Showing posts with label தொலைபேசி. Show all posts
Showing posts with label தொலைபேசி. Show all posts

Friday, December 3, 2010

வெட்கம் கெட்டவர்கள்!

சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.


ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். ""இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்...

நன்றி : தினமணி 

Saturday, August 14, 2010

பேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது ‌வோனேஜ்


இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும், இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, January 14, 2010

செல்' இன்றிச் செல்!

பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.

÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.

÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.

÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.

÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.

÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.

÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி

Friday, January 8, 2010

வாய்ச்சொல் பலன் தராது...

அரசுப் பேருந்து ஒட்டுநர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டக்கூடாது என்ற தடை பாராட்டுக்குரியது. தமிழகப் போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவை, பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச்சென்றதே 9 குழந்தைகள் இறந்த விபத்துக்குக் காரணம் என்பதால், அதன் எதிரொலியாக இந்தத் தடை அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், இந்தத் தடை, காலத்தின் கட்டாயம். மிகமிக அவசியமானதுதான்.
பணியின்போது ஓர் ஓட்டுநர் தன் கைவசம் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறையால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியாது. கடுமையான தண்டனைகள் என்பது வெறுமனே ஒரு வார கால பணியிடை நீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என்பதாக இருப்பது மட்டும் பணியில் செல்போன் பேசும் பழக்கத்தைத் தடுத்துவிடாது. பேருந்தில் நம்மை நம்பித்தான் சுமார் ஐம்பது பயணிகள் அமர்ந்து வருகிறார்கள், அவர்கள் வாழ்க்கை நம் கையில் இருக்கிறது என்ற அச்சமும் பொறுப்புணர்வும் இல்லாவிட்டால், தம்மிடம் செல்போன் இல்லாதபோதிலும்கூட, நடத்துநர் அல்லது உடன் வரும் சகஊழியர் வைத்திருக்கும் செல்போனைப் பயன்படுத்தவே முற்படுவார்கள்.

மேலும், விபத்து என்பது தனிப்பட்ட ஒரு வாகனம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருப்பதில்லை. பெரும்பாலும் இரண்டு வாகனங்கள் மோதிக்கொள்வதாகவே இருக்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர் மட்டும் செல்போன் பேசாமல் வண்டி ஓட்டினாலும், எதிரில் நடந்து வருபவர் அல்லது வாகனம் ஓட்டி வருபவர் செல்போன் பேசியபடி வந்தாலும் விபத்து நேரிடவே செய்யும். தனியார் போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களும் இந்த விதிமுறையைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், இதை அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு மட்டும் அமல்படுத்துவதால் முழுப்பயன் கிடைக்காது.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது என்பதும் அவ்வாறு பேசுவது போக்குவரத்து விதியை மீறும் செயல் என்பதும் தற்போதும் நடைமுறையில் உள்ள விதிமுறைதான். இருப்பினும் பொதுவாக வாகன ஓட்டுநர்கள் ஒருவர்கூட இதைப் பின்பற்றுவதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கூட, காதுக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை வைத்துக்கொண்டு கழுத்து ஒடியப் பேசிச் செல்வதை அன்றாட வாழ்க்கையில் நூறு மீட்டருக்கு ஒரு நபரைக் காண முடியும் என்பதாகவே இன்றைய தமிழகத்தின் போக்குவரத்து நிலைமை இருக்கிறது. இதைப் போக்குவரத்துப் போலீஸôரால் ஏன் தடுக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்தில் இதுநாள் வரை செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச் சென்றதற்காக எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது?

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியபடி செல்லும் மிக ஆபத்தான கொடிய வழக்கம் ஒழிய வேண்டுமென்றால், அதைக் காவல்துறையால் மட்டுமே செய்ய முடியும். இதுபோன்ற உயிர்காக்கும் உயர் நடவடிக்கை வேறு எதுவாகவும் இருந்துவிட முடியாது. விபத்து நேர்வுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றான இச்செயலையும் மிகஆபத்தானதாக அறிவித்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மட்டுமே இந்தப் பழக்கத்தை ஒழிக்க உதவும்.

ஹெல்மட் விவகாரத்தில் அரசு இரண்டும்கெட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டதைப் போல, செல்போன் விவகாரத்திலும் நடந்துகொள்ளக்கூடாது. ஹெல்மட் அணியாவிட்டால் அதை அணியாதவருக்கு மட்டுமே பாதிப்பு. செல்போன் அப்படியல்ல. விபத்தில் சாகிறவர் அல்லது காயமடைபவர் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய நபர் மட்டுமல்ல. அப்பாவியாக எதிரில் வந்தவரும்தான். சக மனிதனின் உயிர் பற்றிய அக்கறை இல்லாமல் தன் கவனத்தைச் சிதறவிட்டு வாகனம் ஓட்டுபவரின் உரிமத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு எந்தவிதமான தண்டனையும் இந்தப் பழக்கத்தை நீக்கிவிடாது.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது அல்லது ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டது என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுமெனில் விபத்துக் காப்பீடுகள் பெற இயலாது என்பதையும் போக்குவரத்து விதிகளில் சேர்க்க வேண்டும்.

ஒரு நெடுஞ்சாலையில், அல்லது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கும் நாற்கரச் சாலையில், பழுதான வாகனங்களுக்கு கண்மறைப்பை ஏற்படுத்தாமல் எப்படி, எந்த இடத்தில் நிறுத்துவது, பழுதான விவரத்தை பலநூறு மீட்டர் தொலைவுக்கு முன்பே அறிவிப்பு செய்து மற்ற வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுவது எப்படி, இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்கள்கூட இன்றைய ஓட்டுநர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால்தான் வாரத்துக்கு இரண்டு சம்பவங்களில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாகனங்களை ஆங்காங்கே அப்படியே நிறுத்திவிடும் ஓட்டுநர் மனநிலையைப் போக்க முற்படாத, ஹைவேஸ் பேட்ரோலிங் எதற்காக?

காவல்துறை இவ்விஷயத்தில் விதிமுறையைக் கடுமையாக அமல்படுத்துவது ஒருபுறம் இருக்க, வட்டாரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. ஓட்டுநர் உரிமம் அளிக்கும் முன்பாக, ஒரு விபத்து நடந்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன, நாட்டின் பொருளாதாரத்தை அது எப்படிப் பாதிக்கிறது, ஊனமடைபவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது குறித்து ஒரு செயல்விளக்க வகுப்புக்கூட நடத்தாமல், கண்மூடித்தனமாக ஓட்டுநர் உரிமங்களை, டிரைவிங் ஸ்கூல் சொல்கிறபடி, அள்ளி வழங்கும் முறை தவிர்க்கப்படாதவரை சாலை விபத்துகள் குறைய வாய்ப்பில்லை. சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தாமல் வெறுமனே ஓட்டுநர் உரிமத்தை மட்டுமே வழங்குவதால் என்ன பயன்?

நன்றி : தினமணி

Saturday, January 2, 2010

நான்கு நகரங்களில் 3ஜி செல்போன் சேவை அறிமுகம்

கோவை, ஊட்டி, நாகை, குன்னூர் உள்ளிட்ட 4 நகரங்களில் பொங்கல் பண்டிகைக்குள் மூன்றாம் தலைமுறை(3ஜி) செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செல்போனில் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட 3ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை 2009ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். கடந்த நவம்பர் 20ல் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வந்தது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இச்சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் கீழ் வரும் இதர மாவட்டங்களிலும் இச்சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக கோவை, ஊட்டி, குன்னூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் பொங்கலுக்குள் அறிமுகம் செய்யப்படும் எனவும், அறிமுக விழா கோவையில் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நகரங்களை தவிர வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3ஜி செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஓசூர், கன்னியாகுமரி போன்ற தொழில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 15 நகரங்களிலும் 3ஜி சேவை அறிமுகம் ஆகிறது. அதற்கான கட்டமைப்பு பணிகளை சீனாவின் ஹுவாய் நிறுவனம் செய்து வருகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, December 30, 2009

புதிய கட்டண குறைப்பு: ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எவருடனும் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 60 வினாடிக்கு​ 20 காசு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.​ உள்ளூர் அழைப்புகளுக்கு மாத கட்டணமாக ரூ.​ 27 செலுத்தி நிமிஷத்துக்கு 20 காசு கட்டண வசதியைப் பெறலாம் என்றும் எஸ்டிடி அழைப்பு செய்வோர் ரூ.​ 77 கட்டணத்தை செலுத்தி இந்த வசதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ​ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அதை 30 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.​ பிற நிறுவன மொபைலுடன் தொடர்பு கொண்டு பேசினால் வாடிக்கையாளர் தேர்வு செய்துள்ள திட்ட அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, December 17, 2009

வங்கதேச செல்போன் நிறுவனத்தை வாங்கிறது பாரதி ஏர்டெல்!

வங்கதேசத்தின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பாரதி ஏர்டெல். அபுதாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் வங்கதேச மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பாரதி ஏர்டெல்.
வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பாரதிக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி வங்கதேச தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.
கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பாரதி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை வங்கதேசத்தில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது. வாரிட் நிறுவனம் 2007ல் வங்கதேசத்தில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பாரதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, வங்கதேச தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தற்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
நன்றி : தினமலர்


Wednesday, December 9, 2009

வோடபோன் நிறுவன ரோமிங் கட்டணம் குறைப்பு

செல்போன் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியின் ஒரு கட்டமாக வோடபோன் நிறுவனம் தனது இரு திட்டங்களுக்கான ரோமிங் கட்டணத்தைக் குறைத்துள்ளது. போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் இது பொருந்தும். வோடபோனின் டிராவல் பிளான் மற்றும் டிக்கெட் பிளான் ஆகிய இரு பிரிவுகளில் இந்த ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. டிராவல் பிளான் திட்டப்படி வாடிக்கையாளர்கள் இனிமேல் ஒரு நிமிடத்திற்கு 70 பைசா ரோமிங் கட்டணமாக செலுத்த வேண்டும். டிக்கெட் பிளான் திட்டத்தின்படி, ஒரு விநாடிக்கு 1.5 பைசா செலுத்த வேண்டும். ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், ரூ.61 ரீசார்ஜ் செய்து டிராவல் பிளானையும், ரூ.62 ரீசார்ஜ் செய்து டிக்கெட் பிளானையும் பயன்படுத்தலாம். இந்த இரு திட்டங்களுக்கான வாலிடிட்டி, ரீசார்ஜ் செய்யும் நாளிலிருந்து 365 நாட்களாக இருக்கும்.
நன்றி : தினமலர்


Saturday, December 5, 2009

'3 ஜி' ஏலத்தில் 8 லட்ச ரூபாய் : பி.எஸ்.என்.எல்.,க்கு வருமானம்

சென்னையில், பி.எஸ்.என்.எல்., '3 ஜி' மொபைல் போன் எண்கள் ஏலத்தில், எட்டு லட்சம் ரூபாய் சென்னை தொலைபேசிக்கு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் பேசும் இருமுனையில் உள்ளவர்களும் முகம் பார்த்து பேசும் 'வீடியோ கால்' வசதியுடன் கூடிய, '3 ஜி' சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல்., சென்னையில் அறிமுகப்படுத்தியது. அத்துடன், இந்த சேவைக்கான மொபைல் போன் எண்களில், 292 'பேன்சி' எண்களை ஏலத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
ஏற்கனவே, சென்னை தொலைபேசி, '2 ஜி' சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்தது. இதில், ஒரு எண் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து '3 ஜி' ஏலத்தையும் பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி நடத்தியது. எஸ்.எம்.எஸ்., மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், 'பேன்சி' எண்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, குறைந்த பட்ச தொகை ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 '55555 ' என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போயுள்ளது. இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், '' தற்போது விடப்பட்டுள்ள ஏலத்தின் மூலம் சிறந்த லாபம் கிடைத்துள்ளது. ஏலத்தில் எடுக்கப்பட்ட 93 எண்கள் தவிர மீதமுள்ள 199 எண்கள் மீண்டும் அடுத்த ஒருவாரத்தில் ஏலத்தில் விடப்படும். ஏற்கனவே ஏலத்தில் எடுத்த எண்ணை யாராவது வாங்கவில்லை என்றால், அந்த எண்களும் மீண்டும் ஏலத்தில் விடப்படும்,'' என்றார்.
நன்றி : தினமலர்

Friday, December 4, 2009

மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன்படி, மாதாந்​திர கட்​ட​ண​மாக ரூ. 11 செலுத்தி, நாளொன்​றுக்கு 500 எஸ்​.எம்.​எஸ்.,​கள் வரை அனுப்​பலாம். இதுகுறித்து நிறு​வ​னத்​தின் தென் பிராந்​தி​யத் தலை​வர் அஜய் அவஸ்தி கூறும்போது, புத்தாண்டை ஒட்டி பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளோம்.புதிதாக ரிலையன்ஸ் இணைப்பை பெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச எஸ்.எம்.எஸ்., வசதி அளிக்கப் படும் என்று கூறினார். மேலும், கட்​ட​ணக் குறைப்​பில் வாடிக்​கை​யா​ளர்​கள் பய​ன​டை​யும் வகை​யில் மிகக் குறைந்த அளவு கட்​டண விகி​தத்தை ரிலை​யன்ஸ் நிர்​ண​யித்​துள்​ளது. செல்​போ​னில் பேச ஒரு விநா​டிக்கு ஒரு காசு திட்​டம் மட்​டு​மின்றி,​ ஒரு எஸ்​.எம்.​எஸ்.,க்கு ஒரு காசு கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு மேலும் குறைப்​ப​தற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமி​ழ​கத்​தில் மொத்​தம் 4.67 கோடி பேர் செல்​போன் உப​யோ​கிக்​கின்​ற​னர். இதில் ரிலை​யன்ஸ் நிறு​வ​னத்​தின் பங்​க​ளிப்பு 15 சத​வீ​தம் என்​றும் அவர் தெரி​வித்​தார்.
நன்றி : தினமலர்


புதிய மொபைல் போன் 'நோக்கியா' அறிமுகம்

இ.மெயில் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய புதிய மொபைல் போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் துறையில், முன்னிலை வகிக்கும் நோக்கியா நிறுவனம் இ72 என்கிற புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மொபைல் போனை தொழில் சார்ந்த தேவை களுக்கும், தனிப்பட்ட தேவைகளுக்கும் இ-மெயில் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து, நிறுவனத்தின் தெற்கு மண்டல பொது மேலாளர் ஸ்ரீதர் கூறியதாவது: சோடியம் பிளாக், டோபாஸ் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இந்த மொபைல் போன் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் 250 எம்பி மெமரி, 5 மெகா பிக்ஸ் ஆட்டோ போகஸ் கேமரா, இரைச்சல் நீக்கும் தொழில் நுட்பம், அதிவேக பிராட்பேன்ட் இணைப்பு, மைக்ரோ மெமரி கார்டு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். வழக்கமான மற்ற சேவைகளும் இதில் உண்டு. விலை 22 ஆயிரத்து 989 ரூபாய். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, December 1, 2009

யானை படுத்தால்...

2009 ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் 92 சதவீதம் செல்போன், மீதி 8 சதவீதம்தான் லேண்ட் லைன் எனப்படும் நிலையான இணைப்புகள்.

நிலையான இணைப்புகள் இந்தியத் தொலைபேசித் துறையால் மட்டுமே அளிக்கப்பட்ட காலத்தில், அதற்காக முன்பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனடி இணைப்பு தேவைப்பட்டவர்கள் எம்.பி. கோட்டா போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளுக்காக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே தொலைபேசித் துறை, பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனமாக மாறியபிறகு, கேட்ட அதே நாளில் இணைப்பு வழங்கினாலும்கூட, இணைப்புகளைத் துண்டிப்போர் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சரி, செல்போனிலாவது பிஎஸ்என்எல் சாதனை நிகழ்த்துகிறதா என்றால், அதிலும் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.

இந்தியாவில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள 44.10 கோடி செல்போன்களில், 23.81 விழுக்காடு வாடிக்கையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது பாரத் ஏர்டெல். அடுத்ததாக ரிலையன்ஸ் 18.57, வோடாபோன் 17.81, பிஎஸ்என்எல் 12.67, ஐடியா 8.91, ஏர்செல் 5.23, எம்டிஎன்எல் 1.05, ஸ்பைஸ் 0.99, லூப் டெலிகாம் 0.53, சிஸ்டமா ஷியாம் 0.33, எச்எப்சிஎல் இன்போடெல் 0.09 சதவீத இணைப்புகளை அளித்துள்ளன.

பரவலாக அனைத்து ஊர்கள் மற்றும் நகரங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளன. இது அரசு நிறுவனம். எங்கு வேண்டுமானாலும் செல்போன் டவர்கள் எழுப்ப முடியும். அலுவலர்கள் எண்ணிக்கையோ தனியார் தொலைபேசி நிறுவனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனாலும், பிஎஸ்என்எஸ் நிறுவனம் நான்காம் இடத்தில், அதுவும் 12 சதவீத செல்போன் இணைப்புகளை மட்டுமே பெற்றுள்ளது என்றால் இதற்கு யார் காரணம்?
÷தொலைபேசித் துறை தனியார் மயமான பின்னர் அனைவருக்கும் பொதுவான சந்தை வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆனாலும் பிஎஸ்என்எஸ் பின்னடைவுக்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்துக்காக தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை அடக்கி வாசிக்கும்படி செய்வதும், பிஎஸ்என்எல் அதிகாரிகள் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருப்பதும்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பி.எஸ்என்எல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் குல்தீப் கோயல் இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுக் கூட்டம் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய குழு உறுப்பினர்கள் பிஎஸ்என்எல் செல்போனில் அழைப்புகள் சரிவரக் கிடைப்பதில்லை என்று குறை கூறினார்கள். டிராய்}ன் செயல்பாட்டு அறிக்கை படி நாம் தனியாருக்கு குறைவில்லாமல் செயல்படுவதை எடுத்துக் கூறியும் திருப்தி அடையவில்லை.......வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர்கள் பிரச்னை எழுப்பும் முன்பாக அந்தந்த பகுதி எம்பி}க்களை அதிகாரிகள் சந்தித்துப் பேசுங்கள். நாம் செய்துவரும் வளர்ச்சிப் பணிகளைச் சொல்லுங்கள்' என்று கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதைப் போலவே, சில அதிகாரிகள் தங்கள் பகுதி எம்பி}க்களை சந்தித்துப் பேசியும் இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் சொன்னபடி நடந்ததால்தான் இந்தநிலைமை என்றால், ஏன் நாடாளுமன்றத்தில் யாரேனும் கேள்விகேட்டு அம்பலப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்ச வேண்டும்? எதற்காக எம்பி}க்களைப் பார்த்துச் சமாதானம் செய்ய வேண்டும்? அமைச்சரே இதைச் சரிகட்டிவிட மாட்டாரா? ஏன் பயப்பட வேண்டும்?

அமைச்சர்கள் இன்று வந்து நாளை போகப் போகிறவர்கள் என்பதையும், பிஎஸ்என்எல் நிறுவனம் காலகாலத்துக்கும் இருக்கப்போகும் இந்திய அரசின் சொத்து என்பதையும் இந்த அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் புரிந்துகொண்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? அமைச்சர்கள் கட்டாயப்படுத்தினால் செய்ய முடியாது என்று சொல்வதற்கும், அவர்தம் ஊழலை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தவும் இந்த அதிகாரிகள் தயாராக இருந்திருந்தால், இப்போது பி.எஸ்.என்.எல். நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்குமா?

இந்த நிலைக்கு இன்னொரு காரணம், பிஎஸ்என்எல் தன்னை அரசின் அங்கமாகவே நினைத்து மெத்தனமாகச் செயல்படுவதுதான். இந்தியா முழுவதிலும் அலுவலகமும், தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் உள்கட்டமைப்பும், பல மடங்கு ஊழியர்களையும் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், வெறும் 1 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றிருந்தாலும், இத்தனை ஊழியர்களுக்கும் சம்பளமும், உள்கட்டமைப்புபராமரிப்புச் செலவும் ஒரு சதவீதம்கூட குறையப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது மக்கள் வரிப் பணம். ஒரு பக்கம் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. இன்னொரு பக்கம் மக்கள் பணம் செலவாகிறது.

வாய்ப்புகள் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுவாகிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. திறமையான அதிகாரிகளை சரியான பதவியில் சரியான இடத்தில் அமர்த்தாததால், திறமையற்ற ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. பிஎஸ்என்எல் செய்யும் விளம்பரங்கள்கூட, தனியார் விளம்பரங்களுக்கு நிகராக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக இல்லை என்றால், அதனால் என்ன பயன்? பதிவு செய்து, பல ஆண்டுகள் காத்திருந்த காலம் போய்விட்டது. இப்போது தனியாருக்கு நிகராக களத்தில் இறங்கியாக வேண்டும். இன்னமும்கூட, கோடானுகோடி இந்தியர்களின் மனங்களில் நமது அரசு நிறுவனம்' என்ற மதிப்பு இருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற முயல வேண்டும். யானை படுத்தால் குதிரைதான் உயரம். எனவே, யானை எழுந்து நிற்க வேண்டும்.
நன்றி : தினமணி

Friday, November 27, 2009

3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வர்த்தக ரீதியாக வெளியிட்ட '3ஜி' மொபைல் இணைப்பின் 'பேன்சி எண்' விரும்புவோர் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அதிகப்படியான தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு விரும்பிய எண் வழங்கப்படுகிறது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,தற்போது இரண்டாம் தலைமுறை '2ஜி' சேவையில் இருந்து முன்னேறி வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 3ஜி சேவைக்கு மாறியுள்ளது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி சமீபத்தில் '3ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்பே, இச்சேவையை பெற விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று சென்னை தொலைபேசி அறிவித்திருந்தது.
தற்போது '2ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், 3ஜி சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிம்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர,' 2ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி '3ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியையும் சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்றாலும், கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது '3ஜி 'மொபைல் இணைப்பு எண்களில் 'பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய '3ஜி' இணைப்புகள் அனைத்தும் '94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை பேன்சி எண்களாக குறிக்கப்படுகின்றன.

சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கென குறைந்த பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் ஆயிரம் ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கடைசி 5 எண்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகை குறைந்த பட்ச இருப்பு தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள் இந்த தொகையை தொடர்ந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.

இந்தவகையில், சென்னையில் '3ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள் பேன்சி எண்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 1.50 மட்டுமே. பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரீபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 300 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி வரையில் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் '2ஜி' சேவைக்கான மொபைல் எண்கள் ஏலம் முடிந்தது. அதில், 250 பேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் தான் விரும்பிய மொபைல்போன் எண்ணிற்காக ஒருவர் அதிகபட்சமாக ' 55 ஆயிரம்' ரூபாய் செலுத்தி எடுத்துள்ளார். தொடர்ந்து தற்போது '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதில் 293 எண்கள் ஏலத்தில் விடப்படுகிறது. '2ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் சென்னை தொலைபேசிக்கு 4.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசி தவிர தமிழ்நாடு தெலைதொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலைபேசி எண்கள் ஏலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு எண்கள் ஏலம் விடப்படும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கும் அதிகளவில் வருமானம் கிடைக்கும். தற்போது நடந்துவரும் 3 ஜி மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மக்களிடமும் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஏலம் நடத்தப்படுவது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைகின்றது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' 2 ஜி மொபைல் எண்கள் ஏலத்தை விட இதில் அதிக தொகை நிறுவனத்திற்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால் அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அதே நேரத்தில் அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால் 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள் திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால் அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.

நன்றி : தினமலர்

Friday, November 6, 2009

செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

செல்போன் தயாரிப்பில் வீடியோகான் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. செல்போன் இல்லாதவரே இல்லை என்ற நிலைமை தற்போது நி‌லவி வருகிறது. இந்நிலையில், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீடியோகான் நிறுவனம், புதியதாக செல்போன் தயாரிப்பில் இறங்கி உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எம்.பி.3 மியூசிக், கேமரா, எப்.எம்., ரேடியோ, இரட்டை சிம் கார்டு வசதி மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய டச் போன் வசதியுடன் வீடியோகான் செல்போனை அறிமுகப் படுத்துகிருறோம். மேலும், செல்போன் முக்கியத்துவத்தையும், அதன் பயனாளர்கள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய செல்போனைகளை அறிமுகப் படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, November 4, 2009

குரலை மாற்றும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து

தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன.

தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.

கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன.

இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "வாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.

அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், "வாய்ஸ் சேஞ்சர்' பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.

இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.

பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.

இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் "வாய்ஸ் சேஞ்சர்' வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று.

இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.

முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ "வாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.

பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, "செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை' என்கின்றனர்.

பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்.
கட்டுரையாளர் : தி. இன்பராஜ்
நன்றி : தினமணி

Monday, November 2, 2009

நோக்கியா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊ‌தியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Saturday, October 24, 2009

ரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை!

ரகசிய குறியீடு இல்லாமல் ஏற்றுமதியாகி வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார். கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வகை செல்போன்களில்,'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி : தினமலர்



ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

'சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்' என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர், எஸ்.டி.டி., ரோமிங் என அனைத்து அழைப்புகளுக்கும் ஆயுள் முழுமைக்கும் 50 காசு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே கட்டணத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும், எந்த நேரத்திலும் பேசலாம். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., போன் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தும். தற்போது வேறு திட்டத்தில் இருப்போரும் இத்திட்டத்திற்கு மாறலாம். ரிலையன்சில் இனிமேல் வேறு திட்டங்கள் இருக்காது. நாடு முழுவதும் 50 காசு கட்டணத்தில் 24 ஆயிரம் நகரங்கள், ஆறு லட்சம் கிராமங்களை இத்திட்டம் இணைத்துள்ளது
நன்றி : தினமலர்


Saturday, October 17, 2009

நோக்கியாவின் காலாண்டு நஷ்டம் 556 மில்லியன் யூரோ

உலகின் முன்னனி செல்போன் நிறுவனமான நோக்கியா, தனது காலாண்டு நஷ்டம் சுமார் 556 மில்லியன் என அறிவித்துள்ளது. உலகின் பொருளாதார பின்னடைவு மற்றும் சாம்சங், ஐ-போன் போன்ற நிறுவனங்களின் போட்டியால் தனது விற்பனை குறைந்துள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை சம்பாதித்த நோக்கியா நிறுவனம், செல்போன் பயன்படுத்துவோரின் ரசனைக்கு ஏற்ப தனது மாடல்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா நிறுவனம் செய்போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


Friday, October 16, 2009

பி.எஸ்.என்.எல்., தருகிறது சலுகை

சென்னை, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம், சூப்பர் ஒன் இந்தியா, இந்தியா கோல்டன் 50 மற்றும் ஸ்டூடன்ட் பவர் பூஸ்டர் ஆகிய கார்டுகளுக்கான விலையை குறைத்துள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்தி: முன், 330 ரூபாயாக இருந்த சூப்பர் ஒன் இந்தியாவின் விலை தற்போது, 115 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 375 ரூபாயாக இருந்த இந்தியா கோல்டன் 50 கார்டின் விலை, தற்போது 123 ரூபாயாகவும், 110 ரூபாயாக இருந்த ஸ்டூடன்ட் பவர் பூஸ்டரின் விலை, 40 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா கோல்டன் 50 கார்டிற்கு, உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா வசூலிக்கப்பட உள்ளது. சூப்பர் ஒன் இந்தியா கார்டில், உள்ளூர் அழைப்புகளுக்கு பி.எஸ்.என்.எல்., போனிற்கு 50 பைசாவும், மற்ற போன்களுக்கு நிமிடத்திற்கு 80 பைசாவும் வசூலிக்கப்பட உள்ளது. ஸ்டூடன்ட் பவர் கார்டில், எந்த ஒரு இணைப்பிற்குமான உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா வீதமும், இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல்., போன்களுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா வீதமும் வசூலிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்