Sunday, August 23, 2009

அட்டவணை வாழ்க்கை...!

விஞ்ஞானம் முன்னேறிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது யாருக்குமே போதவில்லை. குறிப்பாக, இக்கால பள்ளிக் குழந்தைகளுக்கு நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கத்தான் செய்கிறது.

பள்ளிக்கூடம், பாடப் புத்தகம், தொலைக்காட்சி, தூக்கம் இவற்றோடே நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. இவற்றைக் கடந்து சிந்திக்க நினைத்தாலும் பிள்ளைகளுக்கு நேரம் இருப்பதில்லை.

"பொருள் தேடி' ஓடும் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

குழந்தைகளுக்கான நேரத்தை பெற்றோர் அட்டவணை போட்டுத் திட்டமிடுகின்றனர். நகரம், கிராமம் என்ற வித்தியாசத்தையெல்லாம் கடந்து இக் கால குழந்தைகளின் மீது பெற்றோர் திணிக்கும் சுமைகள் அதிகம்.

காலையில் கராத்தே வகுப்பு, நீச்சல், நடனம், பள்ளி முடிந்து வந்தபின்னர் டியூசன், கம்ப்யூட்டர் பயிற்சி, ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ் என வரிசைவைத்து பிள்ளைகளை அனுப்புகின்றனர்.

இந்த தனிப்பயிற்சிகளால் நிறைய பலன் கிடைக்கும் என்றாலும், அவர்களுக்கே தெரியாமல் ஒரு பெரும் இழப்பையும் மாணவர்கள் சந்திக்கின்றனர். ஆம்... புத்தக வாசிப்பு எனும் அருமையான பழக்கத்தை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர்.

இப்போது முப்பது-முப்பந்தைந்துகளில் இருக்கும் இளைஞர்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏறத்தாழ அனைவருக்குமே வாசிப்புப் பழக்கம் அறிமுகமாவது ஆகியிருக்கும். அறிவுத்தேடலின் விளைவாக கதை, இலக்கியம், நாடகம், சிறுவர் இதழ்கள் என தேடித் தேடிப் படித்தவர்கள் ஏராளம். நூலகத்தில் காத்திருந்து நல்ல நல்ல நூல்களில் மூழ்கிப் போனவர்கள் பலர்.

ஆனால், இக் கால மாணவர்கள் பெரும்பாலானோருக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கக் கூட பெற்றோருக்கு மனமில்லை.

பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறே இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது இந்த எண்ணத் திணிப்பு இருக்கக் கூடாது.

அரிதிலும் அரிதாக வாசிப்புப் பழக்கம் உள்ள மாணவர்களையும் கண்டித்து, பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்வது தவறான முன்னுதாரணம்.

சிறு வயதிலேயே குழந்தைகளை நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் பெற்றோருக்குப் பெரும் பொறுப்பு உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் மாதாந்திர பட்ஜெட்டில் மஞ்சளில் ஆரம்பித்து மாங்காய் தொக்கு வரை இடம்பெறுகிறது. ஆனால், எத்தனை வீடுகளில் புத்தகங்கள் வாங்குவதற்கு என தனியாக பணம் ஒதுக்குகின்றனர்? இத்தனை எதற்கு... செய்தித்தாள் வாங்காத பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா?

வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் இன்றைய போட்டி உலகத்தை மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'.

இண்டர்நெட் மையங்களுக்கு "சாட்டிங்' செய்ய நாள் தவறாமல் செல்லும் இளைஞர்கள், நூலகத்தின் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை.

இப்போதெல்லாம் நூலகங்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். அரசுப் பள்ளிகள் பெரும்பாலானவற்றிலும் நூலகங்கள் இருந்தும் செயல்படாத நிலையிலேயே உள்ளன.

இதனால், சிறந்த இலக்கிய நூல்கள், கதைகள், சரித்திர நூல்களின் அறிமுகம்கூட தற்போதைய மாணவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. வாய்ப்புக் கிடைக்காதது ஒருபுறம் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் இவற்றைப் படிப்பதற்கு விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், சினிமா என பிற பொழுதுபோக்கு அம்சங்கள் விழுங்கிவிடுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், சென்னை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் சற்று ஆறுதலைத் தருகிறது.

விழாக்களில் பரிசுப் பொருள்களுக்குப் பதிலாக புத்தகங்களைக் கொடுக்கலாம் என்பது சிறந்த யோசனை. இதைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

பிள்ளைகள் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவர்களை நூலகத்தில் உறுப்பினராக பெற்றோர் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு வாசிப்பின் மீது நிச்சயம் ஆர்வம் பிறக்கும். புத்தகங்களைப் படிக்கப் படிக்க, எழுத்தாற்றலும் கைகூடும். வாசிப்பு என்பது பொழுதுபோக்குவதற்கான பழக்கம் அல்ல; அக, புற வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், உலகைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் : எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

கண்ணி வெடி

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பர்கூர் மலைப்பகுதியில் கொடூரன் வீரப்பனின் அட்டகாசம் உச்சகட்டத்தில் இருந்த நேரம். மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பாதை கொளத்தூரைத் தாண்டிப் பரந்து விரியும் கவின்மிகு காவிரி மற்றும் பசுமையான மலைப்பகுதியைப் படம்பிடித்துக் காட்டும் பாலாறு செக்போஸ்ட், கர்நாடக மாநிலம் எல்லைத் துவக்கத்தில் அமைந்துள்ளது. அதைத்தாண்டி வனப்பகுதிக்குச் செல்லும் பாதையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை அலுவலர்களைத் தாங்கிய வண்டி பாலாறு படுகையில் சொரக்காய்மடுவு என்ற இடத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 22 உயிர்களைப் பலிகொண்டது. வீரப்பன் அந்த காட்டுப்பாதையில் 14 இடங்களில் வரிசையாக கண்ணிவெடி வைத்திருந்தான். அவ்வளவும் வெடித்தன. திட்டமிட்டு பட்டப்பகலில் தனது வெறிச்செயலை நிறைவேற்றினான்.

இதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூரம் நிகழ்ந்தது. காங்கர் மாவட்டம் ராஜநத்த கிராமப் பகுதிகளில் திட்டமிட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சௌபே உள்பட 30 கமாண்டோ படையினர் கண்ணி வெடிக்குப் பலியாயினர். கண்ணி வெடிக்குப் பாதுகாப்புப் படையினர் உயிர் பலியாவது புதிதல்ல. அதுவும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து பல மாநிலங்களில் காவல்துறையினரையும், பாதுகாப்புப் படையினரையும் எதிர்கொண்டு நடத்திவரும் தாக்குதல் இந்திய இறையாண்மைக்கே ஒரு சவாலாகவும் பெரும் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

ராய்பூரை தலைநகராகக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இயங்கி வருகிறது. பஸ்டார் போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகளைக் கொண்டது. இத்தகைய பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தின் பலன் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்களோடு தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கும் ஊழலும் தான் சில பகுதிகளின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஏழ்மையைப் பயன்படுத்தி நியாயமான தேவைகள் பூர்த்தி அடையாது என்றும், அபகரித்தல் தான் ஒரே வழி என்று நிர்வாகத்திற்கு எதிராகத் தூண்டுவதும் பயங்கரவாதிகளுக்கு எளிதாகிவிடுகிறது. சில்லறை ஆதாயத்துக்காக உள்ளூர் அரசியல்வாதிகள் இவர்களை ஆதரிப்பது பிரச்னையை மேலும் வளர்க்கிறது.

1971-ம் ஆண்டு நக்சல்பாரி என்ற மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து சிவப்பு பயங்கரவாத பி.டபிள்யூ.ஜி. இயக்கம் நமது நாட்டின் பல மாநிலங்களில் ஊடுருவியது. கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பண உதவி என்பது பெரிய பிரச்னை. இந்த நிலையை வைத்து மக்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்தும் ஈட்டி வட்டிக்காரர்கள், மந்தமான நிர்வாகம், ஊழலில் தழைக்கும் அரசு ஊழியர்கள் இவை பயங்கரவாத காளான்களை வளர்க்கும் உரங்கள். இத்தகைய சூழலில் இளைஞர்களை தம்வசப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிறது. 1970, 80-களில் தலைதூக்கிப் பரவிய இந்த சிவப்பு ஆதிக்கம் பல மாநிலங்களில் முக்கியமாக மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரத்தின் சில இடங்களில் வேரூன்றியது. இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 162 பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வடஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பயங்கரவாதம் தலைதூக்கியபோது எடுத்த கடுமையான பல்முனை நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முறியடிக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் நவீன் என்ற பிரஷாந்த் மற்றும் இந்த ஆண்டு வெகுநாள்களாக தலைமறைவாக இருந்த சுந்தரமூர்த்தி, தமிழ்வாணன், நொண்டி பழனி போன்றவர்கள் தமிழகப் போலீஸின் "க்யூ' பிராஞ்ச் பிரிவினரின் தீர்க்கமான நடவடிக்கையால் பிடிபட்டனர். மக்களுடைய பிரச்னைகளை முன்வைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய கொடுமைக்காரர்களை எதிர்கொள்வதில் பல பிரச்னைகள் உள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் பலிகடாக்களாக முன்வைத்து ஒளிந்து தாக்குதல் நடத்தும் கயவர்களை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் எதிர்த்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது. அதையே தமக்குச் சாதகமாக வைத்து மேலும் நிர்வாகத்தின் மீது பிரசாரம் செய்வதற்கு கணைத்துளிகள் கிடைத்துவிடுகின்றன. மனித உரிமைகள் பாதுகாப்பு என்று பறைசாற்றிக் கொண்டு அமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக களத்தில் இறங்கிப் போராடுவது முடிவில் மறைமுகமாகப் பயங்கரவாதிகளுக்குச் சாதகமாக அமைவது கண்கூடு.

கண்ணி வெடி வைத்து மறைமுகமாகத் தாக்குதல் நடத்துவது கொரில்லா போர் முறையின் முக்கிய அம்சமாகும். போர் தொடுப்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. சம்பிரதாயத்திற்கும் போர் விதிகளுக்கும் கட்டுப்படாத முறையற்ற யுத்தம் கொரில்லா முறைப்போர் எனலாம். இத்தகைய தாக்குதலை முறியடிப்பதற்கு கொரில்லாவினர் தொடுக்கும் அதே முறையைப் பின்பற்றினால்தான் வெற்றியடைய முடியும். பயங்கரவாதிகள் தங்களது பல முயற்சிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலும் காவல்துறைக்குப் பெரிய பின்னடைவு. காவல்துறை ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தவிர்ப்பதில் வெற்றியடைய வேண்டும். இது சராசரிக் கணக்கை விஞ்சி சாதிக்க வேண்டிய குறியீடு.

எங்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர் என்றுதான் செய்திவரும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்கூட. ஆனால் கொரில்லா முறையில் போர் தொடுக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சாதாரண நடைமுறைகள் பயன்படாது. அதிலும், வனப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஒளிந்து தாக்குபவர்களைத் திட்டமிட்டு சமயோஜிதத்தோடு எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டும்.

வனப்பகுதியில் வீரப்பன் நடத்திய தாக்குதலுக்கும், சத்தீஸ்கர் காங்கர் மாவட்டத் தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமை காண முடிகிறது. முதலில் பாதுகாப்புப் படையினரை உசுப்பும் விதத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடத்தி அவர்களை ஈர்ப்பதற்கு பயங்கரவாதிகள் தமது நடமாட்டத்தை ஒரு பகுதியில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்களது நடமாட்டம் பற்றிய தகவல், காவல்துறைக்கு வரும். அவர்களும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது என்று எதிர்த்தாக்குதலுக்கு விரைந்து செல்வார்கள்.

காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. கிடைத்த தகவலைச் செயலாக்க வேண்டும் என்ற ஆர்வம். உரிய நேரத்தில் செல்லவில்லை என்றால் ஏன் உடனடியாகச் செயல்படவில்லை என்ற கேள்வி எழும்.

வீரப்பன் பர்கூர் காட்டுப்பகுதியில் அதிரடிப்படை நுழைய முடியாத வகையிலும் பன்முனைத் தாக்குதலுக்கு உள்படுத்தவும் பல இடங்களில் வெடிபொருள்களைப் புதைத்து பேட்டரி மூலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் வைத்திருந்தான்.

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதச் சம்பவத்தில் வீரப்பன் அதிரடிப்படையினரைக் கிளரும் வகையில் அவர்களைப்பற்றி தரக்குறைவாகச் செய்தியைப் பரப்பினான். அவனுக்குத் தெரியும் அதிரடிப்படைக்கு உளவு சொல்பவர்கள் மூலம் இச்செய்தி அவர்களுக்குச் சென்றடையும் என்று. அவன் எதிர்பார்த்ததுபோல் அதிரடிப்படை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீரப்பன் விரித்த வலையில் சிக்கினர்.

ஜூன் 26-ம் தேதி சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவர்களது கை ஓங்கி உள்ள இடம் தாண்டேவாடே என்ற பகுதி. சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன் மதன்வாடா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் புதிய கண்காணிப்பு செக்போஸ்ட் அமைத்திருந்தனர். அந்த செக்போஸ்டிலிருந்து காலைக்கடனுக்குச் சென்ற இரு காவலர்களைக் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள் என்று மாவோயிஸ்ட்டுகள் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. எஸ்.பி. தலைமையில் பாதுகாப்புப் படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். கண்ணி வெடித் தாக்குதலில் மாண்டனர்.

பயங்கரவாத எதிர்முனைத் தாக்குதல் மற்றும் வனப்பகுதியில் கொரில்லா தாக்குதல் ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கும் ராணுவப்பள்ளியில் போதகராக இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவத் தளவாய் போன்வார் என்பவர் இந்தத் தாக்குதல் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்றும், காட்டுப்பகுதியில் எதிர்த்தாக்குதல் நடத்தும்பொழுது வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் "வி' வடிவில் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படை விதிகள் கடைப்பிடிக்காததைக் குறை கூறுகிறார். எவ்வாறு போக்குவரத்து விதிகள் அனுசரிக்கப்படாவிட்டால் விபத்து நிகழுமோ அவ்வாறு கொரில்லா போர்முறைகள் கடைப்பிடிக்காவிட்டால் இம்மாதிரி உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இயங்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், எல்லை கடந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர் - இ - தொய்பாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம். பயங்கரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிரச்னை வளர்ந்துவிடுகிறது. முதலில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது. பல உயிர்கள் பலியான பிறகுதான் விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்கம், மிதுனபுரி மாவட்டம் லால்கரில் பாதுகாப்புப் படையினர் எடுத்த வலிமையான நடவடிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நிர்வாகத்தை உள்ளே நுழையவிடாமல் அப்பாவிப் பொதுமக்களை முன்னிறுத்தி முதலில் போராடிய மாவோயிஸ்டுகள் முழுமையான அதிரடிப்படையினரின் பதிலடியில் சுருண்டுவிட்டனர்.

பொதுமக்களும் எங்கு பலம் இருக்கிறதோ அங்குதான் சாய்வார்கள். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க அஞ்சுவார்கள். வலிமையான நிர்வாகம் பாதுகாப்புப் படையின் மூலம் பயங்கரவாதிகளை எதிர்த்தால் பொதுமக்கள் நிர்வாகத்தோடு இணைந்து அமைதி ஏற்பட ஒத்துழைப்பார்கள். பஞ்சாப், அஸôம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் இந்நிலையைக் காண முடியும்.

பலநூதன முறைகளில் பயங்கரவாதிகளால் வெடிமருந்து கையாளப்பட்டு பெருத்த சேதம் விளைவிக்கப்படுகிறது. கடிகாரமுள் மூலம் மின்இணைப்பைக் குறித்த நேரத்தில் ஏற்படுத்தி அதனால் உண்டாகும் பொறி மூலம் வெடிக்க வைப்பது, அழுத்தம் மூலமாகவும் தொலைவில் இருந்து கதிர் அலைகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் கண்ணி வெடிகளை இயக்க முடியும். 1867-ம் ஆண்டு வெடிமருந்தைக் கண்டுபிடித்த சுவீடன் நாட்டைச் சார்ந்த ஆல்பிரட் நோபல் இந்த அளவுக்கு உலகுக்கும் மனித சமுதாயத்துக்கும் அவரது கண்டுபிடிப்பு கேடு விளைவிக்கும் என்று எண்ணியிருக்க மாட்டார். அதனால்தானோ என்னவோ அவரது பெயரில் பலதுறைகளில் கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கப்படும் நோபல் பரிசு உலக அமைதிக்காகவும் அளிக்கப்படுகிறது.

சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே நமது சுதந்திரம் நிலைப்பதற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் நாம் அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு.
கட்டுரையாளர் : ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

கமிஷன் உயருமா? பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஏக்கம்

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கமிஷன் உயர்வு அறிவித்தது போல், தங்களுக்கும் கமிஷனை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், முகவர்கள் மூலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சப்ளை செய்து வருகின்றன. இப்பணியைச் செய்யும் முகவர்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவுப்படி, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் வழங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர்களை சப்ளை செய்யும் முகவர்களுக்கு, மே மாதம், ஒரு ரூபாய் 40 காசு கமிஷனை உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதன்படி, 325 ரூபாய் சமையல் காஸ் சிலிண்டரை விற்றால், முகவருக்கு 21 ரூபாய் 94 காசு கமிஷனாக கிடைக்கும்.
எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகிக்கும் முகவர்கள் 6.8 சதவீதத்தை கமிஷனாக பெற்று வருகின்றனர். ஆனால், பெட்ரோல், டீசல் வினியோகிக்கும் முகவர்களான பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கான கமிஷன் உயர்த்தப்படவில்லை. இவர்களுக்கு பெட்ரோல் விற்பனைக்கு 2.26 சதவீதமும், டீசல் விற்பனைக்கு 1.8 சதவீதமும் கமிஷன் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொண்டுவந்தாலும், அதை வினியோகிக்கும் பங்க் உரிமையாளர்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை தொடர்கிறது. விடுமுறை நாளின்றி பெட்ரோல் டீசல் வினியோகத்தில் ஈடுபடும் தங்களின் கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 14 மணி நேரமும், அதிகபட்சமாக 24 மணிநேரமும் பெட்ரோல் 'பங்க்'களை இயக்கி வருகிறோம். இதனால் மின்சாரம், தொழிலாளர் சம்பளம் என, பெரும் தொகையை செலவிட வேண்டி வருகிறது. எங்களது கமிஷனை உயர்த்தித் தர எண்ணெய் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 'பங்க்'களில் பெட்ரோல் ஆவியாதல், டீசலை கையாளும்போது ஏற்படும் இழப்புகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன. மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டருக்குள் விற்பனை செய்யும் பெட்ரோல் 'பங்க்'களில், பெட்ரோலுக்கு 0.75 சதவீதமும், டீசலுக்கு 0.25 சதவீதமும் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பு வழங்குகின்றன.
ஒரு மாதத்துக்க்கு 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் விற்பனை செய்யும் பெட்ரோல் 'பங்க்'களில் பெட்ரோலுக்கு 0.6 சதவீதமும், டீசலுக்கு 0.2 சதவீதமும் இழப்பு வழங்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடும் இழப்பைத் தவிர, பைப்லைன் லீக், பம்ப் லீக் என பல வகையில் பெட்ரோல், டீசல் வீணாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடும் போதுமானதாக இல்லை. இதனால் இந்த இழப்பு தொகை எங்கள் தலை மேல் விழுகிறது. இது தவிர, வாகனங்களுக்கு இலவச காற்று வழங்க தனியாக ஒருவரை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இதனால், இதற்கான சம்பளம் மற்றும் மின் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. எல்.பி.ஜி., சிலிண்டர்களை பொறுத்தவரை அது, 'பேக்' செய்யப்பட்ட பொருள். அதில் இழப்பு ஏதும் ஏற்படாது. அவர்களுக்கு அதிக கமிஷன் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள், எங்களுக்கு குறைவாக கமிஷனை வழங்குகின்றன. ஒரு காலத்தில், பெட்ரோல் பங்க் வைத்திருந்தவர்கள் வசதியானவர்களாக பார்க்கப்பட்டனர். தற்போது, தொடர்ந்து தொழிலை நடத்த வேண்டுமே என்ற நோக்கத்திற்காக பலர் பங்க் நடத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, தொழில் மேம்பட, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் தொகையை உயர்த்தித் தர வேண்டும். நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி பெட்ரோலிய நிறுவனங்கள் கமிஷன் உயர்வை தள்ளிப் போட முயற்சிக்கின்றன. இதை ஏற்காமல், கமிஷனை உயர்த்தி வழங்க வேண் டும் என எண்ணெய் நிறுவனங் களை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்காமல் அவதி

