Sunday, March 8, 2009

தேர்தல் வருவதால் அதிகரிக்கப்போகிறது பணப்புழக்கம்

ரிசர்வ் வங்கியின் ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும் என்று தான் எல்லாரும் 'பெட்' கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாழனன்று நடந்ததோ வேறு. ஏன் ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டுக்கு அப்புறமும் சந்தை கீழே விழுந்தது? சென்ற வாரம் வரை ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்தால் சந்தை உயிர் பிழைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அப்படியே 50 புள்ளிகள் சதவீதம் குறைத்து புதனன்று சந்தை நேரத்திற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், வியாழனன்று துவக்கத்திலிருந்து சந்தைகள் விழுந்து கொண்டே தான் இருந்தன. சந்தை இன்னும் அதிகமான ரேட் கட்டை எதிர்பார்த்திருந்தது போலும்.
பணவீக்கம் ஒரேயடியாக விழுந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 50 புள்ளிகள் என்பது சந்தைக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆதலால், சந்தைகள் மேலே ஏறுவதற்குப் பதிலாக கீழே இறங்கியது. ஆச்சரியம், ஆனால் உண்மை. அன்றைய தினம் மட்டும் 248 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
கடந்த 40 மாதங்களில் எவ்வளவு கீழ் நிலையை எட்டியிருந்ததோ அந்த நிலைக்கு அருகே சென்று விட்டது. பரமபதம் தான். பரமபதத்தை விளையாட்டில் தான் பார்த்திருக்கிறோம். விளையாட்டுக் குக் கூட சந்தையில் நினைத்ததில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளியன்று சந்தை உலக சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது.
அன்றைய தினம் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை இழந்து சந்தை கலையிழந்து காணப்பட்ட நிலையில், இது தான் வாங்குவதற்கு நல்ல சமயம் என்று பலரும் வந்ததால் இழந்த புள்ளிகளையும் திரும்பப் பெற்று 127 புள்ளிகள் கூடுதலாகவும் பெற்று முடிவடைந்தது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 127 புள்ளிகள் மேலே சென்று 8,325 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை 8,400க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான்.
நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால் இன்னும் விலை குறைகிறது. ஆதலால், முதலீட்டாளர்கள் பயப்படும் நிலை உள்ளது. ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கினால் ஆவரேஜ் செய்யலாம்.
இந்த வார பணவீக்கம் 3.03 சதவீதம் அளவிற்கு வந்துள் ளது. ஒரே இறக்கமாகத் தான் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் எல்லாம் செலவழிக்கப் பயப்படுவதால் தான் இது போன்ற ஒரு நிலைமையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆடம்பரச் செலவுகள் இல்லை, அத்தியாவசியச் செலவுகள் மட்டும் தான் என்ற நிலை தான். குறைந்து கொண்டு வரும் வேகத்தைப் பார்த்தால் ஜெட் வேகம் தான்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியும், ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைய முடிவு செய்த பின் பார்த்தால் ஒன்றிணைக்கப் பட்ட கம்பெனியான ரிலையன்ஸ தான் தற்போது உலகத்திலேயெ பெரிய ரிபைனரியாக இருக்கிறது. இதையடுத்து, வெனிசுவேலாவில் உள்ள பாராகவுனா, தென்கொரியாவில் உள்ள எஸ்.கே.கார்ப்., தென் கொரியாவில் உள்ள எல்.ஜி., - கால் டெக்ஸ், சிங்கப்பூரின் எக்சான் மொபில், பேடவுன் எக்சான் மொபில் என வரிசையில் வருகிறது. இந்த இணைப்பு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தூரம் பயனிளக்கப் போகிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். நானோ காருக்கு விண்ணப் பம் விற்பதில் இருந்து, காருக்கு லோன் கொடுப்பது வரை ஸடேட் பாங்க் மட்டும் தான் என்று இருந்தது. தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் டாடா கம்பெனியின் அனுமதியைப் பெற்றுள்ளது.
தேர்தல் வந்துவிட்டது, பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகரிக்கும் பணப்புழக்கம் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும். அப்படி பொருட் கள் விற்பனை கூடி வியாபாரங்கள் கூடி சந்தையும் கூடினால் நாமும் கூடிக்கூடிப் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
வீடு வாங்கப் போகிறீர் களா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித்தது. வங்கிகளிடையே போட்டி உண்டாகியுள்ளது. கனரா வங்கி மற்ற வங்கிகளை விட ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கி இன்னும் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல வங்கிகளுக்கு இடையே போட்டி என்றால் மக்களுக்குத் தானே கொண்டாட்டம். ஆனால், இந்த வட்டி புதிதாக வாங்குபவர்களுக்குத் தான், முன் வாங்கியவர்களுக்கு இல்லை என்று எல்லோரும் கூறுவதால் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் (அதாவது வங்கி விட்டு வங்கி மாறும் காட்சிகள்) தேர்தல் சமயத்தில் அதிகமாகவே இருக்கும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு 8,400 லெவலுக்கு கீழே வந்துள்ளது. இது தான் சமயம் என்று முதலீட்டாளர்கள் (உள்நாடு, வெளிநாட்டு) வரவேண்டும். அது மட்டும் தான் சந்தையைப் பலப்படுத்தும்.
நன்றி : தினமலர்