Monday, February 16, 2009

பீர் விற்பனையை 100 சதவீதம் அதிகரிக்க திட்டம்: டாஸ்மாக் பிரமாண்ட ஏற்பாடு

தமிழக மதுக்கடைகளில் நடப்பாண்டு பீர் விற்பனையை 100 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆறாயிரத்து 852 டாஸ்மாக் மதுக்கடைகளில், கடந்த ஆண்டு பீர் விற்பனை 62 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டது. இந்த விற்பனை உயர்வை நடப்பு ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க செய்ய 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழக மதுக்கடைகளில், கல்யாணி ப்ளக் லேபிள் லார்ஜர், கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் பிரிமியம், கிங்பிஷர் பிரிமியம் லார்ஜர், கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் கோல்டு பிரிமியம், மார்கோபோலா சூப்பர் ஸ்ட்ராங், ஜிங்காரோ மெகா ஸ்ட்ராங் பிரிமியம், புல்லட் சூப்பர் ஸ்ட்ராங், ப்ளக் நைட் சூப்பர் ஸ்ட்ராங், கோல்டன் ஈகிள் டீலக்ஸ் பிரிமியம், மெட்ராஸ் ப்ள்ஸ்னர் டீலக்ஸ், கோல்டன் ஈகிள் லார்ஜர், ஹைவார்ட்ஸ் 5000 சூப்பர் ஸ்ட்ராங் பீர் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. பீர் விற்பனை மாதம் சராசரியாக 22 லட்சத்து 16 ஆயிரத்து 500 கேஸ்கள் (ஒரு கேஸில் 12 பாட்டில் இருக்கும்) விற்கிறது. தினந்தோறும் சராசரியாக 73 ஆயிரத்து 880 கேஸ் என்ற அளவில் இருந்த பீர் விற்பனை, கடந்த ஆண்டு கோடை காலத்தில், ஒரு லட்சத்து 52 ஆயிரம் கேஸ் என்ற அளவுக்கு உயர்ந்தது. கடந்த ஆண்டு பீர் விற்பனை 57 சதவீதம் முதல் 62 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், பிராந்தி, ரம், ஜின் போன்றவற்றை உள்ளடக்கிய ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விற்பனை 22 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
பீர் விற்பனை அதிகரித்தது போல் ஷா வாலாஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கோல்கொன்டா ரூபீ பிரிமியம் ஒயின் விற்பனை 37 சதவீதமாக உயர்ந்தது. தமிழகத்தில், மார்ச் மாதம் முதல் வாரம் துவங்கி செப்டம்பர் மாதம் கடைசி வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம். இந்த கால கட்டத்தில் 'டாஸ்மாக்' கடைகளில் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில் ஐ.எம்.எப். எல்., மது விற்பனையில் சரிவு ஏற்படும். இந்த சரிவை பீர் விற்பனை மூலம் ஈடு செய்து 'டாஸ்மாக்' மது வருமானத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது தினந்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக விற்கும் கடைகளில் தினமும் ஐந்து பெட்டிகளும், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்கும் கடைகளில் பத்து பெட்டிகளும் கூடுதலாக கோடை காலத்தில் விற்பது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டு இந்த விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்து 'டாஸ்மாக்' ஏரியா சூப்பர்வைஸர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கு குறைவாக விற்பனை நடக்கும் 'டாஸ்மாக்' கடைகளில், பீர் விற்பனை எட்டு கேஸ் ஆகவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகளில் பீர் விற்பனையை 20 பெட்டிகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழக டாஸ்மாக் கடைகளில் மாதத்துக்கு சராசரியாக 22 லட்சத்து 16 ஆயிரத்து 483 கேஸ் பீர் விற்பனை நடக்கிறது. இந்த விற்பனை அளவை 45 லட்சம் கேஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. விற்பனை அதிகரிக்கும் நோக்கத்துடன் 'டாஸ்மாக்' கடைகளில் குளிரூட்டும் வசதி இல்லாத கடைகளில், புதிதாக குளிரூட்டும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், குளிர் சாதன வசதிகளை கொண்டுள்ள கடைகளில் விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் பிரிட்ஜ் வைக்க டெண்டர் விடப் பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மண்டலங்களிலும் டெண்டர் கோரப்பட இருப்பதாக, 'டாஸ்மாக்' உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழக 'டாஸ்மாக்' கடைகளில் மே மாதம் முதல் வாரம், 50 சதவீதம் அளவுக்கு பீர் விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக, தற்போது வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 'டாஸ்மாக்' மது கடைகளில், தற்போது 20 சதவீதம் அளவு பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


எல்.ஐ.சி.,யின் கிரிடிட் கார்டு : ஏப்ரலில் வெளிவரும்

எல்.ஐ.சி.,நிறுவனம், ஜனவரியில் வெளியிடுவதாக இருந்த கிரிடிட் கார்டை, வரும் மார்ச் கடைசியில் வெளியிடும் என்று அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் நாங்கள் அதை வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த கார்பரேஷன் வங்கியுடன் கூட்டு சேர்ந்து எல்.ஐ.சி.,நிறுவனம் கிரிடிட் கார்டை வெளியிடுகிறது. ஆனால் கிரிடிட் கார்டை வினியோகிப்பது கார்பரேஷன் வங்கிதான் என்று எல்.ஐ.சி.,தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரியில் கிரிடிட் கார்டை வெளியிடாததற்கு சில டெக்னிக்கல் கோளாறுதான் காரணம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து கார்பரேஷன் வங்கியில் கேட்டபோது, நாங்கள் டெக்னிக்கல் கோளாறை சரி செய்து விட்டோம். எனவே மார்ச் கடைசியில் அதை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சரிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய, அந்நாட்டு அரசு மிகப்பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தும் கூட கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மார்ச் டெலிவரிக்கானது )இன்று காலை பேரலுக்கு 5 சென்ட் குறைந்து 37.46 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 11 சென்ட் குறைந்து 44.70 டாலராக இருந்தது. பொருளாதார மீட்பு திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்தும் கூட, அங்கு சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரித்திருப்பதாலும், பெட்ரோலுக்கான தேவை குறைந்து போனதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வரி விலக்கு மற்றும் சில சலுகை திட்டத்திற்காக 787 பில்லியன் டாலரை ஒதுக்கும் பொருளாதார மீட்பு திட்டத்திற்கு கடந்த வெள்ளி அன்று அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்திருந்தது. அது இப்போது அதிபர் பாரக் ஒபாமாவின் கையெழுத்திற்காக காத்திருக்கிறது.
நன்றி : தினமலர்

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் ஏமாற்றம் அளித்ததால் பங்கு சந்தையில் சரிவு

தற்போது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நலிவடைந்து இருக்கும் இந்திய தொழில்துறையை மேம்படுத்தும் எந்த வித நடவடிக்கையையோ அல்லது வரிவிதிப்பில் மாற்றத்தையோ அறிவிக்காத அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கவே பெரும்பாலான நேரங்களை செலவிட்டார் என்கிறார்கள். இதனால் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும்போதே மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் சரிந்து கொண்டிருந்தன. பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் எதுவும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லாததால், அதற்கு இந்த வருட மத்தியில் தாக்கல் செய்யப்பட இருக்கிற பட்ஜெட்டை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பட்ஜெட் உறையின்போது, குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி இருக்கிறது என்று சொன்ன பிரணாப் முகர்ஜி, நாங்கள் எதிர்பார்த்த 7 சதவீத வளர்ச்சியை நாடு அடைந்திருக்கிறது என்றார். எங்களது ஆட்சியில் தனி நபர் வருமானமும் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார். பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் திட்டத்தின் மூலம், உள்கட்டமைப்பு துறையில் அதிக அளவில் முதலீட்டை பெற, வேண்டிய நடவடிக்கையை செய்ய இருக்கிறோம் என்று சொன்ன அவர், 2008 ஆகஸ்டில் இருந்து 2009 ஜனவரிக்குள் ரூ.70,000 கோடி மதிப்புள்ள 37 உள்கட்டமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது என்றார். புதிதாக வரிவிதிப்பு எதுவும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் விதிக்கவில்லை. இன்று தாக்கல் செய்யப்ட்ட இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளித்ததை அடுத்து மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 329.29 புள்ளிகள் ( 3.42 சதவீதம் ) குறைந்து 9,305.45 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 99.85 புள்ளிகள் ( 3.39 சதவீதம் ) குறைந்து 2,848.50 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்