Wednesday, August 19, 2009

விலை உயர்வு எப்போது அமல்? பால் உற்பத்தியாளர் கவலை

அரசுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் பால் கொள்முதல் விலை உயர்வு எப்போது அமலாகும் என தெரியாமல், உற்பத்தியாளர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக, பிப்ரவரி 23ல் போராட்டம் அறிவித்தனர். பால்வளத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 'முதல்வர் உடல்நலம் குன்றியிருப்பதால், பேச்சுவார்த்தையை பின்னர் வைத்துக் கொள்ளலாம்' என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.அடுத்த கட்ட பேச்சுக்கு அழைக்காததால், 'மார்ச் 10ம் தேதி, பால் நிறுத்தப் போராட்டம் நடக்கும்' என, உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறினர். இதற்கிடையே, லோக்சபா தேர்தல் அறிவிப்பால், 'தேர்தலுக்கு பின் பேச்சு நடத்தலாம்' என, அரசு தரப்பில் கூறப்பட்டது. உற்பத்தியாளர்களின் கோரிக்கை பல்வேறு காரணங்களால், புறக்கணிக்கப்பட்டு வந்ததால், இறுதியாக, ஜூலை 9ம் தேதி, பால் நிறுத்தம் மற்றும் கறவைமாடுகளை சாலையில் நிறுத்தும் போராட்டத்தை அறிவித்தனர்.போராட்டம் வலுத்ததால், மின் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள், பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சு நடத்தினர்.இரு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், 'பசும்பால் லிட்டருக்கு 13.50 ரூபாயிலிருந்து 2 ரூபாய் உயர்த்தி, 15.50 ரூபாயாகவும், எருமைப்பால் 18 ரூபாயிலிருந்து, 5 ரூபாய் உயர்த்தி, 23 ரூபாயாகவும் வழங்கப்படும்' என அறிவிக்கப் பட்டது.பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல், பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறியதாவது: 'சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும், 22ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தலாம். அன்று, பால் விலை உயர்வு குறித்த முறையான அறிவிப்பை வெளியிடலாம்' என, கடந்த மாதம் அமைச்சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையின்போது கூறப்பட்டது. ஆனால், இதுவரை பேச்சு நடத்துவது குறித்து எந்த அழைப்பும் இல்லை. கோரிக்கை களில் பால் விலை உயர்வு மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது; மற்ற கோரிக்கை குறித்து, 22ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவோம். ஏற்கனவே கலப்புத் தீவனங்களின் விலை உயர்ந்து வருவதால், பால் உற்பத்தி யாளர்கள் நஷ்டத்தில் உள்ளனர். 70 கிலோ மூட்டைக்கு, 35 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. உடனடியாக விலை உயர்வு அமலை, அரசு வெளியிட்டால், உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


ஏன் இந்த "நோய்ச் சிந்தனை'?

பதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூடிக்கிடந்த வள்ளுவன் சிலை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மனம் வைத்ததால் தூசி நீக்கப்பெற்று வெளிச்சத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, வள்ளுவன் சிலையைத் திறந்துவிட்டதால் இனிக் கன்னடர்கள் திருக்குறள் படிப்பார்கள். இனிப் பெருவெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும் என்னும் நிலை மாறி இயல்பாகவே வரும் என்ற உறுதியை மட்டும் அளிக்க முடியவில்லை.

வள்ளுவன் சிலை திறக்கப்படும் வரை பெங்களூரில் எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி செய்திருந்த சபதம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறிய பிறகுதான் மங்கம்மா சபதம்போல் - பாஞ்சாலி சபதம்போல் கருணாநிதிக்கும் ஒரு சபதம் இருந்ததே உலகுக்குத் தெரியவந்தது.

பாஞ்சாலியைத் "தொடைமீது வந்து இரு' என்றான் துரியோதனன். "அப்படிச் சொன்னவனின் தொடையைப் பிளந்து அவனுடைய உயிரை மாய்ப்பேன்' என்று சபதம் செய்தான் வீமன். "அவனுடைய ரத்தத்தை என்னுடைய முடியில் தடவிச் சீவிக் குழல் முடிப்பேன்; அதுவரை முடியேன்' என்று பதினான்கு ஆண்டுகள் விரித்த கூந்தலோடு வாழ்ந்து ஒருநாள் சபதம் முடித்தாள் பாஞ்சாலி.

திருத்த முடியாக் கொடுமைக்குக் கணக்குத் தீர்ப்பதற்கு உரைக்கப்படுவதே சபதம்; அதைச் சூளுரை என்று இன்பத் தமிழ் கூறும்.

சபதங்களில் சமரசமில்லை. பரிவர்த்தனை கிடையாது. ஆனால் கருணாநிதியின் சபதம் பரிவர்த்தனைத் தன்மை கொண்டது. ஆகவே அது சபதத்தன்மை அற்றது. ஆனாலும் பாஞ்சாலி சபதத்துக்கு நிகராக "கருணாநிதி சபதமும்' புகழ்பெற வேண்டுமென்பது அவருடைய ஆசை. அவருக்கு எதில்தான் ஆசையில்லை?

காற்றை நுழைய விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாயில்களை அடைத்துக் கொள்ளும் பேதையால் காற்றுக்கென்ன இழப்பு? அந்தப் பேதைதான் புழுங்கிச் சாவான்!

செய்வன எவை, தவிர்ப்பன எவை என்னும் வேறுபாடு அறியாதவனே பேதை! "கேட்டினைக் கைக்கொண்டு ஊதியத்தைக் கைநழுவ விடுகிறவன்' (831) என்று பேதைக்கு விளக்கமளிப்பான் வள்ளுவன்!

அறிவினில் தமிழ் அறிவு, கன்னட அறிவு, ஜெர்மானிய அறிவு, பிரெஞ்ச் அறிவு என்று பேதப்படுத்தி அதைப் புறக்கணிக்கும் மனப்பான்மையிலிருந்து கன்னடர்கள் விடுபடவில்லை என்றால் மீண்டும் காட்டுமிராண்டிக் காலத்துக்குள் நுழையவேண்டிய நிலைவரும் என்று சர்வக்ஞர் அறிவு கொளுத்தத் தவறிவிட்டார் போலும்!

ஏசுவினுடைய அறிவை யூத அறிவென்றும், நபிகள் நாயகத்தின் அறிவை அரபு அறிவென்றும், புத்தனின் அறிவை நேபாள அறிவென்றும், இமானுவேல் காண்ட், எகல், காரல் மார்க்சின் அறிவை ஜெர்மானிய அறிவென்றும் வெறுக்கவும் புறக்கணிக்கவும் முடிகிற முட்டாள்களால்தான் வள்ளுவனின் அறிவைத் தமிழறிவு என்று புறக்கணிக்கவும் வெறுக்கவும் முடியும்!

இது மனிதப் புலமை இல்லை; தெய்வப் புலமை என்று குறளில் ஒளிவீசும் முரணறுக்கும் அறிவைப் பார்த்துப் பிளந்த வாயை மூடாமலேயே செத்துப்போனான் பலதுறை அறிவுப் பரிமேலழகன். ஜி.யு. போப் திருக்குறளைப் படித்து உரை எழுதி வைத்துவிட்டுத் தன்னுடைய கல்லறையில் "தமிழ் மாணவன்' என்று எழுதும்படி சொல்லிவிட்டுப் போனான். கம்பனும் இளங்கோவும் திருக்குறளுக்கு எழுதிய விரிவுரைதான் அவர்களின் காப்பியங்கள். தமிழிலுள்ள புகழ்ச் சொற்கள் அத்தனையையும் பெய்து பாராட்டிய பிறகும் வள்ளுவனின் புகழ் இன்னும் எஞ்சி நிற்கும். வள்ளுவனைப் பாராட்டத் தமிழே போதாமை உடையது!

வெறும் சிலைக்கு ஒரு சபதம் செய்ததற்குப் பதிலாக முதலமைச்சர் கருணாநிதி, இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் திருக்குறளின் கன்னட மொழிபெயர்ப்பை ஒவ்வொரு கன்னடனும் அடையுமாறு செய்து, அது அவர்களின் நோய்க்கு மருந்து என்பதை அவர்களே அறிந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தால், அவர்களே தங்கள் முயற்சியால் வள்ளுவனின் சிலையை நிறுவ முயன்றிப்பார்கள்; அப்போது தன்னுடைய சபதம் நிறைவேறிவிட்டதாக முதல்வர் கருணாநிதி மகிழ்வதிலும், விழா எடுப்பதிலும் மிகப்பெரிய நியாயம் உண்டு.

அரிசிக்கு உமியைச் சரிவிலையாகக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொண்டதற்குக் கருணாநிதிக்கு விழா என்ன வேண்டியிருக்கிறது?

வள்ளுவருக்குச் சரிநிகராக சர்வக்ஞரை இறக்குமதி செய்துகொள்ளும் பரிவர்த்தனை உத்தியைக் கருணாநிதி கடைப்பிடிப்பதற்குப் பதினெட்டு ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லையே! இதைச் செய்வதற்கு ஓர் அர்த்தமில்லாத சபதம் வேறு!

பெங்களூர்ப் பேச்சில் மட்டுமன்று; கருணாநிதியின் தேசியம் குறித்த அண்மைக்காலப் பேச்சுகள் அவருடைய தலைகீழ் மாறுதல்களைப் புலப்படுத்துகின்றன.

"என்னையும் எடியூரப்பாவையும் இந்தியர்கள் என்னும் உணர்வு பிணைக்கிறது' என்னும் கருணாநிதியின் பெங்களூர்ப் பேச்சு டக்கர் பேச்சு!

சட்டம் பாய்கிறதே என்று திராவிட இயக்கம் தன்னுடைய பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டது புரியக்கூடியதுதான்! ஆனால் அதற்காகத் தேசியத்தின் தலையாய ஊதுகுழலாகவே கருணாநிதி மாறிவிடுவார் என்பது நாம் புரிந்துகொள்ள முடியாதது!

எடியூரப்பா "நாம் முதலில் இந்தியர்; பிறகுதான் கன்னடர்' என்று பேசியிருக்கிறார்! இந்த வண்டி வெகுகாலத்துக்கு ஓடாது. அவர் இன உணர்வுக் கொள்கையை ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ளப் போயிருக்கக்கூடாது. அவருடைய ரத்தத் துடிப்பில் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

பாரதி நல்லறிஞன்; அவன் இனக் கொள்கையையும் தேசியக் கொள்கையையும் சிக்கலறுத்துப் போதித்தவன்!

முதலில் தமிழைச் செந்தமிழ் என்றும் தமிழர்களை நற்றமிழர்கள் என்றும் அடைமொழி கொடுத்து வாழ்த்திவிட்டுக் கடைசியில் பாரத மணித்திருநாட்டை வாழ்த்துவான்! பாரதி கண்ட வரிசைதான் ஏற்புடைய வரிசை!

ஆனால் நம்முடைய கருணாநிதி "எடியூரப்பாவும் நானும் இந்தியர்கள்' என்று ஒரே தாவாகத் தாவியதற்கு என்ன காரணம்? அதைவிட நெருக்கமான உறவு இயற்கையாகவே இருக்கிறபோது, அந்த உணர்வை மூடிமறைத்துக் கொண்டு, அவர் வீறு கொண்ட தேசியம் பேசியது வியப்பாக இல்லையா?

"எடியூரப்பாவும் நானும் திராவிடர்கள்' என்றல்லவா கருணாநிதி பேசியிருக்க வேண்டும்? மொழிவழியில் தமிழர்கள்; இனவழியில் திராவிடர்கள் தானே நாம்! ஒரு தாய் வயிற்று மக்களுக்குள் ஏன் இந்தச் சண்டைகள் என்று கேட்பதற்கு இனவழித் தொடர்பு சுட்டப்படுவதுதானே இயற்கையாக இருக்கும்!

இந்த மேடைக் கலப்பும் சிலை பரிவர்த்தனையும் காவிரிப் பிரச்னையில் தமிழர்கள் நியாயமாக அடையவேண்டிய நீர்ப்பங்கீட்டைப் பழைய வழமைப்படி பெற்றுத் தருமென்றால் அதைப் பெற்றபிறகு சர்வக்ஞர் என்ன சர்வக்ஞர்? எடியூரப்பாவுக்கே மேட்டூர் தொடங்கி பூம்புகார் சங்கமம் வரையிலும் சிலை வைக்கலாம்!

"யேல்' பல்கலைக்கழகத்திற்குப் போன அண்ணா அங்கே உள்ள ஐரோப்பிய மாணவர்களுக்குத் திருக்குறள் கற்பித்தது போல, பெங்களூருக்குத் திருவள்ளுவர் சிலை திறக்கச் சென்ற கருணாநிதி, அங்கே உள்ள கன்னடர்களுக்குத் திருக்குறளின் ஆழ நீளத்தைக் கற்பித்து, 18 ஆண்டுகளாக இப்படி ஓர் ஒப்பற்ற நூலை எழுதிய ஒரு பெருமகனின் சிலையையா மூடிவைத்திருந்தோம் என்று அவர்கள் நாணப்பட்டு உணரும் வண்ணம் பேசிவிட்டு வருவார் என்றுதான் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் கருணாநிதியின் மனத்தில் ஓங்கி நின்றது சர்வக்ஞர் பற்றிய அச்சம்; அவரை எப்படித் தமிழர்கள் தலையில் கட்டுவது என்னும் அச்சம்!

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று காளிதாசனைக்கூட இந்த வரிசையில் சேர்க்க மறுத்து விட்டானே பாரதி; இத்தகைய உலகத் தர வரிசையினரைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில், சர்வக்ஞரை எந்த வரிசையில் கொண்டுபோய் வைப்பது என்னும் கவலை கருணாநிதியின் பேச்சைத் தடுமாற்றம் கொள்ளச் செய்திருக்க வேண்டும்!

கன்னடர்களுக்கிடையே வள்ளுவனைப் பற்றிப் பேசுவதை விடுத்துச் சர்வக்ஞரைப் பற்றிப் பேசியிருக்கிறார் கருணாநிதி! சர்வக்ஞர் இவ்வளவு பெரிய ஆளா என்று கன்னடர்களே திகைத்துப் போயிருக்கிறார்கள் என்பதால், தமிழர்களை மட்டுமில்லை; கன்னடர்களையும் நெஞ்சை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்துவது கட்டாயத் தேவையாகிவிட்டது கருணாநிதிக்கு!

""சர்வக்ஞர் இன்று உலக அளவிலே அறியப்படாததற்குக் காரணம் அவர் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவரல்ல என்பதுதான்! அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்!'' கருணாநிதியின் பேச்சு இது.

பிற்பட்ட வகுப்பில் பிறந்தவர்களெல்லாம் உயர்குலத்தோரால் அழுத்தப்பட்டு விடுகின்றனர் என்பது அவருடைய பேச்சின் குறிப்புப் பொருள்!

பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிறந்து 75 ஆண்டுகள் கழிந்த பிறகும், கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஐந்து முறை முதலமைச்சாரன பின்பும், அவருடைய மகன் துணை முதலமைச்சரான பின்பும், மராட்டியர்கள், நாயக்கர்கள், மொகலாயர்கள், சோழர்கள் போல், "வம்சாவளி ஆட்சியை' வெற்றிகரமாக நிலைநாட்டிவிட்ட பிறகும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னுக்குவர அனுமதிக்கப்படுவதில்லை என்று எப்படிக் கருணாநிதியால் பேச முடிகிறது!

கருணாநிதி சாதியால் உயர்சாதியுமில்லை; எண்ணிக்கையால் வலிமை பெற்ற சாதியுமில்லை. உயர்சாதி ஆளுமை இருந்திருந்தாலும், எண்ணிக்கை ஆளுமை இருந்திருந்தாலும் கருணாநிதியால் வம்சாவளி ஆட்சியை ஏற்படுத்தி இருக்க முடியுமா?

அண்ணாவின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழ்நாட்டின் போக்கை மாற்றின. அண்ணா முற்பட்ட சாதியா?

பாரதியின் புகழுக்குக் காரணம் அவர் பார்ப்பனர் என்பது தான் என்பது கருணாநிதியின் எண்ணமானால், பாரதிதாசன் புகழுக்கு எது காரணம்?

முடிவெட்டும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பூரி தாகூர் பீகாரின் முதலமைச்சாரகவில்லையா?

இராமாயணத்தை எழுதிய வால்மீகி வேடன்தானே! இராமாயணம் பெற்ற புகழை வால்மீகி பிறந்த சாதியால் மறிக்க முடிந்ததா?

உயர் சாதியான பார்ப்பனர்கள் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தொழுது வழிபட்டுப் பின்பற்ற அந்த இதிகாசங்களை எழுதியவர்களின் சாதிகள் எந்த விதத்தில் தடையாக இருந்தன?

பிற்பட்ட வகுப்பில் பிறந்த வள்ளுவனை உயர்சாதி வைணவப் பிராமணன் பரிமேலழகன் "தெய்வப் புலவன்' என்று உச்சிமேல் வைத்துப் புகழ்கிறானே. சாதி எங்கே குறுக்கிட்டது?

மேற்சாதியில் பிறந்தவனாயினும் கல்லாதவன் இழிவுறுவதும், கீழ்ப்பிறந்தானாயினும் கற்றவன் பெருமையுறுவதும் (குறள் 409) குறித்து வள்ளுவன் பேசுவது பிற்பட்ட வகுப்பில் பிறந்த சர்வக்ஞனுக்குப் பொருந்தாது என்று கருணாநிதி மறுக்கிறாரா?

கீழ்மேல் என்று உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் நால்வகைச் சாதிகளுள் "கீழ்ப்பாலொருவன் கற்பின், மேற்பால் ஒருவன் அவன்கட் படுமே' என்று புறநானூறு பேசுவது சர்வக்ஞருக்கு மட்டும் பொருந்தாமல் போய்விட்டதா? கருணாநிதி சொல்லட்டுமே!

நம்முடைய சித்தர்கள்அனைவருமே ஒருவர் பாக்கி இல்லாமல் பிற்பட்ட வகுப்பினர்தானே!

இடையர் வகுப்பைச் சேர்ந்த திருமூலர் வணங்கத்தக்க இடத்தை அடைவதற்கு அவருடைய சாதி தடையா? சர்வக்ஞருக்கு மட்டும் எப்படி அவர் பிறந்த சாதி தடையானது?

மனுவின் செல்வாக்குத் தேய்ந்துவிட்ட பிறகும், கருணாநிதி சாதியைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதைவிட மாட்டாரா?

திராவிட இயக்கத்தில் தகுதி அடிப்படையில் உயர்ந்திருந்த பல முற்பட்ட சாதியினரை அழுத்தி விட்டுக் கருணாநிதி ஆட்சி நாற்காலியில் அமர முடிந்த ஒன்றே போதாதா ஒருவரின் முன்னேற்றத்திற்குச் சாதி தடையாவதில்லை என்பதற்கு?

கருணாநிதிக்குத் தடையாகாத சாதி சர்வக்ஞருக்கு எப்படித் தடையானது?

இந்த "நோய்ச் சிந்தனை'யிலிருந்து விடுபடவே மாட்டாரா கருணாநிதி?

கட்டுரையாளர் : பழ. கருப்பையா
நன்றி : தினமணி

ஊதுகிற சங்கை...!

அமைச்சர்களும் அதிகாரிகளும் அலுவல் நிமித்தம் பயணம் செய்யும்போது, அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்றும், தனியார் விமானங்களில் பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் வலியுறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே துரதிர்ஷ்டவசமானது என்பது ஒருபுறமிருக்க, இப்போதாவது மத்திய அரசு துணிந்து ஒரு கட்டுப்பாட்டை விதிக்க முற்பட்டிருக்கிறதே என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் பல விமானத் துறையில் நுழைந்தது முதல், தனியார் விமானத்தில் பயணிப்பதுதான் பெருமை. மரியாதை என்கிற தவறான கண்ணோட்டம், பெரு முதலாளிகளுக்கும், தனியார் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. தனியார் துறை என்றாலே சிறப்பாக இயங்கும் என்கிற மாயையை உலகமயம் ஏற்படுத்தி இருப்பதில் அதிசயமும் இல்லை. ஆனால், நமது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் பயணிப்பது தங்கள் பதவிக்கு இழுக்கு, அகௌரவம் என்று கருதி செயல்பட்டதை எப்படி ஜீரணிப்பது?

கல்வி, சுகாதாரம், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை முழுக்க முழுக்க வியாபாரக் கண்ணோட்டத்துடன் செயல்படுவதற்கும், தனியார்மயம் என்கிற பெயரில் பகல் கொள்ளைக்கு உள்படுத்தப்படுவதற்கும் மிக முக்கியமான காரணம், நமது ஆட்சியாளர்களும், நிர்வாகமும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் விமானத் துறையைப் புறக்கணிக்க முற்பட்டதுதான்.

பணமும், பதவியும், அதிகாரமும் வந்தவுடன் நமது மக்கள் பிரதிநிதிகளும் சரி, அமைச்சர் பெருமக்களும் சரி, தத்தம் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பாமல், பணக்காரக் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைத் தேடிப்பிடித்துச் சேர்க்க முற்பட்டனர். அவர்களைப் போலவே அதிகார வர்க்கமும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது கேவலம் என்கிற மனப்போக்கைக் கடைப்பிடித்தது.

அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள் போன்றோர் ஊரார் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால், நமது கிராமத்து ஆரம்பப்பள்ளிகள்கூட ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தரத்திற்கு உயர்த்தப்பட்டுவிடாதா?

தனியார் மருத்துவமனைக் கலாசாரம் பெருகுவதுவரை, நமது மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தானே சிகிச்சை பெற்றனர். அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, மருத்துவமனையின் வளர்ச்சியும், நவீனமயமாக்கப்படுதலும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும்?

ஆட்சி அதிகாரத்திலும், நிர்வாக மையத்திலும் உள்ளவர்களே சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, சராசரிக் குடிமகனுக்கும் அரசு மருத்துவமனைகளின்மீது நம்பிக்கை ஏற்படும்! அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், ஊழியர்களையும் அவமானப்படுத்தும், கேவலப்படுத்தும் செயல்தானே நமது ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது? எங்களைக் கேவலப்படுத்தாதீர்கள் என்று ஏன் நமது மருத்துவத் துறையினர் குரல் கொடுப்பதில்லை?

முன்பெல்லாம் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முடிந்தவரை வெளியூர் பயணங்களை பஸ்ஸிலும், ரயிலிலும்தான் செய்வது வழக்கம். இப்போது அவர்களிடம் கார் வசதி வந்துவிட்டது. போதாக்குறைக்கு, விமானப் போக்குவரத்து எல்லா நகரங்களையும் இணைக்கத் தொடங்கிவிட்டது. எதற்கெடுத்தாலும் பறக்கத் தொடங்கி விட்டார்கள். கேட்டால், நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துகிறோம் என்று காரணம் கூறுகிறார்கள். இவர்கள் ஆலாய்ப் பறந்து நேரத்தை மிச்சப்படுத்துவது அவர்களுக்கு வேண்டுமானால் பயனளித்திருக்கலாம். தேசத்துக்குப் பயனளித்ததாகத் தெரியவில்லை.

சில விஷயங்களை எல்லாம் சட்டம் போட்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது. அவரவர் மனசாட்சி உறுத்த வேண்டும். தார்மிகக் கடமை அவர்களை வழிநடத்த வேண்டும். இதுதான் மகாத்மா காந்தி தனது தொண்டர்களுக்குச் செய்த வழிகாட்டுதல்.

அரசு உத்தரவு இல்லாமலேயே, நமது மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் தங்கள் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கும், தங்கள் குடும்பத்தினரை அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்புவது என்று முடிவெடுத்தாலே, நமது கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தனியாருக்குத் தண்ணீர் காட்டும் அளவுக்குச் செயல்படத் தொடங்கிவிடும்.

அதேபோல, தேவையற்ற விமானப் பயணத்தைத் தவிர்த்து பொறுப்பான பதவியிலுள்ளவர்கள் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்தால், நாடே அவர்களை வாழ்த்தும். மக்களோடு மக்களாக வாழ வேண்டும் என்று சொன்ன காந்தியடிகளின் பெயரால் ஆட்சி நடத்துகிறோம் என்கிற உணர்வுடன் அனைவரும் செயல்பட்டால்...? ஊதுகிற சங்கை ஊதித்தான் பார்ப்போமே...!

நன்றி : தினமணி

தாளடி பருவத்தில் அரிசி உற்பத்தி 10 மில்லியன் டன் குறையும் : சரத் பவார்

டில்லியில் அனைத்து மாநிலங்களின் உணவு துறை அமைச்சர்களுடன் சரத் பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் மற்றும் உணவு துறை அமைச்சர் சரத் பவார் தென்மேற்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக நடப்பு ஆண்டில் தாளடி பருவத்தில் அரிசி உற்பத்தி 10மில்லியன் டன் வரை குறையும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நெல் பயிரிடப்பட்ட மொத்த பரப்பளவை விட இந்த ஆண்கடு 5.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கம்மியாக பயிரிடப்படும் என்றும் இதன் விளைவாக மொத்த உற்பத்தியில், பத்து மில்லியன் டன் குறைவாக இருக்கும் என்றும் பவார் தெரிவித்துள்ளார். 2008-2009 ஆண்டில் 100 மில்லியன் டன் அரிசி சாகுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி சாகுபடி தவிர கரும்பு விவசாயம் மற்றும் எண்ணெய் விதை விவசாயத்திலும் சரிவு இருக்கும் என கவலை தெரிவித்தார். நாட்டின் மொத்த மழை அளவும் 29 சதவீதம் குறைந்திருப்பதாக பவார் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


சிறிய அளவு இணைப்புகளுக்கும், கைப்பற்றுதலுக்கும் கோர்ட் அனுமதி தேவையில்லை : விரைவில் அமல்

கம்பெனிகள் ஏற்படுத்தும் சிறிய அளவு இணைப்புகளுக்கும், கைபற்றுதலுக்கும் ஐகோர்ட் அனுமதி தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்தோடு எந்த ஒரு போட்டியும், பங்குதாரர்களின் ஆட்சேபனையும் இல்லாதபட்சத்தில் , கம்பெனிகள் ஒருங்கிணைவதற்கும், கைப்பற்றுதலுக்கும் ஐகோர்ட் அனுமதி பெற தேவையில்லை என்ற திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. மெர்ஜர்களுக்கு கோர்ட் அனுமதி பெற வேண்டிய நிலை நீடிப்பதால், சிறிய மெர்ஜர்களுக்கு 3ல் இருந்து 5 மாத காலமும், பெரிய மெர்ஜர்களுக்கு ஒரு வருடத்துக்கு மேலும் கால தாமதமாகிறது. இதை தவிர்ப்பதற்காக , மெர்ஜர் விவகாரங்களை கண்காணிக்க ஐகோர்ட்டுக்கு பதிலாக , வேறு ஒரு அமைப்பை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுதந்திரமாக இயங்கக் கூடிய ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி அவற்றிற்கு மெர்ஜர்களை க்ளியர் செய்யும் அதிகாரத்தையும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் காம்படிசன் கமிஷன் ஆப் இந்தியா தான் இணைப்புகளுக்கும், கைபற்றுதலுக்கும் பச்சை கொடி காட்டும் பொறுப்பபை தொடர்ந்து வகிக்கும் என தெரிகிறது.
நன்றி : தினமலர்