Friday, March 27, 2009

சிறிது முன்னேற்றத்துடன் முடிந்தது பங்கு சந்தை

50 வர்த்தக நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் 10,000 புள்ளிகளை தொட்டிருந்த சென்செக்ஸ், இன்றும் அதை தக்க வைத்துக்கொண்டது. அவ்வளவு தான். மற்றபடி இன்று பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இன்று நாள் முழுவதும் பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, ஏறியும் இறங்கியும்தான் இருந்தது. இருந்தாலும் கடைசியாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 45.39 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,048.49 புள்ளிகளில் முடிவு பெற்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 26.40 புள்ளிகள் ( 0.86 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,108.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது மெட்டல், பார்மா, பேங்க், ஆட்டோ, ரியல்எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், பெல், ரிலையன்ஸ், மாருதி ஆகிய நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தன.ரூ.68,489 கோடிக்கு இன்று வர்த்தகம் நடந்திருக்கிறது. பொதுவாக, சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 12 சதவீதமும் நிப்டி 10.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பென்ஸ், பி.எம்.டபிள்யூ, வி.டபிள்யூ கார் வேண்டுமா ? தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

உங்களுக்கு உலக புகழ்பெற்ற மெர்சிடஸ் பென்ஸ்,பி.எம்.டபிள்யூ, அல்லது வி.டபிள்யூ., கார் வாங்க விருப்பமா ? ஆனால் அதை வாங்கும் அளவுக்கு வசதி இல்லையா ?.கொஞ்சம் பணம் குறைகிறதா ? அப்படியானால் இப்போது அதை தள்ளுபடி விலையில் வாங்க ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை, மாடலுக்கு தகுந்த படி இப்போது அவைகள் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கின்றன. டைம்லர் பென்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மெர்சிடஸ் பென்ஸின் இ - கிளாஸ் மாடல் கார் ரூ.2.5 லட்சம் கேஷ் டிஸ்கவுன்ட் விலையில் கொடுக்கப்பட இருக்கிறது. அது தவிர, வட்டி இல்லாத எளிய தவணை முறையிலும் பென்ஸ் காரை வாங்கும் திட்டமும் கொண்டு வரப்படுகிறது. பொதுவாக, 5 மாடல்களில் வெளிவந்திருக்கும் இ-கிளாஸ் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ரூ.38 லட்சத்தில் இருந்து ரூ.42 லட்சம் வரை ( எக்ஸ்- ஷோரூம் - மும்பை ) விலையில் விற்கப்படுகின்றன. சந்தையில் இருந்து வெளியேறி விட்ட ( அவுட் ஆஃப் மாடல் ) இந்த மாடலில், விற்காமல் டீலர்களிடம தேங்கி இருக்கும் கார்களை தள்ளுபடி கொடுத்தும், எளிய தவணை முறையில் வட்டி இல்லாத கடனுக்கு கொடுத்தும் காலி செய்து விட பென்ஸ் கார் நிறுவனம் முன்வந்திருக்கிறது. இ-கிளாஸின் அடுத்த மாடல் கார் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கிறது. அவைகளின் விலை, ஏற்கனவே வெளிவந்த இ-கிளாஸ் கார்களின் விலையை விட அதிகமாக இருக்கும். எனவே பழைய மாடல் கார்களை தள்ளிவிட முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல இன்னொரு பிரபல ஜெர்மன் சொகுசு காரான பி.எம்.டபிள்யூ.,வும், நம்ப முடியாதபடி, ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விலை குறைத்து அவர்களது மூன்று மாடல்களை விற்கிறார்கள். இந்த வருடம் ஜனவரியில்தான் அவைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் சந்தையை விட்டு வெளியே போய் விட்டதால், அவைகளும் தள்ளுபடி விலையில் தள்ளி விடப்படுகின்றன. இப்போது அவைகளின் விற்பனை விலை ரூ.32.20 லட்சமாக இருக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெர்மனியின் போக்ஸ்வாகன் காõர்களும் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி கொடுத்து அதன் ' பசாட் ' மாடல் கார்களை விற்க முன் வந்திருக்கிறது. அதிக விலையில் இருக்கும் இந்த மாதிரி சொகுசு கார்கள் எல்லாம் இப்படி தள்ளுபடி விலையில் கொடுக்கப்படுவது குறித்து ஒரு டீலர் தெரிவிக்கையில், இந்த மூன்று நிறுவனங்களும் தள்ளுபடி கொடுத்து தள்ளி விட இருக்கும் மாடல்கள் மிக குறைந்த அளவே இந்தியா முழுவதும் உள்ள டீலர்களிடம் விற்காமல் தேங்கி இருக்கின்றன என்றார். இருந்தாலும் அதிக விலையுள்ள இம்மாதிரி கார்களை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்திதான்.
நன்றி : தினமலர்


200 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது கூகிள்

கூகிள் நிறுவனம், அதன் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைபார்ப்பவர்களில் 200 பேரை வேலையில் இருந்து நீக்குகிறது. அந்த துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருப்ப தாகவும், அதனையடுத்து இப்போது ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதன் விளம்பர வருமானம் பெருமளவு குறைந்து போனதை அடுத்து, செலவை குறைக்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் 100 பேரை வேலையில் இருந்து நீக்கியது. பிப்ரவரியில் 40 பேரை நீக்கியது. கம்பெனியின் வளர்ச்சி திட்டங்களுக்காக அதிக அளவில் முதலீடு செய்து, எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியவில்லை. எனவே அதிலிருந்து விலகி விடுவதுதான் நல்லது என்றார் கூகிளின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( குளோபல் சேல்ஸ் அண்ட் பிசினஸ் டெவலப்மென்ட் ) ஓமிட் கோர்தஸ்தானி. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் கூகிள் நிறுவனத்தில் 21,000 பேர் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவில் நம்பர் ஒன் இன்டர்நெட் சர்ச் இஞ்சின் கூகிள்தான். அதற்கு அங்கு 63 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. 2008 ம் ஆண்டு கூகிளுக்கு கிடைத்த மொத்த வருமானம் 21.8 பில்லியன் டாலரில் 97 சதவீத வருமானம் விளம்பரம் மூலமாக வந்ததுதான்.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் 5,000 ஊழியர்களை ஐ.பி.எம். ஆட்குறைப்பு செய்வதால் இந்தியாவுக்கு லாபம் ?

பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்., அமெரிக்காவில் பணியாற்றும் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 5,000 பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறது. அவர்கள் செய்து வந்த வேலைகளில் பெரும்பாலான வேலைகள் இந்தியாவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஆட்ளை குறைக்கும் ஐ.பி.எம்.,நிறுவனம், அதன் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் அதன் அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டிருக்கிறது. 2006ம் வருஷத்தில், ஐ.பி.எம்., இன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 4 லட்சத்தில், 65 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்தனர். அது இந்த வருடத்தில் 71 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.பிராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எம்., செய்து கொடுத்து வந்த கார்பரேட் டேட்டா சென்டர் மற்றும் ஹியூமன் ரிசோர்சஸ் வேலைகள் நடந்து வந்த துறைகளில் தான் இப்போது ஆள் குறைப்பு செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த ஆர்டர் முடிந்து விட்டதால் ஆட்குறைப்பு செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஐ.பி.எம்., நிறுவனம், அதன் ஊழியர்களிடம் சொன்னாலும், பெரும்பாலான வேலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்வதால்தால் இங்கு ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்கிறார்கள் அமெரிக்க ஊழியர்கள்.
நன்றி : தினமலர்


ரஷ்ய நிறுவனத்துடன் புது மொபைல் சேவை

ரஷ்ய பொதுத்துறை நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து, தமிழகத்தில் எம்.டி.எஸ்., எனும் புதிய மொபைல் சேவையை துவக்கியுள்ளன. இது குறித்து, சிஸ்டெமா ஷ்யாம் டெலி சர்வீசஸ் தலைமை செயல் அதிகாரி சீனிராவ் சாரிபள்ளி மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: ரஷ்யாவின் சிஸ்டெமா பொதுத்துறை நிறுவனமும், இந்தியாவின் ஷ்யாம் குழுமமும் இணைந்து சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனம் தமிழகத்தில் எம்.டி.எஸ்., என்ற புதிய மொபைல் போன் சேவையை துவங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதத்திற்குள் 580 நகரங்களில் சேவையை துவங்கவுள்ளோம். தற்போது 'பிரிபெய்டு' முறையில் சிம்கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளோம். அறிமுகச் சலுகையாக 499 ரூபாய் செலுத்தி 'எம் கார்டு' திட்டத்தில் பிரிபெய்டு கார்டு பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் பத்து லட்சம் நிமிடங்கள் இலவசமாக பேச முடியும்.
இதன்படி, எம்.டி.எஸ்., மொபைல் இணைப்பிலிருந்து, மற்றொரு எம்.டி.எஸ்., இணைப்பிற்கு செய்யும் அழைப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 150 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்கிற்கு செல்லும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு நாளொன்றுக்கு 10 எஸ்.எம்.எஸ்.,களை இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். 'எம்சேவர் 99' திட்டத்தில் சேர்ந்தால் எம்.டி.எஸ்., சேவையிலிருந்து எம்.டி.எஸ்., மொபைல் சேவைக்கு செய்யும் அனைத்து லோக்கல் கால்களும் இலவசமாகும். 'எம்சேவர் 30' திட்டத்தில் இணைப்பு பெற்றால் முதல் 2 எஸ்.எம்.எஸ்.,களுக்கு பின் செய்யும் அனைத்து எஸ்.எம்.எஸ்.,களும் இலவசம். எம்.டி.எஸ்., மொபைல் சேவை எண்கள் 91500 என்ற சீரியலில் இருந்து துவங்கும். ஒரு மொபைல் சேவையில் இருந்து மற்றொரு மொபைல் சேவைக்கு மாறும் போது பழைய எண்ணையே தொடரும் வகையில் அரசு மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. முதல்கட்டமாக நான்கு மெட்ரோ நகரங்களில் இந்தச் சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரி சீனிராவ் கூறினார்.

நன்றி : தினமலர்


பொருள் விலை உயர்வு: பணவீக்கமோ சரிவு

பணவீக்கம் இதுவரை இல்லாத வகையில் மார்ச் இரண்டாவது வாரத்தில், 0.27 சதவீதமாக குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தும் கூட இந்த நிலை உருவாகியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 0.44 சதவீதம். இதை விட 0.17 சதவீதம் குறைந் துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணசப்ளையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறும் போது, 'இன்னும் கூட அடுத்த சில வாரங்களுக்கு பணவீக்கம் குறையலாம். அதனால் பணச் சுருக்க பாதிப்பு வராது. பொதுவாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இந்த ஆண்டின் கடைசியில் நீங்கும்' என்று கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியாவின் கோடை கால சிறப்பு கட்டணம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனம், இன்று முதல் அமலுக்கு வரும் வகையிலான கோடை கால சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை: நாட்டில் உள்ள 148 இடங்களுக்கான கோடை கால சிறப்பு கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மும்பை-கோவா, சென்னை-ஐதராபாத், மும்பை-ஐதராபாத் நகரங்களுக்கு செல்ல 1,891 ரூபாய்; மும்பை-கோழிக்கோடு இடையே செல்ல 2,276 ரூபாய்; மும்பையில் இருந்து சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், டில்லிக்கும்; டில்லியில் இருந்து கோல் கட்டா, ஐதராபாத்துக்கும் பயணம் செய்ய 2,611 ரூபாய்; சென்னையில் இருந்து கோல்கட்டா, டில்லிக்கும்; டில்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் 2,901 ரூபாய். இக்கட்டணம் பயணிகள் சேவை கட்டணம் உள்ளடக்கியது. அறிவிக்கப்பட்டுள்ள கோடை கால சிறப்பு கட்டணத்தை பயன்படுத்த விரும்புபவர்கள் டிக்கெட்டுகளை 30 நாட்களுக்கு முன்பாக பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த டிக்கெட் கட்டணம் திரும்ப பெற முடியாதது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


நானோ கார் வருகையால் மாருதி விலை குறையாது

'டாடாவின் நானோ கார் அறிமுகத்தால், 800 சி.சி., கார்கள் விற்பனை சிறிது குறையலாம். நானோ காருடனான போட்டியை சமாளிக்க ஆல்டோ மற்றும் எம் 800 போன்ற கார்களின் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் நேற்று தெரிவித்தது. இது குறித்து மாருதி சுசூகி கம்பெனி தலைவர் ஆர்.சி.பார்கவா நிருபர்களிடம் கூறியதாவது: நானோ கார் அறிமுகத்தால், 800 சி.சி., கார்கள் விற்பனையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். சந்தையை விரிவுப்படுத்த, நானோ கார் உதவும். எனினும் குறைந்த விலையிலான வாகனங்கள் தயாரிக்கும் திட்டம் எதுவும் எங்கள் கம்பெனியில் இல்லை. நடப்பு காலாண்டில் கார்கள் விற்பனை நன்றாக உள்ளது. ஆனால், தேர்தல் விவகாரம், புதிய அரசின் கொள்கைகள், வட்டி வீதங்கள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகளை பொறுத்தே விற்பனை அமையும். இவ்வாறு ஆர்.சி.பார்கவா கூறினார்.

நன்றி : தினமலர்