நன்றி : தினமலர்
Thursday, March 26, 2009
விற்பனைக்கு வருகிறது ' வோல்வோ ' கார் கம்பெனி
சுவீடன் நாட்டை சேர்ந்த வோல்வோ கார் கம்பெனி விற்பனைக்கு வருகிறது. இப்போது அமெரிக்காவின் போர்டு மோட்டார் கம்பெனிக்கு சொந்தமாக இருக்கும் ' வோல்வோ ' வை விற்க, போர்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வோல்வோ வை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் கம்பெனிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக போர்டு கம்பெனியும் உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும் எந்தெந்த கம்பெனிகள் வாங்க விருப்பம் தெரிவித்திருக்கின்றன என்பதை போர்டு நிர்வாகம் தெரிவிக்க மறுத்து விட்டது. வோல்வோ கம்பெனியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத போர்டு, அதனை விற்று விட முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. போர்டு கம்பெனியிடம் இருந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளில் நஷ்டம் வருகிறது என்று தான் கடந்த 2008ல் 2.3 பில்லியன் டாலருக்கு அவைகளை டாடா மோட்டார்ஸூக்கு விற்றது. இப்போது வோல்வோ கம்பெனியையும் விற்க முன்வந்திருக்கிறது. ஸ்வீடனில் வெளியான தகவலின்படி, வோல்வோ வை வாங்க சீன கார் கம்பெனிகள் பல முன்வந்திருப்பதாக தெரிவிக்கிறது. சீனாவை சேர்ந்த செர்ரி ஆட்டோமொபைல், டொங்öஃபங் மோட்டார் குரூப், சோங்க்யுங் சாங்கன் ஆட்டோமொபைல் ஆகியவை ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. வோல்வோவை வாங்க ஆர்வம் தெரிவித்திருப்பவர்களிடம் போர்டு நிறுவனம், வோல்வோவின் எதிர்காலம் குறித்து விளக்கி வருவதாக சொல்லப்படுகிறது. 2008 கடைசி மூன்று மாதங்களில் மட்டும் வோல்வோ கம்பெனியில் 736 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.3,680 கோடி ) நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. 2008 ம் வருடம்,மொத்தமாக போர்டு கம்பெனி 14.6 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.73,000 கோடி ) நஷ்டம் அடைந்திருக்கிறது. கடந்த வருட கோடை காலத்தில் இருந்து நிலவி வரும் கடும் பொருளாதார மந்த நிலை காரணமாக, உலக அளவில் எல்லா கார் கம்பெனிகளிலுமே விற்பனை குறைந்திருக்கிறது. அதே போல போர்டு மற்றும் வோல்வோ நிறுவனங்களிலும் விற்பனை குறைந்திருக்கிறது. பெரும் நஷ்டமடைந்த கிரைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து மொத்தமாக 17.4 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.87,000 கோடி ) உதவியாக பெற்றிருக்கின்றன.இன்னும்கூட 21.6 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.1,08,000 கோடி ) உதவியாக கேட்டிருக்கின்றன. ஆனால் போர்டு நிறுவனமோ இது வரை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியையும் கேட்டவில்லை. ஆனால் வோல்வோ ஒரு ஸ்வீடன் நிறுவனமாக இருப்பதால், அந்நாட்டு அரசு அதற்கு 2.3 பில்லியன் பவுண்ட்களை ( சுமார் ரூ.16,800 கோடி ) உதவித்தொகையாக கொடுத்திருக்கிறது. இன்னொரு ஸ்வீடன் கார் கம்பெனியான ' சாப் ' பிற்கும் ஸ்வீடன் அரசு 3.5 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 17,500 கோடி ) உதவியாக கொடுத்திருக்கின்றது. ' சாப் ' கார் கம்பெனி இப்போது அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸிடம் இருக்கிறது. அதையும் கூட விற்று விடலாமா என்று ஜெனரல் மோட்டார்ஸ் யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment