
கடந்த ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கியின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக கட்டணம் எதுவும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. பெரிய நகரங்களில் மட்டுமின்றி நடுத்தர நகரங்களிலும் ஏ.டி.எம்.களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது குறித்து ஆக்சிஸ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் ஆஸ்பி இன்ஜினியர் கூறும்போது, இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் மற்றும் எங்களது வங்கியின் ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் இதர வங்கியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 40-50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். நாட்டில் அதிக ஏ.டி.எம்.களை கொண்டுள்ள வங்கிகளில் ஆக்சிஸ் வங்கியும் ஒன்று. இவ்வங்கிக்கு நாடு முழுவதும் 3,600 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. மிகச் சிறிய வங்கிகளுக்கிடையிலும் ஏ.டி.எம். பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தனலட்சுமி வங்கியைச் சேர்ந்த ஆனந்த குப்தா தெரிவித்தார். இவ்வாறு ஏ.டி.எம். பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிதாக கிளை அலுவலகங்களை தொடங்க திட்டமிட்டிருந்த பல வங்கிகள் இது குறித்து மறு பரிசீலனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத ஸ்டேட் வங்கி, அதிக எண்ணிக்கையில் ஏ.டி.எம். மையங்களை கொண்டிருப்பதிலும் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கிக்கு தற்போது 12,000 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்து 25,000 ஆக உயர்த்த இவ்வங்கி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நன்றி : தினமலர்