Sunday, August 30, 2009

"அரசு' மரத்தில் தேள் கொட்டினால்...!

உடல்நலன் குறித்து எந்த அளவுக்கு நமது முன்னோர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழி மூலம் அறியலாம்.

உடல்நலன் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவத்தில் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க நாமும், நம்மை ஆள்பவர்களும் இப்போது அதில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

அறிவியல் வளர்ச்சியால் எண்ணற்ற மருந்து மாத்திரைகள் கிடைத்தாலும், ஆரோக்கிய வாழ்வு கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை என்பதே உண்மை.

வளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளும் வர்த்தக மயமாகிவிட்டன. இதனால் நோயின் தன்மைக்கு ஏற்ற சிகிச்சை பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை.

செல்வத்தை அழித்துப் பெறுகிற சிகிச்சையால்கூட தனிமனித ஆயுள் கூடியிருக்கிறதா? என்றால், அதிலும் ஏமாற்றம்தான்.

நமது முந்தைய சந்ததியினரில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்து வாழ்ந்தனர். ஆனால் இப்போதைய இந்தியனின் சராசரி வயது 62 என்கிறது ஓர் ஆய்வு.

நமது நாட்டில் 5 வயதுக்கு உள்பட்ட 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் (யுனிசெப்) அறிவித்துள்ளது.

பிறந்து 28 நாள்களுக்குள்ளேயே ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் இறப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் 35,000 குழந்தைகள் இறப்பதாக ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது.

சத்துக்குறைபாடு காரணமாக பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மலேரியா, மஞ்சள் காமாலை எனப் பல்வேறு நோய்கள் அவ்வப்போது பரவிவரும் நிலையில் பத்தில் 4 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தைராய்டு, ரத்தசோகை என பெண்களைப் பாதிக்கும் நோய்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனால், இந்தியா வல்லரசாகிறது என பீற்றிக்கொள்ளும் நமது அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் நோய்களைத் தீர்க்க உரிய கவனம் செலுத்துகிறார்களா? என்றால் இல்லை என்பதே பதில். சத்துக்குறைபாடு காரணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் பாதிப்பைத் தடுக்கும் மருந்துகூட அரசு மருத்துவமனைகளில் அறவே இல்லை.

இதற்கு ஏதாவது தனியார் நிறுவனம் "ஸ்பான்சர்' செய்தால் "புண்ணியம்' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கையேந்தும் பரிதாப நிலையே உள்ளது.

ஆனால், கர்ப்பிணிகளுக்கு "நிதி உதவி' என மக்கள் வரிப்பணம் குறிப்பிட்ட கட்சியினருக்கு கமிஷனாகக் கிடைக்கும் வகையிலேயே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல தனியார் நிறுவனத்துக்குப் பயனளிக்கும் வகையிலேயே மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

எய்ட்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என மேல்நாட்டு இறக்குமதி நோய்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், நமது நாட்டின் வறுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்குத் தரப்படுவதில்லை.

நாட்டில் பெரும்பாலானோர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சர்க்கரை நோய்க்கு இலவசப் பரிசோதனை வசதியும், உரிய மருத்துவ வசதியும் பரவலாக ஏற்படுத்தவில்லை.

அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளுக்கு ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அங்கு கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதி தருவதில்லை.

அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஆனால், "கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக' தனியார் நிறுவனத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்து சேவைக்கு நிதியும் அளிக்கிறது அரசு.

ஆசிரியர்கள் பற்றாக்குறை; அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வகுப்பறைகள், விடுதிகள் இல்லாமல் வீடுகளை வாடகைக்குப் பிடிக்கும் அவலம் என கல்வி பயிலும் கட்டாயத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
இதுபோன்ற சமூகநலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசை யாரும் நிர்பந்திப்பதில்லை. அப்படியே வலியுறுத்தினாலும், அதை அரசும் கண்டுகொள்வதில்லை.

ஆனால், பயிற்சி மருத்துவர், பட்டமேற்படிப்பு மாணவர்கள், டாக்டர்கள் என மருத்துவம் சார்ந்தோர் கேட்கும் ஊதிய உயர்வும், ஊக்கத்தொகை உயர்வு மட்டும் உடனே கிடைக்கிறது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்கிறதோ இல்லையோ, அரசு இயந்திரமாக இருப்போர் கேட்டால், பிச்சைப் பாத்திரம் கூட அட்சய பாத்திரமாகிவிடும் அதிசயம் நடக்கிறது.

காரணம், அவர்கள் கையில் போராட்டம் என்ற "தேள்' இருப்பதுதான்.
இதைப் பார்க்கும்போது கிராமத்துப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. "தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டுமாம்'!

போராட்டம் என்பது "அரசு' என்ற தென்னை மரத்தில் கொட்டும் தேள்! இதனால், "தேர்தல்' என்ற "பனை'மரத்தில் நெரிகட்டிவிடக் கூடாது என்ற அச்சம் ஆளும்கட்சிக்கு ஏற்படுகிறது.

எனவே "அரசு' மரத்தில் தேள்கொட்டினால் ஆதாயம் நிச்சயம் என்பதே இப்போதைய புதுமொழியாகிவிட்டது.

கட்டுரையாளர் : வ. ஜெயபாண்டி
நன்றி : தினமணி

No comments: