Monday, November 2, 2009

"ஜெய் ஹோ' காங்கிரஸ்

மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒரு சில பாடங்களை அரசியல் கட்சிகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே' என்பது நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் கூட்டணிகளுக்கும் பொருந்தும் என்பது முதல் பாடம். அரசியலில் யாரையும், எந்தக் கட்சியையும் சகாப்தம் முடிந்துவிட்டது, செல்வாக்குச் சரிந்துவிட்டது என்று தள்ளி ஒதுக்கிவிட முடியாது என்பது இரண்டாவது பாடம். இப்படி இன்னும் பல பாடங்கள்...

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தொகுதி முடிவுகளைப் பொறுத்தவரை, மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் என்று வேண்டுமானால், ஆளும் காங்கிரஸ் தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சி அடையலாம் என்றாலும், கட்சிகளின் செல்வாக்கில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற உண்மையை மறுத்து ஒதுக்கிவிட முடியாது. 1999-லும், 2004-லும் இருந்ததுபோலவே ஆளும் கூட்டணியால் தனிப்பெரும்பான்மையை எட்ட முடியவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 2004 தேர்தலில் அடைந்த வெற்றியைவிட இந்த முறை அந்தக் கட்சி தனது பலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியான தேசியவாதக் காங்கிரஸ் 70 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 69 இடங்களையும் பெற்றது, தர்மசங்கடமான ஒரு நிலைமைக்குக் காங்கிரஸ் தலைமையைத் தள்ளியது. இந்த முறை, 82 இடங்களில் காங்கிரஸýம், வெறும் 62 இடங்களில் தேசியவாதக் காங்கிரஸýம் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணியில் காங்கிரஸின் கரம் வலுவடைந்திருக்கிறது என்கிற வகையில் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால், கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, இந்தச் சட்டப் பேரவை முடிவுகள் பெரிய அளவில் மாறுபட்டதாகத் தெரியவில்லையே, ஏன்? மக்களவைத் தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸýம், வெறும் 8 இடங்களில் தேசியவாதக் காங்கிரஸýம் வெற்றி பெற்ற அதே மக்கள் கருத்து இந்தத் தேர்தலிலும் பிரதிபலித்திருப்பது ஆச்சரியம்தான்.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணியான சிவசேனா - பாஜகவின் பலம் அதிகரிக்காமல் போனதற்கு, மக்களவைத் தேர்தலில் நடந்ததுபோலவே, இந்தத் தேர்தலிலும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் பங்களிப்புதான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தில் தேமுதிக, ஆந்திரத்தில் பிரஜாராஜ்யம் பாணியில் மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து ஆளும் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா உதவியிருக்கிறது.

ராஜ் தாக்கரேயால் தங்களது அணி பலவீனப்படும் என்பது தெரிந்தும், அதைச் சரிக்கட்டவோ, அதனால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவோ சிவசேனாவும், பாஜகவும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லையே ஏன்? அது யாருடைய தவறு?

நகர்ப்புறங்களில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் அபரிமிதமான வளர்ச்சி சுமார் 26 தொகுதிகளில் சேனா - பாஜக கூட்டணியின் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறது. மேலும், பிரமோத் மகாஜன் போன்ற ஒரு தலைவர் இல்லாமல் போனதும்கூட தேர்தல் பிரசாரத்தையும், வேலைகளையும் ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் காங்கிரஸ் தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி, அடுத்த தேர்தலுக்குள் இணைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு காட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்று எதிர்பார்க்கலாம்.

ஹரியாணாவைப் பொறுத்தவரை, காங்கிரஸின் எதிர்பார்ப்புகள் பொய்த்திருக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியைக் குவித்த ஆளும் காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை அடைய முடியவில்லை என்பது மட்டுமல்ல, எந்த அளவுக்கு நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்பதும் சந்தேகமே.

ஓம் பிரகாஷ் சௌடாலாவின் இந்திய தேசிய லோக தளத்துடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டு முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பஜன்லால் ஹரியாணா ஜனஹித் காங்கிரஸýடன் கைகோர்த்த தவறை எண்ணி பாஜக இனி வருந்தி என்ன பயன்? தனக்கு முதல்வர் பதவியோ, தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியோ கிடைக்கும் என்றால் பஜன்லால் மறுபடி காங்கிரஸில் இணைந்துவிட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓம் பிரகாஷ் சௌடாலாவின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்று இரங்கல் பா எழுதியவர்கள் இப்போது அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்காருகின்றனர். பாஜகவுடனான கூட்டணி தொடர்ந்திருக்குமானால் தனிப்பெரும்பான்மையுடன் அந்தக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.

சட்டப் பேரவையில் அதிக இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கட்சி என்கிற முறையில் காங்கிரûஸ ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் முறை. ஹரியாணாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதில் பெரிய சிக்கல் இருக்கப் போவதில்லை. அருணாசலப் பிரதேசத்திலும், தலாய் லாமாவின் விஜயத்தை ஒட்டி சீனாவின் எதிர்ப்புக்குப் பதிலடி அளிப்பதுபோல மக்கள் ஆளும் காங்கிரஸýக்குப் பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய ஒன்று.

காங்கிரஸýக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாவிட்டாலும் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. நமது நாடாளுமன்றத் தேர்தல் முறையில், 51 என்பது 100; 49 என்பது 0. அந்த வகையில் "ஜெய் ஹோ' காங்கிரஸýக்கே!
நன்றி : தினமணி

No comments: