Friday, July 24, 2009

நாய் வால் நிமிராது...

மேற்கு வங்க மாநிலம் லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல்போய் அவர்களை முறியடிக்க மத்திய, மாநில அரசுகளின் போலீஸ் படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கும் வரையில் அப்பகுதியில் என்ன நடக்கிறது எனும் விவரம் இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதன் முழுப் பரிமாணத்தையும் நாம் புரிந்துகொண்டால் நம் நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஆபத்தைவிட உள்ளே உருவாகியுள்ள ஆபத்து அதிகம் என்ற எண்ணமே மிஞ்சும்.

இடது கம்யூனிஸ்ட் கட்சி தீவிர ஒழுக்க சீலர்களான பல தலைவர்களைக் கொண்டது என்றும், அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்கு வழிகோலும் வகையிலான ஆட்சி முறையை கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிறுவியுள்ளனர் எனவும் நம்மில் பலர் நினைத்து வந்தோம். ஆனால் லால்கர் பகுதி அடங்கிய மேற்கு மிதுனபுரி மாவட்டத்திலுள்ள சுமார் 50 கிராமங்களில் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்வசம் இருந்தது என்பது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. கந்தபகாரி எனும் இடத்தில் 2005-ம் ஆண்டுமுதல் போலீஸ் நிலையம் மூடப்பட்டுக் கிடக்கிறது எனும் உண்மை இப்போதுதான் வெளிவருகிறது.

1967-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கூட்டணி அரசு மூலம் பதவி ஏற்றது. உணவுப்பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியன தலைவிரித்தாடியதாகக் கூறி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் பலியாகி அதன்பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி தோற்கடித்தது. தமிழகத்தில் அரிசித் தட்டுப்பாடு, இலவச அரிசி வாக்குறுதி அளித்து 1967-ல் திமுக அரியணை ஏறியதை நினைவில் கொள்க. அதேதான் மேற்கு வங்கத்திலும் அரங்கேறியது.

இதே காலகட்டத்தில் நக்சல்பாரி எனும் இடத்தில் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர், தீவிரவாதக் கொள்கைகளை இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவிட்டுவிட்டு பதவி சுகம் தேடி ஓடி மாநில அரசில் பங்கேற்றுள்ளனர் எனக் குற்றம் சாட்டி நக்சலைட்டுகள் என நாம் இன்று அழைக்கும் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்தனர்.

சாரு மஜும்தார் எனும் தலைவர் அன்றைய சீனத் தலைவர் மாசேதுங்கின் கொள்கைகளே உண்மையான கம்யூனிஸம் மலரத் தேவை எனக் கூறி வர்க்கப் போராட்டமே தங்கள் கொள்கை என அறிவித்தார். அதன்படி நிறைய நிலச்சுவான்தார்களும், வியாபாரிகளும் ""தொழிலாளர்களின் எதிரிகள்'', "பணமுதலைகள்' எனப் பெயரிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சியினரும் இனப் போராட்ட எதிரிகள் எனப் பட்டியலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

நக்ஸல்பாரிகள் நடத்திய இந்தப் போராட்டத்தின் மையப் பிரச்னை நிலங்களை, உழுபவர்களுக்கு, அதாவது விவசாயக் கூலிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான்.

1971 தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியிலிருந்து பிரிந்து பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸýடன் கைகோர்த்துக் கொள்ள, தனிப்பெரும்பான்மை பலத்துடன் சித்தார்த்த சங்கர்ரேயின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, நக்சல்பாரி இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு உதவியது. சித்தார்த்த சங்கர் ரேயின் அடக்குமுறை ஆட்சி, ஒருபுறம் நக்சல்பாரிகளைச் செயலிழக்க வைத்தது எனினும், இன்னொருபுறம், இடதுசாரிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தியது. 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகள் ஐக்கியம் ஏற்பட்டு, இடது முன்னணி ஆட்சியையும் பிடித்தது.

1977-ல் இடது கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், நிலத்தை ஏழை விவசாயக் கூலிகளுக்கும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் தாராளமாகப் பிரித்து அளித்தது. மத்திய காங்கிரஸ் அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டம் இதற்கு வெகுவாக உதவியது. 40 சதவிகித மேற்கு வங்க மக்களுக்கு நிலம் பட்டுவாடா செய்யப்பட்ட பெருமை அன்றைய முதல்வர் ஜோதிபாசுவைச் சாரும்.

இதுபோன்ற பரவலான நிலப் பங்கீடு, அதேநேரத்தில் நம் நாட்டில் நடந்த பசுமைப்புரட்சியையும், சிறிய நிலங்களில் நிறைய வேலையாள்கள் தீவிர விவசாயம் செய்ததையும் உள்ளடக்கி அரிசி உற்பத்தியை அமோகமாக அதிகரித்தது. விளைவு, கிராமப்புறங்களில் சிறு குறு விவசாயிகளின் வளர்ச்சி, நிறைய விவசாயக் கூலிகள் கைநிறையச் சம்பளம் பெற்றதால் உருவான கிராமப்புற சுபீட்சம்.

இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நற்செயல்களால் மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்தது. நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தில் மாதச் சம்பளம் பெறுபவர்களும் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக மாறியதால் எந்தத் தேர்தலானாலும் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே உருவானது. இதன் உச்சகட்டமாக 2006-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் புத்ததேவ் பட்டாச்சார்ய தலைமையில் இடதுசாரிக் கூட்டணி 294 தொகுதிகளில் 235 தொகுதிகளை வென்றது.

ஆனால், 2008-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி முதல்வர் புத்ததேவ் அன்றைய மத்திய உருக்குத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுடன் லால்கர் பகுதியில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எளிமையான முறையில் ரிக்ஷாவில், அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக நிறைய கார்கள், ஜீப்கள் தொடரப் பயணித்தபோது, அப்பகுதி மக்களால் எள்ளி நகையாடப்பட்டார். மேலும் அன்று அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கண்ணி வெடிகுண்டுகள் அவர் சென்று வந்த பாதையில் வெடித்தன. இனியும் வாளாவிருக்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்ட, மேற்கு வங்க இடதுசாரி அரசு அதன்பின் மத்திய அரசுடன் கலந்து பேசி இரண்டு அரசுகளின் காவல் படைகளும் தாக்குதல்களை ஆரம்பித்து அரசின் பிடியிலிருந்து போய்விட்டிருந்த பல பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு மாநில அரசின் பல துறைகளும் செயலிழந்து காவல்நிலையங்கள் மூடப்பட்டு ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மக்களிடம் வரி வசூல் செய்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மாநிலத்தின் ஒரு பகுதி மேற்கு வங்க அரசின் கட்டுப்பாடில் இல்லை எனும் இந்த அதிர்ச்சி தரும் செய்தியை தென் மாநிலத்தின் எந்த ஒரு பிரஜையாலும் நம்பவே முடியாது.

கடந்த ஜூன் 18-ம் தேதி லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றி அதன் இரும்பு வாசல் கதவுகள் திறக்கப்பட்டபோது மாநில அரசு மறுபடியும் இப்பகுதிக்குள் நுழைந்து தனது நிர்வாகத்தை ஏழு மாதங்களுக்குப் பிறகு நிலைநிறுத்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்படுகிறது என பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது.

லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றிய போலீஸ் படைக்கு தலைமை தாங்கிய போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீண் குமார் அளித்த பேட்டியில், மத்திய அரசின் கோப்ரா கமாண்டோக்கள் முந்தைய பல இரவுகளில் ஜிட்கா எனும் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சாலைகளில் வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றியதனால்தான் மத்திய, மாநில போலீஸ் படை முன்னேறி லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்ற முடிந்தது எனவும், அதன்பின் செய்ய வேண்டிய முதல்பணி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதால் அதை நம்பி அப்பகுதி மக்கள் தைரியமாக வாழலாம் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனவும் கூறியுள்ளார்.
""மக்கள் தீவிரவாதிகளுக்குப் பயந்து போய் தங்களை மனிதக் கேடயமாக அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது'' எனப் பல துண்டுப் பிரசுரங்களை ஹெலிகாப்டர்கள் லால்கர் பகுதியில் வீசிச் சென்றது நமது ஜனநாயகத்திற்கு இழுக்கல்லவா எனும் கேள்வி எழுகிறது.

போலீஸ் படையினரின் தாக்குதலுக்கு எதிராக பொதுமக்களைத் தீவிரவாதிகள் மனிதக் கேடயமாக உபயோகப்படுத்தப்படுவதும், லால்கர் பகுதியில் அரசின் எல்லாத் துறைகளும் இழுத்து மூடப்பட்டுவிட்டதும், எல்லா சாலைகளிலும் குறுக்குக் குழிகள் வெட்டப்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாதபடி செய்யப்பட்டதும், எல்லா போலீஸ் ஸ்டேஷன்களின் வெளிக்கதவுகளும் பூட்டப்பட்டு போலீஸôர் ஸ்டேஷன்களுக்குப் போகாமல் இருந்துவிட்டதும், போலீஸ் உடையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடி சட்டம் ஒழுங்கினை பரிபாலனம் செய்ததும், பல இடது கம்யூனிஸ்ட் குட்டித் தலைவர்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதும் இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் மாசேதுங்க் பாணியில், மாவோயிஸ்டுகள் வர்க்க எதிரியாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவை தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை வழங்கி அதை நிறைவேற்ற 2008-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கண்ணி வெடியை அவர் சென்று திரும்பிய பாதையில் வெடிக்கச் செய்ததும் எந்த வகையான நிர்வாகம் மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது என்பதை நமது இடதுசாரி கம்யூனிஸ்ட் தோழர்கள் நமக்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நிர்வாகம் தொலைந்துபோய் கிராமப்புற ஏழைகள் இடதுசாரிகளை வெறுத்து தோற்கடிக்கும் நிகழ்வு மேற்கு வங்கத்தில் நடப்பது ஏன்? கம்யூனிஸம் வெற்றியடைந்து சோஷலிசம் மலர்ந்தபின், நிர்வாகம் தேவையற்றது என்கிற மனப்போக்குடன் அவர்கள் செயல்படுவதால் நிர்வாக இயந்திரம் செயலிழந்து, தேசம் சிதறிவிட வழிகோலும் (‘‘The State will wither away’’) எனக் கூறுவார்கள். அதுபோல்தான் மேற்கு மிதுனபுரில் நிர்வாகம் செயலிழந்துவிட்டதோ?
இதுபோன்ற நிலைமை ஓரிரு நாள்களில் உருவாகிவிட முடியாது. பல வருடங்களாக நடைபெற்றுவரும் சீர்கேட்டினை உளவுப் பிரிவின்மூலம் அறிந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை என்னவென்பது எனும் கேள்வி எழுகிறது. இதுபோல் சட்டமுறையிலான ஆட்சி முறை தகர்ந்துபோன பிற இந்தியப் பகுதிகள் யாவை என அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதை ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்த வேண்டும் இன்றைய மத்திய அரசு.

மேற்கு வங்கத்தில் அரங்கேறி இருப்பது, அரசு இயந்திரம் செயலிழந்ததால் ஏற்பட்ட அபாயகரமான நிலைமை. இதற்கு மூல காரணம், இடதுசாரி ஆட்சியில் கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமைதான். நிர்வாகத்திலும் சரி, காவல்துறையிலும் சரி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கட்சித் தலைவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கினார்கள். கட்சி வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்ட பிறகு, மக்கள் மாற்றுக் கருத்தை வெளியிட முடியாத நிலைமை.

இது ஏறத்தாழ தமிழகத்தில் ஆளும் கட்சியின் வட்டமும், மாவட்டமும் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதுபோல என்று கூறலாம். மாவட்டச் செயலாளருக்கு அடிபணியாத மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் பந்தாடப்படுவதுபோல மேற்கு வங்கத்திலும் ஆரம்பத்தில் நடந்தது.

நல்ல வேளையாகத் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால், ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்தது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி மட்டுமே ஆட்சியில் தொடர்ந்ததும், மார்க்சிஸ்ட் தவிர ஏனைய கூட்டணிக் கட்சிகள் பெரிய அண்ணனின் அடாவடிக்கு அடிபணிந்து வாய்மூடி மௌனியானதும், நிர்வாகம் செயலிழந்துவிட வழிகோலியது.
தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி தேர்தல்களில் வெற்றி பெற்றதற்குக்கூட இந்த நிர்வாக இயந்திரம் உதவியிருக்க வாய்ப்பிருக்கிறது. மக்கள் மத்தியில் இதுவே அதிருப்தி அலையை எழுப்பி இருக்கக் கூடும். இந்த அதிருப்தி அலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் மாவோயிஸ்டுகள் என்பதுதான் உண்மை. விளைவு? இடதுசாரித் தலைவர்களும் கட்சிக்காரர்களும், அவர்களுக்கு சேவகம் செய்த காவல்துறை உள்ளிட்ட நிர்வாக இயந்திரமும் அடித்து விரட்டப்பட்டனர்.

