ஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாடு இந்தியா. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 பொதுத் தேர்தல்களை நடத்திவிட்டிருக்கிறோம். உலகளாவிய அளவில் ஒரு பொருளாதார வல்லரசாக அடுத்த பத்து ஆண்டுகளில் கோலோச்சும் வாய்ப்புடைய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று என்கிற நிலையையும் அடைந்துவிட்டோம். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகவும் கவனக் குறைவாகவும், எச்சரிக்கை இல்லாமலும் இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அணு ஆயுதச் சோதனை நடத்தி விட்டோம் என்பதாலேயே பாதுகாப்புத் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகக் கருதிவிட முடியுமா, என்ன? ராணுவத்துக்கும், கப்பற்படைக்கும், விமானப்படைக்கும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதிலும்தானே நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.
இந்திய ராணுவத்துக்கு சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நவீன பீரங்கிகள் வாங்கி 26 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நமது ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா?
26 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ராணுவத் தளவாடக் கொள்முதல் முயற்சி, இந்திய ராணுவத்தை முடக்கிவிட்டிருப்பதைப் பற்றி நமது ராணுவ அமைச்சகமோ, ஆட்சியாளர்களோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், ராணுவ அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்குகிறார்கள்.
போபர்ஸ் பிரச்னையில் ஊழலைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வரவில்லை என்பதும், யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் போயிற்று என்பது தெரியவில்லை என்பதும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியான குவாத்ரோச்சியை அரசே தப்பவிட்டதுடன், பிடிக்கும் முயற்சியையும் அநேகமாகக் கைவிட்டு விட்டது என்பதும் ஒரு தனிக்கதை. போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் ஒருபுறம் இருந்தாலும், போபர்ஸ் பீரங்கிகள் தரத்தில் குறைந்தவை அல்ல என்பதை, கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் உறுதிப்படுத்தினார்கள். மலை உச்சிகளில் இருந்து இந்திய ராணுவம் போரிட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னவோ போபர்ஸ் பீரங்கிகள்தான்.
கடந்த எட்டு ஆண்டுகளாகவே, இந்திய ராணுவம் தனது தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டு, அதற்காக மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது. ராணுவத்துக்காகத் தளவாடங்களை வாங்கப்போய் அது ஊழல் குற்றச்சாட்டில் முடிந்துவிடுமோ என்கிற பயத்தில், ராணுவ அமைச்சகமோ ஏதாவது காரணம்காட்டித் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.
எட்டு ஆண்டு நச்சரிப்பின் பயனாக, இழுத்துச் செல்லும் வகையிலான 155 மி.மீ. பீரங்கிகளை வாங்குவதற்கான சோதனைத் தேர்வு கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இந்த வகை பீரங்கிகளை வழங்குவதற்காகக் கோரப்பட்ட சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டே இரண்டு தயாரிப்பாளர்கள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் ஒன்று சுவீடன் நாட்டு பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் "நவீனமயமாக்கப்பட்ட' போபர்ஸ் பீரங்கி. இன்னொன்று, சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் கைனடிக்ஸ் என்கிற நிறுவனத்தின் பீரங்கி.
கடைசி நிமிடத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை அறிவிக்க, ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே உள்ள நிலையில், போபர்ஸ் பீரங்கிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மீண்டும் பீரங்கி வாங்கும் முயற்சி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
நியாயமாகப் பார்த்தால், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இத்தனை தவணை சலுகைகள் வழங்கப்பட்டதே தவறு. பரிசோதனைக்கு அழைத்த பிறகு, தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் காரணம் காட்டி, ஒரு நிறுவனம் 15 நாள்கள் அவகாசம் கோர வழியிருக்கிறது. சிங்கப்பூர் நிறுவனமோ மூன்று முறை இதுபோலப் பரிசோதனைக்கு நாள்கள் அறிவிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் ஏதாவது சாக்குப்போக்குக் கூறி, சோதனையைத் தள்ளிப்போட்டு வருகிறது. 2008-லிருந்து இதுதொடர்ந்து வருவது போபர்ஸ் நிறுவனம் பீரங்கிகளை வழங்குவதைத் தடுப்பதற்காகக்கூட இருக்கலாம்.
பீரங்கியின் தரம் நன்றாக இருந்தால், போட்டிக்கு வேறு தளவாடம் இல்லாத நிலையிலும் அந்த பீரங்கியை வாங்கும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. ஒரு நிறுவனத்திடம் நேரடியாக வாங்குவதைத் தடை செய்வதே, அதிகமான விலைக்கு ஒரு பொருள் வாங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விலை நிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்தான் சோதனைக்கே அழைக்கிறார்கள் எனும்போது, சிங்கப்பூர் நிறுவனம் சி.பி.ஐ.யால் பிரச்னைக்குரியதாக, வேறு பல விஷயங்களில் தரமற்ற தளவாடத் தயாரிப்பு, லஞ்சம் கொடுக்க முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில், போபர்ஸ் பீரங்கிகளையே வாங்கினால்கூடத் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
அது போபர்ஸ் பீரங்கியா, வேறு ஏதாவது பீரங்கியா என்பதல்ல பிரச்னை. ஊழல் இல்லாமல், தரமான ராணுவத் தளவாடங்கள் பெறப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தேவை. எப்போதோ ஊழல் நடந்தது என்பதைக் காரணம் காட்டி, ராணுவத்துக்குப் புதிய தளவாடங்களே பெறப்படாமல், தேசத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முற்படுவது முட்டாள்தனம். குறைந்தபட்சம், 155 மி.மீ. பீரங்கியை உருவாக்கிட ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக(டிஆர்டிஒ)த்தின் முயற்சியை ஊக்கப்படுத்தவாவது வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்கள் எதற்கெடுத்தாலும் ஹார்வர்ட் பல்கலைக் கழக நிர்வாக இயலின் கூறுகளைப் பற்றி சிலாகித்து மகிழ்பவர்கள். என்ன பயன்? தொலைநோக்குப் பார்வைக்கான கண்ணாடி எங்கேயாவது கிடைத்தால் நமது ஆட்சியாளர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது...
நன்றி : தினமணி
Tuesday, August 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment