறுகின்றன.

நமது நீதிமன்றங்கள் பல நெருக்கடியான நேரங்களிலும் பாராட்டும்படியான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றன.

இவை தேசத்தைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமைதான். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி