Tuesday, March 3, 2009

நவம்பர் நிலையை விடவும் கீழே இறங்கியது பங்கு சந்தை

இன்று நாள் முழுவதும் நிலை தடுமாறி இருந்த மும்பை பங்கு சந்தையில், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் வேகமாக குறைய துவங்கியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நவம்பரின் குறந்த பட்ச அளவான 8451 புள்ளிகளையும் விட கீழே இறங்கி விட்டது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் 2,650 புள்ளிகளையும் விட கீழே இறங்கி விட்டது. இன்று பெரும்பாலும் எல்லா துறை பங்குகளும் மதிப்பை இழந்திருந்தன. இருந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது எப்.எம்.சி.ஜி., டெலிகாம், டெக்னாலஜி, பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் தான். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து ரூ.52 வரை வந்து விட்டதால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் அதிக அளவில் பங்குகளை விற்க ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய வர்த்தகத்தில் 1,030 நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. 1,850 நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தன. 167 நிறுவன பங்குகளில் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 179.79 புள்ளிகள் ( 2.09 சதவீதம் ) குறைந்து 8,427.29 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 52.20 புள்ளிகள் ( 1.95 சதவீதம் ) குறைந்து 2,622.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த கம்பெனிகள் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி,சி, பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ.,இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ பேங்க், டாடா பவர், பெல் மற்றும் எல்.ஐ.சி.
நன்றி : தினமலர்


செவ்ரான் நிறுவனத்திடம் இருந்த 5 சதவீத ஆர்.பி.எல்., பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் வாங்குகிறது

ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 5 சதவீத பங்குகளை வைத்திருந்த அமெரிக்க செவ்ரான் நிறுவனத்திடமிருந்து, அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது . பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து அந்த பங்குகளை ரூ.1,350 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தெரிவித்திருக்கிறது. எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, பங்கு ஒன்றுக்கு ரூ.60 விலை வைத்து நாங்கள் ரூ.1,350 கோடிக்கு அந்த பங்குகளை வாங்கிக்கொள்ள இருக்கிறோம் என்றார் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் தலைமை நிதி அதிகாரி அலோக் அகர்வால். கடந்த 2006 ஏப்ரல் மாதத்தில் செவ்ரான் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 22.50 கோடி பங்குகளை செவ்ரான் வாங்கியது. இப்போது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டதால் அந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் திரும்ப வாங்குகிறது.
நன்றி : தினமலர்


ஃபார்முலா ஒன் டீமை விற்கிறது ஹோண்டா

உலகின் மிக காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ் என்று கருதப்படுவது ஃபார்முலா ஒன் கார் ரேஸ். உளக அளவில் நடத்தப்படும் கார் ரேஸ் போட்டிகளில் பல டீம்கள் கலந்து கொள்ளும். அப்படி ஒரு டீம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்திடம் இருக்கிறது. ஹோண்டா, அதன் ஃபார்முலா ஒன் டீமை கூடிய விரைவில் விற்று விடும் என்று ஜப்பான் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் ஹோண்டா, அதன் ஃபார்முலா ஒன் டீமை கலைத்து விடுவதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவித்தது. வேறு யாரும் எங்கள் டீமை வாங்க முன் வரவில்லை என்றால் டீமை கலைத்து விடுவோம் என்று அது, அப்போது சொல்லியது. இப்போது ஹோண்டா, அந்த டீமை கலைத்து விடாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றும், கூடிய விரைவில் டீம் விற்பனை குறித்த அறிவிப்பை அது வெளியிடும் என்றும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. டீமை விற்பதற்கான ஏற்பாட்டை ஹோண்டா இப்போதே செய்ய ஆரம்பித்து விட்டது. இப்போதே விற்று விட்டால்தான் புதிதாக டீமை வாங்கியிருப்பவர்கள், ஹோண்டாவின் புதிய காரை வரும் வியாழன் அன்று ஓட்டிப்பார்க்க முடியும். ஏனென்றால் அப்போதுதான் 2009 வேர்ல்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் அந்த டீம் கலந்து கொள்ள முடியும்.
நன்றி : தினமலர்


மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு மீண்டும் ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது

நான்கு மாத இடைவேளைக்குப்பின் மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு மீண்டும் ரூ.5 லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கிறது. பிப்ரவரி கடைசியியில் கணக்கிட்டபோது அதன் ஆவரேஜ் ஏ.யு.எம் ( அசட் அன்டர் மேனேஜ்மென்ட் ) ரூ.5,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு ரூ.40,000 கோடி ( 8.8 சதவீதம் ) அதிகரித்திருக்கிறது. இந்த உயர்வுக்கு காரணம், வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் பெருமளவில் முதலீடு செய்ய முன் வந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 34 மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ்களில் ஜனவரி மாதம் முடிய ரூ.4,60,948.99 கோடியாக இருந்த ஏ.யு.எம்., பிப்ரவரி மாத கடைசியில் ரூ.5,00,973.37 கோடியாக உயர்ந்திருக்கிறது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ரூ.5,00,000 கோடியை தாண்டியிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்டின் ஏ.யு.எம்., இதற்கு முன் கடந்த வருடம் செப்டம்பரில் ரூ.5,28,871.75 கோடியாக இருந்தது.
நன்றி : தினமலர்


அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 12 வருடங்களில் இல்லாத சரிவு

அமெரிக்க பங்கு சநதை இன்று கடும் சரிவை சந்தித்திருக்கின்றன. அங்குள்ள டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 7,000 புள்ளிகளுக்கும் கீழே சென்று முடிந்திருக்கிறது. டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 299.64 புள்ளிகள் ( 4.24 சதவீதம் ) குறைந்து 6,763.29 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இது கடந்த 1997 ஏப்ரலுக்குப்பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. நாஸ்டாக் இன்டக்ஸ் 54.99 புள்ளிகள் ( 3.99 சதவீதம் ) குறைந்து 1,322.85 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸூம் 4.7 சதவீதம் குறைந்து 700 புள்ளிகளுக்கும் கீழே சென்று முடிந்திருக்கிறது. இதுவும் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத சரிவு. அமெரிக்காவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ.ஐ.ஜி.,62 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்திருந்ததை அடுத்து, அதனை காப்பாற்ற அமெரிக்க அரசு 30 பில்லியன் டாலர் கடனுதவி செய்தும் அங்குள்ள பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2008 ன் கடைசி காலாண்டில், ஏ.ஐ.ஜி., நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நஷ்டமடைந்திருக்கிறது. இதனால் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 150 பில்லியன் டாலர் கடன் பெற்றிருந்த ஏ.ஐ.ஜி., இப்போது கூடுதலாக 30 பில்லியன் டாலரை கடனாக பெறுகிறது. வேறு எந்த அமெரிக்க கம்பெனியும் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை அமெரிக்க அரசிடம் இருந்து கடனாக பெற்றது இல்லை. அமெரிக்க பங்கு சந்தையைப்போலவே லண்டனின் எஃப்.டி.எஸ்.இ.100 இன்டக்ஸூம் 204.26 புள்ளிகள் ( 5.33 சதவீதம் ) குறைந்து 3,625.83 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இதுவும் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத சரிவு. பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் உற்பத்தி துறையில் ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பு காரணமாக ற அங்குள்ள பங்கு சந்தைகள் சரிந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


திருமயத்தில் பெல் தொழிற்சாலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் ( பெல் ) புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருக்கிறது. இதற்காக முதல் கட்டமாக ரூ.250 கோடியை முதலீடு செய்யும் பெல் நிறுவனம், அங்கு பாய்லருக்கு தேவையாக உபரணங்களை முதலில் தயார் செய்யும். இது குறித்து பெல் வெளியிட்ட அறிக்கையில், திருமயத்தில் அமைய இருக்கும் தொழிற்சாலையால் நேரடியாக 750 பேருக்கும், மறைமுகமாக சுமார் 3,000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அங்கு அமைய இருக்கும் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் சுமார் ரூ.500 கோடிக்கு வரவு செலவு இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் 11 ம் மற்றும் 12 ம் திட்டத்தின்போது, மின்உற்பத்தி துறைக்கு தேவையான உபகரணங்கள் அதிக அளவில் தேவையாக இருக்கும் என்பதால், அதனை சந்திக்க பெல் நிறுவனத்திற்கு கூடுதலாக தொழிற்சாலை தேவைப்படுகிறது என்று அதன் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பழங்கதையாகிப்போன தனிநபர், வாகன கடன்கள்: 'ஹிட் லிஸ்ட்' பார்த்து தருவது புதுக்கதை

வராக் கடன்களால் ஆட்டம் கண்டுள்ள தனியார் வங்கிகளும், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் விழித்துக்கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. பர்சனல் லோன் எனப்படும் தனி நபர் கடன்களை, யார் யாருக்கு வழங்கக் கூடாது, வாகனங்கள் வாங்குவதற்கு யார், யாருக்கு பைனான்ஸ் தரக் கூடாது என்ற, 'ஹிட் லிஸ்டை' தயாரித்து தங்களது கிளைகளை உஷார்படுத்தி உள்ளன. கடந்த காலங்களில் தனியார் வங்கிகள் போட்டி போட்டு தனி நபர் கடன்களை வாரி இறைத்தன. ஒவ்வொரு ஆண்டும் ஓர் இலக்கை நிர்ணயித்து, தனிநபர் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளுக்கு மத்தியில், 'குடுமிப்பிடி' சண்டையே நடந்தது. கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணில் பட்டவர்களை எல்லாம் அழைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வாரி இறைத்தன. வாங்கிய கடனை திரும்ப கட்டுவார்களா, அதற்கான தகுதியும், வருமானமும் உள்ளதா, அளிக்கப்படும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனி நபர் கடன்கள் வழங்கப்பட்டது தான் கொடுமை. வாடிக்கையாளரை நேரில் கூட பார்க்காமல் ஏஜென்டுகள் மூலமாக கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. இதே நடைமுறை தான் கார் போன்ற வாகனங்களுக்கான கடன் வழங்குவதிலும் பின்பற்றப்பட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் கடன்களை அள்ளிவிட்டன.
வழங்கப்பட்ட கடன்கள் திரும்பி வராததால் ஆடிப்போன தனியார் வங்கிகளும், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களும் கடனை வசூலிப்பதில் இறங்கின. அந்தோ பரிதாபம்... கடன் வாங்கிச் சென்ற பலரது சாயம் வெளுத்தது தான் மிச்சம்... கடன் பெற்ற பலரது ஆவணங்கள் போலி எனத் தெரிந்தது. இதற்கிடையில், உலக நாடுகளை ஆட்டிப்படைத்த பொருளாதார நெருக்கடி, நமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார மந்த நிலையால் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தானாகவே தள்ளாட்டம் கண்டுள்ளன. இதன் எதிரொலியாக, தனிநபர் கடன், வாகனக் கடன் வழங்குவதை பெரிதும் குறைத்துக்கொண்டுள்ளன. மேலும், கடன் கேட்டு அணுகுபவர்களின் ஜாதகத்தை, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்க் காத குறையாக அலசி ஆராய்கின்றன. கடன் வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களையும் தங்களது கிளைகளுக்கு அடிக்கடி அனுப்பிக்கொண்டுள்ளன. யார் யாருக்கு கடன் தரக் கூடாது என்ற பட்டியல் தான் லேட்டஸ்ட் வழிகாட்டுதல். தனியார் வங்கிகள், மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்களின் புதிய 'ஹிட்' லிஸ்ட் இதோ...
வீடு கட்டித் தரும் கான்ட்ராக் டர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள், சினிமா, 'டிவி' நடிகர், நடிகைகள், கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள், கான்ட்ராக்டர்கள், கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்பவர்கள். கலெக்ஷன் ஏஜென்ட், செக்யூரிட்டி நிறுவனம் நடத்துபவர்கள், பார்கள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட அறைகளின் உரிமையாளர்கள், எஸ்.டி.டி - பி.சிஓ., மற்றும் ஜெராக்ஸ் பூத் மட்டும் வைத்து நடத்துபவர்கள். போலீஸ், மரம் நடும் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், ஆர்.டி.ஓ., ஏஜென்டுகள், ஆக்ராய் ஏஜென்டுகள், தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டி, சரிகை வியாபாரம் செய்பவர்கள், மனிதவள ஆலோசகர்கள், சிறிய கூரியர் நிறுவனங்கள், மோட்டார் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள், பங்கு மார்க்கெட் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மற்றும் புரோக்கர்கள், பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு கடன் தரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் தொழிலில் உள்ளவர்கள், பி.பி.ஓ., நடத்துபவர்கள், சைபர் கபே உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் கடன் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் சாப்ட்வேர் தொழில் ஆட்டம் கண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடனில் கார் வாங்கி விட்டு பணத்தை செலுத்தாவிட்டால், காரை பறிமுதல் செய்து கம்பெனியிடம் ஒப்படைக்க ஏஜென்டுகள் உள்ளனர். இவர்களுக்கும் கடன் கிடையாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பைனான்ஸ் செய்பவர்கள், கார் வாடகைக்கு விடுபவர்கள், ஒன்றிரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்துபவர்கள், லாரி, வேன் போன்ற போக்குவரத்து வாகனங்கள் வைத்துள்ளவர்கள், பகுதி நேர டிராவல் ஏஜென்டுகள் ஆகியோருக்கும் கடன் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டார் வாகன பைனான்சிங் நிறுவனங்கள், மேற்கண்டவர்களுக்கு கார் வாங்குவதற்கு கடன் வழங்கக் கூடாது என்ற எச்சரிக்கையை தந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், வீட்டிலேயே அலுவலகம் நடத்துபவர்களுக்கும் லோன் தர வேண்டாம் என்றும் பொதுவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்புறம் யாருக்குத் தான் கடன் தரப்போகின்றனர் என கேட்கிறீர் களா? அரசு ஊழியர்கள், மாதச்சம் பளம் வாங்குபவர்களுக்கு அவர் களது நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டால், அவர்களுக்கு மட்டும் தரலாம் என இப்போதைக்கு தனியார் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
நன்றி : தினமலர்