Saturday, April 4, 2009

முக்கிய சோப்புகளின் விலையை ஹிண்டுஸ்டான் யூனிலிவர் குறைத்தது

ஹிண்டுஸ்டான் யூனிலிவர் நிறுவனம், அது வெளியிடும் முக்கிய குளியல் சோப் மற்றும் டிடர்ஜென்ட் சோப்புகளின் விலையை 4 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை குறைத்திருப்பதாக அதன் ஸ்டாக்கிஸ்ட்கள் மற்றும் டிஸ்ட்ரிபூட்டர்கள் தெரிவித்தனர். சில சோப்புகளுக்கு அதிக பட்ச சில்லரை விலையை குறைத்திருப்பதுடன் சில சோப்புகளின் எடையையும் ஹிண்டுஸ்டான் யூனிலிவர் கூட்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதன் முக்கிய குளியல் சோப்பான லைஃப்பாயின் எடையை 115 கிராமில் இருந்து 120 கிராமாக உயர்த்தியிருக்கிறது. ஆனால் விலை அதே ரூ.15 தான். கூட்டப்பட்ட எடைக்கான சோப்பிற்கு விலை வைக்காததால், அந்த சோப்பின் இப்போதைய விலை 4.2 சதவீதம் குறைந்திருப்பதாக அர்த்தம் ஆகிறது. அதே போல் அதன் டிடர்ஜென்ட் சோப்புகளில் ஒன்றான ' வீல் ' இன் விலை 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 க்கு விற்றுக் கொண்டிருந்த வீல் ஆக்டிவ் புளு டிடர்ஜென்ட் சோப்பின் விலை இப்போது ரூ.8 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹிண்டுஸ்டான் யூனிலிவரின் போட்டி நிறுவனமான புராக்டர் அண்ட் கேம்பிள், 750 கிராம் எடையுள்ள ' டைட் ' டிடர்ஜென்ட்டின் விலையை 19.5 சதவீதம் குறைத்து ரூ.50 ஆக ஆக்கியிருப்பதால், ஹிண்டுஸ்டான் யூனிலிவரும் 750 கிராமில் புதிய ரின் அட்வான்ஸ் டிடர்ஜென்ட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் விலையும் அதே ரூ.50 தான். அதன் விற்பனையாளர்களுக்கு மார்ஜினை குறைத்ததன் மூலமாகத்தான் ஹிண்டுஸ்டான் யூனிலிவர் நிறுவனம், குறிப்பிட்ட சோப்புகளுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை குறைத்திருக்கிறது என்று ஸ்டாக்கிஸ்ட்கள் மற்றும் டிஸ்ட்ரிபூட்டர்கள் குறைபட்டுக் கொண்டனர். எனவே இது ஒன்றும் அதன் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்