நன்றி : தினமலர்
Thursday, March 26, 2009
விற்பனைக்கு வருகிறது ' வோல்வோ ' கார் கம்பெனி
சுவீடன் நாட்டை சேர்ந்த வோல்வோ கார் கம்பெனி விற்பனைக்கு வருகிறது. இப்போது அமெரிக்காவின் போர்டு மோட்டார் கம்பெனிக்கு சொந்தமாக இருக்கும் ' வோல்வோ ' வை விற்க, போர்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வோல்வோ வை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் கம்பெனிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக போர்டு கம்பெனியும் உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும் எந்தெந்த கம்பெனிகள் வாங்க விருப்பம் தெரிவித்திருக்கின்றன என்பதை போர்டு நிர்வாகம் தெரிவிக்க மறுத்து விட்டது. வோல்வோ கம்பெனியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத போர்டு, அதனை விற்று விட முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. போர்டு கம்பெனியிடம் இருந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளில் நஷ்டம் வருகிறது என்று தான் கடந்த 2008ல் 2.3 பில்லியன் டாலருக்கு அவைகளை டாடா மோட்டார்ஸூக்கு விற்றது. இப்போது வோல்வோ கம்பெனியையும் விற்க முன்வந்திருக்கிறது. ஸ்வீடனில் வெளியான தகவலின்படி, வோல்வோ வை வாங்க சீன கார் கம்பெனிகள் பல முன்வந்திருப்பதாக தெரிவிக்கிறது. சீனாவை சேர்ந்த செர்ரி ஆட்டோமொபைல், டொங்öஃபங் மோட்டார் குரூப், சோங்க்யுங் சாங்கன் ஆட்டோமொபைல் ஆகியவை ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. வோல்வோவை வாங்க ஆர்வம் தெரிவித்திருப்பவர்களிடம் போர்டு நிறுவனம், வோல்வோவின் எதிர்காலம் குறித்து விளக்கி வருவதாக சொல்லப்படுகிறது. 2008 கடைசி மூன்று மாதங்களில் மட்டும் வோல்வோ கம்பெனியில் 736 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.3,680 கோடி ) நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. 2008 ம் வருடம்,மொத்தமாக போர்டு கம்பெனி 14.6 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.73,000 கோடி ) நஷ்டம் அடைந்திருக்கிறது. கடந்த வருட கோடை காலத்தில் இருந்து நிலவி வரும் கடும் பொருளாதார மந்த நிலை காரணமாக, உலக அளவில் எல்லா கார் கம்பெனிகளிலுமே விற்பனை குறைந்திருக்கிறது. அதே போல போர்டு மற்றும் வோல்வோ நிறுவனங்களிலும் விற்பனை குறைந்திருக்கிறது. பெரும் நஷ்டமடைந்த கிரைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து மொத்தமாக 17.4 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.87,000 கோடி ) உதவியாக பெற்றிருக்கின்றன.இன்னும்கூட 21.6 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.1,08,000 கோடி ) உதவியாக கேட்டிருக்கின்றன. ஆனால் போர்டு நிறுவனமோ இது வரை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியையும் கேட்டவில்லை. ஆனால் வோல்வோ ஒரு ஸ்வீடன் நிறுவனமாக இருப்பதால், அந்நாட்டு அரசு அதற்கு 2.3 பில்லியன் பவுண்ட்களை ( சுமார் ரூ.16,800 கோடி ) உதவித்தொகையாக கொடுத்திருக்கிறது. இன்னொரு ஸ்வீடன் கார் கம்பெனியான ' சாப் ' பிற்கும் ஸ்வீடன் அரசு 3.5 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 17,500 கோடி ) உதவியாக கொடுத்திருக்கின்றது. ' சாப் ' கார் கம்பெனி இப்போது அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸிடம் இருக்கிறது. அதையும் கூட விற்று விடலாமா என்று ஜெனரல் மோட்டார்ஸ் யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.
Labels:
வாகனம்
மீண்டும் சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது
50 வர்த்தக நாட்களுக்குப்பின் மீண்டும் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளை தாண்டி வந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து கொண்டிருந்த குறியீட்டு எண் சென்செக்ஸ் மதியம் 3 மணி அளவில் 10,000 புள்ளிகளை தாண்டியது. பின்னர் அது கொஞ்சம் குறைந்தாலும் மீண்டும் 10,000 புள்ளிகளை அடைந்து விட்டது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 3,100 புள்ளிகள் வரை வந்து பின்னர் கடைசி 10 நிமிட வர்த்தகத்தின் போது கொஞ்சம் குறைந்து விட்டது.எனினும் 3,100 புள்ளிகளை ஒட்டியே இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள இன்று பெருமளவில் வர்த்தகத்தில் கலந்து கொண்டதால் குறியீட்டு எண்கள் இந்தளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இன்ஃப்ராஸ்டரச்சர், மெட்டல், பேங்கிங், டெக்னாலஜி, ஆட்டோ, எஃப் எம் ஜி சி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டதால், சந்தை நாள் முழுவதும் ஏற்ற நிலையிலேயே இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஓ.என்.ஜி.சி.,பார்தி ஏர்டெல், பெல், டி சி எஸ், எல் அண்ட் டி, விப்ரோ, ஸ்டெர்லைட், மாருதி, மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் 5 - 6 சதவீதம் விலை உயர்ந்திருந்தன. எஸ்.பி.ஐ, ஐ.டி.சி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என் டி பி சி, ஹெச் டி எஃப் சி, ஹெச் யு எல், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் ஹெச் டி எஃப் சி பேங்க் பங்குகள் 2 - 4 சதவீதம் விலை உயர்ந்திருந்தன. இன்று எஃப் அண்ட் ஓ வின் முடிவு நாளானதால், இந்த வாரத்தில் இன்று தான் அதிக வர்த்தகம் நடந்துள்ளது. இன்று மட்டும் மொத்தம் ரூ.97,107.51 கோடி க்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 335.20 புள்ளிகள் ( 3.47 சதவீதம் ) உயர்ந்து 10,003.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 97.90 புள்ளிகள் ( 3.28 சதவீதம் ) உயர்ந்து 3,082.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளிலும் ஏற்ற நிலையே காணப்பட்டது.
நன்றி : தினமலர்
Labels:
பங்கு சந்தை
ரூ.4 முதல் ரூ.25 லட்சம் வரையுள்ள 30,000 வீடுகள் : ரஹேஜா டெவலப்பர்ஸ் திட்டம்
ரூ 4 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை விலையில், 30,000 அடுக்குமாடி வீடுகளை தேசிய தலைநகர் பகுதியில் கட்ட, பிரபல கட்டுமான நிறுவனமான ரஹேஜா டெவலப்பர்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இவைகள் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கிறது என்று நிலவி வரும் செய்தி உண்மையல்ல. வீடுகளுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கட்டுப்படியாகும் விலையில் இருக்கும் வீடுகளுக்கு தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே தேசிய தலைநகர் பகுதியில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு நாங்கள் அரசிடம் அனுமதி பெற்று வைத்திருக்கிறோம் என்றார் ரஹேஜா டெவலப்பர்ஸின் மேலாண் இயக்குனர் நவின் ரஹேஜா. இன்னும் இரண்டு வருடங்களில் நாங்கள் 30,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம். வீடுகளின் அளவை பொருத்து, அவைகளில் விலை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை இருக்கும். குறைந்த பட்சமாக ஒரு வீடு 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும்.கட்டுமானப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கி, இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று சொன்ன ரஹேஜா, வீட்டை புக் செய்தவர்களுக்கு 2011 ல் வீடுகள் கொடுக்கப்படும் என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக நாங்கள் யாருடனும் கூட்டு சேர்வதாக இல்லை என்றும் சொன்னார். இருந்தாலும் இந்த திட்டத்திற்காக எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படுகிறது என்பதை அவர் சொல்லவில்லை.
நன்றி : தினமலர்
Labels:
ரியல் எஸ்டேட்
ரஷ்ய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது டாடா டீ
ரஷ்ய நிறுவனம் ஒன்றின் 51 சதவீத பங்குகளை டாடா டீ நிறுவனமும், இ.பி.ஆர்.டி.என்ற ஐரோப்பிய வங்கியும் சேர்ந்து வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. கிராண்ட் என்ற அந்த ரஷ்ய நிறுவனம், பேக்கிங் மற்றும் டிஸ்ட்ரிபூஷன் தொழில் செய்து வருகிறது. டாடா டீ யின் ஐரோப்பிய துணை நிறுவனம் ஒன்று இதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது. கிராண்ட் நிறுவனத்தில் ஏற்கனவே டாடா டீ க்கு 33.2 சதவீத பங்குகளும், இ.பி.ஆர்.டி.,க்கு 17.8 சதவீத பங்குகளும் இருக்கின்றன. மீதி 49 சதவீத பங்குகள் கிராண்ட் நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் இருக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
டாடா
பணவீக்கம் மேலும் குறைந்து 0.27 சதவீதமாகியது
மார்ச் 14 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 0.27 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 0.44 சதவீதமாக இருந்தது. இது கடந்த 30 வருடங்களில் இல்லாத குறைந்த அளவு. இதே வேகத்தில் சென்றால் விரைவில் பணவீக்கம் 0.0 சதவீதமாகி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பார்லி போன்ற உணவுப்பொருட்களின் விலை 0.1 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் சில உற்பத்தி பொருட்களும் விலையும் உயர்ந்திருக்கிறது. இருந்தும் கூட பணவீக்கம் குறைந்திருக்கிறது. பணவீக்கம் மேலும் குறைந்திருப்பதை அடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, நிதி கொள்கையில் மாற்றம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி : தினமலர்
Labels:
பணவீக்கம்
இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
இந்தியாவுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதியாக குறைத்திருக்கிறது. வேறு எந்த விமான கம்பெனியும் இதுவரை இந்த அளவுக்கு விமான சேவையை குறைத்தது இல்லை. இந்தியாவுக்கு 100 விமானங்கள் வரை இயக்கிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த சில மாதங்களில் அதில் 54 விமானங்களை குறைத்திருக்கிறது. மேலும் ஐந்து நகரங்களுக்கு விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தியும் இருக்கிறது. முன்பு 11 இந்திய நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இப்போது 6 நகரங்களுக்கு மட்டுமே இயக்குகிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்னாடகாவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகி சருகா விக்ரம - ஆதித்யா தெரிவித்தபோது, நாங்கள் லாபம் வராத ரூட்களில் விமான சேவையை நிறுத்தி விட முடிவு செய்தோம். அதனடிப்படை யில் தான் ஐந்து இந்திய நகரங்களுக்கு சேவையை நிறுத்த வேண்டியதாகி விட்டது என்றார். விமானங்களில் நிரம்பும் இருக்கைகள் எண்ணிக்கையும் 55 சதவீதம் குறைந்து, வாரத்திற்கு 2,000 ஆகி விட்டது. எனவே தான் நாங்களும் இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி சேவையை குறைத்துக்கொண்டோம் என்றார்.
நன்றி ; தினமலர்
Labels:
விமானம்
அமெரிக்க நடவடிக்கையால் மெதுவாக முன்னேறுகிறது பங்குச் சந்தை- சேதுராமன் சாத்தப்பன் -
சந்தை முன்னேறுகிறது; மெதுவாக முன்னேறுகிறது; 10,000 புள்ளிக்கு அருகில் சென்று முத்தமிட்டு கீழே இறங்கி வந்து விட்டது. ஏறு மயில் ஏறு என்கிறபடி கடந்த 15 நாட்களாக ஏறிக்கொண்டே இருக்கிறது.முக்கிய காரணம் என்ன? உலகளவில் சந்தைகள் மேலே சென்றது தான். ஏன் மேலே சென்றன? அமெரிக்காவின் பேக்கேஜ் தான் காரணம். அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள கம்பெனிகள், வங்கிகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க, பேக்கேஜ் மேல் பேக்கேஜாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.அது, அங்கு சந்தைகளை மேலே கொண்டு சென்றன. அதனால், குறிப்பாக இந்திய சந்தைகளும் ஒரேயடியாக மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 457 புள்ளிகள் மேலே சென்றது.நேற்று முன்தினம் சந்தைகள் மேலேயே தான் துவங்கின. பின்னர், மேலும், கீழுமாகத் தான் இருந்தது. முடிவாக, 47 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. டாடாவின் நானோவை பார்த்த அனைத்து வெளிநாட்டினரும் பாராட்டியதும் சந்தைக்கு காலையில் ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். ஆனால், அது பின்னர் நீடிக்கவில்லை.நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. பின் மேலே சென்றது. ஒபாமா விடுத்த அறிக்கையாலும் சந்தைகள் மேலே சென்றன. இருந்தாலும், சந்தைகள் நேற்றைய தினம் மேலும், கீழும் இருந்தது. இதற்கு வேறு ஒரு காரணம் என்னவென்றால், இன்று முடிவுபெற இருக்கும் டிரைவேட்டிவ் சந்தைகளின் முடிவுகள் தான்.மெட்டல், கட்டுமானத்துறை, வங்கித்துறை ஆகியவை மேலே சென்றன. டி.எல்.எப்., கட்டுமானக் கம்பெனியின் நான்கு புதிய மால்கள், தீபாவளிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருப்பதால் அந்த கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. கச்சா எண்ணெய் விலை கூடிவருவதால் அது சம்பந்தப்பட்ட பங்குகள் மேலே சென்றன.இறுதியாக மும்பை பங்குச் சந்தை 196 புள்ளிகள் கூடி 9,667 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 2,984 புள்ளிகளுடனும் முடிந்தது. கடந்த ஒன்றரை மாதத்தின் அதிகபட்சத்திற்கு சென்றுள்ளது.டாலர் மதிப்பு: டாலர் மதிப்பு சிறிது சிறிதாக வருங்காலங்களில் குறையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பெரிய அளவு குறைவு உடனடியாக இல்லாவிடினும் சிறிது சிறிதாக இருக்கலாம். குறைவதற்கு இன்னொரு காரணம், ஏற்றுமதியாளர்கள் பயத்தில் சேமித்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் விற்று ரூபாய் ஆக்கியது தான்.டாலர் மதிப்பு கூடும் போது எல்லாவற்றையும் டாலர் அக்கவுன்டில் வைத்திருந்தனர். மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று தெரிந்ததும் உடனடியாக விற்றுக் காசாக்குவோம் (ரூபாயாக்குவோம்) என்ற நினைப்புத் தான் பலருக்கு.தங்கம் தங்கமாகவே உறுதியாக இருக்கிறது. 15,000 அளவிலேயே இருக்கிறது. பங்குச் சந்தை மேலே செல்வதாலும், கச்சா எண்ணெய் மேலே செல்வதாலும் தங்கத்தில் இருக்கும் முதலீடுகள் சிறிது மாறவாய்ப்புகள் உள்ளன.ஒரு காலத்தில் நிறுவனங்களுக்கு தலைவராவது என்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பமாக இருந்தது. ஆனால், சத்யம் விவகாரத்திற்கு பின், நிறைய நிறுவனங்களின் தலைவர்கள் விலகி வருகின்றனர். விலகுபவர்களிலும் 90 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி விலகுகின்றனர். 200 பேர் வரை சமீபத்தில் விலகி உள்ளனர்.கடந்த 9ம் தேதி அன்று சந்தை கடந்த மூன்று ஆண்டின் கீழ் நிலையை எட்டியிருந்தது. அதாவது 8,160 புள்ளிகளை. தற்போது 9,667 புள்ளிகளை எட்டியுள்ளது. 17 நாட்களில் 18 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. அது தான் பங்குச் சந்தை. சந்தையை சிறிது நாட்களாக பார்க்காதவர்கள், பேசாதவர்கள் எல்லாம் மறுபடி பார்க்கத் துவங்கி விட்டனர், பேசத் துவங்கிவிட்டனர். வடிவேலு பாணியில் சொல்லப்போனால், வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா... என்று சொல்லலாம்.
நன்றி : தினமலர்
Labels:
பங்கு சந்தை நிலவரம்
மகளிர் குழுவுக்கு ரூ.1,400 கோடி கடன் : இந்தியன் வங்கி தலைவர் தகவல்
''நாடு முழுவதும் மகளிர் குழுவினருக்கு 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள் ளது,'' என, இந்தியன் வங்கி தலைவர் சுந்தரராஜன் தெரிவித்தார். இந்தியன் வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுந்தரராஜன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியன் வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் 17 சிறப்பு கிளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆறாவது கிளையாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு 1,400 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 700 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 99 சதவீத குழுக்கள் தாமாகவே முன்வந்து கடன் தொகையை கட்டுகின்றன. வராக்கடனாக 460 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இவ்வாறு சுந்தரராஜன் கூறினார்.
நன்றி : தினமலர்
Labels:
வங்கி
Subscribe to:
Posts (Atom)