சீனாவிற்கும் ஒரு காஷ்மீர் பிரச்னை உண்டு என்பதும், இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையைப் போலவே இஸ்லாமியப் பிரிவினைவாதிகளால் பிரச்னைகள் உண்டு என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம்.
""சிங்கியாங்'' என்கிற சீனப் பிரதேசம்தான் சீனாவின் காஷ்மீர் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி.
இந்தியாவில் காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும். அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் வசம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் வசமும் மீதமுள்ள 1,41,000 ச.கி.மீ. மட்டுமே இந்தியாவின் வசம் உள்ளது. இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் காஷ்மீர் (சுமார் 1,45,000 ச.கி.மீ.) சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான். எனவே, சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது என்பதால் அதனால் வரும் பிரச்னையும் பெரிது. ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அதற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவின் காஷ்மீர் சர்வதேசப் பிரச்னையாக்கப்பட்டதுபோல் சீனா சிங்கியாங் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கவில்லை. 1949-ல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின்மீது படையெடுத்து சீனா தன் எல்லைகளை மீட்டுக் கொண்டது. ""சிங்கியாங்'' என்பதற்கே கூட, ""பழைய எல்லைகள் திரும்புகின்றன'' என்றுதான் பொருள். அதற்கு மாறாக, 1948-ல் இந்தியா, பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை வென்றது, ஆனால் தானாகவே முன்வந்து காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கியது. அதனால், அது பிரச்னையாகவே இன்றுவரை தொடர்கிறது.
ஐ.நா.வுக்குச் சென்று சர்வதேசப் பிரச்னையாக மாற்றியது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. அதனால், இது இருதரப்புப் பிரச்னைதான் என்பதைச் சொல்லவே இப்போது இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. சீனா எவ்வாறு தனது காஷ்மீரை (சிங்கியாங் என்று படிக்கவும்) தன்னுடன் ஒருங்கிணைத்தது என்பதை கூர்ந்து கவனித்தால், நாம் எந்த அளவுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பது புரியும்.
சிங்கியாங் பிரதேசம் 2 கோடி மக்கள்தொகை கொண்டது. அதில் 45 சதவீதம் ""உய்கர்'' முஸ்லிம்கள், 12 சதவீதம் மற்ற முஸ்லிம்கள். 41 சதவீதம் ""ஹன்'' எனும் சீன மக்கள். 1949-ல் ஹன் மக்கள்தொகை வெறும் 6 சதவீதம்தான். அறுபது ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எப்படி நடந்தது?
சீனா தனது ராணுவத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு நம்பவில்லை. மாறாக, சீனா தனது மக்களை நம்பியது. ஹன் சீன மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி சீனா பார்த்துக் கொண்டது. இப்போதைய 41 சதவீதம் மக்கள்தொகையானது அங்குள்ள ராணுவ வீரர்களோ, அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.
சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. ஆனால் இப்போது அதன் நிலைமை என்ன? அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004-ல் 28 பில்லியன் டாலராக இருந்து 2008-ல் 60 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள்.
சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் மக்கள்தொகையாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.
இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் காஷ்மீருக்கு இந்தியா கொடுத்து வரும் விலை அபரிமிதமானது. காஷ்மீருக்கான இந்திய அரசின் மானியங்களைக் கணக்கிட்டால் ஒவ்வொரு காஷ்மீரிக்குமான சராசரி மத்திய மானியம் ரூ. 8,092 ஆகும். மற்ற இந்திய மாநிலங்களில் இந்தச் சராசரி வெறும் ரூ. 1,137 மட்டும்தான். ஐந்து பேர் கொண்ட ஒரு காஷ்மீர் குடும்பத்துக்கு நேரடியாக அரசாங்கம் மானியத் தொகையை மணியார்டர்கள் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு குடும்பமும் ரூ. 40,460-ஐ ஆண்டுதோறும் பெற்றுக் கொள்ளும்.
இன்னும்கூட ""உய்கர்'' முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது மகிழ்ச்சியுடன் இல்லை. ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் ""உலக உய்கர் காங்கிரஸ்'' என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.
சிங்கியாங் பகுதியில் வன்முறையும் பயங்கரவாதமும் இருந்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு சீனாவுக்கு நட்பாக இருப்பதால் காஷ்மீரில் நடக்கும் அளவுக்கு வன்முறையின் அளவு இல்லை. எனவே உய்கர்கள் பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை.
ஆனாலும், பயங்கரவாதமும் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளுக்கு மூன்று நாள்கள் முன்பாகக்கூட சிங்கியாங்கில் பயங்கரவாதத் தாக்குதலில் 16 போலீஸôர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 11-ம் தேதி ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருக்கும்போதுகூட பெய்ஜிங்கில் ஒரு தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ""ஹன்'' சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 பேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். இத்தனைக்கும் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீன மக்கள்தான். இக்கலவரத்திற்கு சீனா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைப் பார்ப்போம்.
சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது.
சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது. வேறு எந்த ஒரு நாடும் இப்படிச் செய்யத் துணியாது. அல் - காய்தாவே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று சீனா சொல்லியது.
ஆம். சீனாவுக்கு இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா இதைத் தனது உள்நாட்டுப் பிரச்னையாகவே கருதுகிறது. ஆனால் இந்தியாவோ அதன் சொந்தப் பிரச்னையான காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கிவிட்டது.
சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீன மக்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து மக்கள்தொகையின் மதத் தொகுப்பை மாற்றியமைத்தது. இந்தியாவோ, சீனா போல காஷ்மீரின் மக்கள் தொகுப்பை மாற்ற முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டதைக் கூடத் தடுக்க முயற்சிக்கவில்லை.
சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சீன மக்களால் நிரப்பப்பட்டபோது இங்கே காஷ்மீரிலோ ஹிந்துக்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, இந்திய மக்களை நம்பி காஷ்மீரைக் காக்க முடியாமல் ராணுவத்தை நம்ப வேண்டியிருக்கிறது.
இந்தியா மட்டும் சீனா சிங்கியாங்கில் கையாண்ட அதே நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், காஷ்மீரை 370-வது ஷரத்தின் ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் குடியேறுபவர்களைத் தடுக்காமல் இருந்திருந்தால், காஷ்மீர் இன்று இந்தியாவுடன் இரண்டற இணைந்துவிட்டிருக்கும். எப்போதாவது நாம் சில உள்நாட்டுக் கலவரங்களைக் கையாள வேண்டியிருக்கும். ஆனால் இப்போதுபோல பாகிஸ்தானுடனும் அதன் பயங்கரவாதத்துடனும் ஒவ்வொரு நாளும் யுத்தம் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இந்தியாவுக்கான பாடம் இதுதான் - மக்கள் தொகுப்பு. மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலைதான் ஒரு நாட்டுக்கு குறிப்பாக அதன் எல்லைகளுக்கு உத்தரவாதமாகும். சீனா மெதுவாக சிங்கியாங்கை (அதன் காஷ்மீரை) தன் ஹன் சீன மக்கள் மூலமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்தது.
ஆனால் இந்தியா தனது அரசியல் சட்ட ஒப்பந்தத்தால் காஷ்மீர் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக வழிவகுத்தது. அதுமாத்திரமல்ல, காஷ்மீரில் ஹிந்துக்கள் மொத்தமாகத் துடைக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலையை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதுதான் வேறுபாடு!
இன்னும் ஒரு வார்த்தை~
19-ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தத்துவமேதை ""ஆகஸ்ட் சாம்டே'', "மக்கள் தொகுப்பே (மனித குல) விதி'' என்று கூறுகிறார். அவரை மேற்கோள் காட்டி ""எக்கனாமிஸ்ட்'' பத்திரிகை (ஆகஸ்ட் 24 - 31, 2002) மக்கள் தொகுப்புக்கு நாடுகள் மீதும் அவற்றின் பொருளாதாரம் மீதும் இருக்கிற தாக்கத்தை வலியுறுத்தி எழுதி இருந்தது. சீனா, மக்கள்தொகுப்பின் மகிமையைப் புரிந்துகொண்டது. இந்தியா, அதைப் புரிந்துகொள்ளவில்லை. இதுதான் இரு காஷ்மீர்களின் இருவேறுபட்ட கதை!
கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி
|