Monday, November 2, 2009

குறைகளும் குறைய வேண்டும்

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் தவிர மற்ற அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் அனைத்து வேலை நாட்களிலும் விநியோகம் செய்ய வேண்டும்; வெளிநபர்கள் கடைகளில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என, அண்மையில் நடைபெற்ற வட்ட வழங்கல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைத்தான் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் நியாயவிலைக் கடைகளில் நடப்பது என்ன?

எந்தப் பொருள் என்று விநியோகம் செய்யப்படும் என்பது கடை திறக்கப்படும் வரை தெரியாது. எல்லா கடைகளிலும் வெளிநபர் ஒருவர் அதிகாரபூர்வ விற்பனையாளர்போல மக்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருப்பார். தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க வரிசையாக நிற்கும்போது திடீரென கவுன்டரை மூடுவதுபோல எந்த நேரம் பொருள்கள் தீரும் எனச் சொல்ல முடியாது.

ஒவ்வொரு கடையிலும் இருப்பு இல்லாத பொருள்கள் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கல் அலுவலகத்துக்குத் தெரிவித்து, உடனுக்குடன் பொருள்களை அனுப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில் போலி பதிவு மூலம் பொருள்களை வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டு குடும்ப அட்டைதாரர்களை ஏமாற்றுவது, இரவோடு இரவாகக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளைக் கடத்துவது போன்ற செயல்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கூடுதல் சர்க்கரை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிக் கடைகளில் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

அதே தீபாவளி தினத்தன்று அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் "சரக்குகளை' நூறு சதம் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி, அதன்படி எந்தவகை மதுபானங்களும் இல்லை என்று கூறாத அளவு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி தினத்தன்று மட்டும் தமிழகத்தில் மதுபான விற்பனை சுமார் 250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

நியாயவிலைக் கடைகள், டாஸ்மாக் கடைகள் இரண்டையுமே அரசுதான் நடத்துகிறது. குடிமகன்களுக்கு டாஸ்மாக் மூலம் அளிக்கப்படும் முக்கியத்துவம், குடிமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அளிக்கப்படாதது ஏன்?

வருமானம் ஒன்றுதான் இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவிநியோகத் திட்டத்தால் அரசுக்கு செலவு; டாஸ்மாக் கடைகளால் வருமானம். அதனால் அதற்கு முக்கியத்துவம். ஆனால், தனியார் நிறுவனங்களைப்போல லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படுவது நியாயமா?

நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைச் சீரமைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை.

மாதம் ஒருமுறை "கூட்டுறவு பறக்கும் படையினர்' நியாயவிலைக் கடைகளில் சோதனை(!) நடத்துவதும், முறைகேடுகளைக் கண்டறிந்து, கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறி பத்திரிகைகளுக்கு செய்தி அளிப்பதும் மட்டும் தீர்வு தருமா?

எடுக்கும் நடவடிக்கைகள் கடை ஊழியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினால் அல்லவா அவர்கள் மீண்டும் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பார்கள்?

வழங்கல் அலுவலர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அமைச்சர் வேலு தந்த அறிவுரைகளில் ஒன்று.

ஆனால், வழங்கல் அலுவலகங்களில் நடப்பதோ நேரெதிர். குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், சேர்த்தல் போன்றவற்றுக்காக பொதுமக்கள் செல்லும்போது அவர்களுக்கு முறையாக பதில்சொல்லக் கூட ஆள் இருப்பதில்லை. அலைக்கழிப்பு, மன உளைச்சலுடன்தான் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.

முறைகேடுகளுக்கு நியாயவிலைக் கடை ஊழியர்கள் மட்டுமே காரணம் என்றும் கூறமுடியாது. அவர்கள் தங்கள் தரப்பில் பல்வேறு காரணங்களை எடுத்து வைக்கின்றனர். குறைவான ஊதியம் என்பதே பிரதான காரணம்.

மற்றபடி முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்துப் பொருள்களையுமே பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்று நியாயவிலைக் கடை ஊழியர்களே சொல்கின்றனர். ஆனால், எல்லா பொருள்களையும் பாக்கெட்டுகளில் அடைப்பது நடைமுறை சாத்தியமற்றது என அரசு தட்டிக் கழிக்கிறது.

பொதுவிநியோகத் திட்டம் என்பது நாட்டின் மிகப் பெரிய, சிறப்பான திட்டங்களுள் ஒன்று. அதில் குறைகள் ஏற்படுவது இயல்புதான்.

ஆனால், அதை அவ்வப்போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் எடை குறைவது போல குறைகளும் குறைந்தால் நல்லது.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

"ஜெய் ஹோ' காங்கிரஸ்

மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒரு சில பாடங்களை அரசியல் கட்சிகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே' என்பது நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் கூட்டணிகளுக்கும் பொருந்தும் என்பது முதல் பாடம். அரசியலில் யாரையும், எந்தக் கட்சியையும் சகாப்தம் முடிந்துவிட்டது, செல்வாக்குச் சரிந்துவிட்டது என்று தள்ளி ஒதுக்கிவிட முடியாது என்பது இரண்டாவது பாடம். இப்படி இன்னும் பல பாடங்கள்...

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தொகுதி முடிவுகளைப் பொறுத்தவரை, மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் என்று வேண்டுமானால், ஆளும் காங்கிரஸ் தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சி அடையலாம் என்றாலும், கட்சிகளின் செல்வாக்கில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற உண்மையை மறுத்து ஒதுக்கிவிட முடியாது. 1999-லும், 2004-லும் இருந்ததுபோலவே ஆளும் கூட்டணியால் தனிப்பெரும்பான்மையை எட்ட முடியவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 2004 தேர்தலில் அடைந்த வெற்றியைவிட இந்த முறை அந்தக் கட்சி தனது பலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியான தேசியவாதக் காங்கிரஸ் 70 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 69 இடங்களையும் பெற்றது, தர்மசங்கடமான ஒரு நிலைமைக்குக் காங்கிரஸ் தலைமையைத் தள்ளியது. இந்த முறை, 82 இடங்களில் காங்கிரஸýம், வெறும் 62 இடங்களில் தேசியவாதக் காங்கிரஸýம் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணியில் காங்கிரஸின் கரம் வலுவடைந்திருக்கிறது என்கிற வகையில் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால், கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, இந்தச் சட்டப் பேரவை முடிவுகள் பெரிய அளவில் மாறுபட்டதாகத் தெரியவில்லையே, ஏன்? மக்களவைத் தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸýம், வெறும் 8 இடங்களில் தேசியவாதக் காங்கிரஸýம் வெற்றி பெற்ற அதே மக்கள் கருத்து இந்தத் தேர்தலிலும் பிரதிபலித்திருப்பது ஆச்சரியம்தான்.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணியான சிவசேனா - பாஜகவின் பலம் அதிகரிக்காமல் போனதற்கு, மக்களவைத் தேர்தலில் நடந்ததுபோலவே, இந்தத் தேர்தலிலும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் பங்களிப்புதான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தில் தேமுதிக, ஆந்திரத்தில் பிரஜாராஜ்யம் பாணியில் மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து ஆளும் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா உதவியிருக்கிறது.

ராஜ் தாக்கரேயால் தங்களது அணி பலவீனப்படும் என்பது தெரிந்தும், அதைச் சரிக்கட்டவோ, அதனால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவோ சிவசேனாவும், பாஜகவும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லையே ஏன்? அது யாருடைய தவறு?

நகர்ப்புறங்களில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் அபரிமிதமான வளர்ச்சி சுமார் 26 தொகுதிகளில் சேனா - பாஜக கூட்டணியின் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறது. மேலும், பிரமோத் மகாஜன் போன்ற ஒரு தலைவர் இல்லாமல் போனதும்கூட தேர்தல் பிரசாரத்தையும், வேலைகளையும் ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் காங்கிரஸ் தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி, அடுத்த தேர்தலுக்குள் இணைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு காட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்று எதிர்பார்க்கலாம்.

ஹரியாணாவைப் பொறுத்தவரை, காங்கிரஸின் எதிர்பார்ப்புகள் பொய்த்திருக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியைக் குவித்த ஆளும் காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை அடைய முடியவில்லை என்பது மட்டுமல்ல, எந்த அளவுக்கு நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்பதும் சந்தேகமே.

ஓம் பிரகாஷ் சௌடாலாவின் இந்திய தேசிய லோக தளத்துடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டு முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பஜன்லால் ஹரியாணா ஜனஹித் காங்கிரஸýடன் கைகோர்த்த தவறை எண்ணி பாஜக இனி வருந்தி என்ன பயன்? தனக்கு முதல்வர் பதவியோ, தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியோ கிடைக்கும் என்றால் பஜன்லால் மறுபடி காங்கிரஸில் இணைந்துவிட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓம் பிரகாஷ் சௌடாலாவின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்று இரங்கல் பா எழுதியவர்கள் இப்போது அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்காருகின்றனர். பாஜகவுடனான கூட்டணி தொடர்ந்திருக்குமானால் தனிப்பெரும்பான்மையுடன் அந்தக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.

சட்டப் பேரவையில் அதிக இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கட்சி என்கிற முறையில் காங்கிரûஸ ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் முறை. ஹரியாணாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதில் பெரிய சிக்கல் இருக்கப் போவதில்லை. அருணாசலப் பிரதேசத்திலும், தலாய் லாமாவின் விஜயத்தை ஒட்டி சீனாவின் எதிர்ப்புக்குப் பதிலடி அளிப்பதுபோல மக்கள் ஆளும் காங்கிரஸýக்குப் பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய ஒன்று.

காங்கிரஸýக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாவிட்டாலும் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. நமது நாடாளுமன்றத் தேர்தல் முறையில், 51 என்பது 100; 49 என்பது 0. அந்த வகையில் "ஜெய் ஹோ' காங்கிரஸýக்கே!
நன்றி : தினமணி

நோக்கியா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊ‌தியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருகிறது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக வளர்ந்த பல நாடுகள் இன்னல்களில் சிக்கின. அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் வேலை இழப்பு, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகிறனர்.
இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல அனைத்து நாடுகள் மீட்டு வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், வங்கிதுறை மற்றும் வேலைவாய்பபு நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி சலுகைகள் காரணமாக மூன்றாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து எழுந்து 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் வேலை இழப்பை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.