Saturday, July 25, 2009

ஆர்டர் செய்த போயிங் விமானங்களை ஏர் - இந்தியா வாங்கப்போகிறதா ?

கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமாக கொடுப்பது, விமான ரூட்களை குறைப்பது, கடைசியாக மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி கேட்கும் நிலை வரை போயிருக்கும் ஏர் - இந்தியா, உடனடியாக அதன் செலவினங்களில் இருந்து 12 பில்லியன் டாலர்களை ( சுமார் 57,600 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த வேண்டியதிருக்கிறது. எனவே அது ஆர்டர் செய்து இன்னும் வாங்காமல் இருக்கும் 68 போயிங் விமானங்களை வாங்குவதா வேண்டாமா என்ற கடும் குழப்பத்தில் ஏர் - இந்தியா இருக்கிறது. விமான போக்குவரத்து துறை வரலாற்றில் இதுவரை வேறு எந்த நிறுவனமும் கொடுத்திருந்த ஆர்டரை ஏர் - இந்தியா, போயிங் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. ஆனால் அந்த ஆர்டரை கேன்சல் செய்வதா, அல்லது பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தலாமா அல்லது பெற்றுக்கொண்டு விடுவதுதானா என்று இன்னும் ஏர் - இந்தியா முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. இது குறித்து போயிங் இந்தியாவின் தலைவர் தினேஷ் கேஸ்கர் தெரிவிக்கையில், ஏர் - இந்தியா கொடுத்திருக்கும் ஆர்டர் குறித்து இதுவரை எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அவர்கள் எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளராகத்தான் இன்னமும் இருக்கிறார்கள் என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அது காட்டுகிறது. எனவே இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் ( சுமார் 4,80,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள 1,000 விமானங்கள் தேவைப்படும் என்றார். இப்போது சிக்கலில் இருக்கும் இந்திய விமான போக்குவரத்து துறை இன்னும் ஒன்பது அல்லது ஒரு வருட காலத்திற்குள் சரியாகிவிடும் என்றார் கேஸ்கர். ஏர் - இந்தியா தவிர, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான கம்பெனியான ஜெட் ஏர்வேஸ் 7 போயிங் விமானங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. ஆனால் அதை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


எங்கே போய் முடியுமோ?

மக்களவைப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சமீபகாலமாக எதிர்பாராத சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால், எந்தவித முன்யோசனையோ, ராஜதந்திர அணுகுமுறையோ இல்லாமல், தூண்டிலில் சிக்கும் மீனாக இந்தியா மாட்டிக் கொள்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. வெளிவிவகாரத்துறை அடுத்தடுத்து குளறுபடிகளைச் செய்வது கவலையைத் தருகிறது.

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கென்று தனி மரியாதையை ஏற்படுத்தித் தந்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு. வளரும் நாடாகவே இருந்தாலும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்து என்ன என்று மேற்கத்திய நாடுகளாலும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளாலும் அக்கறையுடன் கவனிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஒரு அணியாகவும் சோவியத் யூனியன் தலைமையிலான சமதர்ம நாடுகள் மற்றொரு அணியாகவும் பிரிந்தபோது, இரு அணிகளையும் சாராத புதிய அணியை (அணி சாரா நாடுகள் அணி) ஏற்படுத்தி அதற்குத் தலைமையேற்கும் தகுதியை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்தார் பண்டித நேரு.

நேருஜியின் இந்தப் பாரம்பரியத்தை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி உள்ளிட்டோரும் காப்பாற்றி வந்தனர். இப்போது முதலாளித்துவ நாடுகள் வரிசையும் சோஷலிச நாடுகளின் வரிசையும் கலைந்துவிட்டதால் அணிசாரா நாடுகளின் வரிசைக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து எப்போதும் நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதையே கடமையாகக் கருதிச் செயல்படும் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசினால்கூட ஆபத்தில்தான்போய் முடியும் என்றால் என்ன சொல்வது?

எகிப்தில் நடந்த இந்திய - பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையை இந்திய அதிகாரிகள் சரியாகப் படித்துப்பார்க்காமல் ஒப்புதல் தந்தது எப்படி? இப்போது இதை ""வெறும் காகிதம்தான், சட்டபூர்வ ஆவணம் இல்லை'' என்கிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர். அவருடைய விளக்கத்தைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, போலீஸ் அகாதெமி தாக்கப்பட்டது ஆகிய இரு சம்பவங்களின் பின்னணியிலும் இந்திய அரசுக்குப் பங்கு இருக்கிறது என்று இப்போது நாகூசாமல் கூற ஆரம்பித்திருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். போதாக்குறைக்கு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதக் கலவரங்களின் பின்னணியிலும் இந்திய அரசின் உளவுத்துறை ("ரா') இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கூட்டறிக்கையிலேயே, ""பலுசிஸ்தான் குறித்து இருதரப்பும் ஆழ்ந்து கவலைப்படுவதாக'' ஒரு வரியைச் சேர்த்திருக்கிறார்கள்! எத்தனை விஷமமான வார்த்தை இது? இதை எப்படி இந்திய அதிகாரிகள் அனுமதித்தார்கள்?

அமெரிக்க அரசுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறி, சில மாதங்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பரித்தார்கள். உலகின் பிற நாடுகள் எல்லாம், ""இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?'' என்று பொறாமையுடன் கேட்பதாகக்கூட பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இப்போதோ அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டால் மட்டுமே அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளில் இனி ஒத்துழைப்பு என்று அமெரிக்கர்கள் நம் கழுத்தில் சுருக்கு மாட்டிவிட்டார்கள்.

இந்தியாவுக்கு வந்தார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன். இந்தியாவில் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளின்டன் நமது வெளியுறவு அமைச்சருடன் செலவிட்டது வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே. அதுவும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும்தான் பேசினார் என்று தெரிகிறது. ஜி - 8 மாநாடு அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்தால் மட்டுமே ஒத்துழைப்பு என்று கூறுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு மழுப்பலாக ஒரு பதிலைத் தந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் ஹிலாரி.

எதை எதையோ சொல்லி, நம்மை நம்ப வைத்து வகையாக மாட்டி விட்டார்கள். நீங்கள் வல்லரசாக மாறுவது இருக்கட்டும். முதலில் அணிசாராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு எங்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா. நம்பி மோசம் போனோம் என்று ஒத்துக்கொள்ளவும் முடியாமல், தவறைத் திருத்தும் தைரியமும் இல்லாமல் தவிக்கிறோமே, இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லையே!
நன்றி : தினமணி

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் விற்பனை ஆகிறது

ஜூன் 28ம் தேதி இந்தியாவின் விற்பனைக்கு வந்த டாடா மோட்டார்ஸின் சொகுசு கார்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர், நாள் ஒன்றுக்கு ஒரு கார் வீதம் விற்பனை ஆவதாக தெரிவித்திருக் கிறது. இந்த இரு மாடல்களிலும் இதுவரை 15 கார்களை, தெற்கு மும்பை வொர்லியில் இருக்கும் ஷோரூமிலும், 12 கார்களை தானேயில் இருக்கும் ஷோரூமிலும் விற்பனை செய்திருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும் லேண்ட்ரோவர் கார்கள் ஒவ்வொன்றும் ரூ.63 லட்சத்தில் இருந்து ரூ.89 லட்சம் வரை விலையில் இருக்கின்றன. ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சத்தில் இருந்து ரூ.92 லட்சம் வரை விலையில் இருக்கின்றன. எல்லாம் மும்பையில் எக்ஸ் - ஷோ ரூம் விலை. சந்தை நிபுணர்களின் எதிர்பார்ப்பையும் மீறி இவ்வளவு கார்கள் விற்பனை ஆகி இருப்பது டாடா மோட்டார்ஸூக்கு திருப்தி அளித்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் இதுவரை மொத்தம் 27 சொகுசு கார்களை விற்பனை செய்திருக்கும் நிலையில், அதன் போட்டி நிறுவனமான ஜெர்மனியின் போர்சி, மாதத்திற்கு 10 முதல் 13 கார்களைத் தான் ( அதுவும் ரூ.65 லட்சத்திற்கு மேல் விலையில் இருப்பவை ) இங்கு விற்பனை செய்கிறது. ரூ.80 லட்சம் விலையில் இருக்கும் ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் இங்கு மாதத்திற்கு 10 க்கும் குறைவாகத்தான் விற்பனை ஆகிறது. ஆனால் பிஎம்டபிள்யூவின் 7 சீரியஸ் மற்றும் மெர்சிடஸ் பென்ஸின் எஸ் கிளாஸ் கார்கள் மாதத்திற்கு 30 முதல் 40 வரை இங்கு விற்பனை ஆகிறது.
நன்றி : தினமலர்


இந்தியாவின் ஒருங்கிணைந்த அடையாள அட்டை திட்டத்தில் சேர மைக்ரோசாப்ட் விருப்பம்

இந்திய அரசாங்கம், குடிமக்கள் எல்லோருக்கும் வழங்க இருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை திட்டத்தில் சேர உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் சேர விரும்புவதாக, அதன் சேர்மன் பில்கேட்ஸ் தெரிவித்திருக்கிறார். புதுடில்லியில் நாஸ்காம் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் கோ - சேர்மனாக இருந்து இப்போது ஒருங்கிணைந்த இந்திய அடையாள அட்டை திட்ட ஆணையத்தின் ( யூஐடிஏஐ ) தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நந்தன் நிலேகனியையும் நேற்று பில்கேட்ஸ் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினார். நந்தன் நிலேகன் நேற்றுதான் அந்த திட்டத்தில் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். முதல் கட்டமாக இன்னும் 12 - 18 மாதங்களுக்குள் முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்திய அரசு குடிமக்களுக்கு பயோமெட்ரிக் கார்டை வழங்கப்போவதில்லை என்றும், அது சேகரித்து அட்டையில் பதிவு செய்து வைக்கும் டேடாபேஸ் மூலமாக, அரசு அதிகாரிகளால் அந்த நபரை பற்றியமுழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்