Friday, December 3, 2010

வெட்கம் கெட்டவர்கள்!

சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.


ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். ""இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்...

நன்றி : தினமணி 

Thursday, December 2, 2010

யாகாவாராயினும் நா காக்க...

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.

முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.

கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.

காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா?

கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?

போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!

இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?

1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?

ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.

பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.

ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.

இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன?

ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்?

ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே!

பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.

தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்?

ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா?

ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!

மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.

தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.

இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.

வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.

என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே

கட்டுரையாளர் :  நெல்லைகண்ணன்

நன்றி : தினமணி

Friday, September 24, 2010

தேசத் துரோகிகள்!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.

அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.

70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.

எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்

கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?

இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

 நன்றி : தினமணி  


Tuesday, September 21, 2010

மக்களிடம் மறைப்பானேன்?

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.

நோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா?

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

தமிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவமனை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.

கோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின் திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.

மீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை "செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.

உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் "பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - "வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி!'
நன்றி : தினமணி

Friday, September 17, 2010

ஏன்? எப்படி? எதற்கு?

ஜாதிவாரி கணக்கெடுப்பை 2011 ஜூன் மாதத்தில் தொடங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்பது இத்தனை காலமாக இதைக் காலம் தாழ்த்தியதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இருந்தும் கூட்டணி ஆட்சியில் ஆதரவாக நிற்கும் அரசியல் கட்சிகளின் நெருக்குதலுக்கு ஆளான மத்திய அரசு, வேறுவழியின்றி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல்வாதிகளின் கலக அரசியலுக்குத் துணைபோகும் என்று ஒரு சாரார் எதிர்த்தாலும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசின் சலுகைகளையும் பயன்களையும் பெறவில்லை என்று இன்னொரு சாரார் வலியுறுத்தி வந்தனர். ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதென மத்திய அரசு தீர்மானித்து, அறிவித்துள்ளது.

இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்செலவு

ரூ.2000 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிடக் கூடுதலாகவும் வாய்ப்பு உண்டு. இந்த முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால், வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு இதையும் சேர்த்திருந்தால், இந்தச் செலவை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும்.

இருப்பினும்கூட, இப்போது இத்தனை பெரும் பொருள்செலவில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் ஜாதி, அவர்களின் வங்கி இருப்பு, சொத்துகள், அரசால் பெற்ற நலத்திட்டப் பயன்கள், கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பெற்ற சலுகைகள், அவர்தம் குழந்தைகள் பெற்றுவரும் சலுகைகள், கலப்பு மணம் என்றால் அதன் விவரம், வருமான வரி செலுத்துபவரா போன்ற அனைத்துத் தகவல்களையும் பெற்று, இவர்கள் ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கொடுத்த தகவல்களையும் ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தத் தகவல்கள் சரியானவையாக இருக்கும்.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருக்கும் ஜாதி, இன்னொரு மாநிலத்தில் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. சில மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோராக இருக்கும் ஜாதி, அண்டை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. இந்த வேறுபாடுகளை, இந்தப் புள்ளிவிவரம் களைய முற்படுமா? அல்லது அந்தந்த மாநிலத்தில் தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதிகளை அந்தந்த வகைப்பாட்டிலேயே வைத்திருக்குமா?

புள்ளிவிவரத்தின்படி, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி வாய்ப்புகளிலும், அரசுப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று விட்டார்கள் என்று தெரியவந்தால், அவர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தும், வாய்ப்பு பெறாதவர்களுக்காக இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்தும் சட்டத்தை மாற்ற முனைவார்களா?

÷பிரிட்டிஷ் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியா மிகப்பெரும் மாறுதலை அடைந்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குறிப்பாக, இடஒதுக்கீடு மூலம் பல சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனாலும், சலுகை மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த அதே குடும்பங்களே தொடர்ந்து சலுகையைத் தட்டிச்சென்று, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு நந்தியாகக் குறுக்கே நிற்பதைத் தடுக்கும் வகையில் "கிரீமி லேயர்' என்பதை அறிமுகம் செய்வதற்கும் அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும் இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர் தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம்? இப்படிப்பட்டவரை ஏன் "கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள் பெறுவதைத் தடுக்கக்கூடாது?

÷தனது சமூகத்துக்கே தடைக்கற்களாக இருக்கும் இத்தகைய சுயநலமிகளை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சலுகைக்கு வெளியே நிறுத்த அரசு முற்பட்டால், அதை இதே அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா? இடஒதுக்கீடு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற்றவரின் குழந்தைகளில் ஒருவர் மட்டுமே அடுத்த முறை இச்சலுகையைப் பெற முடியும் என்று இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் அரசு தீர்மானிக்குமானால் அதை அரசியல்வாதிகள் ஏற்பார்களா?

ஏற்க மறுப்பார்கள் என்றால் - எந்த மாற்றமும் செய்ய உடன்பட மாட்டார்கள் என்றால், இந்தக் கணக்கெடுப்பு பொருளற்றது. வெறும் பொருள்செலவுதான் மிஞ்சும். அதற்காக மக்களின் வரிப்பணம் 2,000 கோடி ரூபாய் விரயமாக்கப்படுவதில் அர்த்தமேயில்லை.

ஜாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால், கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதியம் நிலைநிறுத்தப்படுமானால், இது விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் முயற்சியாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

Wednesday, September 8, 2010

ஞாயிறு தூற்றுதும்!

செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.

ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.

இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்! தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா?

இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!

இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால் மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.

இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை. சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.

நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!
நன்றி : தினமணி

Friday, September 3, 2010

காப்பது கடமை!

தகவல்பெறும் உரிமைச் சட்டம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தச் சட்டம் முறையாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகத்தில் காணப்படும் பல குறைகளை வெளிக்கொணரவும் அதன் மூலம் குறைகள் களையப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதில் பிரதமருக்கேகூட முதலில் தயக்கம் இருந்தது என்று கூறப்படுகிறது. இப்போதும்கூட, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு பிரிவினர் இந்தச் சட்டத்திலிருந்து பல பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு தரப்பட வேண்டும் என்கிற நீதித்துறையின் பிடிவாதம் இப்போதுதான் மெல்லமெல்லத் தளரத் தொடங்கி இருக்கிறது.

இத்தனை தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதற்கு, நாம் மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நன்றி கூறியே தீரவேண்டும். பிரதமரின் தயக்கத்தையும் மீறி காங்கிரஸ் தலைமை இந்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை நாம் வரவேற்காமல் இருந்தால் எப்படி?

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து இப்போது இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் இன்னொரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. பொதுநலத்தைக் கருத்தில்கொண்டு தவறுகளை வெளிப்படுத்தும் அதிகாரிகளும், பொதுநல அமைப்புகளும், ஏன் பத்திரிகைகளும், பாதிக்கப்படும் குற்றவாளிகளாலும், உயர் அதிகாரிகளாலும், அதிகார மையங்களாலும் தாக்குதலுக்கு ஆளாக நேர்வதைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு சட்டத்துக்கான தேவை சமீபகாலமாக மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளை அம்பலப்படுத்திய ஒன்பது பொதுநல ஊழியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கொலை நடந்து முடிந்ததும், "விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்' என்று சம்பந்தப்பட்ட மாநில அரசும், காவல்துறையும் தெரிவிக்கின்றனவே தவிர, இதுவரை எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

கோலாப்பூரைச் சேர்ந்த தத்தா பாட்டீல் மே 31 அன்று கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21 அன்று அதே மகாராஷ்டிர மாநிலம் பீத் என்கிற ஊரில் விட்டல் கீதே என்பவர் கொல்லப்பட்டார். ஏப்ரல் 11 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் கோலா ரங்கா ராவ், பிப்ரவரி 26 அன்று மகாராஷ்டிரத்தில் அருண் சாவந்த், பிப்ரவரி 14 அன்று பிகார் பெகுசராயில் சசிதர் மிஸ்ரா, பிப்ரவரி 11-ல் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் விஷ்ரம் லட்சுமண் தோதியா, ஜனவரி 13 அன்று பூனாவில் சதீஷ் ஷெட்டி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் பொறியாளராக இருந்த சத்யேந்திர துபே என்பவர், சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் இருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, சத்யேந்திர துபேயின் உயிருக்கு உலை வைத்துவிட்டார்கள். சத்யேந்திர துபேயின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தொடர் வற்புறுத்தலின் பலனாக, மத்திய அரசு 2004-ல் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மத்திய கண்காணிப்பு ஆணையம் (சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன்) இதுபோன்ற பிரச்னைகளில், முறையீடுகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் தொடர்விளைவாகத்தான் இப்போது மக்களவையில் பொதுநல நோக்குடனான "ஊழலை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்கும் சட்டம் 2010' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. துணிந்து அரசு அதிகாரிகளோ, வேறு யாரோ பொதுநல எண்ணத்துடன் குற்றங்களை வெளிப்படுத்த முன்வந்தால்தானே தவறுகளை நாம் அடையாளம் காண முடியும்? அப்படி தகவல் தருபவர்களுக்கு, அவர்களது பதவிக்கும், உயிருக்கும் பாதுகாப்புத் தருவது என்பது அவசியமான ஒன்றாயிற்றே.

மேலை நாடுகளில், அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, தனியார் சமூகசேவை நிறுவனங்கள், மக்களிடம் பங்குகள் வசூலித்து நடத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோருமே ஊழலை வெளிக்கொணரவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ உதவினால், அந்த நாட்டு அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இங்கே மட்டும்தான் அவர்கள் பல சோதனைக்கு உள்ளாவதும், அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதும் நடைபெறுகிறது.

சற்று காலதாமதமாக வந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய சட்டம். சட்டம் இயற்றுவதுடன் கடமை முடிந்துவிடவில்லை. இதுபோலத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களையும் தவறுகளையும் வெளிக்கொணரும் தைரியசாலிகளுக்குப் பொதுமக்கள் பின்துணை நல்க வேண்டும். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடாமல், நமக்காகப் பாடுபடும் அவர்களுக்காக நாம் குரல் எழுப்பியே தீர வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் முறையாகச் செயல்படத் தொடங்கும்.
நன்றி : தினமணி

Thursday, September 2, 2010

சதை ஆடுகிறதே...!

பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.

வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.

இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.

ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது.

இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை.

இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.

முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.

இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது.

நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
நன்றி : தினமணி

Wednesday, September 1, 2010

மறுபக்கம்...

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம்.

கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம்.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.

தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு.

தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?

உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?

விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?

தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித் தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?

பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...
நன்றி : தினமணி

Tuesday, August 31, 2010

தூக்கில் தொங்கும் தீர்ப்புகள்!

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுதுபுலம்பினாலோ, முணுமுணுத்தாலோ அதற்குக் காரணம் அவர்கள் பிறந்த பொன்னாட்டை வெறுப்பதால் அல்ல. தவறுகள் திருத்தப்படாதா, நான் பிறந்த நாடு போற்றுதலுக்கு மட்டுமே உரிய நாடாக மாறிவிடாதா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்தான் காரணமே தவிர, அது நாட்டுப்பற்று இல்லாமையால் அல்ல. 63 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தும் முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்கக்கூடத் துணிவில்லாத அல்லது மனமில்லாத நாடாக இந்தியா தொடர்கிறதே என்று ஆதங்கப்படுவது தவறா என்ன?

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தீவிரவாத சக்திகளால் தாக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்படி இந்திய நாடாளுமன்றத்தையே தகர்த்தெறியும் திட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான அப்சல் குரு என்பவர் பிடிபட்டார். இது சர்வாதிகார நாடாக இருந்தால், அடுத்த சில நாள்களிலேயே அப்சல் குரு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.

நாடாளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்துக்கான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து, 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குற்றவாளியான அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை அளிப்பது எனத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலேயே விஷயம் முடிந்துவிடாதே; மேல்முறையீடு செய்வதற்காக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பது என்று 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இதற்குள் 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தடை விலக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடுவதற்கான நாளும் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, அப்சல் குருவின் மனைவி தபாசம், குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதுபோன்ற கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவர், தனக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்தக் கருணை மனுவை அனுப்புகிறார்.

இதெல்லாம் நடந்தது 2006-ம் ஆண்டில். மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி அப்சல் குரு தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசுக்கு அனுப்பி அந்த அரசின் கருத்தைக் கோருகிறது. தில்லி அரசுக்குப் போன அப்சல் குருவின் கருணை மனு தொடர்பான கோப்பு கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதின. பொதுநல சங்கங்கள் ஊர்வலங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊஹூம், அந்தக் கோப்பைப் பற்றிய பேச்சுமூச்சே காணோம்.

மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் திடீரென்று விழித்துக்கொண்டு தில்லி மாநில அரசுக்கு கோப்புப் பற்றி நினைவூட்டும். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு மீதான தில்லி அரசின் கருத்தைக் கேட்டும் தில்லி அரசு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறது.

இதுவே எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தால் இந்தக் காரணத்துக்காகவே அந்த ஆட்சியைக் கலைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 16 கடிதங்களை தில்லி அரசு பார்த்தும் பார்க்காமலும் இருந்தது என்றால், அதுவே நம்பும்படியாக இல்லை.

கடந்த மே மாதம் 18-ம் தேதி தில்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சில விளக்கங்களைக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். விளக்கங்கள் கிடைத்ததும் உடனடியாக தில்லி அரசு முடிவெடுத்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு வாரத்துக்கு முன்புதான் சற்று மனம்இறங்கி, குற்றவாளி அப்சல் குரு சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தில்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா.

அப்சல் குருவைத் தூக்கிலிடுவது என்கிற தீர்ப்பில் தங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "அப்சல் குருவைத் தூக்கிலிடுவதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி நன்றாக மறுபரிசீலனை செய்துவிட்டு முடிவெடுக்கவும்' என்று அவர் பரிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் பெரிய விந்தை.

அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க முயன்ற நாசகாரக் கும்பலைச் சேர்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர். அவரைத் தூக்கிலிடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறாரே தில்லி துணைநிலை ஆளுநர், அப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருக்கலாமே...

இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அப்சல் குருவுக்காக வருத்தப்படுவார்கள் என்றோ குரல் கொடுப்பார்கள் என்றோ யாராவது நினைத்தால், அப்படி நினைப்பவர்கள்தான் தேசத் துரோகிகள். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களைக் களங்கப்படுத்துவதும், அவர்களது தேசபக்தியைக் கொச்சைப்படுத்துவதும்தான் இப்படிக் கூறுபவர்களின் உள்நோக்கம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தூக்கிலிடுவதற்கு முன்னால் தீர யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், தவறான காரணத்தைக் காட்டி தீர்ப்பைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல. கருணை மனுவை காலவரையில்லாமல் ஒத்திபோடுவது நீதிக்கும் இழுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் இழைக்கப்படும் அநீதி.

தேசத்தை நேசிப்பதால் கோபம் வருகிறது. தூக்கிலிடப்பட வேண்டியது அப்சல் குருவையா, இவர்களையா? இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், இந்திய மக்களே கொதித்தெழுந்து நாடாளுமன்றத்தைத் தகர்த்தெறிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை மேலெழுகிறது...
நன்றி : தினமணி

Monday, August 30, 2010

பாகிஸ்தான் - சீனா பாய்.. பாய்...!

இந்தியாவைச் சீண்டுவதும் பிறகு கைகுலுக்கிச் சமாதானம் பேசுவதும் சீனாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தால், நாமும் நமது அண்டை நாடுகள் நமக்கு இழைக்கும் துரோகங்களையும், அவமானங்களையும் தொடர்ந்து மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம் என்றோ, இதுதான் சாதுர்யமான வெளிவிவகாரக் கொள்கை என்றோ நமது ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால், அதன் விளைவுகள் விளைவிக்க இருக்கும் பாதகங்கள் அளப்பரியது என்று நாம் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியாவிலிருந்து உயர்நிலை ராணுவ அதிகாரிகளின் குழு ஒன்று பெய்ஜிங்குக்குச் செல்வதாக இருந்தது. அந்தக் குழுவில் இந்திய ராணுவத்தின் வடஎல்லையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலும் இடம்பெற்றிருந்தார். ஆனால், எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல் அவருக்கு மட்டும் நுழைவு அனுமதி (விசா) வழங்க பெய்ஜிங் மறுத்து விட்டிருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிழக்கு எல்லையில் பிரச்னைகள் இருப்பது உலகறிந்த உண்மை. அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி நமது வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பல பகுதிகளை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இப்போது இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக இருப்பவர் முன்பு கிழக்கு கமாண்டின் தலைமைத் தளபதியாக இருந்தபோது, சீனாவுக்குச் சென்று வந்திருக்கிறார். எல்லைப் பிரச்னைக்காக நுழைவு அனுமதி வழங்காமல் இருப்பதாக இருந்தால் அவருக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டும்.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலுக்கு அனுமதி மறுத்திருப்பதற்குக் காரணம் என்ன என்று விசாரித்தபோது, இதற்குக் காரணம் பாகிஸ்தான் என்பது தெரிகிறது. சமீபகாலமாகவே, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு நாளும் பொழுதும் பலமடைந்து வருகிறது. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளை சீனாவின் பாதுகாப்பில் விடுவதற்கான ஆலோசனை பாகிஸ்தானின் ராணுவத்தால், அந்த நாட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சில நாள்களுக்கு முன்னால் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்திருந்ததை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

மேல்நாட்டு வல்லரசுகளும் சரி, சீனாவும் சரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடாமல் காஷ்மீர் பிரச்னை தீர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தங்களது ராணுவத் தளத்தை நிறுவிவிட்டால் எண்ணெய் வளம் கொழிக்கும் மேற்காசியாவையும், பாரசீக வளைகுடாவையும், ரஷியாவையும், இந்தியாவையும், சீனாவையும் ஒருசேரக் கண்காணிக்கும் வகையில் செயல்பட முடியும் என்பதால்தான், எல்லா நாடுகளுக்குமே காஷ்மீர் மீது ஒரு கண்.

ஒருபுறம் தலிபான்களும் மற்றொருபுறம் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் மோதிக்கொள்ளும் நிலையில், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ள பாகிஸ்தான், தனக்குக் கிடைக்காவிட்டாலும் காஷ்மீர் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நிச்சயமாகக் குறியாக இருக்கும். அதனால்தானோ என்னவோ, இப்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் சீனப் படைகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும் திட்டமும் சீனாவால் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் மேலைநாட்டுப் பத்திரிகைகளில் கசிந்தவண்ணம் இருக்கின்றன. பாகிஸ்தானின் ராணுவத்துக்கு சீனா உதவுகிறது என்பதும், பாகிஸ்தானின் அணு ஆயுதச் சோதனைகளுக்கு சீனாதான் பக்கபலமாக இருந்து உதவியது என்பதும் புதிய செய்தி ஒன்றுமல்ல.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலின் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு ஒரே ஒரு விடைதான் கிடைக்கிறது. இந்தியாவின் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானும் சீனாவும் கைகோத்து செயல்படுவதைப் பற்றிய கேள்விகளை எழுப்பி அவர் சீன ராணுவ அதிகாரிகளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால்தான் சீனா இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை என்று இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளையும் தனது நட்பு வளையத்துக்குள் சீனா கொண்டு வந்திருக்கிறது என்கிற உண்மையைப் பலமுறை நாம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். சமீபகாலமாக, இந்துமகா சமுத்திரத்தில், குறிப்பாக டீகோ கார்சியா உள்பட பல சிறிய நாடுகளில் சீனக் கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருவதையும் நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும்.

ஒருபுறம் சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளைக்கூடத் துச்சமாக மதிக்கும் ஆணவம் சீனாவிடம் சமீபகாலமாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் "வீட்டோ' சக்தியுடனான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட சீனா, மேலாதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் செயல்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் நிறையவே காணப்படுகின்றன.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நேசக்கரம் நீட்டுவதெல்லாம் சரி. நமது பாதுகாப்பையும், ஒருவேளை ஆக்கிரமிப்புக்கு சீனாவோ, பாகிஸ்தானோ முனைந்தால் அதை எதிர்கொள்ள வியூகங்களையும் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோமா?

நயவஞ்சகத்தை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை நம்பி மோசம் போய்விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் நம்பிக்கைகூடத் தங்கள் மீது இல்லையோ என்கிற நமது நியாயமான சந்தேகம்தான் அதற்குக் காரணம்!
நன்றி : தினமணி

Saturday, August 28, 2010

போதுமே போலித்தனம்!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,

இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும்பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!
நன்றி : தினமணி

தன்னார்வக் குளறுபடிகள்...

அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. 19 வயதில் கன்னியாஸ்திரியாக கொல்கத்தா வந்து சேர்ந்த தெரசாவின் சேவையும் புகழும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்தவேளையில், இந்தியாவில் அனைவருக்குமான ஒரு கேள்வியை அன்னை தெரசாவின் வாழ்க்கை முன்வைக்கிறது: அன்னை தெரசா போன்று இத்தகைய சேவையைச் செய்பவர்கள் இந்தியாவில் பரவலாக உருவாகவில்லையே, ஏன்?

இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பதிவுபெற்ற சேவை நிறுவனங்கள் 33 லட்சம் இருப்பதாக அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்ட ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இதன்படி 400 இந்தியருக்கு ஒரு சேவை அமைப்பு இருப்பதாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சேவை அமைப்புகள் உண்மையாகவே தொண்டு செய்திருக்குமானால், இந்தியாவில் இப்போது நிலவும் அறியாமை, வறுமை, கல்லாமை எதுவுமே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நடந்துவிடவில்லை.

இதற்குக் காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நமது அரசின் நடைமுறைகளும்தான். இவை யாவுமே இந்தியாவில் மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக இருக்கின்றன; மிக எளிதாக, வியர்வை சிந்தாமல் உண்டு கொழுப்பதற்கான தொழிலாகத் தன்னார்வத் தொண்டு மாறிக்கிடக்கிறது.

கல்வி விழிப்புணர்வு என்றாலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு என்றாலும், காசநோய் ஒழிப்பு என்றாலும், முதியோர் காப்பகம் அல்லது மூளைவளர்ச்சியில்லாத குழந்தைகள் காப்பகம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் எதுவென்றாலும் எல்லாவற்றையும் அரசு நிர்வகிப்பதில்லை. 99 விழுக்காடு தொண்டு நிறுவனங்களால்தான் இவை நடத்தப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றின் செயல்பாடுபற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் பணத்தை மட்டும் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்குவதும், இந்த நடவடிக்கைகளில் கையூட்டும், போலி கணக்குகளுமே நிறைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம்.

ஆழிப் பேரலையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். வீடிழந்தார்கள். அவர்களுக்கு வீடு கட்டித் தருகிறேன் என்று பணம் வசூலித்த தன்னார்வ அமைப்புகள் பல உண்டு. அவை கட்டித் தந்த வீடுகளுக்கு பெற்ற பணம் எவ்வளவு? அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு? இதில் வீடு கட்டித் தராமல் பணத்தை கோடிகோடியாக வங்கியில் போட்டுக்கொண்ட அமைப்புகள் எத்தனை? அரசு அம்பலப்படுத்தவில்லை. அவர்களுக்கு நிதி வழங்கிய வெளிநாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் வந்து பார்த்து அதிருப்தி தெரிவித்ததால், நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு வெளிச்சத்துக்கு வந்த மோசடிகள் மிகச் சிலவே.

இந்த வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களும் சரி, இன்று பிணையில் வெளியே வந்து, மக்களோடு மக்களாக சகல வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆழிப்பேரலையில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு வாழ்வளிப்பதாகக் கூறிக்கொண்டு தோன்றிய புதுப்புது தொண்டு நிறுவனங்கள் தின்று கொழுத்தன. குழந்தைகள்தான் வற்றிப்போனார்கள்.

எல்லா தொண்டு நிறுவனங்களும் மோசடியானவை அல்ல. ஆனால், மோசடி நிறுவனங்களால் மட்டுமே அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ளவும், பணத்தைப் பெறவும் முடிகிறது என்பதுதான் துரதிருஷ்டம். குறைந்தபட்சம், கிடைக்கும் பணத்தில் பாதியைச் செலவிட்டாலும்கூட அவர்களை கைகூப்பித் தொழலாம் என்பதே பெருவாரியான இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.

தொண்டு நிறுவனங்கள் எவ்வாறெல்லாம், எதற்காகவெல்லாம் உலகம் முழுவதிலுமிருந்து நிதி பெற முடியும்; அத்தகைய நிதியை நேரடியாகப் பெறுவதற்கு இந்தியாவில் எந்த முகவர்கள் அல்லது மதஅமைப்புகள் மூலம் விண்ணப்பிக்கலாம், எந்தச் சேவையைச் சுட்டலாம்; அரசு மூலமாக நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கவும், இதற்கான புராஜக்ட் ரிபோர்ட் தயாரித்து, பத்திரிகைகளுக்கு தீனி போட்டு, செய்தி நறுக்குகளையும் விடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்து, நிதியைப் பெற்றுத்தருவதற்கென்றே தரகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் சேவை என்பதற்கும் சேமியா என்பதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.

முன்னாள் எம்.பி.க்கள், இன்னாள் எம்.பி.க்கள் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எத்தனை என்பதைப் பட்டியலிட்டால் தலைசுற்றும். பல முன்னாள் பிரதமர்களும், அமைச்சர்களும் தங்களைத் தலைவர்களாகக் கொண்ட இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள் ஏராளம்.. ஏராளம். சுமார் 60 விழுக்காடு எம்.பி.க்களின் உறவினர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி சேவை புரிகிறார்கள். அவர்களுக்கு நிதியை அரசு வாரி வழங்கவும் செய்கிறது.

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நவீன் சாவ்லா, அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ""தவறான வழியில் வரும் நிதியை அன்னை தெரசா ஏற்றுக்கொள்கிறார் என்ற புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய விளக்கம், "நான் அரசிடமிருந்து எந்த உதவியும், மானியமும் பெறவில்லை. மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே கொடுக்கிறேன்' என்பதுதான்.

சேவை என்பது மதம் சார்ந்தது அல்ல. அது மனிதம் சார்ந்தது என்பதை அரசும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ளாதவரை சேவை என்ற பெயரில் மோசடிகள் நடக்கவே செய்யும்.

"அயலானை நேசி' என்பதற்கும், "அதிதி தேவோ பவ' என்பதற்கும் அடிப்படை அன்புதான். அன்பே சிவம் என்ற அடிப்படை தத்துவம் கிளைத்தெழுந்த மண்ணில், ஏன்,எதனால் கருணை (புதுமைப்பித்தன் சொல்வதைப்போல) கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டது! இதற்கு ஆளுக்கொரு விடை இருக்கலாம். ஒரு முறையாவது அதை விவாதிக்க வேண்டிய அவசியம் அன்னை தெரசாவின் நூற்றாண்டில் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.

வழிகாட்டிகளாக அண்ணல் காந்தியடிகள் இருந்தும் அவரைப் பின்பற்ற மனமில்லாத அரசியல்வாதிகள். வாழ்ந்து காட்டிய அன்னை தெரசா முன்னுதாரணமாக இருந்தும் அவரைப்போல சேவையே குறிக்கோளாக இல்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, நீர் எங்களைக் காப்பாற்றுவீராக!
நன்றி : தினமணி

Friday, August 27, 2010

அதிகாரச் சதுரங்கத்தில் ஆட்டம்போடும் மத்திய அரசு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ஆகும். 64 கட்டங்களைக்கொண்ட அட்டையில் இரண்டு பேர்கள் விளையாடுவதில் வெள்ளை - கறுப்பு ஆகிய வண்ணங்களில் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கு வகைப் படைகளையும் களத்தில் நிறுத்திப் போராடுவதால், அது சதுரங்கம் என்ற பெயரைப் பெற்றது. எதிரி அரசனைச் சுற்றி வளைத்து மேலும் நகர முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் வெற்றியின் அறிகுறி.

இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்று, அரபு நாடுகளில் புகுந்து, பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் சதுரங்க விளையாட்டு நால்வகைப் படைப் பிரிவுகளுடன் இந்தியா வகுத்த முறையில் பரவியது, ஒவ்வொரு நாட்டிலும் சதுரங்க விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்கள் அரண்மனை மண்டபங்களில் மன்னர்களால் பாராட்டப்பட்டனர்.

1886-ம் ஆண்டு முதல் உலக சதுரங்க அமைப்பு என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் கீழ் பல நாடுகளில் உள்ள சதுரங்க வல்லுநர்கள் போட்டியிட்டுப் படிப்படியாக முன்னேறி, கடைசியாக இருவர் ஆடும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் உலகச் சதுரங்க முதன்மையானவராகப் பட்டம் சூட்டப்பட்டார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின், 1948-1972 காலத்தில் ரஷியர்கள் முதலிடத்தை வகித்தனர். ஆதன் பிறகு அமெரிக்காவின் பாபி பிஷர் மூன்றாண்டுகள் முதலிடம் பெற்றார். 1975 முதல் 2000 வரை ரஷியாவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றனர்.

2000-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். இந்தியாவில் தொடங்கிய சதுரங்க விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்தவர் உலக முதலிடத்தைப் பெற்றது ஆனந்த் மூலமாகத்தான்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11-ல் விஸ்வநாதன் - சுசீலா தம்பதியரின் மகனாக ஆனந்த் பிறந்தார். சிறு வயதிலேயே அவருடைய தாய் சதுரங்க ஆட்டத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பள்ளிப் பருவத்திலேயே சதுரங்க விளையாட்டில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவராக, கடுமையான போட்டிகளில் எளிதாகப் பரிசுகள் பலவற்றை அவர் தட்டிச் செல்ல ஆரம்பித்தார்.

சென்னையில் டான் பாஸ்கோ பள்ளியிலும், பிறகு லயோலா கல்லூரியிலும் அவர் படித்தார். அப்பொழுதும் அவருடைய சதுரங்க விளையாட்டுத் திறமை பலரும் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து வந்தது. 15-ம் வயதில் உலக முதல்வர் என்ற தகுதியைப் பெற்றார், 16-வது வயதில் இந்திய தேசிய சதுரங்கப் போட்டியில் முதலிடத்தை அடைந்தார், 1987-ல் 17-வது வயதில் உலக இளைஞர் (ஜூனியர்) சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் உலக அளவில் மாமுதல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியராக அவர் ஆனார்.

1993 முதல் 2000 வரை உலகச் சதுரங்கப் போட்டிகளில் பிரசித்திபெற்ற சதுரங்க மேதைகள் பலரை அலைமோதச் செய்யும் அளவுக்கு ஆனந்த்தின் திறமை வேகமாக வளர்ந்துவிட்டது.

2000-ம் ஆண்டு டெஹ்ரான் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷியக் கூட்டாட்சியைச் சேர்ந்த லாட்வியா பகுதியில் பிறந்து பிறகு ஸ்பெயின் நாட்டுக் குடிமகனாக ஆன அலெக்சி ஷிராவ் என்பவருடன் இறுதிக் கட்டத்தில் ஆனந்த் விளையாடினார். எதிர்ப்பட்ட அலெக்சி ஷிராவை 3.5 - 0.5 என்ற வலிவான முறையில் தோற்கடித்து, உலக சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார். சதுரங்கப் போட்டியில் உலக முதன்மையாளர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆனந்த் அடைந்தார்.

ஆயினும், 2002 உலகச் சதுரங்கப் போட்டியில் அரையிறுதிக் கட்டத்தில் ஆனந்த் தோல்வி அடைந்தார், இருப்பினும் மனம் தளராமல், தொடர்ந்து ஊக்கத்துடன் வளர்ச்சி அடைந்து, 2007-ல் உலகச் சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார்.

2008-ல் நடைபெற்ற போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த விளாடிமிர் கரமிக்கைத் தோற்கடித்து தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2010-ல் நடைபெற்ற உலகப் போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலாவைத் தோற்கடித்து, உலகச் சதுரங்க விளையாட்டு அரங்கில் தனிப்பெரும் மாமன்னராக முதலிடத்தில் ஆனந்த் இருக்கிறார்.

சதுரங்க ஆட்டத்தில் உலகப் புகழும் முதலிடமும் பெற்ற ஆனந்தைப் பாராட்டும் வகையில் சிறப்பு டாக்டர் பட்டம் தர, ஐதராபாத் பல்கலைக் கழகம் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டு காலமாக மேற்கொண்டது. ஆனந்த்தின் ஒப்புதலையும் பெற்று, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிர்வாக மேற்பார்வை அமைப்பினர்களும், ஆனந்த்துக்கு 2010 ஆகஸ்ட் 23-ல் ஒரு சிறப்புப் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடும் செய்துவிட்டனர். ஆனால், இதற்கு இடையில் எதிர்பாராத ஓர் இடையூறு குறுக்கிட்டது.

ஐதராபாத் பல்கலைக் கழகம் ஒரு மத்தியப் பல்கலைக் கழகமாக மத்திய அரசாங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. அதனால், சிறப்புப் பட்டங்களைத் தருவதற்கான ஏற்பாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகரத்தின் அனுமதியைப் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் தருவதற்கான விவரங்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய கல்வி அமைச்சரகத்துக்கு ஐதராபாத் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனுப்பிவிட்டார். அனுமதி கிடைப்பதில் சிக்கல் எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் முறையான அனுமதியை விரைவுபடுத்தும்படி பல்கலைக் கழகம் கடிதங்களையும், வேண்டுகோள்களையும் அடிக்கடி அனுப்பியபடி இருந்தது.

இடையில் மத்திய கல்வி அமைச்சரக அதிகாரி ஒருவருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றியதாம். விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி எழுந்தது. உடனே அங்கிருந்த கல்வி நிபுணர்கள் அது பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுக்காரருக்குப் பட்டம் தருவதென்றால், வெளிவிவகார அமைச்சரகத்தின் ஒப்புதலையும் வாங்கவேண்டும் என்று மற்றோர் அரசாங்க விதிமுறை உள்ளது.

இந்தியக் குடியுரிமை பற்றிய விவகாரம் எழுந்ததும், ஆனந்தின் மனைவி அருணா ஆனந்த், கணவரின் பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை அனுப்பி வைத்தார். அத்துடன் உலகக் கணித மாநாடும் ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனந்த்துடன் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியர் டேவிட் மம்போர்டுக்கும் சேர்த்து சிறப்பு டாக்டர் பட்டங்களை அளிக்க ஐதராபாத் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொள்ளும் கணிதப் பேராசிரியர்கள் 40 பேருடன் தொடர்ச்சியாக ஆனந்த் சதுரங்கம் ஆடுவதற்கும் நாள் ஒதுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்றே ஆனந்த், மம்போர்டு இருவரும் ஐதராபாத் வந்துவிட்டனர். மறுநாள் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் பட்டங்களை வழங்க ஐதராபாத் பல்கலைக் கழகம் தயாராகிவிட்டது, பட்டம் பெறுபவர்களும் வந்துவிட்டனர். ஆனால், ஞாயிறு இரவு வரை மத்திய கல்வி அமைச்சரகத்தின் அனுமதி மட்டும் வரவில்லை. தில்லியில் ஞாயிறு. பிறகு திங்கள் (ஓணம்,) செவ்வாய் (ரக்ஷô பந்தன்) விடுமுறை நாள்கள். மூன்று மாதங்கள் தூங்கிக் கிடந்த அமைச்சரகம் மூன்று நாள்களில் விழித்துக் கொள்ளுமா? அனுமதி வரவில்லை என்பதால், சிறப்புப் பட்டம் அளிப்பது நின்றது. திங்கள்கிழமை தனது விடுதியில் ஆனந்த் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

எதனையும் பொருள்படுத்தாமல், தாம் ஏற்றுக்கொண்டபடி 40 கணிதப் பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்த தொடர் சதுரங்க ஆட்டங்களை செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் நடத்தினார்.

ஆனந்த்துக்குச் சிறப்புப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி நாடெங்கும் பரவியது. பரவலாகக் கண்டனக்குரல்கள் எழுந்தன.

வெளியில் கிளம்பிய கூக்குரல்களின் ஓசை கேட்டு, உறங்கிக்கிடந்த கல்வி அமைச்சரகம் கண்விழித்தது. நடந்த தவற்றுக்கு மன்னிக்கும்படி மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல், ஆனந்த்திடம் மன்னிப்புக் கேட்டார். ஏதோ நடந்தது நடந்துவிட்டது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் ஆனந்த் அமைதியாக இருந்தார்.

ஆனந்த்திடம் மட்டுமல்ல, இந்திய மக்களிடமும் மத்தியக் கல்வி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும். நீங்கள் அவமதித்தது தனிப்பட்ட ஒருவரை மட்டுமல்ல; கோடானு கோடி இந்திய மக்களை, இந்தியாவை!

ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பது தெரியவில்லை. சதுரங்கச் சக்ரவர்த்தி ஆனந்த் பற்றி கணிப்பொறியில் ஒரு தட்டுத் தட்டினால் அவருடைய வாழ்க்கை வரலாறு பல பக்கங்களுக்கு வருகின்றனவே! அவர் பிறந்த இடம், படித்த இடம் எல்லாம் தமிழ்நாட்டில்தானே! தமிழ்நாட்டையே வேறு நாட்டாருக்குத் தாரை வார்த்து விட்டார்களா?

1987-ல் ஆனந்துக்கு பத்மஸ்ரீ பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது. 1991-ல் அவருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் பத்மபூஷண் வழங்கியது.

தாம் கலந்துகொள்ளும் ஓவ்வோர் உலகப் போட்டியிலும் இந்திய தேசியக் கொடியை முன்வைத்து இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு இந்திய அரசாங்கம் செய்த பெருமை, மரியாதை இவ்வளவுதான்.

சிலருக்குப் பட்டம் கிடைப்பதால் பெருமை வரலாம். ஆனால், சிலருக்குப் பட்டம் தருவதால், தரும் அமைப்புக்குப் பெருமை கிடைக்கலாம். அந்தப் பெருமையை அடைய விரும்பிய ஐதராபாத் பல்கலைக் கழகத்தை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.

இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்று முன்பு பலர் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது அதையும் தாண்டி இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்ற டெல்லி என்று ஆகிவிட்டதா? தெற்கு வாழ்கிறது. அதைச் சகிக்க வடக்கு மறுக்கிறது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும்போதாது. அமைச்சர் கபில் சிபிலும் அவரது அமைச்சரகத்தின் பொறுப்பான உயர் அதிகாரிகளும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரவர் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளட்டும்!
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி

Thursday, August 26, 2010

பாவம், கறவை மாடுகள்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து.

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது.

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம்.

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்?

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை.

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும்.

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது.

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமணி

Wednesday, August 25, 2010

முதல்வரின் மனு நீதி

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.

மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.

அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.

மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.

ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி

எதிர்ப்பு தேவைதானா?

அடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினால், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:

ஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.

இரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்

மூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

இவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை?
முதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள்? குறைந்தது 10 பேர் இருப்பார்களா? இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்? ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே! முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.

கலந்தாய்வில் "கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்ஆப் மதிப்பெண் பெற முடிவதில்லை.

இரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா?

50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.
இப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது?

இதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:
ஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
இரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.

மூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.

மேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்!
நன்றி : தினமணி

Tuesday, August 24, 2010

இது நல்லதற்கல்ல...

ஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாடு இந்தியா. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 பொதுத் தேர்தல்களை நடத்திவிட்டிருக்கிறோம். உலகளாவிய அளவில் ஒரு பொருளாதார வல்லரசாக அடுத்த பத்து ஆண்டுகளில் கோலோச்சும் வாய்ப்புடைய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று என்கிற நிலையையும் அடைந்துவிட்டோம். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகவும் கவனக் குறைவாகவும், எச்சரிக்கை இல்லாமலும் இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அணு ஆயுதச் சோதனை நடத்தி விட்டோம் என்பதாலேயே பாதுகாப்புத் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகக் கருதிவிட முடியுமா, என்ன? ராணுவத்துக்கும், கப்பற்படைக்கும், விமானப்படைக்கும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதிலும்தானே நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

இந்திய ராணுவத்துக்கு சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நவீன பீரங்கிகள் வாங்கி 26 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நமது ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா?

26 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ராணுவத் தளவாடக் கொள்முதல் முயற்சி, இந்திய ராணுவத்தை முடக்கிவிட்டிருப்பதைப் பற்றி நமது ராணுவ அமைச்சகமோ, ஆட்சியாளர்களோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், ராணுவ அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்குகிறார்கள்.

போபர்ஸ் பிரச்னையில் ஊழலைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வரவில்லை என்பதும், யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் போயிற்று என்பது தெரியவில்லை என்பதும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியான குவாத்ரோச்சியை அரசே தப்பவிட்டதுடன், பிடிக்கும் முயற்சியையும் அநேகமாகக் கைவிட்டு விட்டது என்பதும் ஒரு தனிக்கதை. போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் ஒருபுறம் இருந்தாலும், போபர்ஸ் பீரங்கிகள் தரத்தில் குறைந்தவை அல்ல என்பதை, கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் உறுதிப்படுத்தினார்கள். மலை உச்சிகளில் இருந்து இந்திய ராணுவம் போரிட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னவோ போபர்ஸ் பீரங்கிகள்தான்.

கடந்த எட்டு ஆண்டுகளாகவே, இந்திய ராணுவம் தனது தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டு, அதற்காக மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது. ராணுவத்துக்காகத் தளவாடங்களை வாங்கப்போய் அது ஊழல் குற்றச்சாட்டில் முடிந்துவிடுமோ என்கிற பயத்தில், ராணுவ அமைச்சகமோ ஏதாவது காரணம்காட்டித் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.

எட்டு ஆண்டு நச்சரிப்பின் பயனாக, இழுத்துச் செல்லும் வகையிலான 155 மி.மீ. பீரங்கிகளை வாங்குவதற்கான சோதனைத் தேர்வு கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இந்த வகை பீரங்கிகளை வழங்குவதற்காகக் கோரப்பட்ட சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டே இரண்டு தயாரிப்பாளர்கள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் ஒன்று சுவீடன் நாட்டு பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் "நவீனமயமாக்கப்பட்ட' போபர்ஸ் பீரங்கி. இன்னொன்று, சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் கைனடிக்ஸ் என்கிற நிறுவனத்தின் பீரங்கி.

கடைசி நிமிடத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை அறிவிக்க, ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே உள்ள நிலையில், போபர்ஸ் பீரங்கிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மீண்டும் பீரங்கி வாங்கும் முயற்சி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இத்தனை தவணை சலுகைகள் வழங்கப்பட்டதே தவறு. பரிசோதனைக்கு அழைத்த பிறகு, தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் காரணம் காட்டி, ஒரு நிறுவனம் 15 நாள்கள் அவகாசம் கோர வழியிருக்கிறது. சிங்கப்பூர் நிறுவனமோ மூன்று முறை இதுபோலப் பரிசோதனைக்கு நாள்கள் அறிவிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் ஏதாவது சாக்குப்போக்குக் கூறி, சோதனையைத் தள்ளிப்போட்டு வருகிறது. 2008-லிருந்து இதுதொடர்ந்து வருவது போபர்ஸ் நிறுவனம் பீரங்கிகளை வழங்குவதைத் தடுப்பதற்காகக்கூட இருக்கலாம்.

பீரங்கியின் தரம் நன்றாக இருந்தால், போட்டிக்கு வேறு தளவாடம் இல்லாத நிலையிலும் அந்த பீரங்கியை வாங்கும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. ஒரு நிறுவனத்திடம் நேரடியாக வாங்குவதைத் தடை செய்வதே, அதிகமான விலைக்கு ஒரு பொருள் வாங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விலை நிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்தான் சோதனைக்கே அழைக்கிறார்கள் எனும்போது, சிங்கப்பூர் நிறுவனம் சி.பி.ஐ.யால் பிரச்னைக்குரியதாக, வேறு பல விஷயங்களில் தரமற்ற தளவாடத் தயாரிப்பு, லஞ்சம் கொடுக்க முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில், போபர்ஸ் பீரங்கிகளையே வாங்கினால்கூடத் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

அது போபர்ஸ் பீரங்கியா, வேறு ஏதாவது பீரங்கியா என்பதல்ல பிரச்னை. ஊழல் இல்லாமல், தரமான ராணுவத் தளவாடங்கள் பெறப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தேவை. எப்போதோ ஊழல் நடந்தது என்பதைக் காரணம் காட்டி, ராணுவத்துக்குப் புதிய தளவாடங்களே பெறப்படாமல், தேசத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முற்படுவது முட்டாள்தனம். குறைந்தபட்சம், 155 மி.மீ. பீரங்கியை உருவாக்கிட ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக(டிஆர்டிஒ)த்தின் முயற்சியை ஊக்கப்படுத்தவாவது வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்கள் எதற்கெடுத்தாலும் ஹார்வர்ட் பல்கலைக் கழக நிர்வாக இயலின் கூறுகளைப் பற்றி சிலாகித்து மகிழ்பவர்கள். என்ன பயன்? தொலைநோக்குப் பார்வைக்கான கண்ணாடி எங்கேயாவது கிடைத்தால் நமது ஆட்சியாளர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது...
நன்றி : தினமணி

Saturday, August 21, 2010

மக்களின் வரிப்பணம்தானே...

கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி