Tuesday, December 2, 2008

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க 'ஒபெக்' முடிவு

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஒபெக்), இந்த மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அப்துல்லா சலீம் எல்-பத்ரி கூறியதாவது: எண்ணெய் கையிருப்பு அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வரும் சூழ்நிலையில், உற்பத்தியை குறைப்பதே சரியான நடவடிக்கை என தெரிகிறது. இதனால், இம்மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு உற்பத்தி குறைக்கப்படும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. அடுத்தாண்டு முதல் ஆறு மாதங்கள் வரை கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அப்துல்லா சலீம் கூறினார்.
நன்றி : தினமலர்


இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு

மும்பையில், பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை அடுத்து இரண்டு நாள் வர்த்தக இழப்பு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய். சுற்றுலா பயணிகள் வருகை, ஓட்டல்கள் உட்பட பல்வேறு வகையில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மூன்று நாள் நகரமே முடங்கிய நிலையில், பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. புதன் கிழமை இரவு , பயங்கரவாதிகள் அட்டாசம் ஆரம்பித்தது. அன்றும், மறுநாளும் சேர்த்து மட்டும், பங்குச்சந்தை, வர்த்தகம் ஆகியவற்றை கணக்கிட்டால், 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக தரப்பில் மேலோட்டமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாளில், அதிரடிப்படையினர் முற்றுகை,கடைகள், நிறுவனங்கள் மூடல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றை கணக்கிட்டால், இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த நாட்களில் பங்குச்சந்தை மூடப் பட்டிருந்தது. நிதி நிறுவனங்களும் செயல்படவில்லை.மும்பையில் உள்ள 20 தியேட்டர்கள், 75 மல்டிப்ளக்ஸ்களில் ஒரு நாள் டிக்கெட் வசூல் இரண்டு லட்சம் ரூபாய். குளிர்பானங்கள் உட்பட விற்பனையால் தனி வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த பயங்கர நாட்களில் இங்கும் வருவாய் அடியோடு குறைந்து விட்டது. தாஜ், ஓபராய் உட்பட ஓட்டல்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சேத மதிப்புகள் இன்னும் பல கோடிகளை தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், முதல் பத்து வர்த்தக நகரங்களில் மும்பை உள்ளது. இந்தியான் மொத்த உற்பத்தி அளவில் மும்பையின் பங்கு 5 சதவீதம். அன்னிய செலாவணி, வருமான வரி வசூல் மட்டும் 40 சதவீதம், வெளிநாட்டு வர்த்தகம் மூலம் 60 சதவீதம், எக்சைஸ் வரி வசூல் 20 சதவீதம் வருவாயை மும்பை தருகிறது.இது தவிர, வணிக நிறுவனங்கள் மூலம் வரி வருவாயாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. மும்பையின் தனி நபர் வருமானம் , தேசிய தனி மனித வருமானத்தை விட மூன்று மடங்கு. அதாவது, தனி நபர் ஆண்டு வருமானம் 49 ஆயிரம் ரூபாய்.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியா கட்டண குறைப்பு

ஏர் இந்தியா நிறுவனம் வசூலித்து வந்த எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் குறைத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக் கை: பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வால், ஏர் இந்தியா நிறுவனமும் தனது உள்நாட்டு விமானக் கட்டணத்துடன் கூடுதலாக எரிபொருள் கட்டணமும் பயணிகளிடம் வசூலித்து வந்தது. இதன்படி, 750 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்யும் பயணிகளிடம் 2,350 ரூபாயும், அதற்கு மேற்பட்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளிடம் 3,100 ரூபாயும் எரிபொருள் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இன்று முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தில் 14.5 சதவீதம், அதாவது 400 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்