Monday, July 21, 2008

யு.பி.ஏ.அரசு நீடிக்கவே பெரும்பாலான இந்திய சி.இ.ஓ.,க்கள் விரும்புகிறார்கள் : சர்வே


மும்பை : இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசு நீடிக்கவே இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் ( சி.இ.ஓ.,) விரும்புகிறார்கள் என்று, இன்று எடுத்த ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை இதுவரை ஆதரித்து வந்த இடதுசாரி கட்சிகள், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து, அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடக்கிறது. இந்நிலையில் அசோசியேட்டட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் ( அசோசெம் ) என்ற அமைப்பு இன்று திங்கட்கிழமை, இந்திய தொழில் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சி.இ.ஓ.,க்களிடம் நடத்திய ஒரு சர்வேயில், இப்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசுதான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தது தெரிய வந்துள்ளது. 400 சி.இ.ஓ.,க்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் 72 சதவீதத்தினர் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, அவர்கள் ( காங்கிரஸ் ), பென்சன், இன்சூரன்ஸ், சிவில் ஏவியேஷன், தொழிலாளர் முன்னேற்றம் போன்ற துறைகளில் இன்னும் வேகமான முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இன்னும் 15 வருடங்களில் அணுசக்தி துறை சம்பந்தமான தொழில்களில் சுமார் 40 பில்லியன் டாலர் ( சுமார் 1,70,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள முதலீடு இந்தியாவுக்கு வரும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் அது சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடம் நடத்தி வைத்திருக்கின்றன என்றனர்.

நன்றி : தினமலர்

இன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை


மும்பை : நாளை மத்திய அரசு மீது நம்பிக்கை வோட்டு எடுக்க இருக்கும் நிலையில், இன்றைய பங்கு சந்தை கீழே இறங்கி விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மதியம் வரை இந்த எதிர்பார்ப்பு இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் காலை வர்த்தக ஆரம்பத்தில் இருந்தே ஏறி இருந்த சென்செக்ஸ் மதியத்திற்கு மேல் வேகமாக உயர ஆரம்பித்தது. பேங்கிங், ரியல் எஸ்டேட், பார்மா, ஆட்டோ, பவர், எண்ணெய் நிறுவனம் ஆகிய பங்குகள் வேகமாக உயர துவங்கியது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 214.64 புள்ளிகள் ( 1.57 சதவீதம் ) உயர்ந்து 13,850.04 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 67.25 புள்ளிகள் ( 1.64 சதவீதம் ) உயர்ந்து 4,159.50 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளிலும் இன்று உயர்வு நிலைதான் இருந்தது. ஷாங்கை, ஹேங் ஷெங், ஜகர்தா காம்போஸைட், ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, மற்றும் தைவான் வெயிட்டட் போன்றவைகள் 2.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளிலும் இன்று ஏற்ற நிலையே இருந்தது.


நன்றி : தினமலர்


வெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது


புதுடில்லி : வெளிநாட்டினர் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதுபோல இந்தியர்களும் வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ ( ஜாயின்ட்வெஞ்சர் ) அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிக்கொள்வதன் மூலமாகவோ ( ஹோல்லி - ஓன்ட் சப்சியடரிஸ் ) இந்தியர்களின் முதலீடு இருக்கிறது. இந்த முதலீடு 2007 நிதி ஆண்டை விட 2008 நிதி ஆண்டில் 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2007ல் 15.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியர்களின் முதலீடு 2008 நிதி ஆண்டில் 23.071 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. 2007 ல் 1,817 வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த இந்தியர்கள் 2008ல் 2,261 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது 24.4 சதவீதம் அதிகம். இந்தியர்களில் முதலீட்டில் பெரும்பகுதி சைப்ரஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு குடியரசு, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மொரீசியஸ் போன்ற நாடுகளில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் தான் வெளிநாட்டினர் எளிதில் முதலீடு செய்யும் வகையில் திட்டங்களை வைத்திருக்கின்றன.


நன்றி : தினமலர்


ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது


சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் இன்று காலை கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி ஈரானை கேட்டுக்கொள்ள, வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். இன்று காலை வர்த்தகத்தில் நியுயார்க் சந்தையின் முக்கிய பொருளான லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 82 சென்ட் உயர்ந்து 129.70 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) ஒரு சென்ட் உயர்ந்து 130.20 டாலராக இருந்தது. ஈரானை அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துப்போனால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒத்துப்போகவில்லை என்றால் அது மற்ற நாடுகளில் இருந்து தனிமை படுத்தப்படும் என்று எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளது


நன்றி : தினமலர்


மாதங்களில் பணவீக்கம் குறையும் ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை


புதுடில்லி: 'இன்னும் ஆறு மாதங்களில் பணவீக்கம் 5.5 சதவீதமாக குறையும். இதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப் பட்டுள்ளன' என ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. நாட்டின் பணவீக்க அளவு, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் ரெட்டி, பார்லிமென்ட் நிலைக் குழுவுடன் சமீபத்தில் விவாதித்தார். அப்போது அவர் பேசியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதங்களுக்குள், பணவீக்கம் 5.5 சதவீதமாக குறைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நமது நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது. உலகம் முழுவதும் தற்போது பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இந்த சூழ்நிலையில், வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் மற்றும், ஜப்பானில் உள்ள பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. இவ்வாறு ரெட்டி கூறினார். கவர்னர் ரெட்டி தனது பேச்சின் போது, வங்கிகளின் வட்டி வீதத்தை மேலும் அதிகரிப்பது பற்றியோ, தற்போதுள்ள நிலையில் எப்போது மாற்றம் ஏற்படும் என்பது பற்றியோ தெளிவாக கூறவில்லை.


நன்றி : தினமலர்