Thursday, November 6, 2008

கடனுக்கான வட்டியை குறைத்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கடனுக்கான வட்டியை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது. இப்போது 13.75 சதவீதமாக இருக்கும் வட்டி, வரும் திங்கட்கிழமையில் இருந்து 13 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி.பாத் இன்று தெரிவித்தார். இந்தியாவில் அதிக அளவில் கடன் கொடுக்கும் வங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தான். எஸ்.பி.ஐ.,இப்போது வட்டியை குறைத்திருப்பதால் மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் பேங்க்,யூனியன் பேங்க், யுகோ பேங்க், சின்டிகேட் போன்ற பொதுத்துறை வங்கிகள் வட்டியை குறைத்திருக்கின்றன. கடந்த செவ்வாய் அன்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, வட்டியை குறைக்க சொல்கி கேட்டிருந்தபோது, அவர்கள் வட்டியை 0.75 சதவீதம் வரை குறைக்க ஒத்துக்கொண்டிருந்தனர். நேற்று, மத்திய நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி வட்டியை குறைக்க சொல்லி கேட்டிருந்தார். அப்போது அவர்களும் இன்னும் இரண்டு வாரங்களில் வட்டியை குறைப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில் சி.ஆர்.ஆர்.,மற்றும் ரிபோ ரேட் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி குறைத்ததின் விளைவாக வங்கிகளில் ரூ.2,60,000 கோடிக்கும் அதிகமாக பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாலும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையப்போகிறது என்றும் முதலீட்டாளர்களிடையே தகவல்கள் கசிந்ததை அடுத்து பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 486.01 புள்ளிகள் ( 5.05 சதவீதம் ) குறைந்து 9,139.27 புள்ளிகளாக இருந்தது. நாஸ்டாக் கில் 98.48 புள்ளிகள் ( 5.53 சதவீதம் ) குறைந்து 1,681.64 புள்ளிகளாக இருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ் 52.98 புள்ளிகள் ( 5.27 சதவீதம் ) குறைந்து 952.77 புள்ளிகளாக இருந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை அவர் சமாளித்தாக வேண்டும். ஆனால் அவரோ ஜனவரி 20 ம் தேதிதான் அதிபராக பதவி ஏற்பார். அதுவரை பிரச்னை காத்திருக்குக்காது. அமெரிக்காவில் வேலையில்லாதேர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வீடுகளின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற பிரச்னைகளை அவர் சரி செய்தாக வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமலர்

கடன் வட்டி விகிதம் குறைப்பு : தனியார் வங்கிகளும் சம்மதம்

கடன் மற்றும் டிபாசிட்டுகளுக்கான வட்டியை குறைக்க தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் முன்வந்துள்ளன. இரண்டு வாரத்திற்குள் வட்டி குறைப்பை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளன. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பல்வேறு துறையினருக்கு எளிதாக கடன் கிடைக்கவும், அதற்கான வட்டியை குறைப்பது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில், வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் தலைவர்களுடன் நிதித்துறை செயலர் அருண் ராமநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய அருண் ராமநாதன் கூறுகையில், 'பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இதன் படி, வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் கம்பெனிகளுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படும்.
'இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைக்கு உட்பட்டு இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளன' என்றார்.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர் கூறுகையில், 'பொருளாதாரத்தின் நலன் கருதி வட்டியை குறைக்க ஒரு மித்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் அன்றாட நிலைமையை ஆய்வு செய்து விரைவில் இது தொடர்பான அறவிப்பை வெளியிடுவோம்' என்றார். இதற்கிடையில், பல்வேறு கடன்களுக்கான வட்டிக்கு 75 அடிப்படை புள்ளிகளை குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல், அதற்குப் பின் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக மேற்கொண்ட சில பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறையிடம் நம்பிக்கை ஏற்படுத்த உதவும்.
வெளிப்படையாக அவர், தொழிலதிபர்களிடம், 'வேலைவாய்ப்பைப் பறித்து விடாதீர்கள்' என்று கூறி அதை உத்தரவாதமாகப் பெற்றவிதம் அவரை நல்ல ஒரு பொருளாதார சிந்தனையாளர் என்று காட்டியிருக்கிறது. இதன் பலன் தேர்தலில் காங்கிரசுக்கு வரும் என்றாலும் வங்கிகள் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை மூலம் பணப்புழக்கத்திற்கும், பொருளாதார நெருக்கடியைத் தளர்த்துவதற்கும் பிரதமர் முன்னுரிமை தருகிறார் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
நன்றி : தினமலர்