கட்சியின் கட்டுப்பாடில் அரசு என்று இறுமாப்புடன் இருந்த மார்க்சிஸ்ட் தலைமை, தனது கட்டுப்பாடில் இருந்த ஆட்சியை மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாடில் கைநழுவவிட்ட அசட்டுத்தனம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறி இருக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் பிரித்துப் பார்த்து, நிர்வாகத்தைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காமல் போனால், எந்த ஓர் அரசும் வெகுஜன விரோத அரசாக மாறும் என்பதை மேற்கு வங்கம் உணர்த்தி இருக்கிறது.

வட்டம், மாவட்டம் என்று தங்களைச் சுற்றி ஒளிவட்டம் போட்டுக் கொண்டு வளையவரும் நம்ம ஊர் தானைத் தலைவர்கள் இதைப் பார்த்தாவது பாடம் படிப்பார்களா என்றெல்லாம் அனாவசியமான கேள்விகளைக் கேட்டு அசடு வழியக் கூடாது. நாய் வால் நிமிராது என்பது இயற்கையின் நியதி!
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

பொய்யோ, மெய்யோ!

சென்னையைச் சேர்ந்த வி. மாதவ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், ""ஏப்ரல் 30 முதல் மே 3-ம் தேதி வரையிலான நான்கு நாட்களிலும் நகரப் பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை; மாற்றம் செய்யவுமில்லை'' என்று கூறியுள்ளது. மே 13-ம் தேதி தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நேரத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து எல்லா பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

இதுபற்றி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, ""தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். இது தொடர்பாக, ஃபேக்ஸ், தொலைபேசியில் புகார்கள் வந்துள்ளன'' என்றார். ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, ""மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிக எண்ணிக்கையில் சாதாரண பஸ்களை இயக்கினோம். கட்டணத்தைக் குறைக்கவில்லை'' என்று பதில் கூறினார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தேர்தல் ஆணையத்தின் முன்பு மே 3-ம் தேதி ஆஜராகி, விளக்கம் அளித்த பிறகு மே 4-ம் தேதி முதல் "அதிகரிக்கப்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து, குறைக்கப்பட்ட உயர்கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து'' விட்டார்கள்.

மக்களின் வேண்டுகோளை தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், தேர்தல் நாள் நெருக்கத்தில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? "சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க' தாழ்தளப் பேருந்துகளையும்கூட பயன்படுத்தியது ஏன்? தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவதென்பது இலவச டிவி, சேலை வழங்குவதைப் போல தேர்தல் விதிமுறை மீறல்தானே! இதில் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்றால் சாதாரண கட்டணப் பேருந்துகளை அப்படியே அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து இயக்கி இருக்க வேண்டியதுதானே! தேர்தல்வரை நிறுத்தப்பட்டிருந்தாலும், தேர்தல் முடிவுற்ற பின்னர் இந்த மக்கள் கோரிக்கை இல்லாமல் ஆகிவிட்டதா என்ன? இந்த நான்கு நாட்களில் சென்னை பெருநகரப் பேருந்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.4 கோடிக்கும் அதிகம். இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. யாரும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கவில்லை. அமைச்சர் அப்போதும், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் இப்போதும் அளித்துள்ள விளக்கம் சட்டத்தின் வார்த்தைகளில் சரியாக இருக்கிறது..

ஆனால், போக்குவரத்துக் கழகம் இதை அமல்படுத்திய காலம் தவறு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் அல்லது குறைந்த லாபத்தில் செயல்படும் என்றால் அதற்குக் காரணம், அந்தப் பேருந்துகளில் மக்கள் ஏறுவதில்லை என்று பொருள் அல்ல. நிர்வாக ஊழல்தான் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. ""சாதாரண கட்டண பஸ்களின்'' எண்ணிக்கையை திடீரென அதிகரித்ததைப் போல, நிறைய விஷயங்கள் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்று வருகின்றன. அதனை முறைகேடு என்று மற்றவர்கள் சொல்லும்போது, முறைகேடே இல்லை என்று ஆட்சியாளர்கள் மறுப்பது வழக்கமாக இருக்கிறது. ஆள்வது எந்தக் கட்சியாக இருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வாகனம் வாங்குதல், உதிரி பாகங்கள் வாங்குதல், பெட்ரோல் பயன்பாடு ஆகியவற்றில் முறைகேட்டுக்கு அதிக இடம் இருக்கிறது.

குறை சொல்வோர் முன்வைக்கும் முக்கியமான இரண்டு குற்றச்சாட்டுகள்: ஒன்று - போக்குவரத்துக் கழகம் ஆயிரக்கணக்கில் பஸ் சேஸிஸ் வாங்கும்போது, சேஸிஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு பத்து சேஸிஸ்களுக்கும் ஒரு சேஸிஸ் இலவசமாகத் தர முன்வருகின்றன என்றும் இவை கணக்கில் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது மெய்யோ பொய்யோ!

இரண்டு - சிறப்பு பேருந்துகள், நெரிசல்நேர கூடுதல் பேருந்துகள், விழாக்கால பேருந்துகள் இயக்கும்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், எல்லா பஸ் உரிமையாளர்களையும் போல முறையான அனுமதி பெற்றுத்தான் இயக்க வேண்டும். ஆனால் வட்டாரப் போக்குவரத்துத் துறையும் போக்குவரத்துத் துறை அமைச்சரின் கீழ் உள்ளதால், அனுமதி பெறாமலேயே அந்தந்தக் கிளைகள் தங்கள் விருப்பம்போல அதிக எண்ணிக்கையில் பஸ்களை இயக்குகின்றன. அதனால் முறைகேடுகள் நடக்கின்றன என்கிறார்கள்.
இது மெய்யோ பொய்யோ! தமிழக அரசைப் போலவே எங்களது விருப்பமும் இவையெல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்பதுதான்!
கட்டுரையாளர் :இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சி

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோ, ரியல் எஸ்டேட், மெட்டல் பங்குகளின் அபரிவிதமான வளர்ச்சி காரணமாக நிப்டி 4,550 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து வர்த்தகம் ஆனது. பவர், டெலிகாம், டெக்னாலஜி, கேப்பிடல் குட்ஸ் பங்குகளும் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தன. பட்ஜெட்டுக்குப்பின் ஏற்பட்ட இரண்டாவது வாராந்திர வளர்ச்சி இது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக அமெரிக்க பங்கு சந்தையும் வியாழன் அன்று 2 - 2.5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. அதே போல ஐரோப்பிய சந்தைகள் 0.5 சதவீதமும், ஆசிய சந்தைகள் 0.4 - 2 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. அவைகளின் வளர்ச்சியும் இந்திய சந்தை வளர்வதற்கு காரணமாக இருந்தன. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 147.92 புள்ளிகள் ( 0.97 சதவீதம் ) உயர்ந்து 15,378.96 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 44.80 புள்ளிகள் ( 0.99 சதவீதம் ) உயர்ந்து 4,568.55 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது அதிகப்படியான வளர்ச்சியை கண்டது மாருதி சுசுகி தான். இன்று அதிகப்படியாக அதன் பங்கு மதிப்பு ரூ.1,397.50 வரை சென்று பின்னர் ரூ.1,377.85 இல் முடிந்திருக்கிறது. இது 6.35 சதவீத வளர்ச்சி. நேற்று வெளிவந்த அதன் காலாண்டு நிதி அறிக்கையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் 25.4 சதவீத கூடுதலான லாபம் சம்பாதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இன்று அதன் பங்குகள் அதிக வளர்ச்சியை அடைந்திருந்தது.
நன்றி :தினமலர்


நன்றிது தேர்ந்திடல் வேண்டும்

தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் திமுக, அதிமுக இரு கட்சி உறுப்பினர்களும் ஒருமித்து குரல் கொடுத்திருப்பது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காத தன்மை அண்டை மாநிலங்களில் ஏற்பட்டதற்குக் காரணமே, காவிரி பிரச்னை தொடங்கிய நாள் முதலாக, திமுக அதிமுக இரு கட்சிகளும் எதிர்எதிராக நின்றதுதான். அப்போதே இந்தப் பிரச்னையில் அரசியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் திமுக அதிமுக இரு கட்சிகளும் ஆட்சியில் யார் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஒன்றாக நின்று ஒருமித்த குரலில் மக்களவையிலும், வெளியிலும் பேசியிருப்பார்களேயானால், காவிரி, பெரியாறு, பாலாறு எந்த நதியாக இருந்தாலும் இன்று தமிழகம் அண்டை மாநிலங்களிடம் எதிர்கொள்ளும் அவமதிப்புகளை சந்திக்கும் அவசியமே ஏற்பட்டிருக்காது.

1974-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் காவிரிப் பிரச்னையில் ஒருவிதமான தீர்வு எட்டப்பட்டிருந்தது. ஆனால், அடுத்துவந்த பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், கருணாநிதி முயற்சியில் காணப்பட்ட ஒப்பந்தத்தில் அவர் திருப்தி அடையவில்லை. அதனால் மறுபடியும் பேச்சு வார்த்தை தொடங்கியது. இருவரும் இரு துருவங்களாக இருப்பதை கர்நாடக அரசியல் தலைவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

காவிரி நடுவர் மன்றம் 2007, பிப்ரவரி மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டபோதிலும்கூட அந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பது கவலை தரும் விஷயம்.

அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற விவசாயக் கருத்தரங்கில், காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கச் செயலர் எஸ். ரங்கநாதன் பேசும்போது, ""இப்போதாவது அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருப்பதில் நியாயம் இருக்கிறது.

அரசிதழில் இந்தத் தீர்ப்பு இடம்பெறாத வரை, இதற்கு சட்டத்தின் பலம் கிடைக்காது. இத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெறும் எழுத்தாக மட்டுமே இருக்கும். நடுவர் மன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் கருணாநிதிக்கு, எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரின் கடுமையான எதிர்ப்பினால் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்யும் அரசியல் நிர்பந்தம் ஏற்பட்டது. இல்லையானால் இந்த மனுவை செய்திருக்க மாட்டார்.

இப்போது பாலாற்றுப் பிரச்னையில் திமுக அதிமுக ஒருமித்த குரல் கொடுப்பதைப் போலவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் ஒருமித்த குரல் கொடுக்க முன்வந்தால், தமிழகம் தன் மறுபரிசீலனை மனுவை திரும்பப் பெறும். நடுவர்மன்றத்தின் முன்னும், மக்களவையிலும் தமிழகம் தனது குரலை ஒங்கி ஒலிக்கச் செய்ய முடியும். கர்நாடகம் மட்டும் தனித்து மறுஆய்வு மனுவை தொடர்ந்து முன்வைத்தாலும் அதைத் தள்ளுபடி செய்யும் வாய்ப்புகள் அதிகமாகும்.

மேலும், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தீர்ப்பை மாற்றி எழுதும் வாய்ப்பு இல்லை. சில கடுமையான விஷயங்களை சற்று தளர்த்தும்படியாக வேண்டுகோள் மட்டுமே வைக்க முடியும். ஆகவே தமிழகம் தனது மனுவை விலக்கிக் கொள்வதன் மூலமும், மத்திய அரசில் அரசியல் நெருக்குதல் தருவதன் மூலமும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதற்கு சட்டத்தின் பலத்தைத் தர முடியும். திமுக அரசுக்கு மத்திய அரசில் தற்போது எதையும் சாதிக்கும் வலிமை உள்ளதால் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிடச் செய்வது கடினமல்ல.

தமிழகத்திற்கு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 419 டிஎம்சி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. நாம் கேட்டதைவிட 150 டிஎம்சி குறைவுதான் என்றாலும், இதையே ஏற்று, சட்டவடிவம் பெறுவதுதான் தமிழக விவசாயிகளுக்கு வருங்காலத்தில் நன்மையாக அமையும். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, பாலாற்று பிரச்னையில் ஒருமித்த குரல் கொடுப்பதைப் போல, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் ஒருமித்து குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த ஞானம் வந்தால் பின்பு நமக்கெது வேண்டும்.
நன்றி : தினமணி

மீண்டது கனடா பொருளாதாரம்!-மத்திய வங்கி அறிவிப்பு

பொருளாதார மந்த நிலையிலிருந்து தங்கள் நாடு மீட்சி அடைந்துவிட்டதாக கனடா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்தது. கடந்த 9 மாதங்களாக பெரும் பின்னடைவைச் சந்தித்து வந்த தங்கள் நாட்டு தொழில்துறை இப்போது, மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருப்பதாகவும், இந்தக் காலாண்டில் பொருளாதாரம் 1.3 சதவிகிதம் விரிவாக்கம் பெற்றிருப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து கனடா மத்திய வங்கியின் கவர்னர் மார்க் கார்னே கூறுகையில், இந்த நிலை நீடிப்பதும், மீண்டும் வீழ்ச்சிக்குத் திரும்புவதும் அரசின் நடவடிக்கைகளில்தான் உள்ளது என்றும், எந்த அளவு நிதிச் சலுகைகளை கனடா அரசு தருகிறதோ, அதற்கேற்பத்தான் இந்த வளர்ச்சி நீடிப்பதும் வீழ்வதும் என்றார்
நன்றி : தட்ஸ்தமிழ்

ஏசிசி நிறுவனத்தின் நிகர லாபம் 85 சதவீதம் அதிகம்

இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 471 கோடியை ( 97 மில்லியன் டாலர் ) நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் நிறுவனத்திற்கு 46 சதவீத பங்குகள் இருக்கும் ஏசிசி யின் கடந்த வருட முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.255 கோடிதான். இது 85 சதவீத வளர்ச்சி. சிமென்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சிமென்ட்டின் தேவை அபரிவிதமாக அதிகரித்திருப்பதால் தான் இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடிந்ததாக ஏசிசி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்ஒருங்கிணைந்த இந்திய அடையாள ஆணைய தலைவர் பொறுப்பை ஏற்றார் நந்தன் நிலேகனி

இன்போசிஸ் நிறுவனத்தின் கோ - சேர்மனாக இருந்து, அதிலிருந்து விலகி மத்திய அரசு பணிக்கு வந்த நந்தன் நிலேகனி, நேற்று ஒருங்கிணைந்த இந்திய அடையாள ஆணையத்தின் சேர்மன் பதவியை ஏற்றார். புதுடில்லியில் யோஜனா பவனில் இருக்கும் திட்ட கமிஷன் அலுவலகத்தின் முதல் மாடியில் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக அலுவலகத்தில் அவர் அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்டமாக இன்னும் 12 - 18 மாதங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்றார். ஆனால் இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டை இந்தியர்களுக்கு மட்டுமே என்றார். மத்திய எண்ணெய் அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்கள், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகத்துடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம் என்று சொன்ன நிலேகனி, புதிதாக கொடுக்க இருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டையால் இனிமேல் மற்ற அடையாள அட்டைகள் தேவைப்படுமா, தேவைப்படாதா என்று இப்போதே சொல்ல முடியாது என்றார். இருந்தாலும் இது குறித்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தெளிவுபடுத்துவோம் என்றார். எங்களது திட்டத்திற்கு ஐடி கம்பெனிகள் மற்றும் டெலிகாம் துறையினரின் உதவியும் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார் நிலேகனி.
நன்றி :தினமலர்


இந்தியன் வங்கி 52.40 சதவீதம் வளர்ச்சி

''இந்தியன் வங்கி இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், 331.66 கோடி ரூபாய் மொத்த லாபம் ஈட்டி உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 52.40 சதவீதத்தை எட்டி உள்ளது,'' என வங்கியின் தலைவரும், அதன் நிர்வாக இயக்குனருமான சுந்தரராஜன் கூறினார். இந்தியன் வங்கி இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான முடிவை நேற்று வெளியிட்டது. இது குறித்து சுந்தரராஜன் கூறியதாவது: இந்தியன் வங்கி இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் 331.66 கோடி ரூபாய் மொத்த லாபம் ஈட்டி உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 52.40 சதவீதத்தை எட்டி உள்ளது. மேலும், இந்தியன் வங்கி மூலதன அடிப்படையில் முதல் காலாண்டின் முடிவில் 13.68 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடும்போது 12.06 சதவீதத்தை விட அதிகம். இந்தியன் வங்கி எல்லா நிலைகளிலும் தனிச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வங்கியின் அலுவல் 20.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கி முதலீடு 62,215 கோடி ரூபாயிலிருந்து 76,717 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 23.31 சதவீதம் அதிக வளர்ச்சி. இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., கார்டு பயன்பாடு முதல் காலாண்டின் முடிவான ஜூன் 30ம் தேதியோடு 34.39 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. கல்விக் கடன் வழங்குவதில் இந்தியன் வங்கி முன்னிலை வகிக்கிறது. 2009ம் ஆண்டின் முதல் காலாண்டு இறுதி வரை 143.76 கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி உள்ளது. இவ்வாறு சுந்தரராஜன் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமலர்