Friday, March 27, 2009

பென்ஸ், பி.எம்.டபிள்யூ, வி.டபிள்யூ கார் வேண்டுமா ? தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

உங்களுக்கு உலக புகழ்பெற்ற மெர்சிடஸ் பென்ஸ்,பி.எம்.டபிள்யூ, அல்லது வி.டபிள்யூ., கார் வாங்க விருப்பமா ? ஆனால் அதை வாங்கும் அளவுக்கு வசதி இல்லையா ?.கொஞ்சம் பணம் குறைகிறதா ? அப்படியானால் இப்போது அதை தள்ளுபடி விலையில் வாங்க ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை, மாடலுக்கு தகுந்த படி இப்போது அவைகள் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கின்றன. டைம்லர் பென்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மெர்சிடஸ் பென்ஸின் இ - கிளாஸ் மாடல் கார் ரூ.2.5 லட்சம் கேஷ் டிஸ்கவுன்ட் விலையில் கொடுக்கப்பட இருக்கிறது. அது தவிர, வட்டி இல்லாத எளிய தவணை முறையிலும் பென்ஸ் காரை வாங்கும் திட்டமும் கொண்டு வரப்படுகிறது. பொதுவாக, 5 மாடல்களில் வெளிவந்திருக்கும் இ-கிளாஸ் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ரூ.38 லட்சத்தில் இருந்து ரூ.42 லட்சம் வரை ( எக்ஸ்- ஷோரூம் - மும்பை ) விலையில் விற்கப்படுகின்றன. சந்தையில் இருந்து வெளியேறி விட்ட ( அவுட் ஆஃப் மாடல் ) இந்த மாடலில், விற்காமல் டீலர்களிடம தேங்கி இருக்கும் கார்களை தள்ளுபடி கொடுத்தும், எளிய தவணை முறையில் வட்டி இல்லாத கடனுக்கு கொடுத்தும் காலி செய்து விட பென்ஸ் கார் நிறுவனம் முன்வந்திருக்கிறது. இ-கிளாஸின் அடுத்த மாடல் கார் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கிறது. அவைகளின் விலை, ஏற்கனவே வெளிவந்த இ-கிளாஸ் கார்களின் விலையை விட அதிகமாக இருக்கும். எனவே பழைய மாடல் கார்களை தள்ளிவிட முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல இன்னொரு பிரபல ஜெர்மன் சொகுசு காரான பி.எம்.டபிள்யூ.,வும், நம்ப முடியாதபடி, ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விலை குறைத்து அவர்களது மூன்று மாடல்களை விற்கிறார்கள். இந்த வருடம் ஜனவரியில்தான் அவைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் சந்தையை விட்டு வெளியே போய் விட்டதால், அவைகளும் தள்ளுபடி விலையில் தள்ளி விடப்படுகின்றன. இப்போது அவைகளின் விற்பனை விலை ரூ.32.20 லட்சமாக இருக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெர்மனியின் போக்ஸ்வாகன் காõர்களும் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி கொடுத்து அதன் ' பசாட் ' மாடல் கார்களை விற்க முன் வந்திருக்கிறது. அதிக விலையில் இருக்கும் இந்த மாதிரி சொகுசு கார்கள் எல்லாம் இப்படி தள்ளுபடி விலையில் கொடுக்கப்படுவது குறித்து ஒரு டீலர் தெரிவிக்கையில், இந்த மூன்று நிறுவனங்களும் தள்ளுபடி கொடுத்து தள்ளி விட இருக்கும் மாடல்கள் மிக குறைந்த அளவே இந்தியா முழுவதும் உள்ள டீலர்களிடம் விற்காமல் தேங்கி இருக்கின்றன என்றார். இருந்தாலும் அதிக விலையுள்ள இம்மாதிரி கார்களை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்திதான்.
நன்றி : தினமலர்


No comments: