Sunday, August 23, 2009

கண்ணி வெடி

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பர்கூர் மலைப்பகுதியில் கொடூரன் வீரப்பனின் அட்டகாசம் உச்சகட்டத்தில் இருந்த நேரம். மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பாதை கொளத்தூரைத் தாண்டிப் பரந்து விரியும் கவின்மிகு காவிரி மற்றும் பசுமையான மலைப்பகுதியைப் படம்பிடித்துக் காட்டும் பாலாறு செக்போஸ்ட், கர்நாடக மாநிலம் எல்லைத் துவக்கத்தில் அமைந்துள்ளது. அதைத்தாண்டி வனப்பகுதிக்குச் செல்லும் பாதையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை அலுவலர்களைத் தாங்கிய வண்டி பாலாறு படுகையில் சொரக்காய்மடுவு என்ற இடத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 22 உயிர்களைப் பலிகொண்டது. வீரப்பன் அந்த காட்டுப்பாதையில் 14 இடங்களில் வரிசையாக கண்ணிவெடி வைத்திருந்தான். அவ்வளவும் வெடித்தன. திட்டமிட்டு பட்டப்பகலில் தனது வெறிச்செயலை நிறைவேற்றினான்.

இதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூரம் நிகழ்ந்தது. காங்கர் மாவட்டம் ராஜநத்த கிராமப் பகுதிகளில் திட்டமிட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சௌபே உள்பட 30 கமாண்டோ படையினர் கண்ணி வெடிக்குப் பலியாயினர். கண்ணி வெடிக்குப் பாதுகாப்புப் படையினர் உயிர் பலியாவது புதிதல்ல. அதுவும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து பல மாநிலங்களில் காவல்துறையினரையும், பாதுகாப்புப் படையினரையும் எதிர்கொண்டு நடத்திவரும் தாக்குதல் இந்திய இறையாண்மைக்கே ஒரு சவாலாகவும் பெரும் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

ராய்பூரை தலைநகராகக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இயங்கி வருகிறது. பஸ்டார் போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகளைக் கொண்டது. இத்தகைய பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தின் பலன் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்களோடு தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கும் ஊழலும் தான் சில பகுதிகளின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஏழ்மையைப் பயன்படுத்தி நியாயமான தேவைகள் பூர்த்தி அடையாது என்றும், அபகரித்தல் தான் ஒரே வழி என்று நிர்வாகத்திற்கு எதிராகத் தூண்டுவதும் பயங்கரவாதிகளுக்கு எளிதாகிவிடுகிறது. சில்லறை ஆதாயத்துக்காக உள்ளூர் அரசியல்வாதிகள் இவர்களை ஆதரிப்பது பிரச்னையை மேலும் வளர்க்கிறது.

1971-ம் ஆண்டு நக்சல்பாரி என்ற மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து சிவப்பு பயங்கரவாத பி.டபிள்யூ.ஜி. இயக்கம் நமது நாட்டின் பல மாநிலங்களில் ஊடுருவியது. கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பண உதவி என்பது பெரிய பிரச்னை. இந்த நிலையை வைத்து மக்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்தும் ஈட்டி வட்டிக்காரர்கள், மந்தமான நிர்வாகம், ஊழலில் தழைக்கும் அரசு ஊழியர்கள் இவை பயங்கரவாத காளான்களை வளர்க்கும் உரங்கள். இத்தகைய சூழலில் இளைஞர்களை தம்வசப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிறது. 1970, 80-களில் தலைதூக்கிப் பரவிய இந்த சிவப்பு ஆதிக்கம் பல மாநிலங்களில் முக்கியமாக மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரத்தின் சில இடங்களில் வேரூன்றியது. இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 162 பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வடஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பயங்கரவாதம் தலைதூக்கியபோது எடுத்த கடுமையான பல்முனை நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முறியடிக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் நவீன் என்ற பிரஷாந்த் மற்றும் இந்த ஆண்டு வெகுநாள்களாக தலைமறைவாக இருந்த சுந்தரமூர்த்தி, தமிழ்வாணன், நொண்டி பழனி போன்றவர்கள் தமிழகப் போலீஸின் "க்யூ' பிராஞ்ச் பிரிவினரின் தீர்க்கமான நடவடிக்கையால் பிடிபட்டனர். மக்களுடைய பிரச்னைகளை முன்வைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய கொடுமைக்காரர்களை எதிர்கொள்வதில் பல பிரச்னைகள் உள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் பலிகடாக்களாக முன்வைத்து ஒளிந்து தாக்குதல் நடத்தும் கயவர்களை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் எதிர்த்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது. அதையே தமக்குச் சாதகமாக வைத்து மேலும் நிர்வாகத்தின் மீது பிரசாரம் செய்வதற்கு கணைத்துளிகள் கிடைத்துவிடுகின்றன. மனித உரிமைகள் பாதுகாப்பு என்று பறைசாற்றிக் கொண்டு அமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக களத்தில் இறங்கிப் போராடுவது முடிவில் மறைமுகமாகப் பயங்கரவாதிகளுக்குச் சாதகமாக அமைவது கண்கூடு.

கண்ணி வெடி வைத்து மறைமுகமாகத் தாக்குதல் நடத்துவது கொரில்லா போர் முறையின் முக்கிய அம்சமாகும். போர் தொடுப்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. சம்பிரதாயத்திற்கும் போர் விதிகளுக்கும் கட்டுப்படாத முறையற்ற யுத்தம் கொரில்லா முறைப்போர் எனலாம். இத்தகைய தாக்குதலை முறியடிப்பதற்கு கொரில்லாவினர் தொடுக்கும் அதே முறையைப் பின்பற்றினால்தான் வெற்றியடைய முடியும். பயங்கரவாதிகள் தங்களது பல முயற்சிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலும் காவல்துறைக்குப் பெரிய பின்னடைவு. காவல்துறை ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தவிர்ப்பதில் வெற்றியடைய வேண்டும். இது சராசரிக் கணக்கை விஞ்சி சாதிக்க வேண்டிய குறியீடு.

எங்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர் என்றுதான் செய்திவரும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்கூட. ஆனால் கொரில்லா முறையில் போர் தொடுக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சாதாரண நடைமுறைகள் பயன்படாது. அதிலும், வனப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஒளிந்து தாக்குபவர்களைத் திட்டமிட்டு சமயோஜிதத்தோடு எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டும்.

வனப்பகுதியில் வீரப்பன் நடத்திய தாக்குதலுக்கும், சத்தீஸ்கர் காங்கர் மாவட்டத் தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமை காண முடிகிறது. முதலில் பாதுகாப்புப் படையினரை உசுப்பும் விதத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடத்தி அவர்களை ஈர்ப்பதற்கு பயங்கரவாதிகள் தமது நடமாட்டத்தை ஒரு பகுதியில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்களது நடமாட்டம் பற்றிய தகவல், காவல்துறைக்கு வரும். அவர்களும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது என்று எதிர்த்தாக்குதலுக்கு விரைந்து செல்வார்கள்.

காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. கிடைத்த தகவலைச் செயலாக்க வேண்டும் என்ற ஆர்வம். உரிய நேரத்தில் செல்லவில்லை என்றால் ஏன் உடனடியாகச் செயல்படவில்லை என்ற கேள்வி எழும்.

வீரப்பன் பர்கூர் காட்டுப்பகுதியில் அதிரடிப்படை நுழைய முடியாத வகையிலும் பன்முனைத் தாக்குதலுக்கு உள்படுத்தவும் பல இடங்களில் வெடிபொருள்களைப் புதைத்து பேட்டரி மூலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் வைத்திருந்தான்.

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதச் சம்பவத்தில் வீரப்பன் அதிரடிப்படையினரைக் கிளரும் வகையில் அவர்களைப்பற்றி தரக்குறைவாகச் செய்தியைப் பரப்பினான். அவனுக்குத் தெரியும் அதிரடிப்படைக்கு உளவு சொல்பவர்கள் மூலம் இச்செய்தி அவர்களுக்குச் சென்றடையும் என்று. அவன் எதிர்பார்த்ததுபோல் அதிரடிப்படை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீரப்பன் விரித்த வலையில் சிக்கினர்.

ஜூன் 26-ம் தேதி சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவர்களது கை ஓங்கி உள்ள இடம் தாண்டேவாடே என்ற பகுதி. சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன் மதன்வாடா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் புதிய கண்காணிப்பு செக்போஸ்ட் அமைத்திருந்தனர். அந்த செக்போஸ்டிலிருந்து காலைக்கடனுக்குச் சென்ற இரு காவலர்களைக் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள் என்று மாவோயிஸ்ட்டுகள் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. எஸ்.பி. தலைமையில் பாதுகாப்புப் படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். கண்ணி வெடித் தாக்குதலில் மாண்டனர்.

பயங்கரவாத எதிர்முனைத் தாக்குதல் மற்றும் வனப்பகுதியில் கொரில்லா தாக்குதல் ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கும் ராணுவப்பள்ளியில் போதகராக இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவத் தளவாய் போன்வார் என்பவர் இந்தத் தாக்குதல் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்றும், காட்டுப்பகுதியில் எதிர்த்தாக்குதல் நடத்தும்பொழுது வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் "வி' வடிவில் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படை விதிகள் கடைப்பிடிக்காததைக் குறை கூறுகிறார். எவ்வாறு போக்குவரத்து விதிகள் அனுசரிக்கப்படாவிட்டால் விபத்து நிகழுமோ அவ்வாறு கொரில்லா போர்முறைகள் கடைப்பிடிக்காவிட்டால் இம்மாதிரி உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இயங்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், எல்லை கடந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர் - இ - தொய்பாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம். பயங்கரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிரச்னை வளர்ந்துவிடுகிறது. முதலில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது. பல உயிர்கள் பலியான பிறகுதான் விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்கம், மிதுனபுரி மாவட்டம் லால்கரில் பாதுகாப்புப் படையினர் எடுத்த வலிமையான நடவடிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நிர்வாகத்தை உள்ளே நுழையவிடாமல் அப்பாவிப் பொதுமக்களை முன்னிறுத்தி முதலில் போராடிய மாவோயிஸ்டுகள் முழுமையான அதிரடிப்படையினரின் பதிலடியில் சுருண்டுவிட்டனர்.

பொதுமக்களும் எங்கு பலம் இருக்கிறதோ அங்குதான் சாய்வார்கள். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க அஞ்சுவார்கள். வலிமையான நிர்வாகம் பாதுகாப்புப் படையின் மூலம் பயங்கரவாதிகளை எதிர்த்தால் பொதுமக்கள் நிர்வாகத்தோடு இணைந்து அமைதி ஏற்பட ஒத்துழைப்பார்கள். பஞ்சாப், அஸôம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் இந்நிலையைக் காண முடியும்.

பலநூதன முறைகளில் பயங்கரவாதிகளால் வெடிமருந்து கையாளப்பட்டு பெருத்த சேதம் விளைவிக்கப்படுகிறது. கடிகாரமுள் மூலம் மின்இணைப்பைக் குறித்த நேரத்தில் ஏற்படுத்தி அதனால் உண்டாகும் பொறி மூலம் வெடிக்க வைப்பது, அழுத்தம் மூலமாகவும் தொலைவில் இருந்து கதிர் அலைகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் கண்ணி வெடிகளை இயக்க முடியும். 1867-ம் ஆண்டு வெடிமருந்தைக் கண்டுபிடித்த சுவீடன் நாட்டைச் சார்ந்த ஆல்பிரட் நோபல் இந்த அளவுக்கு உலகுக்கும் மனித சமுதாயத்துக்கும் அவரது கண்டுபிடிப்பு கேடு விளைவிக்கும் என்று எண்ணியிருக்க மாட்டார். அதனால்தானோ என்னவோ அவரது பெயரில் பலதுறைகளில் கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கப்படும் நோபல் பரிசு உலக அமைதிக்காகவும் அளிக்கப்படுகிறது.

சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே நமது சுதந்திரம் நிலைப்பதற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் நாம் அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு.
கட்டுரையாளர் : ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

No comments: