Wednesday, August 18, 2010

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் 6,000 முதல் 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?
நன்றி : தினமணி