காரைக்குடி தொலைதொடர்பு மாவட்டத்தில், பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்களுக்கு, கடந்த ஒரு வாரமாக அடிக்கடி இணைப்பு சரிவர கிடைக்காமல், சந்தாதாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்குடி பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு மாவட்டத்தின் கீழ் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில், மாத கட்டணம் 125 ரூபாய் முதல் 3,300 ரூபாய் திட்டத்தில் பிராட்பேண்ட் இணைப்புகளை சந்தாதாரர்கள் பெற்றுள்ளனர். காரைக்குடியில் மட்டும் 2,000 பேரும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 6,500 பேர் இந்த இணைப்பு பெற்றுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இணைப்பு கிடைக்காமல் சந்தாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சந்தாதாரர்கள் புகார்: இது குறித்து சந்தாதாரர்கள் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதை சரிசெய்ய பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முன்வரவேண்டும். உதவி பொது மேலாளர் ஒருவர் கூறுகையில், ''பொதுமேலாளர் விடுப்பில் சென்றுள்ளார். பெங்களூரு சர்வரில் எந்த பிரச்னையும் இல்லை. அந்தந்த உள்ளூர் டெலிபோன் நிலையத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கும். பிராட்பேண்ட் இணைப்பில் பிரச்னை குறித்து யாரும் புகார் தரவில்லை. போர்டில் 15,000 இணைப்புகள் வரை தருவதற்கு இடம் உள்ளது. இடப்பற்றாக்குறையால் இணைப்பு துண்டிக்க வாய்ப்பில்லை'' என்றார்.
நன்றி : தினமலர்


மொபைல் போன் புழக்கத்தில் ஏறுமுகம்: பதட்டத்தை ஏற்படுத்தும் 'காயின் பூத்'

மொபைல் போன் பயன்பாட்டில் ஏறுமுகம் அடைந்து வரும் நிலையில், பதட்டத்தை ஏற்படுத்தி வரும் 'காயின் பூத்'களை தடை செய்யும் அவசியம் தற்போது எழுந்துள்ளது. தந்தி அடித்து தகவல் அறிந்த காலம் மாறி, எழுந்ததில் இருந்து தூங்குவது வரை 'லைவ் கமெண்ட்' கொடுக்கும் மொபைல் போன்கள் யுகம் தற்போது உள்ளது. மொபைல் போன் சேவையில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி வீசுகின்றனர். 10 காசுக்கு கூட ஒரு 'கால்' செய்யும் அளவுக்கு தொலை தொடர்பு விரிவடைந்துள்ளது.
கூலி தொழிலாளி முதல் குபரேர் வரை மொபைல் போன் சேவை பயன்பாடு கட்டாயமாக மாறிவிட்டது. காயின் பாக்ஸ் போன்களால் தான் பல குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது. நவீனத்தின் வளர்ச்சியால் இது போன்ற வசதி இருந்தாலும், 'காயின் பூத்' போன்கள் மூலம் ஏகப்பட்ட பிரச்னைகளை பலரும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு இதனால் பாதிப்பு அதிகம். ஆபாச வார்த்தைகள், மிரட்டல், சர்ச்சை போன்றவை காயின் பூத் போன்கள் மூலமே வருவதாக சமீபத்திய போலீஸ் அறிக்கைகள் கூறுகின்றன. அதே மொபைல் போனாக இருக்கும் பட்சத்தில் அந்த நபரை எளிதில் அடையாளம் காணலாம்.
காயின் பூத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை கண்டறிவதிலும் நடைமுறை சிக்கல் நிறைய உள்ளது. சுற்றி வளைத்து விசாரிக்கையில் வேறு வழியின்றி காயின் பூத் உரிமையாளர்கள் தான் போலீசிடம் பிடிபடுகிறார்கள். போன் செய்ய வரும் அனைவரிடமும் விபரங்களை பெறுவது என்பது எளிதல்ல. போன் அருகே கேமராக்களை பொருத்தலாம் என்றால் பலரது வருமானம் அதற்கு ஏற்றதாக இருக்காது. காயின் போன் மூலம் பலருக்கு பயன் இருப்பினும், பெரும்பாலானோருக்கு பாதிப்பே ஏற்படுவதை எண்ணிபார்க்க வேண்டும். இந்த போனை பயன்படுத்துவோர் மூலம் ஏற்படும் விபரீதத்தை தடுக்க அவர்களை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
நன்றி : தினமலர்